தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்

1.பழமொழி: பந்திக்கு முந்து படைக்குப் பிந்து
சரியான பழமொழி: பந்திக்க முந்து படைக்கப் பிந்து

முன்னுரை
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்றொரு பழமொழி தமிழ்நாட்டில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப் பழமொழிக்குத் தற்போது வழங்கப்படும் பல்வேறு விளக்கங்களைப் பற்றியும் அவ் விளக்கங்கள் எந்த அளவிற்குப் பொருத்தமாக உள்ளன என்பதைப் பற்றியும் இப் பழமொழிக்கு இன்னொரு கோணத்தில் ஒரு புதிய விளக்கத்தையும் இக் கட்டுரையில் காணலாம்.

தற்போதைய விளக்கங்கள்
இப் பழமொழிக்கு மூன்று விதமான விளக்கங்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

விளக்கம் 1: ‘பந்திக்கு முந்து’ என்றால் உணவு இடப்படும் பந்தியில் முதல் ஆளாகச் சென்று உண்ண வேண்டும். இல்லையேல் உணவு முழுமையாகவும் சுவையுடனும் கிடைப்பது அரிது. ‘படைக்குப் பிந்து’ என்றால் போருக்குப் போகும்போது படையில் கடைசி ஆளாகச் சேர வேண்டும். இல்லையேல் போரில் இறந்துபடுவது உறுதி.

விளக்கம் 2: இப் பழமொழியை ‘ பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்’ என்று சற்று மாற்றி இதனை விடுகதையாகக் கொள்கின்றனர். இவ் விடுகதையின் விடை ‘வலது கை’ ஆகும். இது எவ்வாறெனில், வலது கையானது உணவு உண்ணும்போது முன்னால் செல்லும்; வில் மற்றும் வாள் படையை இயக்கும்போது பின்னால் செல்லும்.

விளக்கம் 3: இப் பழமொழியை ‘பந்திக்கு முன் தீ படைக்குப் பின் தீ’ என சற்றே மாற்றிக் கொண்டு பின்வருமாறு விளக்கம் கூறுகின்றனர்: பந்தியில் உணவு இடுவதற்கு முன்னால் தீயிட்டு உணவு சமைப்பர். படைகொண்டு போரில் வென்ற பின்னர் எதிரியின் நாட்டை தீயிட்டு அழிப்பர்.

இப் பழமொழி விளக்கங்கள் சரியா?
மேலே நாம் கண்ட பழமொழி விளக்கங்கள் எந்த அளவிற்கு பொருந்தி வருகின்றன என்பதை இங்கே காணலாம்.

முதல் விளக்கத்தில் உணவு உண்பதற்கு முதலிடமும் போருக்குச் செல்வதற்கு கடைசியிடமும் தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இக் கருத்து சிறிதேனும் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் பழமொழிகளின் நோக்கமே இளைய தலைமுறையினருக்கு நல்ல வாழ்வியல் கருத்துக்களைத் தெரிவித்து நல்வழிப் படுத்தவேண்டும் என்பதுதான். ஆனால் இவ் விளக்கத்தில் கூறப்பட்டுள்ள கருத்தோ ஒருவனை சாப்பாட்டு ராமனாகவும் தொடை நடுங்கியாகவும் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துவதாக அமைகிறது. இப்படிப்பட்ட அறிவுரைகளை மக்கள் பின்பற்றினால் விளைவு என்னாகும்?. நாட்டுப்பற்று பின்தள்ளப்பட்டு சோற்றுப்பற்று முன்வந்து விடும். பழமொழியின் நோக்கத்திற்கு மாறாக இக்கருத்து அமைவதால் இக்கருத்து தள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இரண்டாம் விளக்கத்தில் இது பழமொழியே இல்லை என்றும் இது ஒரு விடுகதை என்றும் கூறப்பட்டுள்ளது. இதை ஒரு விடுகதையாகவே கொண்டாலும் இதற்கான விடையாக ‘வலது கை’ யினைக் கொள்வது பொருத்தமாகத் தோன்றவில்லை. ஏனென்றால் இடதுகை வலதுகை என்பது அவரவர் பயன்பாட்டைப் பொறுத்தது. சிலர் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள். சிலர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள். இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் அனைத்து வேலைகளுக்கும் (உணவு உண்பது உள்பட) இடது கையினையே பயன்படுத்துகின்றனர். ஏன் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் கூட சில நேரங்களில் நீர், தேநீர், பால் போன்ற நீர்ம உணவுகள் பருகும்போதோ சிறுசிறு நொறுக்குத் தீனிகளை உண்ணும்போதோ இடதுகையினை பயன்படுத்துகின்றனர். பந்தியிலும் உணவு வகைகள் இரண்டு புறங்களிலும் பரிமாறப் பட்டிருக்கும். வாழைப்பழத்தை பெரும்பாலும் இடப்புறமாகவே வைப்பர். இப் பழத்தை இடதுகையால் எடுத்து வலது கையால் உரித்து உண்பதை நடைமுறையில் பார்க்கலாம். எனவே ‘பந்திக்கு முந்துவது வலதுகையே’ என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வது விடுகதைக்கு அழகல்ல என்றே தோன்றுகிறது.

மூன்றாவது விளக்கம் மிக மிக இட்டுக் கட்டுப்பட்ட ஒரு விளக்கமாக உள்ளது. பந்திக்கு முன்னால் தீ என்றால் அங்கே யாராவது உட்கார்ந்து சாப்பிடுவார்களா?. படைக்குப் பின்னால் தீ என்றால் படை பயந்தல்லவா ஓடும்?. நேரடியாகத் தோன்றும் இப் பொருள்களை விடுத்து பந்தியில் சோறு இடுவதற்கு முன்னால் தீயிட்டுச் சமைப்பர் என்பதும் படையில் வெற்றி பெற்ற பின்னர் எதிரி நாட்டைத் தீயிட்டுப் பொசுக்குவர் என்பதும் தேவையற்ற மிகையான கற்பனையாகத் தோன்றுகிறது. மேலும் ‘முந்து’ பிந்து’ என்ற சொல் வடிவங்களே பழமொழி வழக்கில் உள்ளன. இவற்றை ‘முன் தீ’ என்றும் ‘பின் தீ’ என்றும் திரித்துக் கொண்டு பலவாறாகப் பொருள் கொள்வது வேடிக்கையாக இருப்பதுடன் பழமொழிகளுக்குரிய சீரிய நோக்கமின்றி இருப்பதால் இவ் விளக்கம் தள்ளப்பட வேண்டிய ஒன்றே ஆகும்.

இன்னொரு கோணம்
இப் பழமொழியை இன்னொரு கோணத்தில் ஆராய்ந்த போது புதியதோர் விளக்கம் கிடைத்தது. இக் கோணத்தின்படி இப் பழமொழியின் வடிவம் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்.

சரியான பழமொழி: பந்திக்க முந்து படைக்கப் பிந்து
இங்கே பந்தித்தல் என்றால் திருமணம் செய்தலைக் குறிக்கும். படைத்தல் என்றால் குழந்தை பெற்றுக் கொள்ளுதலைக் குறிக்கும். ஆக இப் பழமொழியின் இன்னொரு கோண விளக்கமானது ‘திருமணம் செய்து கொள்வதை தள்ளிப் போடக் கூடாது. ஆனால் குழந்தை பேற்றினை சற்று தள்ளிப் போடவேண்டும்’ என்பதாகும்.

இப் புதிய விளக்கம் சரியா?
மேலே கண்ட புதிய விளக்கமானது எந்த அளவிற்குப் பொருத்தமானது என்று இங்கே பார்க்கலாம்.

பந்தித்தல் என்ற சொல்லுக்கு ‘கட்டுதல்’, ‘கூடுதல்’ என்ற பொருட்களை சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி கூறுகிறது. கட்டுதல் என்ற பொதுவான பொருள் விரிவாக்கமாக இங்கே தாலி கட்டுதலைக் குறிப்பதாகவும் கூடுதல் என்பது மணவாழ்வில் கூடுதலைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஆக பந்தித்தல் என்ற சொல்லிற்கு பந்தத்தில் (உறவில்) ஈடுபடுதல் அதாவது திருமணம் செய்தல் என்ற பொருளைக் கொள்வது சாலவும் பொருந்தக் கூடிய ஒன்றே. அடுத்து, படைத்தல் என்பதற்கு ‘உயிர்களைப் படைத்தல்’ அதாவது ‘குழந்தை பெற்றுக் கொள்ளுதலைப்’ பொருளாகக் கொள்வதும் பொருந்தக் கூடிய ஒன்றேயாகும். இனி இப் பழமொழி உருவாக்கப் பட்டதன் நோக்கம் என்ன என்று காணலாம்.

இல்லற வாழ்க்கையின் இன்றியமையாமையையும் அதை எவ்வாறு முறையோடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இளைய தலைமுறையினருக்கு பெரியவர்கள் சொல்லும் அறிவுரையாக இப் பழமொழி அமைந்துள்ள பாங்கு முதலில் கவனிக்கத் தக்கதாகும். இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களும் இளைஞிகளும் காலாகாலத்தில் திருமணம் செய்து கொள்வதில்லை. மேற்படிப்பு, வேலை, குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பருவ வயதுக்கு வந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல்/ கொள்ள முடியாமல் இருந்து விடுகின்றனர். இதன் பக்க விளைவாக சமுதாயத்தில் பாலியல் சிக்கல்கள் உள்பட பல தீய பழக்க வழக்கங்களுக்கு இவர்கள் ஆளாக நேரிடுவதை நாம் காண்கிறோம். மேலும் இளமையில் நுகர வேண்டிய இல்லற இன்பத்தையும் இவர்கள் இழந்து விடுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே பெரியவர்கள் ‘திருமணத்தைத் தள்ளிப் போடவேண்டாம்’ என்று கூறியுள்ளனர்.

மேலும் திருமணம் செய்த அனைவரும் உடனுக்குடன் குழந்தை பெற்றுக் கொண்டால் மக்கள் தொகை மிகவும் பெருகி விடும். மக்கள்தொகை பெருக்கத்தினால் வரக்கூடிய சமுதாயச் சிக்கல்கள் பற்றி நாம் நன்கு அறிவோம். அதுமட்டுமின்றி குழந்தை பிறந்ததும் மனைவியின் கவனம் முழுவதும் குழந்தை வளர்ப்பில் திரும்பி விடுகிறது. குழந்தை பெற்ற தாயின் உடலில் பல மாற்றங்கள் உண்டாவதால் அவருக்கு இல்லற இன்பத்தில் நாட்டம் குறைகிறது. இதனால் கணவன்-மனைவியிடையே உள்ள நெருக்கமானது தளர ஆரம்பித்து அவர்களுக்கிடையேயான இல்லற இன்பத்திலும் குறுக்கீடு நேர்கிறது. இதனால் அவர்களுக்கிடையில் புரிதல் குறைய ஆரம்பித்து பிணக்குகள் தோன்றத் துவங்குகின்றன. இதுவே பின்னாளில் மணமுறிவு வரை கொண்டுசென்று விடுகிறது. இதை நாம் பல குடும்பங்களில் நடைமுறையில் காணலாம். குழந்தை பெற்றுக் கொள்வதை 2 லிருந்து 3 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுவதால் மக்கள் தொகையானது ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வருவதுடன் கணவன்-மனைவியிடையே புரிதல் ஏற்பட்டு நல்ல இல்வாழ்க்கை அமைவது சாத்தியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டே பெரியவர்கள் ‘குழந்தை பெற்றுக் கொள்வதை சற்று தள்ளிப் போடுங்கள்’ என்று கூறியுள்ளனர்.

முடிவுரை:
பெருகி வரும் மக்கள்தொகை ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. நம் நாட்டில் மகாராட்டிர மாநிலம் தற்போது ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. குழந்தை பிறப்பை 2 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுவோருக்கு ரூ.5000 பரிசளிப்பதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் நமது பெரியவர்கள் குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுவதின் இன்றியமையாமையை உணர்ந்து அக் காலத்திலேயே இப் பழமொழியின் வாயிலாகக் கூறிச் சென்றுள்ளனர். இனியேனும் இப் பழமொழியை நம் மக்கள் பின்பற்றினால் நாடு வளம்பெறும்.

2. பழமொழி: மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
சரியான பழமொழி: மங்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

தற்போதைய பொருள்
இப் பழமொழிக்கு இதுவரை கூறப்பட்டு வந்த பொருள்விளக்கம் இதுதான்: ‘மண்ணால் செய்த குதிரையினை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம். ஏனென்றால் ஆற்றைக் கடக்கும் முன்னர் அக் குதிரை கரைந்து விடும்.’ஆனால் தற்போது ஒருசிலர் ‘குதிரை’யை ‘குதிர்’ எனக் கொண்டு இவ்வாறு பொருள் கூறுகின்றனர்: ‘ஆற்றில் காணப்படும் மண்மேடுகளை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம். ஏனென்றால் அவை பொய்யானவை. காலை வைத்ததும் உள்ளே இழுத்துக் கொண்டுவிடும்.’

தவறுகள்
மேற்காணும் இரண்டு விளக்கங்களுமே தவறானவை ஆகும். இது எவ்வாறு என்று பார்ப்போம். மண்குதிரையில் ஏறி ஆற்றில் இறங்க முடியுமா?. மண்குதிரை இயங்காத் தன்மை கொண்டது என்பதால் இக் கேள்விக்கான விடை ‘முடியாது’ என்பதே ஆகும். மண்குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கவே முடியாது என்ற நிலையில் இறங்கவேண்டாம் என்று அறிவுரை கூறுவது பயனற்ற வேடிக்கையான ஒரு செயலாகும். பயனற்ற கருத்துக்களைப் பெரியோர்கள் ஒருபோதும் கூற மாட்டார்கள் என்பதால் இவ் விளக்கம் தவறு என்பது பெறப்படுகிறது.

அடுத்து இரண்டாவது கருத்தில் வரும் குதிர் என்ற சொல்லைப் பற்றிக் காண்போம். குதிர் என்றால் நெற்கூடு என்று பொருள். இச் சொல்லுக்கு இந்தப் பொருள் மட்டுமே அகராதிகளில் தரப்பட்டுள்ளது. மண்மேடு என்ற பொருள் வேண்டுமென்றே இட்டுக் கூறப்பட்ட ஒன்றாகும். குதிர் என்ற சொல்லுக்கு மண்மேடு என்ற பொருள் எவ்வகையிலும் பொருந்தாது. ஏனென்றால் நெற்கூடும் மண்மேடும் வேறுவேறு தன்மை கொண்டவை. தானியங்களைச் சேமித்து வைக்க உதவுகின்ற உயரமான கலமே குதிர் ஆகும். ஆனால் ஆற்றின் நடுவே காணப்படும் உயரமான மண்மேடுகள் எதையும் சேமிக்க உதவுவதில்லை. உயரமாக இருப்பதால் மட்டும் மண்மேடும் நெற்கூடும் ஒன்றாகி விட முடியாது.

ஸ்ரீ ரங்கம்-thamil.co.ukஅன்றியும் மேற்காணும் கருத்தில் சொல்வதைப் போல இந்த மண்மேடுகள் காலை வைத்தால் உள்ளே வாங்குவதுமில்லை. ஏனென்றால் இவை நன்கு செறிந்த மணலுடன் அடர்த்தியாகவே இருக்கும். இதன் காரணம் இந்த மண்மேடுகளில் புல், செடி, கொடி முதலான தாவரங்கள் வளரத் துவங்குவது தான். ஆற்றில் நடுநடுவே காணப்படும் இந்த மண்மேடுகளை ‘ஆற்றிடைக் குறை’ என்று அழைப்பர். இதற்கு நேரான செந்தமிழ்ச் சொல் ‘துருத்தி’ என்பதாகும். இச் சொல்லைப் பல சங்க இலக்கியங்களில் காணலாம். துருத்திக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஸ்ரீ ரங்கம் ஆகும். ஆம், காவிரி ஆற்றின் மிகப் பெரிய இடைக்குறை அதாவது மண்மேடே ஸ்ரீரங்கம் ஆகும். எட்டு மைல் நீளமும் நான்கு மைல் அகலமும் கொண்ட இந்தத் துருத்திக்கு இருபுறங்களிலும் ஆறு ஓடுகிறது.  இதிலிருந்து ஆற்று நடுவில் உள்ள மண்மேட்டில் காலை வைத்தால் உள்வாங்கும் என்ற கருத்து தவறானது என்று தெளியலாம்.

அதுமட்டுமின்றி ஆற்றில் இறங்க விரும்பும் ஒருவர் ஆற்று நடுவில் உள்ள மண்மேட்டை நம்பியா இறங்குவார்?. ஒருபோதும் இல்லை. ஏனென்றால் தூரத்தில் இருக்கும் மண்மேடு இவருக்கு இக் கரையில் எவ்வகையிலும் உதவி செய்யப் போவதில்லை. எனவே ஆற்றில் இறங்கும்போது ஒவ்வொரு அடியாக ஆழம் பார்த்து இறங்குவாரே ஒழிய தூரத்தில் மண்மேடு தெரிகிறது உடனே ஓடிப்போய் விடலாம் என்று அவசர கதியில் இறங்கி சிக்கலில் மாட்டிக் கொள்வதில்லை. எனவே மண்மேட்டை நம்பி ஆற்றில் இறங்காதே என்று அறிவுரை கூறுவது பயனற்ற வேடிக்கையான செயலாகும். இத்தகைய பயனற்ற கருத்துக்களைப் பெரியோர்கள் கூறமாட்டார்கள் என்பதால் இக் கருத்து இட்டுக் கூறப்பட்டது என்பது பெறப்படுகிறது. இத் தவறுகளுக்கு எல்லாம் காரணம் ஒரு தூய தமிழ்ச் சொல்லை கொச்சை வழக்கெனத் தவறாகக் கருதி திருத்தியதே ஆகும். இனி சரியான சொல்லைப் பார்ப்போம்.

திருத்தம்
இப் பழமொழியில் வரும் மண்குதிரை என்பது மங்குதிரை என வரவேண்டும். இதுவே திருத்தம் ஆகும். மங்குதிரையின் பொருளைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.

மங்குதிரை = மங்கு + திரை.

திரை என்றால் இங்கே அலை என்று பொருள். மங்குதல் என்றால் இங்கு ஒளி மழுங்குதல் என்று பொருள். (ஆதாரம்: கழகத் தமிழ்க் கையகராதி). மங்குதிரை என்னும் வினைத்தொகை ஒளி மழுங்கு அலைகள் என்ற பொருளில் கானல் நீரைக் குறிக்கும். இனி இப்பழமொழியின் சரியான பொருள் இதுதான்: கானல் நீரை நம்பி ஆற்று மணலில் இறங்காதே.

நிறுவுதல்
மங்குதிரை என்னும் மூலச் சொல்லினை கொச்சை வடிவமாகக் கருதி மண்குதிரை எனத் திருத்தியது தான் இப் பழமொழியின் தவறான பொருள்கோளுக்குக் காரணமாகும். மங்குதிரை என்பது கானல்நீரினைக் குறிக்கும் ஒரு அருமையான சொல். கானல்நீரானது தூரத்தில் நீர்அலை வடிவத்தில் தெரிகின்ற ஒரு மாயத்தோற்றம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இத்தோற்றம் நிலையானதல்ல. மாறக்கூடியதே. இது எப்படி எங்கே எப்போது உருவாகிறது என்பதை அறிந்துகொண்டால் மங்குதிரை என்னும் சொல்லின் நயத்தினை நாம் நன்கு அறிந்துகொள்ள முடியும்.

கானல்நீர் தோன்றுவதற்கு முதற்காரணம் வெப்பம் ஆகும். நண்பகல் நேரத்தில் கதிரவனின் தெறிகதிர்கள் செங்குத்தாக வறண்ட மணல் பகுதிகளில் விழும்போது தான் இந்தக் கானல் நீர் உருவாகிறது. மணல்பரப்பின் மேற்பகுதி மிகவும் வெப்பமடையும் போது அந்த வெப்ப ஆற்றல் அலைவடிவம் பெற்று கதிர்வீசத் தொடங்குகிறது. இந் நிலையில் தூரத்தில் உள்ள பொருட்களின் ஒளிக் கதிர்கள் இந்த அலைகளில் படும்போது அவை மழுங்குகின்றன. மழுங்கிய நிலையில் இந்த ஒளி அலைகள் நம் கண்களை அடைவதால் அப் பொருளுக்குக் கீழே அதன் நிழல் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. அதாவது எவ்வாறு ஒரு நீர்ப்பரப்பு ஒரு பொருளை தனக்குள் பிரதிபலிக்குமோ அதைப்போல இந்த மழுங்கிய ஒளி அலைகள் நமக்கு ஒரு மாய நிழலைக் காட்டுகிறது. அருகில் உள்ள படத்தைப் பாருங்கள். இதைக் காணும்போது அங்கே நீர் இருப்பது போன்ற ஒரு எண்ணம் நமக்குள் பிறக்கிறது இல்லையா?. இதுவே கானல் நீர் ஆகும். அதிக வெப்பமடைந்த தார்ச்சாலைகள் மற்றும் மணல் பரப்புக்களில் கானல்நீர் தோன்றும்.

ஆற்றங்கரைகளில் பலவிதமான மரங்கள் வளர்ந்து நிழல் தருவதை நாம் கண்டிருக்கிறோம். எனவே தான் பழங்காலத்தில் (ஏன் இக்காலத்திலும் கூட) மக்கள் ஆற்றங்கரை ஓரமாகவே நடைப்பயணம் செய்து பிற ஊர்களுக்குச் செல்வர். இதனால் வெயிலின் கொடுமை தவிர்க்கப் படுவதுடன் ஆற்றின் அழகிய காட்சியினைக் கண்ட வண்ணம் பயணம் இனிதாக நடைபெறும். ஆனால் இயற்கைச் சூழ்நிலை எப்போதும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது?. பருவநிலை மாற்றங்களால் போதுமான மழை பெய்யாமல் போக பல ஆறுகள் நீர் முழுதும் வறண்டு வெறும் மணற் பரப்புக்களாகக் காட்சி அளிப்பதை நாம் காண்கிறோம். இந் நிலையில் ஆற்றங்கரை ஓரமாக நடைப்பயணம் செய்யும் மக்கள் வழியில் தாகமெடுத்தால் (தாம் கொண்டுவந்த நீர் முழுதும் தீர்ந்து போன நிலையில்) குடிப்பதற்கு நீரைத் தேடி ஏங்குவது இயல்பு. நீர்வேட்கை உடைய இவர்களது கண்களில் ஆற்றுமணலில் தோன்றிய இந்தக் கானல்நீர் கண்டிப்பாகப் படும். காரணம் ஆற்றுமணல் பகுதி தாழ்வாகவும் ஆற்றங்கரை பகுதி உயர்வாகவும் இருப்பதே. ஏற்கெனவே நீர்வேட்கையால் வருத்தமுற்று இருக்கும் இம் மக்கள் கானல்நீருக்கு எளிதில் ஏமாறுவர். கானல் நீரை உண்மையான நீரென்று நம்பி ஆற்று மணலில் இறங்கி நடப்பர். அதன்பின் அவர்களது நிலை என்னாகும்?. இல்லாத ஒரு நீருக்காக பொல்லாத வெயிலில் நடந்து நடந்து களைத்து உடல் வெம்பி ஏமாற்றத்தால் மனம் நொந்து …. அப்பப்பா! மிகப் பெரிய துன்பம் அது!.

இவ்வாறு கானல்நீரை நம்பி ஏமாந்து துன்பப் படக்கூடாது என்பதற்காகத் தான் பெரியோர்கள் இப் பழமொழியினைக் கூறியுள்ளனர். மணலில் இறங்கிய பின்னர் கானல்நீரினை நோக்கி நடக்கத்தானே செய்வர். அதனால் தான் ஆற்றுமணலில் நீர் இருப்பதுபோலத் தெரிந்தாலும் இறங்கவே வேண்டாம் என்கிறது இப் பழமொழி. சரியான பழமொழி: மங்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

3. பழமொழி: ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்.
சரியான பழமொழி: அயத்தில் ஒரு கால்; செயத்தில் ஒரு கால்.

தற்போதைய கருத்து ஆற்றுநீரில் ஒருகாலையும் சேற்றுமண்ணில் ஒருகாலையும் வைப்பதைப் போல.

தவறு
இப் பழமொழியின் பயன்பாட்டில் தவறேதும் இல்லை அதாவது ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளில் கவனம் வைத்தால் ஒரு செயலைக் கூட உருப்படியாய் செய்துமுடிக்க இயலாது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் இப் பழமொழிக்குக் கூறப்படும் பொருள்விளக்கம் அதாவது ஆற்றுநீரில் ஒருகால் சேற்றுமண்ணில் ஒருகால் என்பதுதான் தவறாகும். இது எவ்வாறு தவறாகும் என்று காண்போம். நம்மில் பலருக்கு ஆற்றைப் பற்றியும் குளத்தைப் பற்றியும் தெரியும். ஆற்றுநீரானது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் இயல்பினது என்பதால் ஆற்றங்கரையில் மணல் நிறைந்து இருக்கும். இதற்கு மாறாக குளத்து நீரானது தேங்கி நிற்கும் இயலபினது. ஆகையால் குளத்தங்கரையில் தான் சேறு நிறைந்து இருக்கும். ஆற்றங்கரையில் சேறு இல்லை எனும்போது ஆற்றுநீரில் தனது ஒருகாலை வைத்த ஒருவன் இன்னொருகாலை சேற்றுமண்ணில் எப்படி வைக்க முடியும்?. ஒருபோதும் முடியாது அல்லவா?. இப்படி நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு கருத்தை உணர்த்துவதால் இப் பழமொழிக்குக் கூறப்பட்ட மேற்காணும் பொருள்விளக்கம் தவறு என்பதை அறியலாம்.

மேற்காணும் பொருள்விளக்கத்தில் தவறு நேர்ந்ததற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது ‘ஆத்துல’ மற்றும் ‘சேத்துல’ ஆகிய கொச்சைச்சொற்களே என்று புலப்பட்டது. ஆத்துல என்ற கொச்சைச்சொல் ஆற்றுநீரைக் குறிப்பதாகவும் சேத்துல எனும் கொச்சைச்சொல் சேற்றுமண்ணைக் குறிப்பதாகவும் புரிந்து கொண்டதே தவறான பொருள்விளக்கத்திற்கு அடிகோலி இருக்கிறது. இனி இவற்றின் சரியான பொருட்கள் என்ன என்று பார்ப்போம்.

திருத்தம்
ஆத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் அயத்தில் என்பதாகும். அயம் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டெனினும் இங்கு இச்சொல் குதிரையைக் குறிக்கும். சேத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் செயத்தில் என்பதாகும். செயம் என்ற சொல் இங்கு பூமி அல்லது நிலத்தைக் குறிக்கும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்
கற்றறிந்த மக்களின் வாய்வழக்காக மட்டும் முதலில் இருந்தவந்த பழமொழிகள் காலப்போக்கில் கல்லாத பாமர மக்களின் வாயில் நுழைந்தபோது பலவிதமான மாற்றங்களை அடைந்தன. அவற்றுள் ஒன்றே கொச்சை மாற்றம் ஆகும். அகத்தில் என்னும் தூயதமிழ்ச் சொல் கொச்சையாக ஆத்துல என்று எவ்வாறு வழங்கப்பெறும் என்று முன்னர் ஒரு கட்டுரையில் கண்டோம். இப் பழமொழியில் வரும் அயத்தில் மற்றும் செயத்தில் ஆகிய தூய தமிழ்ச் சொற்கள் எவ்வாறு திரியும் என்பதைக் கீழே சான்றுகளுடன் காணலாம்.

அயம் (நீரைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்)–> ஆம் (நீரைக் குறிக்கும் திரிபு வடிவம்)
மயல் (மயக்கத்தைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) –> மால் (மயக்கத்தைக் குறிக்கும் திரிபு வடிவம்)
பெயர் (தூய தமிழ்வடிவம்) –> பேர் (திரிபு வடிவம்)
வெயர்வு (சினத்தைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) –> வேர்வு (சினத்தைக் குறிக்கும் திரிபு வடிவம்)
மேற்கண்ட சான்றுகளில் இருந்து மொழிமுதலாய் வரும் குற்றெழுத்துக்கள் திரிபின்போது யகரத்தை இழந்து நெடிலாக மாற்றமடையும் என்று அறியலாம். இவ் இலக்கணப் படியே
அயத்தில் –> ஆத்தில் –> ஆத்துல என்றும்
செயத்தில் –> சேத்தில் –> சேத்துல என்றும்
கொச்சை வழக்கில் மாற்றமடையும் என்பதை அறியலாம்.

அயம் என்பதற்கு குதிரை என்ற பொருள் அகராதிகளில் காணப்படுகிறது. இதனால் தான் குதிரையில் ஏறிவரும் சாமியை அய்யனார் என்கிறோம். செயம் என்ற சொல்லுக்கு வெற்றி என்ற பொருள் மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மையில் வெற்றி என்பது இரண்டாம் நிலைப் பொருள் ஆகும். பூமி என்பதே முதல்நிலைப் பொருள் ஆகும். ஏனென்றால் போருக்குச் செல்லும் மன்னனின் முதல் நோக்கம் எதிரி நாட்டு மன்னனின் பூமியைக் கைப்பற்றுவதே ஆகும். பூமியைக் கைப்பற்றினாலே வெற்றி பெற்றுவிட்டதாகவே பொருள் கொள்ளப்படும்.

ஒரு சான்றாக செயம்கொண்டான் என்னும் பெயரை எடுத்துக் கொள்வோம். இப் பெயரின் பொருளை வெற்றிகொண்டான் என்று விரிப்பதைவிட பூமிகொண்டான் என்று விரிப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் வெற்றியை உடையவன் என்பதைவிட பரந்த பூமியை உடையவன் என்பதே மன்னருக்குச் (முதலாம் இராசராச சோழன்) சிறப்பு தரும் பெயராகும். செயம் என்னும் சொல் முதல்நிலையில் பூமியைத் தான் குறிக்கும் என்பதற்கு மேலும் சில ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

செய் என்னும் சொல்லுக்கு விளைநிலம் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. இது செயம் என்னும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இதிலிருந்து செயம் என்பது நிலப்பொருளையே குறிக்கும் என்பதை அறியலாம். செய்யாள், செய்யவள், செய்யோள் என்ற சொற்களுக்கு இலக்குமி என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. பூமியே அனைத்து செல்வங்களின் இருப்பிடம் என்பதால் பூமித்தாயே இலக்குமி ஆவாள். செய்யாள் என்பது செய்யை உடையவள் என்று விரிந்து பூமித்தாயைக் குறிப்பதால் இங்கும் செய் என்பது நிலத்தையே குறிக்கிறது என்று அறியலாம். இனி இப் பழமொழி உணர்த்தும் கருத்தினை ஒரு சிறுகதையுடன் காணலாம்.

குதிரை ஏற்றம் பயில விரும்பினான் ஒருவன். ஆனால் அவனுக்குக் குதிரை மீது ஏறவே பயம் எங்கே குதிரை அவனை மேலிருந்து கீழே தள்ளிவிடுமோ என்று. ஆனால் அவனுக்கோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதாவது குதிரையின் மீதும் ஏறவேண்டும்; அதேசமயம் குதிரையும் அவனைத் தள்ளிவிடக்கூடாது. அதற்காக ஒரு தந்திரம் செய்தான். வலதுகாலைத் தூக்கி குதிரையின் மேலே போட்டுவிட்டு இடதுகாலைத் தரையில் ஊன்றிக் கொண்டான். இப்படிச் செய்தால் பாதுகாப்பாகக் குதிரைப்பயணம் செய்யலாம் என்ற நினைப்பு அவனுக்கு. இப்போது குதிரையைப் பின்னால் இருந்து உசுப்பினான். உடனே குதிரை பாய்ந்து ஓடத் துவங்கியது. இதனால் நிலைதடுமாறிக் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.

அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது ” குதிரைமேல் ஒருகாலையும் தரையில் ஒருகாலையும் வைத்துக் கொண்டால்” குதிரைப் பயணமும் செய்ய முடியாது; நடக்கவும் முடியாது என்று. அதாவது ஒரு நேரத்தில் இரண்டு செயல்களில் கவனத்தை வைத்தால் ஒரு செயலும் உருப்படியாய் நடக்காது. இதுவே இப் பழமொழி உணர்த்தவரும் உண்மையான கருத்தாகும். சரியான பழமொழி: அயத்தில் ஒரு கால்; செயத்தில் ஒரு கால்.

4. பழமொழி: ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்
சரியான பழமொழி: அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்

தற்போதைய பொருள்
தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுவரும் பல தமிழ்நாட்டுப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. ‘ஆற்றில்’ என்னும் தூய தமிழ்ச்சொல்லே ‘ஆத்துல’ என்று கொச்சைவழக்கில் மருவியதாகப் புரிந்துகொண்டு ‘ஆற்று நீரில் போட்டாலும் அளந்து தான் போடவேண்டும்’ என்று இப் பழமொழிக்குப் பொருள் கொள்கின்றனர். இன்னும் சிலர் ‘அகத்தில்’ என்னும் சொல்தான் ‘ஆத்துல’ என்று மருவியதாகப் புரிந்துகொண்டு ‘அகத்துக்கே அதாவது வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்யவேண்டும்’ என்று பொருள் கூறுகின்றனர்.

தவறு
மேற்காணும் இரண்டு கருத்துக்களுமே தவறானவை. ஏனென்றால் இவை இரண்டுமே அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை உணர்த்துகின்றன. முதலில் ஆற்றுநீரில் போடுவதைப் பற்றிப் பார்ப்போம். இக் கருத்து அறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். ஆற்றுநீரில் எதைப் போடவேண்டும்? ஏன் போடவேண்டும்?. கழிவுப் பொருட்களையா?. ஆற்றுநீரில் கழிவுப் பொருட்களைப் போட்டால் நீரின் தூய்மை கெடுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டுவிடும். அப்படியே போட்டாலும் அளந்துபோடச் சொன்னால் மிச்சத்தை எங்கே போடுவதாம்?. அதுமட்டுமின்றி எல்லா ஊர்களிலும் ஆறு ஓடுவதில்லை. ஆறில்லாத ஊர்களில் வசிப்பவர்கள் கழிவுகளை எங்கே போடுவார்கள்?. எனவே இப் பழமொழியானது கழிவுகளை ஆற்றில் போட்டு ஒழிப்பதற்காகக் கூறப்பட்டதாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.

அடுத்து வீட்டுச் செலவுக்கு வருவோம். வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்ய வேண்டும் என்று இப் பழமொழிக்குப் பொருள் கூறுவது ஏற்புடையதல்ல. ஏனென்றால் போடுதல் என்ற சொல்லிற்கு செலவுசெய்தல் என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை. இல்லாத பொருளை வருவித்துக் கூறுவதால் இக் கருத்துப் பொருந்தாத ஒன்றாகும். அன்றியும் பழமொழிகள் யாவும் அனுபவம் நிறைந்த சான்றோர்களால் இளைய தலைமுறையினரின் நல்வாழ்விற்காக உருவாக்கப் பட்டவை என்று நாம் அறிவோம். எனவே இதுபோன்ற அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை அச் சான்றோர்கள் கூறி இருக்க முடியாது என்று தெளியலாம். இப் பழமொழியின் தவறான கருத்துக்களுக்குக் காரணம் இப் பழமொழியில் உள்ள தூயதமிழ்ச் சொற்கள் கொச்சைவழக்கில் திரிந்ததும் ஒருசில எழுத்துப் பிழைகளுமே. இனி அவற்றைப் பார்க்கலாம்.

திருத்தம்
இப் பழமொழியில் வரும் ‘ஆத்துல’ என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் ‘அகத்தில்’ என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப் பழமொழியில் வரும் பொருள் ‘மனம் அல்லது நினைவு’ என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். ‘அளந்து’ என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது ‘அறிந்து’ என்று வரவேண்டும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்
புதுப்புது கருத்துக்களை நினைவில் கொள்ளும் முறை குறித்து இயற்றப்பட்டதே இப் பழமொழி ஆகும். மனித வாழ்க்கையில் புதிய கருத்துக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை நினைவில் கொள்ளும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையேல் பலப்பல கேடுகளைச் சந்திக்க நேரிடும். சான்றாக ஒரு மாணவன் கல்வி கற்பதை எடுத்துக் கொள்வோம். கல்வி கற்கும்போது ஆசிரியர் நாள்தோறும் புதுப்புது தகவல்களை மாணவனுக்குக் கூறுகிறார். அவற்றை மாணவன் உள்வாங்கும்போது அத் தகவல்களைப் பற்றி நன்கு அறிந்த பின்னரே நினைவில் கொள்ளவேண்டும். தகவல்களின் தன்மைகளையும் நோக்கங்களையும் அறியாமல் வெறுமனே நினைவில் கொள்ளும்போது தகவல் குறுக்கீடு உண்டாகித் தெளிவின்மை பிறக்கும். அறிவுத் தெளிவின்மையே பல தவறான செயல்பாடுகளுக்கான மூலமாகும். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது பாதிக்கப்படுவதுடன் வாழ்வதே கடினமாகவும் தோன்றும். தெளிவின்மை எல்லை மீறும்போது பைத்தியமாகிவிடுகின்ற கேடும் இருக்கிறது.

மனித வாழ்க்கையில் அறிவின் பயன்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்று நாம் நன்கு அறிவோம். ஏனைய உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவதே அறிவுதானே. வள்ளுவர் ஒருபடி மேலேபோய் அறிவினை ஒரு கருவி எனக் குறிப்பிடுகிறார். ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ என்று 421 ஆம் குறளில் அவர் குறிப்பிடுவதில் இருந்து நல்ல தெளிவான அறிவினை ஆயுதமாகக் கொண்டு அனைத்துத் துன்பங்களில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள இயலும் என்று அறியலாம். இப்படிப்பட்ட அறிவு தெளிவாக இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் அல்லவா?. அதனால் தான் கருத்துக்களை நினைவில் கொள்ளும்போது தெளிவாக அறிந்த பின்னரே நினைவில்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். இதுவே இப்பழமொழியின் உண்மையான விளக்கமாகும்.

அன்றியும் கருத்துக்களை நினைவில் கொள்வது என்பது கடினமான செயல் ஒன்றும் அல்ல. ஏனென்றால் இதற்காக உடலுழைப்போ பொருட்செலவோ செய்யத் தேவையில்லை. இயல்பான மனநிலையில் உள்ள அனைவராலும் ஓரளவுக்குப் புதிய கருத்துக்களை மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். அதனால் தான் ‘அகத்தில் போட்டாலும்’ என்று உம்மை சேர்த்துக் கூறப்படுகிறது. இங்கு உம்மையானது ‘எளிதான செயல்தானே’ என்ற இகழ்ச்சிப்பொருளில் வந்துள்ளது.

‘நினைவில் கொள்ளவேண்டும் அவ்வளவுதானே’ என்று இகழ்ச்சியாக எண்ணி கருத்துக்களைத் தெளிவாக அறிந்து கொள்ளாமல் நினைவில் கொள்ளக்கூடாது என்று இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கிறது இப்பழமொழி. சரியான பழமொழி: அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்

5. பழமொழி: அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்.
சரியான பழமொழி: அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும்.

தற்போதைய பொருள் : அடிமேல் அடி வைத்தால் அம்மிக்கல்லைக் கூட நகர்த்த முடியும்.

தவறு
அம்மிக்கல்லை அக்கால இல்லத்தரசிகளின் கைஅரைப்பான் என்றே கூறலாம். உணவுப் பொருட்களை சிறிய அளவில் அரைப்பதற்கென்று மின்னூறி(மிக்ஸி) வந்துவிட்ட இந்தக் காலத்தில் அம்மிக்கல்லைப் பார்ப்பதே அரிதாய் இருக்கின்றது. பழைய வீடுகளில் எல்லாம் இந்த அம்மிக்கல்லானது வீட்டுத் திண்ணையின் ஒரு மூலையில் கருப்பு ஆடு போல படுத்திருக்கும். இது மட்டும் தனியாக இருக்காமல் துணைக்கு ஒரு குழவிக் கல்லையும் சேர்த்துக்கொண்டு தனது தலைக்குமேலே அதனைப் படுக்க வைத்திருக்கும். ஒரு அம்மிக்கல்லின் எடை (குழவிக்கல் நீங்கலாக) ஏறக்குறைய நாற்பது கிலோ இருக்கும். இந்த நாற்பது கிலோ எடையுள்ள ஒரு அம்மிக்கல்லை நகர்த்திவைக்க ஏன் அதனை அடியோ அடி என்று அடிக்க வேண்டும்?. இரண்டு கைகளால் நன்கு அழுத்தித் தள்ளினால் போதும்; நகர்ந்துவிடும். முடியாதவர்கள் ஒரு கடப்பாரையால் கீழிருந்து நெம்பினால் போதும்; நகர்ந்துவிடும். அதுவும் முடியாதவர்கள் துணைக்கு யாரையாவது அழைத்துக் கொள்ள வேண்டியதுதான்!.

இப்படிப் பல வழிகள் இருக்க ஏன் அம்மிக்கல்லை அடித்துப் படாதபாடு படுத்தவேண்டும்?. ஏற்கெனவே அடிமேல் அடி வாங்கித் தான் அது நம் வீட்டுக்கே வந்திருக்கிறது. ஆம், ஒரு அம்மிக்கல் சரியான வடிவம் பெறும்வரை ஆசாரியின் உளியால் எவ்வளவு அடிகளைப் பெறுகிறது என்பதை நாம் அறிவோம். இந் நிலையில் மேலும் பல அடிகள் அதற்குத் தேவையா?. பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து அந்த அம்மிக்கல் உடைந்துவிட்டால்?. முதலுக்கே மோசம் அல்லவா ஆகிவிடும்!. நடைமுறை உண்மையும் அது தானே. நகர்த்துகிறேன் பேர்வழி என்று ஒரு அம்மிக்கல்லை அடியோ அடி என்று அடித்துப் பாருங்கள். இறுதியில் அது உடைந்தே போய்விடும். எனவே அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்று பொருள் கூறும் இப்பழமொழி தவறு என்பது தெளிவாகிறது. இந்தத் தவறான பொருளுக்குக் காரணம் இப் பழமொழியில் வரும் ‘நகரும்’ என்ற சொல்லில் உள்ள ஒரே ஒரு எழுத்துப் பிழைதான். அதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருத்தம்
‘நகரும்’ என்ற சொல்லிற்குப் பதிலாகத் ‘தகரும்’ என்று வரவேண்டும். இதுவே இப் பழமொழியின் திருத்தமாகும். தகரும் என்றால் ‘உடையும், சிதறும்’ என்று பொருள்படும்.

நிறுவுதல்
‘முயன்றால் முடியாதது எதுவுமில்லை’ என்னும் உண்மையினை உணர்த்த வந்த அருமையான பழமொழியே இது. நம்மில் பலரும் பலபல குறிக்கோள்களுடன் நாள்தோறும் நன்கு உழைக்கத் தான் செய்கிறோம். ஆனால் வெற்றி எல்லோரையுமா அரவணைக்கிறது?. இல்லையே. அன்றியும் வெற்றி ஒரே இடத்தில் நிலைத்து இருப்பதுமில்லை. எனவே வெற்றிக் கனியைச் சுவைக்க நாள்தோறும் கடினமாக உழைக்கத் தான் வேண்டும். ஆனால் எதுவரை?. நாம் எண்ணிய செயல்கள் அனைத்திலும் முழுமையான வெற்றி கிட்டும் வரை. சிலமுறை முயன்று தோல்விகளைத் தழுவியவர்கள் கூறும் வார்த்தை இது தான்: ‘என்னால் முடியவில்லை; எனக்கு அது கிடைக்காது.’ இது தவறான கருத்தாகும். ஏனென்றால் முடியும் என்று முழுமூச்சுடன் நம்பி தொடர்ந்து செயல்பட்டால் முடியாதது எதுவுமில்லை. கிடைக்காதது எதுவுமில்லை. இதனால் தான் திருவள்ளுவரும் ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்று கூறுகிறார். இங்கே வள்ளுவர் கூறும் முயற்சி என்பது விடாமுயற்சியே ஆகும். வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கூறும் வார்த்தை இதுதான்: ‘என்னால் முடியும் என்ற நம்பிக்கையும் விடாமுயற்சியுமே எனது வெற்றிக்கான காரணங்கள்.’

விடாமுயற்சியும் கடினஉழைப்பும் இருந்தால் அரிய செயல்களைக் கூட நம்மால் செய்துமுடிக்க இயலும். இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் விடாமுயற்சி என்னும் அடிமேல் அடி வைத்தால் உடையாது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் கடினமான அம்மிக்கல் போன்ற அரிய செயல்கள் கூட நிறைவேறும். இதுவே இப் பழமொழியின் கருத்தாகும்.

இளைய தலைமுறையினருக்கு வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் நோக்கத்துடன் கூறப்பட்டுள்ள இப் பழமொழியின் உண்மையான பொருள் இது தான்: ‘அடிமேல் அடி வைத்தால் அம்மிக்கல்லும் உடைந்துசிதறும்.’ இப் பழமொழியில் வரும் ‘அம்மிக்கல்’ என்பது அரிய செயலையும் ‘அடிமேல் அடி வைத்தல்’ என்பது விடாமுயற்சியினையும் உருவகமாகக் குறித்து நிற்கின்றன. சரியான பழமொழி: அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும்.

6. பழமொழி: பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
சரியான பழமொழி: பழம் நழுவிப் பாகில் விழுந்தது போல.

தற்போதைய பொருள் : உண்ணும்போது கையில் இருந்த பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போல மிக்க நன்மை விளைந்தது.

தவறு
முதல் கேள்வி இதுதான். உண்மையிலேயே பழம் நழுவிப் பாலில் விழுந்தால் விளைவு என்ன ஆகும்?. அது பால் இருக்கும் பாத்திரத்தின் வாய் அளவினையும் பழத்தின் அளவினையும் பொறுத்தது. பாத்திரத்தின் வாய் பழத்தைவிட சிறியதாய் இருந்தால் அந்த பாத்திரம் பழத்தினால் தட்டிவிடப்பட்டு பால் முழுவதும் தரையில் கொட்டிவிடும். பாத்திரத்தின் வாய் பழத்தைவிட பெரியதாய் இருந்தால் பழமானது பாத்திரத்தின் உள்ளே விழுந்து பால் வெளியே தெறிக்கும். உள்ளே விழுகின்ற பழத்தின் அளவினைப் பொறுத்து வெளியே தெறிக்கும் பாலின் அளவு மாறுபடும். அதிலும் புளியம்பழமோ ஆரஞ்சுப் பழச் சுளையோ தவறுதலாகப் பாலில் விழுந்துவிட்டால் என்ன ஆகும்?. பால் முழுவதும் திரிந்து வீணாகி விடும். எப்படிப் பார்த்தாலும் பழம் நழுவிப் பாலில் விழுந்தால் பாலுக்குத் தான் பாதிப்பு; பழத்துக்கு இல்லை. இப்படி விழுந்த பழத்துக்குப் பாலினால் உடனே சுவை கூடுவதுமில்லை. ஏனென்றால் பால் இனிப்பாக இருந்து அதில் பழத்தை நன்கு ஊறவைத்தால் தான் பழத்துக்குச் சுவை கூடும். பாலில் நழுவி விழுவதால் மட்டும் பழத்துக்குச் சுவை கூடுவதில்லை என்பதால் மேற்காணும் பொருளில் இப் பழமொழியினைப் பயன்படுத்துவது தவறு என்பதை அறியலாம்.

இப்படி நன்மை எதையும் தராமல் நடக்கின்ற இந்த நிகழ்ச்சியினை மிக்க நன்மை தருகின்ற ஒரு நிகழ்வாகக் கருதி அதனை மக்கள் எப்படி உவமையாகப் பயன்படுத்துகின்றனர்?. இத் தொடர் எப்படி மக்களால் பழமொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது?. இதற்கான விடைகளை ஆய்வு செய்ததில் கீழ்க்காணும் கருத்துக்கள் கிடைத்தன. பழமொழியின் பொருள் சரியானது தான். அதில் எவ்விதத் தவறும் இல்லை. பழமொழியில் உள்ள ‘பால்’ என்ற சொல்லில் தான் ஒரே ஒரு எழுத்துப் பிழை உள்ளது. அதைத் திருத்தி எழுதினால் தான் நாம் இன்று மேற்கொண்டிருக்கும் பொருள் இப்பழமொழிக்குப் பொருத்தமாக அமையும். அதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருத்தம்
பழமொழியில் வரும் ‘பால்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘பாகு’ என்ற சொல் வந்திருக்க வேண்டும். இதுவே திருத்தம் ஆகும். இங்கே பாகு என்பது வெல்லப்பாகினைக் குறிக்கும்.

நிறுவுதல்
பழங்களில் பலவகைகள் இருந்தாலும் இனிப்புச் சுவை உடைய பழங்கள் தான் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப் படுகின்றன. இத்தகைய பழங்களை உண்ணும்போது கைநழுவித் தவறுதலாகக் கீழே ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஆறவைத்திருக்கும் வெல்லப்பாகில் விழுந்துவிட்டால் என்ன ஆகும்?. வெல்லப்பாகானது பால்போல அதிக நீர்த்தன்மை உடையது அல்ல என்பதால் வெளியே தெறிக்காது. மாறாக விழுந்த பழம் வெல்லப்பாகிற்குள் மூழ்கிவிடும். இப்படி மூழ்கிய பழத்தை வெளியே எடுத்தால் அந்தப் பழத்தின் மேல்புறம் முழுவதும் வெல்லப்பாகு ஒட்டியிருக்கும். இப்போது இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அதன் சுவையைச் சொல்லவும் வேண்டுமோ?. வெல்லப்பாகின் சுவையுடன் பழத்தின் சுவையும் சேர்ந்து நாக்கிற்கு ஒரு இனிய விருந்து அல்லவா கிடைக்கும்!. அத்துடன் வெல்லப்பாகில் புளியம்பழம் விழுந்தாலும் சரி ஆரஞ்சுப் பழச்சுளை விழுந்தாலும் சரி அது வெல்லப்பாகினை பாதிக்காது.

இந்த வெல்லப்பாகு நீண்ட நாள் வரையிலும் கெடாது என்பதால் இந்தப் பாகிற்குள் இனிப்பான பழங்களைப் பலநாட்கள் வரை ஊறவைத்தும் உண்ணலாம். அவ்வாறு உண்டால் பழங்கள் மிக்க இனிப்புச் சுவையுடன் இருக்கும். வெல்லப்பாகின் இத் தன்மையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டதே இந்தப் பழமொழி. ஏற்கெனவே இனிப்பாக இருக்கும் பழத்தின் சுவையினை வெல்லப் பாகானது மேலும் கூட்டுவதால் அதிக மகிழ்ச்சியையும் மிக்க நன்மையையும் குறிப்பதற்கு இப் பழமொழி ஒரு உவமையாகப் பயன்படலாயிற்று. சரியான பழமொழி: பழம் நழுவிப் பாகில் விழுந்தது போல.

7. பழமொழி: இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்

தற்போதைய பொருள் : தங்குவதற்கு மடத்தில்/ வீட்டில் சிறிது இடம் கொடுத்தால் நாளடைவில் மடம்/ வீடு முழுவதையும் பறித்துத் தனதாக்கிக் கொள்வான்.

தவறு
முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது மேற்காணும் தொடர் ஒரு பழமொழியே அல்ல;  ஒரு விடுமொழி என்னும் உண்மையினை. விடுமொழி என்றால் என்ன என்று அறியும் முன்னர் இக் கருத்து எவ்வாறு தவறாகும் என்று பார்ப்போம். மடம் என்றால் தங்கும் விடுதி போல ஒரு பொது இடம். பழங்காலத்தில் மக்கள் பெரும்பாலும் கால்நடையாகவே பயணம் செய்து அயலூருக்குச் செல்வர். அப்படிச் செல்லும்போது நடந்துவந்த களைப்பு தீரவும் மறுபடியும் பயணத்தைத் தொடர்வதற்குத் தேவையான புத்துணர்ச்சியைப் பெறவும் இந்த மடத்தில் வந்து சிலநாட்கள் தங்குவார்கள். இக்காலத்திலும் பேருந்து, நாலாழி போன்ற ஊர்திகளில் பயணம் செய்கிற வெளியூர்க்காரர்கள் இந்த மடத்தில் வந்து தங்குகிறார்கள். இப்படித் தங்குகிற பயணிகளில் ஒருசிலர் அந்த மடத்தையே மெல்லமெல்ல தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறார்கள். அதுவும் எப்படி?. மடத்திற்குச் சொந்தக்காரர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொள்கிறார்கள் என்று பொருள் உரைக்கிறது இந்தத் தொடர். இக் கருத்து பொருத்தமானதா என்றால் பொருந்தாது. இது எவ்வாறு என்று பார்ப்போம்.

பொதுவாக மடம் என்பது பலருக்கும் இடமளிக்கக் கூடிய வகையில் ஒரு சாதாரண வீட்டைவிட பெரிய அளவில் தான் இருக்கும். இங்கே பலரும் தங்கள் குடும்பத்துடன் தாராளமாகப் பலநாட்கள் தங்கிச் செல்லலாம். இப்படி வருகிற பயணிகள் யாவருக்கும் ஒரு குடும்பமும் இருக்கும் ஒரு வீடும் இருக்கும். எனவே இவர்கள் இந்த மடத்தைத் தமது சொந்தமாக்கிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். சரி, குடும்பமும் வீடும் இல்லாத ஒருவன் மடத்தை பிடுங்கிக் கொள்ள விரும்புவானா?. அவனும் விரும்பமாட்டான். ஏனென்றால் குடும்பமும் வீடும் இல்லாதவன் யார்? ஒரு துறவி தானே. முற்றும் துறந்த துறவிக்கு மடத்தைப் பிடுங்கும் ஆசை மட்டும் ஏன் வரப்போகிறது?. அன்றியும் மடத்தைப் பிடுங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு முதலில் அந்த மடத்தில் தங்கி இருக்கும் பயணிகளை எல்லாம் துரத்தவேண்டும். உடல்வலிமையும் தீய எண்ணங்களும் கடுமையும் மிக்க கொடியவன் ஒருவனால் அன்றி ஒரு துறவியால் இத்தகைய கொடிய செயலைச் செய்யவே இயலாது. இப்படிப்பட்ட கொடியவர்களும் மடத்தில் இடம்கொடுத்தால் மெல்லமெல்ல அந்த மடத்தில் தங்கியுள்ளோரின் பொருட்களைத் தான் அடைய விரும்புவார்களே ஒழிய மடத்தையே பிடுங்க விரும்பமாட்டார்கள்.

மடத்துக்குப் பதிலாக வீடு என்று எடுத்துக் கொண்டாலும் இக் கருத்து பொருந்தாது. ஏனென்றால் நன்கு தெரிந்தவர்களுக்குத் தான் வீட்டில் நாட்கணக்கில் தங்க இடம் கொடுப்பார்களே அன்றி அறிமுகம் இல்லாதவர்களுக்குப் பெரும்பாலும் கொடுப்பது இல்லை. அப்படியே கொடுத்து அவர்கள் தீயவர்களாய் இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் பொருட்களைத் தான் களவாடிச் செல்வார்களே ஒழிய அந்த வீட்டையே பிடுங்க முயல மாட்டார்கள். எனவே இத் தொடருக்கு மேற்கண்ட நேரடியான பொருளைக் கொள்வது தவறு என்று அறியலாம். இனி இத் தொடர் உணர்த்தும் மறைமுகமான பொருள் என்ன என்று காணலாம்.

திருத்தம்
மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் ‘இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான். அவன் யார்?’ என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் ‘நோய்க்கிருமி’ ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

நிறுவுதல்
விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான ‘அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?’ போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே ‘விடுமொழிகள்’ என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன.

‘இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.’
‘சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.’
‘எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.’
‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.’

இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு நோய்க்கிருமியைக் குறிக்கும் என்று பார்ப்போம். நோய்கள் யாவும் அழையா விருந்தாளிகள் என்று நாம் அறிவோம். ஏனென்றால் நம்மில் யாரும் நோயை விரும்பி வரவழைத்துக் கொள்வதில்லை. உணவு, நீர், காற்று ஆகியவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பரவுகிறது. இப்படிப் பரவுகிற கிருமிகள் நம் உடம்பில் புகுந்தவுடன் நம் உடம்பில் ஒரு எதிர்ப்பாற்றல் இல்லாத பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்கி பல்கிப்பெருகத் துவங்கிறது. இப்படிப் பெருகும் கிருமிகள் நாளடைவில் உடல்முழுவதும் பரவுகின்றன. இதனால் நோய் முற்றி நம் உடல் நம் வசம் இல்லாமல் நோயின் வசமாகிறது. விளைவு மரணம்.

கிருமிகள் நம் உடலில் புகவே புகாதவண்ணம் காப்பது என்பது நடைமுறையில் இயலாத செயல் ஆகும். ஆனால் புகுந்த கிருமிகளை நம் உடலில் தங்க அனுமதிக்காமல் இருப்பது நம் கையில் தான் இருக்கிறது. தங்குவதற்கு உடலில் சிறிது இடம் கொடுத்தாலும் நாளடைவில் கிருமிகள் நமது உடலையே நம்மிடம் இருந்து பிடுங்கித் தன் வசப்படுத்தி விடும். இதனால் தான் ஔவையாரும் தனது ஆத்திச்சூடியில் ‘நோய்க்கு இடம் கொடேல்’ என்று அறிவுறுத்துகிறார். கிருமிகளின் இத் தன்மையினை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே இந்த விடுகதை ஆகும்.

8. பழமொழி: ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

தற்போதைய பொருள்  ‘ஒரு ஊரைச் சேர்ந்த மக்கள் இரண்டு பிரிவானால் கூத்தாடிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவர்.’

தவறு
முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இந்த தொடர் ஒரு பழமொழியே அல்ல; ஒரு விடுமொழி என்னும் உண்மையை. விடுமொழி என்றால் என்ன என்று காணும் முன்னர் இத் தொடருக்குக் கூறப்படும் தற்போதைய பொருள் எவ்வாறு தவறாகும் என்று பார்ப்போம். பொதுவாக ஒரு ஊர் என்றாலே அங்கே பலதரப்பட்ட மக்களும் வாழ்வார்கள். ஒரே ஊரில் வாழ்ந்தாலும் இம் மக்கள் சாதி, மதம், பொருளாதாரம் மற்றும் மொழி போன்றவற்றால் மற்றவர்களிடமிருந்து பிரிந்தே வாழ்கின்றனர். மனிதர்களுடைய இந்தப் பிரிவினை எண்ணங்களை தனக்குச் சாதகமாக இன்றுவரையில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது யாரென்றால் அது அரசியல்வாதியாகத் தான் இருக்கும். இந்த அரசியல்வாதிகளின் வேலை மக்களைப் பிரிப்பது அல்ல; ஏற்கெனவே பிரிந்திருக்கும் மக்களை எக்காரணம் கொண்டும் ஒன்றுசேர விடாமல் தடுப்பதே ஆகும். ஏனென்றால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் அது மிகப் பெரிய ஆற்றலாகிவிடும். அந்த ஆற்றலை எதிர்த்து நிற்க எந்த அரசியல்வாதியாலும் முடியாது. இறுதியில் அரசியல்வாதிகள் மண்ணைக் கவ்வ நேரிடும். அதனால் தான் அரசியல்வாதிகள் அனைவரும் மக்கள் ஒற்றுமையாகக் கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இது நாம் அனைவரும் நன்கு அறிந்த நடைமுறை உண்மை.

இப்போது பழமொழிக்கு வருவோம். ஒரு ஊர் எப்போது ஏன் இரண்டு படும்?. மேலே நாம் கண்ட சாதி, மதம், பொருளாதாரம், மொழி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு/பல காரணத்தின்/ காரணங்களின் அடிப்படையில் ஊர்மக்கள் இரண்டாகலாம்; மூன்றாகலாம்; நான்காகலாம்; இன்னும் எவ்வளவோ பிரிவுகளாகலாம். இதை யாரும் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. சாதி மத அடிப்படையிலான பிரிவினை எண்ணம் என்பது மக்களின் குருதியில் வேரூன்றிப் போய்விட்டது. நமது முன்னோர்கள் எவ்வளவோ முயன்றும் பிரிவினை எண்ணத்தை அகற்றுவதில் முழுவெற்றி அடைய முடியவில்லை. திருமணம் தொடங்கி அரசாங்க வேலை வரையிலும் இன்று சாதி மதப் பேய்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இப்படி ஏற்கெனவே சாதி மதப் பாகுபாட்டால் பலவாறாகப் பிளவுபட்டுக் கிடக்கும் மக்களை ஏன் இரண்டாக்க வேண்டும்?. அதுமட்டுமின்றி இது சாத்தியமும் அல்ல; ஏனென்றால் ஒற்றுமையாக இருப்பவர்களைத் தானே பிரிக்க முடியும்?. எனவே ‘ஊர்மக்கள் இரண்டு பிரிவானால்’ என்ற விளக்கமே தவறு என்பதை உணரலாம்.

இனி ‘கூத்தாடிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி’ என்பது எவ்வாறு தவறு என்பதை ஆராயலாம். அதற்குமுன் இங்கே ஒரு உண்மைக் கதையினையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு ஊரில் ஒரு சாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்துவந்த படியால் இவ் ஊரில் ஒரே ஒரு அம்மன் கோவில் மட்டுமே இருந்து வந்தது. ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இக் கோவிலுக்குத் திருவிழா நடத்தி கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து வந்தனர். ஒருமுறை ஊர்த்தலைவரின் மகன்களுக்குள் நிகழ்ந்த பிணக்கு காரணமாக அவ் ஊர்மக்கள் இரண்டு பிரிவானார்கள். இந் நிலையில் அவ் ஊரில் திருவிழாவும் வந்தது. அப்போது இந்த இரண்டு பிரிவினருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு பல மண்டைகள் உடைய கலைநிகழ்ச்சிகள் நடத்த வந்திருந்த கூத்தாடிகள் உயிர் பயத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர். இப்போது சொல்லுங்கள் இந்த ஊர் இரண்டு பட்டதால் கூத்தாடிகள் திண்டாடினார்களா இல்லை கொண்டாடினார்களா என்று. பெரும்பாலான சிற்றூர்களில் இப்படித் தான் நடக்கிறது. சில சிற்றூர்களில் ஒரு பிரிவினர் அமைதியுடன் விட்டுக் கொடுக்க ஆண்டுதோறும் அங்கே எப்போதும்போல திருவிழாக்கள் நடக்கிறது. இதில் கூத்தாடிக்கு எங்கே இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கிறது?. அதுமட்டுமின்றி பழமொழியில் ‘ கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று தான் சொல்லப்பட்டுள்ளது. கொண்டாட்டம் என்றால் ‘இரட்டிப்பு மகிழ்ச்சி’ என்று வலிந்து பொருள் கொள்வது தவறே ஆகும். இதிலிருந்து இப் பழமொழிக்குக் கூறப்படும் மேற்காணும் பொருளானது முற்றிலும் தவறானது என்பது தெரிய வருகிறது.

திருத்தம்
மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். அது என்ன? ‘ என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் ‘பல்லும் நாக்கும்’ ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

நிறுவுதல்
விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான ‘அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?’ போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே ‘விடுமொழிகள்’ என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன.

‘எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.’
‘இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.’
‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.’

இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு ‘பல்லையும் நாக்கையும்’ குறிக்கும் என்று பார்ப்போம். மனிதரின் வாய்க்குள் பற்கள் இரண்டு வரிசைகளாக (மேல், கீழ்) 32 எண்ணிக்கையில் அமைந்தவை என்பதை நாம் அறிவோம். பொதுவாக நாம் வாய் மூடி இருக்கும்போது இந்த இரண்டு வரிசைப் பற்களும் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டு ஒரு குழுமமாக இருக்கும். அப்போது இந்தப் பற்களுக்குப் பின்னால் உள்ள நாக்கோ மிக அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும். இங்கே இந்த நாக்கு தான் கூத்தாடி ஆகும். இரண்டு வரிசைகளிலும் உள்ள 32 பற்களின் ஒருங்கிணைந்த குழுமம் தான் ஊர் ஆகும். இந்த ஊர் இரண்டாகும்போது அதாவது மேல்வரிசையும் கீழ்வரிசையும் பிரிந்து வாய் திறக்கும்போது இந்த நாக்கு ஆகிய கூத்தாடி ஆடத் தொடங்கிவிடும். அதன் ஆட்டம் பேசுவதற்காகவோ உணவைச் சுவைப்பதற்காகவோ வேறு எதற்காகவோ இருக்கலாம். ஆக மொத்தம் பற்குழுமம் ஆகிய ஊர் இரண்டு பட்டால்தான் நாக்கு ஆகிய கூத்தாடிக்குக் கொண்டாட்டமாக இருக்கும். இந்த நடைமுறை உண்மையினை உருவகமாக்கி அழகான ஒரு விடுகதையாகப் புனைந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இந்த விடுகதையே நாளடைவில் தனது ‘அது என்ன?’ என்ற கேள்வித்தொடரினை இழந்து பழமொழியாகி விட்டது.

வாழ்க தமிழ்! -நன்றி தமிழ்தென்றல்

9.”அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்
அடி என்பது ஔவையாரின் நாலடியாகும். அந்த நாலடி நூல் உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்பதே இப்பழமொழியின் உண்மை அர்த்தம். நாமோ நாம் கொடுக்கும் அடிக்குத்தான் சரியாக செயல்படுகிறது என்று நினைக்கிறோம்.

10.”அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்
வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி -அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்- என மாற்றி விட்டோம்.

11. ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு என்பது தவறு.

12.கல்லான் ஆனாலும் கணவன் , புல்லான் ஆனாலும் புருஷன்
கல்வி அறிவு அற்ற (கல்லான்) படிக்காதவனாக இருந்தாலும் கணவன் கணவனே. அன்பற்றவராக (புல்லான்) இருந்தாலும் புருஷன் புருஷனே என்பது தான் இந்த பழமொழியின் உண்மை பொருள்.  கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் (தவறு)

13.கண்டு அதை கற்க பண்டிதன் ஆவான்
நல்ல நூல்களை கண்டு ஆராய்ந்து தேடி எடுத்து கற்கும் ஒருவன் காலக்கிரமத்தில் அனைவராலும் போற்றப்படும் பண்டிதன் ஆவான் என்பதே இதன் சரியான பொருள் ஆகும். கண்டதை கற்க பண்டிதன் ஆவான் என்பது தவறு.

14.படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதினவன் ஏட்டை கொடுத்தான்
படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதினவன் ஏட்டை கெடுத்தான் என்பது தவறு.

15.”நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு
சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது தவறானது.

16.ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

இ‌ந்த பழமொ‌ழி‌ உருவானத‌ற்கு ஒரு புராண‌க்கதை உ‌ண்டு.  குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கெளரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர்.

அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி,கெளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.

ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான். கர்ணன் கூறியதுதான் மேற்படி பழமொழிக்கு உண்மையான பொரு‌ள்.

17.ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் 

ஆனை பூனைஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். இது ஒரு பழமொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு.

இதனின் ௨ட்பொருள் : ஆனையைப் பிாித்தால் ஆ + நெய். அதாவது ‘ ஆ ‘ என்பதற்கு பசு என்று பொருள் உண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து உடலில் சோந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதே போல் பூ னைக்கு என்பதை பூ + நெய் என்று பிாித்துப் பாாக்கும்போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அாத்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் உணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும். 

பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆயுளும் வளரும்.

18.”வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கு தெரிந்தவனுக்கு போலீஸ் வேலை
வாக்கு (கற்றல்) தான் அறிந்து கொண்ட பற்பல பாடங்களை மாணவர்களுக்கு எடுத்து சொல்லும் திறமை உள்ள பெரியோர் தான் வாத்தியார் வேலைக்கு தகுதியானவர். அதேபோல ‘போக்கு கற்றல்’ திருடனின் போக்கு என்ன என்பதை சரியாக அறிந்தவர் தான் போலீஸ் வேலைக்கு தகுதியானவர் என்பதே சரியான விளக்கமாகும். இன்று வாத்தியாரையும் போலீசையும் கேலி செய்யும் விதமாக இப்பழமொழியை நாம் -வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை- என தவறாக உபயோகிக்கிறோம்.

காலப்போக்கில், நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.

19.“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும்.”

பெரும்பாலானவர்கள் இதன் விளக்கமாக நினைப்பது என்னவென்றால், ஊரில் உள்ள குழந்தைகளைத் தன் குழந்தை போல் வளர்த்தால், தன்னுடையக் குழந்தை தானே வளரும் என நினைக்கிறார்கள்.

உண்மையான விளக்கம்
அதாவது ஊரார் பிள்ளையாகிய தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது, நல்ல பணிவிடை செய்து, மனம் நோகாமல் தேனும், பாலும், பழங்களும், உணவும் கொடுத்து ஊட்டி வளர்த்தால், வயிற்றில் இருக்கும் தன் குழந்தை தானே வளரும் என்பதை உணர்த்தும் பழமொழியாகும்.

20. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.

21. பசி வந்திட பத்தும் பறந்து போகும்

விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

22.பழமொழி : கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி

விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

23. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் “என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் ‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்’ என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

24. பசி வந்திட பத்தும் பறந்து போகும்

விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

மருத்துவப் பழமொழிகள் 

25.”ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்
வேரை (மூலிகை வேரை)
ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்பது தவறு. சித்த மருத்துவ துறையினுள் நிபுணராவதற்கு குறைந்தது ஆயிரம் மூலிகை வேர்களையாவது மருந்து செய்வதற்கு தெரிந்திருக்க வேண்டியதை உணர்த்தவே மேற்கண்ட பழமொழி.

26.”ஆலமரத்தினை சுற்றி அடி வயிற்றினை தொட்டு பார்”
ஆன்மீக அடிப்படையாக தெரிந்தாலும், மகப்பேறு இல்லாத மகளிர்களுக்கு சொல்லப்படும் இந்த பழமொழி. ஆலமரக் கொழுந்து, மகளிருடைய கருப்பையில் உள்ள குற்றங்களையெல்லாம் நீக்க்க் கூடியது. ஆலமரக்கொழுந்தை பாலில் அரைத்து சாப்பிட, பெண்களுக்கு கருப்பைக் குற்றம் நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதே பழமொழி.

27.”பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட விருந்து உண்ணலாம்”
மிளகு உணவில் உள்ள நச்சுத் தன்மையை போக்குவதில் சிறந்த்து. நமக்கு பிடிக்காத பகைவன் வீட்டில், நஞ்சுகலந்த உணவாக இருந்தாலும், உணவிலுள்ள நச்சுகளை போக்கும் என்பதே பழமொழி.

28.”ஆற்றையும் அடக்குமாம் அதிவிடயம்”
அதிவிடயம் என்ற மூலிகை கழிச்சலுக்கு சிறந்தது.பொங்கிவரும் ஆற்றுநீரை எவ்வாறு அணை கட்டி நிறுத்துகிறோமோ அதுபோல, மிகுதியாக வரும் கழிச்சல் நோய்களை அதிவிடயம் நிறுத்தி பயன்தரும் என்பதே பழமொழியின் பொருள்.

29.”அழுத பிள்ளை சிரித்த்தாம்,கழுதை பாலை குடித்த்தாம்”
கழுதை பாலை, குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு சமமாக கொடுகக்லாம்.தாய்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும்,கழுதைப்பாலில் உள்ளது.

பழமொழிகளைப் பற்றிய பழமொழிகள்.

* உலகில் நல்லறிவுகள் எல்லாம் பழமொழிகளாக்கப்பட்டிருக்கின்றன. – இங்கிலாந்து

* பழமொழிப் புத்தகத்தை ஒருவன் படித்துவிட்டால் திறமையாகப் பேச முயற்சி தேவை இல்லை. – இங்கிலாந்து

* பழமொழிகள் அனுபவத்தின் குழந்தைகள். – இங்கிலாந்து

* கடுகளவும் உண்மையில்லாத பழமொழியே இல்லை. – ரஷ்யா

* உணவுக்கு உப்பு எப்படியோ, அப்படியே பேச்சுக்குப் பழமொழி. – ரஷ்யா

* அறிவிலிருந்து பழமொழி உண்டாகிறது; பழமொழியிலிருந்து அறிவு உண்டாகிறது. – ரஷ்யா

* ஒரு பழமொழியிலிருந்து பெரிய ஆறுதல் உண்டாகலாம். – ஸ்விட்சர்லாந்து

* பழமொழிகளைக் கவனிக்காதவன், தவறுகளைத் தவிர்க்க மாட்டான். – துருக்கி

* ஒரு பழமொழியிலிருந்து நல்லதொரு பாடத்தை மிகமலிவான விலையில் நீ காதால் வாங்கிக் கொள்கிறாய். – ஸ்விட்சர்லாந்து

* அநேக சமயங்களில் ஒரு மனிதனுடைய வாழ்வு ஒரு பழமொழியின்மேல் கட்டுப்பட்டிருக்கிறது. – ஹீப்ரு

தொகுப்பு – thamil.co.uk