அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்புபல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது தேன். உடல் பருமனை குறைக்க, மெலிந்து இருப்பவர்கள் குண்டாக, குரல் வளம் சிறக்க, நோய் நொடி அண்டாமல் இருக்க என தேனில் இருந்து கிடைக்கும் பயன்களை கணக்கிட முடியாது. இதனால் தேனின் விலையும் மற்ற பொருட்களின் விலையை விட சற்று அதிகம் தான். இந்த தேனீயை வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். விவசாயிகள் மட்டுமல்லாது மாணவர்கள், இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள், ஓய்வு பெற்றவர்கள் என அனைவரும் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.

இதற்கு தேனெடுக்கும் கருவி, புகைப்பான், முகமூடி தலைக்கவசம், கத்தி, ஸ்டாண்ட், கையுறைகள் போன்றவைதான் உபகரணங்கள்.

தேன் பெட்டிகளை மரத்தில்தான் செய்ய வேண்டும். குறிப்பாக புன்னை மரத்தில் செய்வது மிகவும் நல்லது. மரத்தில் தேனீக்கள் வட்ட வடிவிலும், பலாப்பழம் போல நீள்வட்ட வடிவிலும் அடை வைக்கும். அடையில் உள்ள கூட்டு அறைகள் அறுங்கோண வடிவில் செய்யப்பட்டிருக்கும். தேன் வழிந்துவிடாதபடி, சற்று மேல்நோக்கி இருக்கும்.

தேன் பெட்டியில் அடை வைக்கும்போது நீள்செவ்வக வடிவில் இருக்கும். காலனி பிரிக்கும்போது நாமே செய்துவைத்த அடை வடிவமைப்பை பயன்படுத்தலாம். அதன்மூலம் தேனீக்கள் விரைவாக கூடு மற்றும் அடை வைக்கும்.

தேன் கூட்டில் ஒரு ராணித் தேனீ பல ஆயிரம் பணித் தேனீக்கள், ஆண் தேனீக்கள் என மூன்று பிரிவுகள் இருக்கும். மூன்றுக்குமே தனித்தனி வேலைகள் உண்டு. வாரத்திற்கு ஒரு முறை தேன் கூட்டை திறந்து பார்க்க வேண்டும். இதன் மூலம் தேன் சேகரமாகி உள்ளதை அறிந்து கொள்ள உதவும். முடிந்தால் தினமும், ஒன்பது மணிக்கு மேல் கவனித்து வரவும்.

மழை மற்றும் மூடுபனி நேரங்களில் கூட்டைத் திறக்கக்கூடாது. மழைக்காலங்களில் மாலை 6 மணிக்கு மேல் சர்க்கரை, குளுக்கோஸ் கலந்த தண்ணீரை தேனீக்கு உணவாக தேங்காய் மூடியில் கலக்கி வைக்க வேண்டும். எறும்பு, பல்லி, சிலந்தி போன்றவை தேனீக்களின் எதிரி. எனவே அவை தாக்காதபடி பெட்டிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தேனீ வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டலாம்.