தேநீர் – ஒரு சுவையான பானம்

தேநீர்-thamil.co.ukசுவையாக தேநீர் தயாரிப்பதும் ஒரு கலைதான். ஒரு கப் தேநீர் தயாரிக்க, அரை கப் நீரில், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, ஒரு தேக்கரண்டி தேயிலை போட்டு, நன்கு கொதி வந்ததும், அத்துடன் அரை கப் பால் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான, சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளையும் பார்ப்போம்.

மசாலா தேநீர் : ஏலக்காய் – 6, கராம்பு – 6, பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி, மல்லி – அரை தேக்கரண்டி, ஜாதிக்காய் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, பட்டை போன்றவற்றை பொடி செய்யவும். தேநீருக்கு தண்ணீர் கொதித்ததும், இந்த பொடியையும், தேயிலையுடன் சேர்த்து போட்டு கொதி வந்ததும், சர்க்கரை, பால் சேர்த்து, வடிகட்டி அருந்தவும். இது, குளிர்காலத்தில் உடம்பிற்கு சூடு கொடுக்கும் அருமையான தேநீர்.

ரோஸ் தேநீர் : தேநீர் கொதிக்கும்போது, புத்தம் புதிய ரோஜா இதழ்களை போட்டு தேநீர் தயாரிக்கலாம். ரோஜாப்பூ இதழ்களை காயவைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், தேவையான போது உபயோகிக்கலாம்.

கோகோ தேநீர் : குழந்தைகள், சாக்லேட் மணம் கொண்ட கோகோ தேநீர் மிக விரும்புவர். இந்த தேநீர் தயாரிக்கும்போது, தேவையான கோகோ -cocoa- பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு அருந்தவும்.

இஞ்சி தேநீர் : அஜீரணம், வயிற்று கோளாறுகளை நீக்க வல்லது இஞ்சி தேநீர். இஞ்சியை தோலை நீக்கி, நன்கு இடித்து, தேநீர் கொதிக்கும் போது போட்டால், இஞ்சி தேநீர் ரெடி.

ஏலக்காய் தேநீர் : ஏலக்காயை தோலுடன் பொடி செய்து, தேநீரில் சேர்த்து கொதிக்க விடவும். பலகாரங்கள் செய்ய, ஏலப்பொடி செய்யும் போது, ஏலக்காய் தோலை எறியாமல், சேகரித்து வைத்து உபயோகிக்கலாம்.

எலுமிச்சை தேநீர் : நீரை கொதிக்க விட்டு, தேயிலையை போட்டு நன்கு கொதித்ததும், இறக்கி வடிகட்டவும். ஆறியதும், அதில் தேவையான எலுமிச்சை சாறு பிழியவும். தேவையான சர்க்கரை சேர்த்து, சில ஐஸ்கட்டிகளைப் போட்டு, பால் இல்லாமல் குடிக்கவும்.

புதினா தேநீர் : சில புதினா- MINT- இலைகள், துளசி இலைகளோடு, சிறுதுண்டு இஞ்சியை நசுக்கிப் போட்டு, 5 மிளகையும் பொடி செய்து போட்டு, நீரை கொதிக்க விடவும். பின், தேயிலை, சர்க்கரை, பால் கலந்து, வடிகட்டி அருந்தவும். இது, ஜலதோஷம், இருமல் போன்றவற்றிற்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

துளசி இலை தேநீர் : சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். புத்துணர்ச்சியையும் அளிக்கும்.

ஆவாரம்பூ தேநீர் : காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு, வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப்பூ தேநீர் : ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி தேநீர் : கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள், வெல்லம் கலந்து பருகவேண்டும். காய்ந்த தனியாவையும் தூளாக்கி அதை கொண்டும் டீ தயாரித்து குடிக்கலாம். இதை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும்.

கொத்தமல்லி இலை தேநீர்: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். உடல் எடையை குறைக்கும் இந்த டீ மனதிற்கு புத்துணர்ச்சியையும் தரும்.

குறிப்பு: தேநீர் வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். கருப்பட்டி, பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது

தேநீர் நம் இதயத்திற்கும், நுரையீரலுக்கும் பலமளிக்கும். நரம்பு, தசை மண்டலங்களை சுறுசுறுப்பாக்கி, புத்துணர்வு தருகிறது. கோப்பி அருந்துவதை விட, தேநீர் அருந்துவது நல்லது. அளவோடு அருந்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் நரம்புகளையும், வயிற்றையும் பாதிக்கும். மிக சூடாக அருந்தும் தேநீர், வயிற்றின் உட்சுவர்களை புண்ணாக்கும்.

http://thamil.co.uk/?p=343  –  GREEN TEA

தொகுப்பு -thamil.co.uk