விளா – விளாம்பழம்

விளாமரம்-thamil.co.ukவிளாமரம் அரியவகை மரங்களில் ஒன்றாக இன்று மாறிவிட்டது.இதன் பழங்கள் பலராலும் விரும்பி உண்ணப்பட்டாலும் யாரும் நட்டுவளர்க்க முன்வராத காரணத்தினாலேயே அரியவகை மரமாக மாறிவிட்டது. விளா மரங்களை வணிகரீதியில் வளர்த்தால் நல்ல லாபம் பெறலாம்.

மூலிகையின் பெயர்  – விளா.
தாவரப்பெயர் – FERONIA ELEPHANTUM.
தாவரக்குடும்பம் – RUTACEAE.
வகைகள் – தரையோடு ஒட்டிப் படரக்கூடியது நில விளா என்றும், சிறிய மரமாக வளரும் இயல்புடையதை சித்தி விளா என்றும், இங்கு விளக்குவது பெரிய மர வகுப்பைச் சார்ந்த பெருவிளா மரம்.
வேறு பெயர்கள் – கடிபகை, கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளி போன்றவை.
பயன்தரும் பாகங்கள் – கொழுந்து, இலை, காய், பட்டை, ஓடு மற்றும் பிசின். ஆகியவை.

வளரியல்பு – விளாமரம் தாயகம் இந்தியா.  பின் பாக்கீஸ்தான், இலங்கை, தாய்வான், மாயின்மருக்குப் பரவிற்று. இது எங்கும் வளரும். மர வகுப்பைச் சார்ந்தது. இது காடுகளில் அதிகம் காணப்படும். கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டருக்கு மேல் வளராது. ஆழமான மண்வகையில் நன்கு வளரும். மேலும் வீடுகளிலும், கோயில்களிலும், தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது.  மூன்று வகைகளில் இது பெரிய மர வகுப்பைச் சார்ந்து பெரு விளா மரம். இந்த மரம் கருமை நிறமாக இருப்பதால் கருவிளாம் என்று சொல்லப்படுகிறது.

விளாமரம் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கூட்டிலைகள்.  இலைகள் 5-7 வரை இருக்கும், இது 25-35 மில்லி இருக்கும். தனி இலை 10 மில்லி 20 மில்லி அகலம் இருக்கும். இதன் இலைகள் நல்ல மணத்தைக் கொண்டது. இலை நீள் வட்ட வடிவமாக இருக்கும். இதன் காய்கள் பார்ப்பதற்கு வில்வக்காயைப் போன்று உருண்டையாக இருக்கும். இதன் விட்டம் 5-9 செ.மீ. இருக்கும். பழத்தின் ஓடு கெட்டியாக இருக்கும். உள் சதை மரக்கலரில் இருக்கும். விதைகள் வெள்ளையாக இருக்கும். காயாக இருக்கும் போது அதன் சதை துவர்ப்பாக இருக்கும். பழுத்தால் துவர்ப்பும் புளிப்பும் கலந்த சுவையாக இருக்கும்.

இது முள்ளுள்ள உறுதியான பெரிய மரம். விளாமரம் வளர்ந்த 5 வது வருடத்தில் காய் காய்க்கும்.  இதை எந்த பூச்சியும் தாக்காது. விளா ஓடு கைவினைப் பொருள்கள் செய்யப் பயன் படுத்துகிறார்கள். விளா விதைகளின் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. மொட்டுக் கட்டுதல் மற்றும் ஒட்டுக் கட்டுதல் மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.

நாற்றுக்களை மழைக்காலங்களில் நட வேண்டும். மரங்களின் கிளைகள் நன்கு இடைவெளி விட்டு வளருமாறு தேவையில்லாத கிளைகளை வெட்டி விட வேண்டும். நட்ட பின், ஐந்தாவது ஆண்டில் இம்மரங்கள் காய்க்க ஆரம்பிக்கும். பொதுவாக இம்மரங்களுக்கு உரம் ஏதும் இட வேண்டிய தேவையில்லை. குறிப்பிட்டு கூறுமளவுக்கு இம்மரத்தில் எந்தவிதமான பூச்சிகிளோ, நோய்களோ தாக்குவதில்லை.

விசாக நட்சத்திரத்தின் விருட்ச மரம் விளா. விசாக நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுக்களால் குழந்தை பாக்கியமின்மை, பிறக்கின்ற குழந்தை ஊனமாகப் பிறத்தல், வாயுத்தொல்லைகள், நோய்த்தொற்று, இருமல், ஆஸ்துமா, அலர்ஜி, சர்கரை நோய், மனப்பதற்றம், ஈறு மற்றும் கர்பப்பைக் கோளாருகள் ஆகியவை உண்டாகின்றன. இதனை விசாக நட்சத்திர தோசம் என்பர். விளாமரத்தின் நிழலில் இளைப்பாறினால் இந்த தோசத்திலிருந்து விடுபடலாம்.

விளாம்பழம்-thamil.co.ukஉடல் வலிமை தரும் பழங்களில் விளாம்பழம் சிறந்ததாகும். விளாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. நன்மையே விளையும். நன்கு பழுத்த விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும். பழத்தினுள் சதையுடன் சிறிய விதைகளும் கலந்திருக்கும். இந்த விதைகளை மென்றால் அதுவும் ருசியாகத்தான் இருக்கும்.

விளாம்பழம் நல்ல பழமாக வாங்க வேண்டும். விளாம்பழத்தை கையில் எடுத்து  குலுக்கி பாருங்கள்.  உள்ளே  உருண்டு ஓடும் சத்தம் வந்தால் அது நல்ல பழுத்த பழம்.

பழத்தை எடுத்து தரையில் குறைந்த உயரத்தில் கீழே போட்டு பாருங்கள். அது பந்து போல் துள்ளி வந்தால் அது பழுக்கத் தயார் நிலையில் உள்ள பழம் , 2 – 3 நாள் கழித்து உபயோகப்படுத்தலாம்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் விட்டமின் C உள்ளன. விதை எண்ணெயில் ஒலியிக், பால்மிடிக், ஸிட்டாரிக் அமிலங்கள் காணப்படுகின்றன. இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப்படுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன.

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும், விட்டமின் A  சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்தவித நோயும் வராது. ஆயுளை நீட்டிக்கச் செய்யும்.

மருத்துவப் பயன்கள்

விளா சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வது இதன் பொது குணமாகும். பழம் கோழையகற்றிப் பசியுண்டாக்கும். பழ ஓடு தாதுக்களின் கொதிப்பைத் தணிக்கும். பிசின் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத்துவளச் செய்யும். துவர்ப்புச் சுவையோடு வயிற்றில் இருக்கின்ற வாயுவினை அகற்றி, உடலுக்குக் கிளிர்ச்சியைத் தந்து, புண்களை ஆற்றக் கூடிய செய்கை உடையது. நாவறட்சி, விக்கல், வாதம், பித்தம், மற்றும் குட்டம் போக்க வல்லது.

விளாக் கொழுந்து புன்னைக் காயளவு அரைத்துப் பால், கற்கண்டு கலந்து சாப்பிடப் பசியின்மை, கப இருமல், கபக்காசம், இளைப்பு, பித்தக்கணச்சூடு தீரும்.

இலைக் குடிநீர் பித்த சுரம், இருமல், தேக வறட்சி தணிக்கும்.

இதன் பழம் துவர்ப்பும், புளிப்பும் உடையது. நறுமணமுடையது. சாப்பிட சுவையாக இருக்கும். சர்கரை சேர்த்துப் பிசைந்து சாப்பிட அமிழ்தம் போலிருக்கும். பழம் பசியைத் தூண்டும், குருதியை உண்டாக்கும், வாந்தியை நிறுத்தும். மலத்தைக் கட்டும். குடலுக்கும் உடலுக்கும் பலத்தைக் கொடுக்கும். விந்தை உற்பத்தி செய்யும். பித்தக் கோளாறுகள் யாவும் நீங்கும்.

விளாம்பழத்தைச் சுட்டு அதன் சதையை எடுத்து மிளகாய், வெங்காயம், உப்பு, கொத்தமல்லி, துவரம்பருப்பு வறுத்து சேர்த்துத் துவையல் அரைத்து உணவில் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். பித்தம் தணிக்கும், பித்தத்தினால் வரும் தலை சுற்று நீங்கும்.

இதன் தளிரிலையை அரைத்து 10 கிராம் மோரில் மூன்று வேளை சாப்பிட வயிற்றோட்டம் நிற்கும். மூன்று நாள் இரு வேளையும் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

விளாந்தளிர், நாரத்தையின் தளிர், கருவேப்பிலை, எலுமிச்சையின் இலை, சம அளவு உலர்த்திய பொடி 100 கிராம், மிளகு 10 கிராம், வெந்தயம் 10 கிராம் கடலைப் பருப்பு வறுத்து பொடி 100 கிராம்  உப்பு 20 கிராம், சேர்த்துக் கலந்து பொடி உணவில், சேர்த்துப் சாப்பிட பித்தம் குணமாகும், பசி எடுக்கும், வாந்தி குணமாகும். உடலுக்கும் ஊட்டமுடையதாகும்.

குட்டி விளாம் என்பது நிலத்தில் படர்ந்துள்ள குத்துச் செடியாகும். விளாமரத்தின் இலை இருக்கும். இது பூக்காது. காய்க்காது. ஆனாலும் இதன் இலை சிறு குழந்தைகளுக்கு வயிற்றோட்டம், வாந்திக்கு அரைத்து வெந்நீரில் கொடுக்கலாம். சளிக்கு துளசியுடன் சேர்த்துச் சாறு பிழிந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு வரும் வெப்பக் கொப்புளங்களுக்கும், அரிப்பு, தடிப்புகளுக்கும் மஞ்சளுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம். குணமாகும்.  தோல் மென்மையாக இருக்கும். மிளகு ரசத்தில் இதன் இலையை கறிவேப்பிலையைப் போல் போட்டால் மணமாக இருக்கும்.

விளாங்காய் சதையை சிறிது வேக விட்டுக் கொடுக்கப் பேதி, சீதப் பேதி தீரும்.

பழத்தை ஓட்டுடன் அரைத்து விழுங்க மருந்து வீறு தணியும்.

விளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள்உறுப்பு ரணம், அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும். உப்பில்லாப் பத்தியம் தேவை.

இலை, பூ, பழம், பட்டை, வேர் ஆகியவற்றைச் சமனளவு உலர்த்திப் பொடித்து வேளைக்கு 5 கிராமாக சிறிது சர்கரையுடன் உண்டு வரப் பித்த மிகுதி, பசியின்மை, பேதி, சீதபேதி, உமிழ்நீர் மிகுதியாகச் சுரத்தல் ஆகியவை தீரும்.

விளாமரத்தின் காயைக் கொண்டு வந்து அதை முழு அளவில் ஒரு சட்டியில் போட்டு, காய் நனையும் அளவிற்குத் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக வெந்த பின் இறக்கி உடைத்து உள்ளேயுள்ள சதையை மட்டும் எடுத்து, அத்துடன் அரை டம்ளர் அளவு தயிர் சேர்த்துக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் சீதபேதி, வயிற்றுப் போக்கு பூரணமாக குணமாகும்.

விளாங்காயை மேலே சொன்னபடி வேக வைத்து அதன் சதையுடன் உப்பு, புளி, கறிவேப்பிலை, கொத்துமல்லிக் கீரை சேர்த்து துவையல் அரைத்து சாதத்துடன் சேர்த்து தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தமான சகல கோளாறுகளும் நீங்கி விடும்.

விளாம் பழத்தின் ஓட்டை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து காலையில் மட்டும் வாயில் போட்டு விழுங்கி வெந்நீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்ணாசை வெறுத்து விடும்.

ஒரு கைப்பிடி அளவு விளா இலை எடுத்து முறைப்படி குடிநீரிட்டு அருந்தி வர காய்ச்சல், இருமல், தேக வறட்சி நீங்கும்.

வேர்க்குரு, கோடைக் கொப்புளங்கள் முதலியவற்றிக்கு விளா இலைக் கொழுந்தை சாறு பிழிந்து பூசிவர குணமாகும்.

விளாங்காய் மற்றும் வில்வக்காய் இவைகளின் சதைப் பகுதியை எடுத்து அதை கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்து வந்தால் மூல நோய் தொல்லை குறையும்.

விளாம்பழத்தின் ஓட்டைப் பிளந்து பழத்தை மட்டும் உட்கொண்டு வர வாய் நீர் ஊறல் வாய்ப்புண், ஈறு சம்பந்தமான நோய்களும் நீங்கி, நன்கு பசி உண்டாகும்.

விளாம்பழச் சதையுடன் தேன், திப்பிலி சூரணம் தேவையான அளவு கலந்து உண்ண விக்கல், மேல் மூச்சு வாங்கல் நிற்கும்.

விளாமரப்பட்டை 488 கிராம் எடுத்துக் கொண்டு நன்கு இடித்து, 500 மிலி நீர் விட்டு நன்கு காய்ச்சி, தினம் இருவேளை அருந்திவர பித்த வாந்தி, குமட்டல், புகையிலை நஞ்சு நீங்கும்.

நீரழிவு நோய்க்கு ஆவாரை வேர், விளா வேர், பூலாவேர், இலவங்கம், காட்டு மல்லி வேர் இவற்றை சம அளவு எடுத்து, எருமை மோரில் இட்டு நன்கு வேக வைத்து, குறிப்பிட்ட அளவு தயிருடன் கலந்து அருந்திவர குணம் தெரியும்.

விளாம் பிசின் ஒரு துண்டை வாயில் அடக்கி அதன் ரசத்தை மட்டும் விழுங்கி வந்தால் வறட்டிருமல் நீங்கும்.

நாட்பட்ட ரணங்களுக்கு விளாம் பிசினைக் கொண்டு செய்யப்படும் பூச்சு மருந்து பயன்படுகிறது.

சித்த மருத்துவத்தில் விளாம்பழத்தை பல மருந்துகள் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

விளாம்பழ பச்சடி

விளாம்பழத்தை உடைத்து உள்ளே இருக்கும் பழத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் வெல்லம் , கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கைகளால் நன்றாக கரைத்து வைக்கவும். 10 நிமிடம் கழித்து அதில் 2  செத்தல் மிளகாய், கொஞ்சம் கடுகு தாளித்துப் போடுங்கள். பச்சடி தயார்.

-மூலிகைவளம்