பைந்தமிழ் இலக்கணங்கள் – எழுத்திலக்கணம் : சிறீ சிறீஸ்கந்தராஜா

எழுத்திலக்கணம்அமிழ்தினும் இனிய அமுதத் தமிழே!!

அமிழ்தினும் இனிய அமுதத் தமிழே!
அகிலம் போற்றும் அன்னைத் தமிழே!!
உலகம் வியக்கும் உன்னதத் தமிழே!
உயிரினும் மேலாம் எங்கள் தமிழே!!

உன்னைப் பற்றி பேசுவதற்கும்!
உன் புகழைப் பற்றி எழுதுவதற்கும்
ஏன் உன்னைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் கூட
நாம் தவம் செய்திருக்கவேண்டும்!!
ஆம்…!! நாம் தமிழ் பேசும் தமிழானாகப்
பிறந்திருக்க வேண்டும்!!

உன்னை முற்று முழுதாகக்
கற்றுக்கொள்ள முயலுவதென்பது…
கடற்கரை மணலைக் கணக்கிட முயலும்
ஒரு வழிப்போக்கனின் அறியாமையைப்
போன்றதே என் முயற்சியுமாகும்.

உன்னை முன்னிறுத்தி…
மூழ்கி முத்தெடுக்க முயலுகிறேன்..
வாழ்த்தி அருள் தாயே!!

என் அன்னைத் தமிழே!!
உன் பாதங்கள் தஞ்சம்!!

இந்திய மொழிகளில் மிகவும் நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது எங்கள் தமிழ்மொழி!! இதன் விசாலம் கருதி இதனை முப்பெரும் பிரிவுகளாகப் வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்!!
இயற்றமிழ்
இசைத்தமிழ்
நாடகத்தமிழ்
ஆதித்தமிழனின் அகத்தியம் என்ற நூலே இந்த மூன்று தமிழுக்கும் இலக்கணம் வகுத்துக் கூறுகின்றது! நாம் கொடுத்து வைக்கவில்லை…. இந்நூல் முற்று முழுதாக எமக்குக் கிடைக்கவில்லை!

நாம் பொதுவாக இயற்றமிழ் இலக்கணம் எனும்போது அது செய்யுள் உரைநடை ஆகிய உப பிரிவுகளையே காணமுடிகிறது. இன்று எமக்குக் கிடைக்கும் மிகப் பழம்பெரும் இலக்கண நூல் என்றால் அது தொல்காப்பியத்தையே குறிக்கின்றது! இத்தகைய ஒரு சிறிய அறிமுகத்தோடு.. நாங்கள் இங்கே பைந்தமிழ் இலக்கணங்கள் பற்றி பயின்றுகொள்ள முயலுவோமாக.!!

பைந்தமிழ் இலக்கணங்களாவன..
எழுத்திலக்கணம்
சொல்லிலக்கணம்
பொருலிலக்கணம்
யாப்பிலக்கணம்
அணியிலக்கணம்
இவை பற்றியே நாம் கொஞ்சம் விரிவாக ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்ள முயற்சிப்போம்!!

இங்கே ஆசிரியத் தனம் ஏதுமில்லை!
மாணவர்கள் என்று யாருமில்லை!!
குரு சீடன் உறவு முறை இல்லை!
அதனால் குருபக்தி வழிபாடுமில்லை!!

நீங்கள் காணிக்கை செலுத்த விரும்பினால் அகத்தியரையும் தொல்காப்பியரையும் நெஞ்சில் நிறுத்தி… தமிழ்த் தாயின் பாதத்தில் உங்கள் படைப்புக்களை சமர்ப்பணம் செய்யுங்கள்.

எழுத்திலக்கணம் – தொடர் 1

எழுத்திலக்கணம்முதலெழுத்துக்கள்
1.உயிரெழுத்துக்கள்
2.மெய்யெழுத்துக்கள்

சார்பெழுத்துக்கள்
01. உயிர்மெய் எழுத்துக்கள்
02. ஆய்த எழுத்து
03. உயிரளபெடை
04. ஒற்றளபெடை
05. குற்றியலுகரம்
நெடில் தொடர் குற்றியலுகரம்
ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன் தொடர் குற்றியலுகரம்
மென் தொடர் குற்றியலுகரம்
இடைத் தொடர் குற்றியலுகரம்
06. குற்றியலிகரம்
07. ஐகாரக்குறுக்கம்
08. ஒளகாரக்குறுக்கம்
09. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்
***********************

உயிர் எழுத்துக்கள் – 12
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.

குறில் எழுத்துக்கள் – 5
அ,இ,உ, எ, ஒ.

நெடில் எழுத்துக்கள் – 7
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
***********************

மெய் எழுத்துக்கள் – 18
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப்,
ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

மெய் எழுத்துக்கள் மூன்று வகை
வல்லின எழுத்துக்கள் – 6
க், ச், ட், த், ப், ற்

மெல்லின எழுத்துக்கள் – 6
ங், ஞ், ண், ந், ம்,ன்

இடையின எழுத்துக்கள் – 6
ய், ர், ல், வ், ழ், ள்

***********************
ஆய்தவெழுத்து – 1

***********************

விளக்கம்:
உயிர் எழுத்துக்கள் – 12
மெய் எழுத்துக்கள் – 18
உயிர்மெய் எழுத்துக்கள் – 216
ஆய்த எழுத்து – 1
மொத்தம் – 247

உயிர்மெய்க்குறில் – 95
18 மெய்யோடும் 5 உயிர்க்குறிலும் தனித்தனியே சேரும்போது 18 X 5 = 90 உயிர்மெய்க்குறில் ஆகும். இத்துடன் 5 உயிர்க்குறிலையும் சேர்த்தால் உயிர்மெய்க்குறில் (90 + 5) = 95 ஆகும்.

உயிர்மெய்நெடில் – 133
18 மெய்யோடும் 7 உயிர்நெடிலும் தனித்தனியே சேரும்போது 18 X 7 = 126 உயிர்மெய்நெடில் ஆகும். இத்துடன் 7 உயிர்நெடிலையும் சேர்த்தால் உயிர்மெய்நெடில் (126 + 7) = 133 ஆகும்.

ஒற்று எழுத்துக்கள் – 19
மெய் 18, ஆய்தம் 1. ஒற்று எழுத்துக்கள் (18 + 1 = 19) 19 ஆகும்.

விளக்கம்
உயிர்மெய்க்குறில் – 95
உயிர்மெய்நெடில் – 133
ஒற்று எழுத்துக்கள் – 19
மொத்தம் – 247

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 21
உயிர் எழுத்துக்கள் = 12
வல்லின எழுத்துக்கள் = க, ச, த, ப = 4
மெல்லின எழுத்துக்கள் = ஞ, ம, ந = 3
இடையின எழுத்துக்கள் = ய,வ = 2

மாத்திரை
இயல்பாக ஓர் எழுத்தை ஒலிப்பதற்கு எடுக்கும் நேரம் மாத்திரை ஆகும். இந்த அளவினைக் கொண்டே தமிழ் எழுத்துக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு மாத்திரை கால அளவு என்பது கைவிரல் நொடிக்கும் நேரம், அல்லது கண்ணிமைக்கும் நேரம் எனவும் ஆகும்.

உயிர் எழுத்துக்கள் 12
அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்களையும் ஒலிப்பதற்கு எடுக்கும் கால அளவு 1 மாத்திரை.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழு நெடில் எழுத்துக்களையும் ஒலிப்பதற்கு எடுக்கும் கால அளவு 2 மாத்திரைகள்.

மெய் எழுத்துக்கள் 18
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகும். இவை ஒவ்வொன்றும் அரை (1/2) மாத்திரை உடையது.

குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (5 X 18) = 90
இவை ஒவ்வொன்றும் ஒரு மாத்திரை கொண்டு இயங்கும்.

நெடில் உயிர்மெய் எழுத்துக்கள் (7 X 18) = 126
இவை ஒவ்வொன்றும் இரு மாத்திரை கொண்டு இயங்கும்.

விளக்கம்
குறில் எழுத்துக்கள் – 1
நெடில் எழுத்துக்கள் – 2
மெய் எழுத்துக்கள் – 1/2
குறில் உயிர்மெய் எழுத்துக்கள் – 1
நெடில் உயிர்மெய் எழுத்துக்கள் – 2
ஆய்த எழுத்து – 1/2

ஆய்த எழுத்து
இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

எ.கா:
அஃது – ‘அ’ குறில். ‘து’ வல்லின உயிர்மெய்
இஃது – ‘இ’ குறில். ‘து’ வல்லின உயிர்மெய்


எழுத்திலக்கணம்.எழுத்திலக்கணம் – தொடர் 2

அளபெடை
1. உயிரளபெடை
2. ஒற்றளபெடை

உயிரளபெடை
உயிரெழுத்துக்களில் நெட்டெழுத்துக்கள் ஏழும் தத்தமக்குரிய இரண்டு மாத்திரைகளிலிருந்து நீண்டு ஒலிக்கும்போது உயிரளபெடை என்று பெயர் பெறுகிறது. மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் நீண்டு அளபெடுக்கும்.

உதாரணம்:
ஓஓதல் வேண்டும் – முதலில் அளபெடுத்தது.
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு – இடையில் அளபெடுத்தது.
நல்ல படாஅ பறை – கடையில் அளபெடுத்தது.

“இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ”-நன்னூல்

ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை குறிப்பதற்கு அவ்வெழுத்தின் இனமான குறில் எழுத்து அடுத்து எழுதப்படும். இவற்றை மேலும்: செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை எனவும் வகைப்படுத்தினர்.

ஒற்றளபெடை
ஒற்றெழுத்துக்கள் தமக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிக்கும்போது ஒற்றளபெடை என்று பெயர் பெறுகிறது.

செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்யவதற்காக மெய்யெழுத்துகளில் : ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தஎழுத்தும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.

“ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்
அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ” – நன்னூல்

உதாரணம்:
வெஃகு வார்க்கில்லை – குறிற்கீழ் இடை
கண்ண் கருவிளை – குறிற்கீழ் கடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை – குறிலிணைகீழ் இடை
மடங்ங் கலந்த மன்னே – குறிலிணைகீழ் கடை

ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை குறிப்பதற்குஅதே எழுத்து அடுத்து எழுதப்படும்.

குற்றியலுகரம்
ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்களைப் போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.
(எ.கா கு, சு, டு, து)
(எ.கா: ற, கி, பெ, )

குற்றியலுகரம் ஆறு வகைப்படும்
நெடில் தொடர் குற்றியலுகரம்
ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன் தொடர் குற்றியலுகரம்
மென் தொடர் குற்றியலுகரம்
இடைத் தொடர் குற்றியலுகரம்

நெடில் தொடர்க் குற்றியலுகரம்
இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

உதாரணம்: ‘நா’கு, ‘கா’சு, ‘மா’டு, ‘மா’து, ‘பே’று, த’ரா’சு

மா + டு + அல்ல = மாடல்ல
நிலைமொழியின் உகரம் திரிந்தது.

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
இஃ’து’ – ஆய்த எழுத்தை அடுத்து உகரம் ஆகும்.

அஃது, இஃது, எஃது, கஃசு, எஃகு போன்ற சொற்கள் வரும். இவற்றோடு வருமொழி முதலில் உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரம் உண்டாகும்.

அஃது + இல்லை = அஃதில்லை

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
இதில் உயிரெழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

உதாரணம்: வி’ற’கு, அ’ர’சு, கு’ற’டு, அ’ரி’து, ம’ர’பு, க’ளி’று, மி’ள’கு, வ’ர’கு, அ’ட’கு போன்றவை.

அரசு + ஆட்சி = அரசாட்சி

வன் தொடர்க் குற்றியலுகரம்
இதில் வல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

உதாரணம்: சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு, கசப்பு.

பட்டு + ஆடை = பட்டாடை

மென் தொடர்க் குற்றியலுகரம்
இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

உதாரணம்: சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.

சங்கு + ஊதினான் = சங்கூதினான்

இடைத் தொடர்க் குற்றியலுகரம்
இடையின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

உதாரணம்: பெய்து, கொய்து, மல்கு, புல்கு, எள்கு, மாழ்கு

பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்.

குற்றியலிகரம்
நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும்.

“யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய” – நன்னூல்
உதாரணம்:
நாடு + யாது -> நாடியாது
கொக்கு + யாது -> கொக்கியாது

ஐகாரக் குறுக்கம்
ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது. ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டும் இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது வேறுபடும். மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையாகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலிக்கும்.

“தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்” – நன்னூல்
உதாரணம்:
ஐந்து – ஐகாரம் மொழிக்கு முதலில் – 1 1/2 மாத்திரை
வளையல் – ஐகாரம் மொழிக்கு இடையில் – 1 மாத்திரை
மலை – ஐகாரம் மொழிக்கு கடையில் – 1 மாத்திரை

ஔகாரக் குறுக்கம்
ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும்.
“தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்” – நன்னூல்

உதாரணம்: ஔவை.

குறிப்பு : ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது

மகரக்குறுக்கம்
“ம்” என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் ஆகும்.

“ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்” – நன்னூல்

உதாரணம் : வரும் வண்டி, தரும் வளவன்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும்போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும். இது ஒரு வகை மகரக்குறுக்கம்.

“செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்றாகும்” – (தொல். 51) பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும். இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும்

ஆய்தக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும்.

“ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்” – நன்னூல்

மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தாமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். உதாரணம் : முள் + தீது = முஃடீது.

எழுத்திலக்கணம் : தொடர் 1, 2
சிறீ சிறீஸ்கந்தராஜா 
30/12/2012 – 05/01/2013

தொகுப்பு -thamil.co.uk