கீரைகளின் முக்கியத்துவம்

கீரை வகைகள்காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும் தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுகளுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.

கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றனர். குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டுக் கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும். கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.

தேவையான விட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற, ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும். முக்கியமான விட்டமின் சத்துக்களையும், தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெறமுடியும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். இரத்தசோகை பிரச்சனைக்கும் சிறந்த தீர்வு கீரைதான்.

கீரைகள் விலை மலிவாக இருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில்தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. ஒரு கிலோ அரைக்கீரையில் உள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப்பழம் சாப்பிட வேண்டும். இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிக சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் விளங்கும்.

விட்டமின் A நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு தேவைப்படுகிறது. விட்டமின் A குறைவினால் கண்பார்வை குறைந்து விடும். விட்டமின் A முட்டை, பால், மீன்எண்ணெய் முதலியவைகளில் இருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து A விட்டமினைப் பெறுவதுதான் எளிது. விட்டமின் A சமைக்கும்போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.

அகத்தி, முளைக்கீரை, தண்டுக் கீரை, முருங்கைக் கீரை, பாலக் கீரை, பீட்ரூட் கீரை, கொத்தமல்லி கீரை, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் விட்டமின் A அதிகமாக உள்ளது. ஒரு கிலோ முளைக்கீரையில் 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான விட்டமின் A சத்து உள்ளது.

விட்டமின் B அகத்திக்கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.

விட்டமின் C சத்துக் குறைவினால் ஸ்கர்வி scurvy என்ற நோய் ஏற்படுகின்றது. விட்டமின் C அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, முளைக்கீரை, முட்டைகோவா, கொத்தமல்லி கீரை முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது.

விட்டமின் C சத்து கீரைகளை வேக வைக்கும்போது அழிந்து விடுகிறது. சமைக்கும்போது அதிகநேரம் வேக வைக்காமலும், வேகவைத்த நீர் இறுத்து விடாமலும் இருக்க வேண்டும்.

நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கு சுண்ணாம்புச் சத்தும் அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிகமிக அதிகமாகத் தேவைப்படுகின்றது. சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பாலக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை முதலியவற்றில் அபரிமிதமாகக் கிடைக்கின்றது.

ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்புச் சத்தைப் பெற 113 கிலோ அப்பிள்களை சாப்பிட வேண்டும். முருங்கை கீரையில் சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, மங்கனீசிய சத்து, சாம்பல் சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன.

இரும்புச்சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச்சத்துக் குறைவினால் இரத்தசோகை உண்டாகிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து அதிகமாகத் தேவைப்படும். இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி கீரை, மணத்தக்காளிக் கீரை, குப்பைக் கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.

இரும்புச் சத்து உடலில் சேர வேண்டும் எனில் விட்டமின் C வேண்டும். எல்லாக் கீரைகளிலுமே விட்டமின் C இருக்கும். ஆனால், கீரையை அதிகநேரம் வேகவைப்பதால் விட்டமின் C ஆவியாகிவிடும். எனவே, வேகவைத்த கீரை நன்றாக ஆறியபின், அதில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்தால், கீரையில் உள்ள இரும்புச்சத்தை நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும்.

மேற்கூறிய கீரைகளைவிட எல்லா விட்டமின் சத்துக்களும், தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரை (தவசு முருங்கை) ஆகும். இக்கீரையை சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம். ஒருமுறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.

விட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பொஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில் போதிய அளவில் கிடைக்கின்றன. நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் கீரையை சாப்பிடும் நாட்களில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

இத்தனை நற்குணங்களை கொண்ட கீரைகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றிற்கு பயன் கிடைக்கும். இதேபோல் வாய்ப்புண், மூலநோய், குடல் அழற்சி, அல்சர் (குடல்புண்) போன்ற நோய்களுக்கும் கீரை சிறந்த மருந்தாக உள்ளது. உடலுக்குத் தேவையான உயிர்ச் சத்துக்களையும், தாது உப்புக்களையும் கொடுக்கின்றன. நோய்களைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளன.

தோல் வளர்ச்சிக்கும், தோலை பளபளப்பாக, மிருதுவாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. பற்களையும், எலும்புகளையும் பாதுகாக்கின்றன. நரம்பு மண்டலம் நன்றாக வேலை செய்ய உதவுகின்றன. மலச்சிக்கலை நீக்குகின்றன. இரத்த சோகையைத் தீர்க்கின்றன.

இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவைக் குறைக்கவும், இதய நோய் வராமல் தடுக்கவும் பயன்படுகின்றன. புற்றுநோய், நீரிழிவு நோய்களைத் தவிர்க்கவும், அதிகமான உடல் எடையை குறைக்கவும் பயன்படுகின்றன.

கீரைத் தண்டினையும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி மாறுபடும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவிவிட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.

கீரைத்தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றாக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.

கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளைநோய், குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.

தினமும் ஒவ்வொரு வகையான கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும். பொதுவாகக் கீரை வகைகளில் கலோரியும் புரதமும் மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாகக் கீரை சாப்பிடலாம். முதியவர்கள், கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகள் கீரையை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்வது அவசியம். பொதுவாக உடல்ரீதியான பிரச்சனை இருப்பவர்கள், உணவில் கீரைகளைச் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

பூச்சிகள், கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், மாசு போன்றவற்றால் கீரைகள் பாதிக்கப்பட்டு வளர்வதால், கீரைகளை சமைப்பதற்கு முன், 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் போகும், பூச்சிக் கொல்லியின் வீரியம் குறையும். கீரையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதேநேரம், போதுமான அளவு வெந்திருக்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இருக்கும் முக்கிய சத்துபொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைத்திறனுக்கு உதவும் சத்துப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. கீரைகளை சமைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டிவிடக் கூடாது.

மழை, வெய்யில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், எளிதில் சமிபாடு அடையாது.

கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்சனைகளையும் உருவாக்கும். கீரைகளை பருப்புடன் சேர்த்து சமைப்பது நல்லது.

கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது.

கீரைகளை வெய்யிலில் உலர்த்தக் கூடாது. அப்படி உலர்த்தினால் அவற்றில் இருக்கும் கரோட்டீன்கள் வீணாகி விடும். கீரைகளை பொரிப்பதை தவிர்க்க வேண்டும்.

அகத்திக் கீரையை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். இல்லாவிட்டால் வாயுவை உண்டாக்கி விடும். மேலும் தினசரி அதிக அளவில் உண்டால், வயிற்றுக் கடுப்பையும் ஏற்படுத்தி விடும். அகத்தி கீரையை அவசரமில்லாமல் நன்கு மென்று சாப்பிட வேண்டும். சிலருக்கு பேதியாகலாம்.

அகத்திக்கீரை, சிறுகுறிஞ்சான் கீரைகளை எண்ணெயில் தாளிக்கக் கூடாது. மருத்துவ குணம் அகன்று விடும். அகத்திக்கீரையுடன் தேங்காய்பால், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைப்பதால் அதிக பலன் கிடைக்கும். அகத்திக் கீரைக்கு மருந்துகளின் செயல்பாடுகளைத் தடுக்கும் இயல்பு உண்டு. எனவே பிற மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் அகத்தியைத் தவிர்ப்பது நல்லது. நோயால் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிடுபவர்கள் சிறுகீரை, அகத்திக் கீரைகளை உண்ணக் கூடாது. ஏனெனில் எவ்வளவு வீரியமிக்க மருந்தாக இருந்தாலும் அதன் தன்மையை முறியடித்துவிடும்.

அரைக்கீரையை கூடுமானவரை பகலில் மட்டும் சாப்பிடுங்கள், இரவில் வேண்டாம். மூல நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

ஆரைக்கீரைக்கு கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இருப்பதால் குழந்தைப் பேற்றுக்காக காத்திருப்போர், கருவுற்ற பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம். குழந்தைப் பேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடலாம். கீரையைச் சமைத்துண்ண தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும்.

சிறுபசலைக்கீரை அதிக குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் சீதளதேகம் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. சளி, கபம் இருக்கும் போது கீரையை சாப்பிட்டால் அதிகமாகும்.

சிறுகீரையை சமையல் செய்யும்போது இஞ்சி, பூண்டு, பெருங்காயம் சேர்ப்பதை தவிர்க்கவும். அப்போதுதான் அதன் முழுபலனை பெற முடியும்.

பருப்புக் கீரை மிகவும் குளிர்ச்சியை அளிக்கக் கூடியது. எனவே சீதள உடம்புவாகு கொண்டவர்கள் இக்கீரையை ஓரளவுக்குத்தான் சாப்பிட வேண்டும். அடிக்கடி சாப்பிடுவதால் கரப்பான், வயிற்றுக் கிருமி உண்டாகும்.

முருங்கைக் கீரை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பேதியாகும். இதனை பகல் நேரத்தில்தான் சாப்பிட வேண்டும். இரவில் சாப்பிடக் கூடாது.

முளைக்கீரையில் ஆக்ஸாலிக் அமிலம் oxalic acid மிகவும் அதிகமாக இருப்பதால் சிறுநீரகப் பிரச்சனை, கல் அடைப்பு, அலர்ஜி(ஒவ்வாமை) இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

தூதுவளை இலை உடலுக்கு உஷ்ாணத்தைக் கொடுக்கும் என்பதால், சூட்டு உடம்புக்காரர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது.

புளிச்ச கீரையை பித்த சம்பந்தமான நோய்களை உடையவர்கள் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. இது பித்ததை அதிகப்படுத்தும் குணமுடையது.

புளிச்ச கீரையை இரவு உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இரவில் கீரையைச் சேர்த்துக் கொண்டால் குளிர்ச்சியாலும், தூக்கத்தினாலும் சீரணசக்தி குறைந்து சமிபாடு பாதிக்கப்படும். இதனால் கீரைப் பூச்சிகள் வயிற்றில் வளர்ந்து பெரும்பாலானோருக்கு வயிற்றுப் பொருமல், வயிற்று உப்பிசம், வயிற்றிரைச்சல் போன்றவை ஏற்படும்.

முள்ளங்கிக் கீரையை வாத நோய்க்காரர்கள் சாப்பிடக் கூடாது. முள்ளங்கிக் கிழங்கை பகலில் மட்டும் சாப்பிடலாம். கப உடம்புக்காரர்கள் என்று சொல்லக்கூடிய சளித் தொல்லைகள் உடையவர்கள், ஆஸ்மா நோயாளிகள் அதிகமாக சாப்பிடவேண்டாம்.

வாயுத் தொந்தரவு உள்ளவர்கள் பூண்டு சேர்க்காமல் சமைக்கப்பட்ட முள்ளங்கிக் கீரையோ, சமைக்காமல் சலாட் போன்று உண்ணுவதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாகவே எந்தக் கீரைகளும் இரவில் சாப்பிடக்கூடாது என்றாலும் முள்ளங்கிக் கீரையை கண்டிப்பாக இரவில் சாப்பிடக்கூடாது. முள்ளங்கி கிழங்கும் அதுபோலவே இரவில் சாப்பிட்டால் தீங்குதான் விளையும்.

வல்லாரை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக் கூடாது. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.

வல்லாரையை அளவுக்கு மிஞ்சி உபயோகப்படுத்த தலைவலி மயக்கம் விகாரபுத்தி முதலிய சம்பவிக்கும். எனவே சமயம் அறிந்து அளவோடு கொடுக்க வேண்டும்.

எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.

கீரைகளின் முக்கிய பயன்கள்

1. அகத்தி கீரை – இரத்தத்தை சுத்தப்படுத்தி பித்தத்தை தெளிய வைக்கும்.
2. அம்மான் பச்சரிசிக் கீரை – கால் ஆணி கரையும். மருக்கள் மறைந்து போகும்.
3. அரைக்கீரை – காய்ச்சல், வாத பித்தநோய் நீக்கும்.
4. ஆதொண்டை கீரை -சீரணக் கோளாறுகளை சீர்செய்யும்.
5. ஆரைக் கீரை – நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
6. இலைக்கோவா – இரத்தவிருத்திக்கு நல்லது.
7. கடுகுக்கீரை – சீரணசக்தியை அதிகப்படுத்தும்.
8. கரிசலாங்கண்ணி கீரை – இரத்த சோகை காமாலை நீக்கும். கல்லீரலை பலமாக்கும்.
9. கறிவேப்பிலை – உடலுக்கு பலம் உண்டாக்ககூடியது.
10. காசினிக் கீரை – உடல் சூட்டை தணிக்கும். சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும்.
11. கீழாநெல்லி கீரை – பார்வை கோளாறு, மஞ்சள் காமாலை தீரும்.
12. குப்பை கீரை – பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.
13. குப்பைமேனி – மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.
14. கொடிப்பசலைக் கீரை – மகத்துவம் நிறைந்த மருத்துவர்.
15. கொத்தமல்லி கீரை – கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த நிவாரணி.
16. கோவை/அப்பக்கோவை – சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
17. சண்டிக்கீரை – சிறுநீரைப் பெருக்கி கால் வீக்கத்தை குறைக்கும்.
18. சிறு குறிஞ்சான் – சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து.
19. சிறுகீரை – உஷ்ணம் தணிக்கும்.
20. சிறு பசலைக் கீரை – சரும நோய்களைத் தீர்க்கும். பால்வினை நோயை தடுக்கும்.
21. சிறுபீளை – எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.
22. சுக்கான் கீரை – இரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும்.
23. தண்டுக்கீரை, முளைக்கீரை – நோய் தொற்றுகளில் இருந்து உடலை காக்கும்.
24. தண்ணீர் கீரை – கொழுப்பை குறைத்து எடையை குறைக்கும்.
25. தவசிக் கீரை /தவசு முருங்கை – இருமலை போக்கும்.
26. துத்திக் கீரை – வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை, மூலம் விலக்கும்.
27. தும்பை – அசதி, சோம்பல் நீக்கும்.
28. தூதுவளை – ஆஸ்மா நோயைக் குணப்படுத்தும்.
29. பச்சைப் பூக்கோவா – புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
30. பசலைக்கீரை – மகத்துவம் நிறைந்த மருத்துவர்
31. பரட்டைக் கீரை – பித்தம், கபம், நோய்களை விலக்கும்.
32. பருப்பு கீரை – பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்.
33. பாலக்கீரை – பளிச்சென்ற பார்வை தரும்.
34. பிரண்டை – இரத்த மூலத்திற்கு அருமருந்து.
35. பீட்ரூட் கீரை- கண் நோய்களை போக்குகிறது.
36. புதினாக் கீரை இரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் அகற்றும்.
37. புளிச்ச கீரை – உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை
38. புளியாரைக் கீரை – கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும்.
39. பொடுதலை கீரை – வயிற்று உபாதைகள் நீங்கும்
40. பொன்னாங்கன்னி – மேனி அழகை, கண் ஒளியை அதிகரிக்கும்.
41. மணத்தக்காளி கீரை – வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் அகலும்.
42. மணலிக்கீரை – வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.
43. முசுட்டை கீரை – மூலத்தை தணிக்கும்.
44. முசுமுசுக்கை கீரை – ஆஸ்மா, மூச்சுதிணறல் குணமாகும்.
45. முட்டைக்கோவா – நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
46. முடக்கத்தான் கீரை –  கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.
47. முருங்கைக் கீரை – நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும்.
48. முள் முருங்கை/ கல்யாண முருங்கை கீரை – சளி, இருமலை தீர்க்கும்.
49. முள்ளங்கிகீரை – நீரடைப்பு நீக்கும்.
50. வல்லாரை – மூளைக்கு பலம் தரும். நினைவாற்றல் பெருகும்.
51. வெங்காயத்தாள் – இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
52. வெந்தயக் கீரை – கல்லீரலை பலமாக்கும்.

தொகுப்பு – thamil.co.uk