கடன் இல்லை, கண்ணீர் இல்லை. அதிசய சாகுபடி!

ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங் -thamil.co.ukசுபாஷ் பாலேக்கர், மராட்டிய மண்ணில் பிறந்த இந்த மனிதரை, இயற்கை அன்னையே தங்களை நோக்கி அனுப்பி வைத்த தூதராகக் கருதுகிறார்கள் பல விவசாயிகள். அதற்குக் காரணம் ‘ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங்’ zero budget farming என்கிற இவரது விவசாய முறை! இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்குப் பயணம் செய்து, பெரும் திரளான விவசாயிகளுக்கு மத்தியில் இவர் நிகழ்த்தும் உரையின் போது, மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் சிலையாக அமர்ந்திருக்கிறார்கள் விவசாயிகள்.

சுபாஷ் பாலேக்கரின் விவசாயத் தத்துவத்தைக் கேட்டு, ‘பைசா செலவு இல்லாமல் வளமான விவசாயம் செய்வதா… அதெப்படி சாத்தியம்?’ என்றுதான் கர்நாடக மாநிலம், பீஜாப்பூர் மாவட்ட விவசாயிகளும் முதலில் கேட்டார்கள். இப்போது அவர்களே… ‘தாராளமாக முடியும்!’ என்று உற்சாகத்தோடு அடித்துச் சொல்கிறார்கள். நடைமுறையில் அதை சாதித்தும் காட்டிய பெருமிதம் பொங்குகிறது அவர்களிடம்.

சுபாஷ் பாலேக்கர்கர்நாடகாவின் வட மேற்குப் பகுதியிலிருக்கும் குல்பர்காவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் இருக்கிறது சிந்துகி என்ற சிறிய நகரம். பொட்டல்காடுகள். வானம் பார்த்த வறண்ட பூமி. முட்செடிகள் கூட முழுமையான செழுமையில் இல்லை. தண்ணீர் தட்டுப்பாடு. இப்போதுதான் பூமிக்கு வகிடு எடுத்தது போல ஆங்காங்கே புதிய வாய்க்கால்கள் முளைத்துள்ளன. இன்னும் தண்ணீர் வரவில்லை என்கிறார்கள். இப்படிப்பட்ட வறண்ட பூமியிலும், சில விவசாயிகள் சிறு சிறு சோலைகளை உருவாக்காமல் இல்லை. விஞ்ஞான விவசாயமும் இயற்கை விவசாயமும் இங்கே கைகோத்து சாதனை நிகழ்த்தியிருக்கின்றன.

மதியம் 1 மணி… சிந்துகி கிராமத்தில் கங்காதர் என்ற விவசாயியின் தோட்டம்…. கிணத்துமேடு… மூன்று பெரிய புளிய மரங்கள். தமிழ் சினிமா பஞ்சாயத்துக் காட்சியைப் போல, நமது கதாநாயகன் கங்காதர் சம்மணம் போட்டு அமர்ந்திருக்க… அவருக்கு முன்பு ஐந்தாறு இளந்தளிர்கள் பப்பாளிப் பழத்தை சுவைத்தபடி உரையாடலில் மூழ்கி இருந்தனர். நமது வரவு, அவர்களின் சம்பாஷணைக்குத் தடைபோட்டது. ‘தமிழ்நாட்டிலிருந்து என்னைச் சந்திப்பதற்காகவே வந்திருக்கிறார்கள். இன்னும் 10 நிமிடங்களில் இவர்கள் கிளம்பி விடுவார்கள். பிறகு நாம் விரிவாகப் பேசலாமே’ என்றார் கங்காதர்.

நம்முடன் வந்திருந்த கர்நாடக ராஜ்ய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் பஸ்வரெட்டி ‘‘இவங்கள்லாம் யாரு?’’ என்றார். ‘நான் செய்கிற ஜீரோ பட்ஜெட் விவசாய முறை குறித்துத் தெரிந்துகொள் வதற்காக பீஜாப்பூர் விவசாயக் கல்லூரியிலிருந்து வந்திருக்கும் மாணவர்கள் இவர்கள். இறுதியாண்டு பி.எஸ்சி. விவசாயம் படிக்கிறார்கள்’ என்று கங்காதர் சொல்ல… அவர் மீதும், அந்த சூத்திரத்தை அவருக்குக் கற்றுக்கொடுத்த பாலேக்கர் மீதும் நம் பிரமிப்பு விரிகிறது.

இன்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, ‘விஞ்ஞான விவசாயம்தான் சிறந்தது. வளரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஈடு கொடுத்து உணவு உற்பத்தியைப் பெருக்குவது விஞ்ஞான ரீதியான விவசாயத்தால் மட்டுமே முடியும்’ என்று வாதிட்டுக் கொண்டிருந்த விவசாய பல்கலைக் கழக துணைவேந்தர்தான் தம்மிடம் படிக்கும் பட்டதாரிகளை இப்போது இங்கே அனுப்பியிருக்கிறார் என்பதை அந்த மாணவர்களிடமே பேசித்தெரிந்து கொண்டோம்.

பல்கலைக் கழக மாணவர்கள் மட்டுமல்ல,பேராசிரியர்கள், பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் தினமும் தொடர்ந்து வந்து கங்காதரின் நிலங்களை பார்த்தவண்ணம் உள்ளதால், அவரின் விவசாய வேலைகளே ஸ்தம்பிக்கும் அளவுக்கு கால நெருக்கடி. அதனால், வாரத்தில் ஒரு நாள் மட்டும் (ஞாயிறு) பார்வையாளர்களை சந்திப்பது என்று இப்போது முடிவு செய்திருப்பதாகச் சொன்னார் கங்காதர். சில ஞாயிறுகளில் 400-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்து போக… அவர்களை உபசரித்து, ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறையைச் சொல்லிக் கொடுக்க கொஞ்சம் திணறித்தான் போகிறாராம்.

‘மூன்று வருடங்களாகி விட்டது, நான் பாலேக்கர் ஐயாவின் ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாயத்துக்கு மாறி!’ என்று சந்தோஷம் பொங்க ஆரம்பித்த கங்காதர், ‘ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தி பயிர்செய்து வந்தவன்தான் நானும். எங்கள் குடும்பத்துக்கு 200 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கிறது. வருடா வருடம் மிக அதிகமான அளவு ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் தேவைப்பட்டதால், நாங்களே உபதொழிலாக ஒரு உரக்கடை கூட வைத்திருந்தோம். ஒருநாள் நானும், கும்பார் என்ற என் நண்பரும் தற்செயலாகக் கேள்விப்பட்டுத்தான் சுபாஷ் பாலேக்கரின் கூட்டத்துக்குப் போனோம். அவர் பேச்சைக் கேட்கக் கேட்க மனசுக்குள் ஒரு மாற்றம் நிகழ்வதை என்னால் உணர முடிந்தது. ஆணித்தரமாகவும், விவசாயிகள் மீது உள்ளார்ந்த அன்புடனும் அவர் நிகழ்த்திய உரையைக் கேட்டதுமே… நான் முதலில் எடுத்த முடிவு – உரக்கடையை இழுத்து மூடியதுதான். என் அப்பாவிடம் பேசினேன். 40 ஏக்கர் நிலத்தை மட்டும் முதலில் எனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டேன். சுபாஷ் பாலேக்கர் வழியில் இயற்கை விவசாயத்தைத் துவக்கினேன்.

3 பசு மாடுகள், 3காளை மாடுகள். இவற்றின் சாணத்திலும், கோமியத்திலும் பாலேக்கர் ஐயா சொன்னபடி பீஜாமிர்தம், ஜீவாமிர்தம் தயார் செய்து, அதையே நீரில் கலந்து பாய்ச்சினேன். நம்பிக்கை இழக்காமல் நான் தொடர்ந்தபோது அற்புதம் நிகழ்ந்தது.

உதாரணத்துக்குக் கரும்பை எடுத்துக் கொள்வோம். 8 அடி இடைவெளியில் பார்கள் அமைத்து, கரணைகளை முளைக்க வைத்தேன். அதுவும் ஒரு ஏக்கருக்கு வெறும் 3000 முளைப்புகள் மட்டுமே. பிறகு அந்த 8 அடி இடைவெளியில், உளுந்து, கொண்டக் கடலை, தட்டை, அவரை போன்ற ஊடு பயிர்களை வைத்தேன். கரும்பு முளைத்து வளருவதற்கு முன்பு ஊடு பயிர்கள் பலன்கொடுக்க ஆரம்பித்து விட்டன. பிறகு, அந்தச் செடி மற்றும் அதன் இலைகளை அந்த மண்ணிலேயே மக்க விட்டேன். சிறு தாவரங்கள் காற்றிலிருந்தும் நீரிலிருந்தும் சூரிய ஒளியிலிருந்தும் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை எடுத்து நைட்ரஜன் உருவாக்கும் சக்தி கொண்டவை. அவை தமது தேவைக்கு எடுத்துக் கொண்டது போக மிச்சத்தை வேரில் சேமித்து வைத்திருக்கும். அந்த வேர் போன்றவை அங்கேயே மக்கியதால், கரும்புக்குத் தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் எல்லாமே கிடைப்பதை அனுபவத்தில் உணர்ந்தேன்.

ஜீவாமிர்தம் கரைசல்-thamil.co.ukமேலும் ஜீவாமிர்தம் கலந்த நீரைப் பாய்ச்சும்போது, பூமிக்குள் இருக்கும் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்கள் கிளம்பி மேலே வந்து, பயிருக்கு தேவையான மற்ற தாதுப் பொருட்களை தயார் செய்கின்றன. அவற்றை மிகப் பிரமாதமாக பயிர்களுக்கு எடுத்துக் கொடுக்கின்றன. இந்த வகை விவசாயத்தில், ஏக்கருக்கு 45 டன் கரும்பு எடுக்கிறேன். மண் கெடுவதில்லை. அதனால், மகசூல் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது’ என்கிறார் கங்காதர் நெஞ்சை நிமிர்த்தியபடி.

அதேபோன்று 4 ஏக்கரில் பப்பாளி பயிர் செய்து உள்ளார். அங்கும் ஊடு பயிராக கொண்டைக் கடலை பயிர் செய்துள்ளார். எந்தவகை ரசாயன உரமும் இல்லாமல், ஏக்கருக்கு 50 டன் முதல் 120 டன் வரை பப்பாளி கிடைக்கிறது. ஒவ்வொரு பழமும் 2 முதல் 5 கிலோ வரை தேறுகிறது. ருசியோ கொள்ளை ருசி! கிலோ பப்பாளி ஒரூ ரூபாய் என்று மிகக் குறைத்து கணக்கு வைத்தாலே குறைந்தபட்சம் 50,000 ரூபாய் வரை கிடைக்கும் என்று ஒரு விவசாயியாக நம் மனசு கணக்கு போட்டது. நம் மனக் கணக்கை அப்படியே படித்தவராக, ‘சமயங்களில் ஒரு கிலோ இரண்டு – மூன்று ரூபாய் வரைகூட போகுதுங்க’ என்கிறார் கங்காதர்.

இந்த விவசாயத்தில் பயிர் வைப்பது, மனித உழைப்பு, தண்ணீர் தவிர…. நாட்டுப் பசுக்களையும் காளைகளையும் வளர்ப்பதுதான் செலவு. நஷ்டம் என்பதே இல்லை!

‘விவசாயி வாழ்க்கை சோகத்தில் கழிவதற்குக் காரணமே – அவன் பயிர் விளைந்து தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் உரத்துக்கும் பூச்சிக் கொல்லிகளுக்கும் செய்கிற செலவுதான். பயிர் பொய்த்துப் போகிறபோதும், பூச்சிக் கொல்லிகளையும் மீறி பயிர் அழிந்து போகிறபோதும் விவசாயி மொத்தமாக உடைந்து போகிறான். வங்கிக் கடனும் விஷ வட்டிக் கடனுமாக அவன் வாங்கியதெல்லாம் மொத்தமாக போட்டு அழுத்தும்போது… மானத்துக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்கிற அவலம் ஆங்காங்கே நடக்கிறது. பாலேக்கர் ஐயா சொல்லிக் கொடுத்த விவசாயத்தில் கடன் தொல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. கண்ணீருக்கும் இடமில்லை’ என்று கங்காதர் சொன்னபோது, பச்சைப் பசேல் என்று விளைந்திருந்த கரும்பும் பப்பாளியும் ‘ஆம்’ என்று ஆமோதிப்பதுபோல் காற்றில் சந்தோஷமாகத் தலையாட்டின.

கங்காதரின் நண்பர் கும்பார் – இவரைவிடவும் ஒருபடி மேலே எறும்பாக சுறுசுறுப்பு காட்டுகிறார். இவர் 4 ஏக்கர் நிலத்தில் திராட்சை போட்டு உள்ளார். இவரும் மாட்டுச் சாணம், மாட்டு கோமியம் இவற்றைக் கொண்டு ஜீவாமிர்தம் தயாரித்து, தண்ணீருடன் கலந்து, திராட்சை தோட்டத்தில் பாய்ச்சுகிறார். திராட்சை தோட்டத்தைப் பார்த்தோம். பச்சை பந்தல் போல் படர்ந்து கிடக்கும் திராட்சை கொடியிலிருந்து கொத்துக் கொத்தாக காய்கள், பழங்கள். ஒரு பூச்சி இல்லை. புழு இல்லை. பழங்கள் அமுதம் போல் ருசிக்கிறது.

‘ஏக்கருக்கு 12 முதல் 17 டன் திராட்சை கிடைக்கும். ரசாயன உரம் வைத்து விளைந்த திராட்சை கிலோ 10 ரூபாய் என்றால், எமது திராட்சைக்கு விலை ரூபாய் 20 வரை கிடைக்கும். பராமரிப்பு செலவு ஏக்கருக்கு வெறும் 5,000 ரூபாய் மட்டுமே. ஏக்கருக்கு 2 லட்ச ரூபாய்க்கும் குறையாமல் வருவாய் கிடைக்கிறது. கடன் தொல்லை இல்லை’ என்று இவரும் மன நிறைவோடு கூறுகிறார்.

Ravi Ravindran