மிளகரணை

மிளகரணைமூலிகையின் பெயர் – மிளகரணை
தாவரப்பெயர் – TODDALIA ASIATICA
தாவரக்குடும்பம் – RUTACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை, காய், பழம், வேர்பட்டை

வளரியல்பு – மிளகரணை ஒரு ஏறு கொடியினத்தைச் சேர்ந்தது. இதன் இலைகள் சிறிதாகவும் நீள்வட்ட வடிவ காம்பற்ற மூன்றிலைகள் மாற்றடுக்கில் அமைந்தருக்கும். சிறிது வளைந்த முட்களையுடையது. அவைகள் மரம், புதர்களில் பற்றிப் படர்ந்து வளரும். சுமார் 10 மீற்ரர் படரும். இலைகள் இளம்பச்சை நிறமாக இருக்கும். வாசனையுடையது. இதை ஆங்கிலத்தில் Orange climber என்று சொல்வர்.

மிளகரணை.பூக்கள் பச்சையும் மஞ்சள் நிறமும் கலந்திருக்கும். பழம் 5-7 மில்லி மீற்ரர் விட்டம் உடையது. ஆரஞ்சுத்தோலின் சுவையுடன் இருக்கும். இது காடுகளிலும், ஆற்றங்கரையோரங்களிலும், களிமண்ணிலும் நன்கு வளரும். தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் இருக்கும். இது முதலில் தென் ஆப்பிரிக்காவில் காணப்பட்டது. பின் வடசுவிட்சர் லேண்டு, ஆசியா, மடகாஸ்கர் போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இதன் இனவிருத்தி பழங்களை பறவைகள் தின்றும், குரங்குகள் பழம் தின்பதாலும் விதைகள் வேறு இடங்களில் உற்பத்தியானது. இதை கட்டிங் மூலமும் மணல் கலந்து நாற்று தயார் செய்யலாம்.

மருத்துவப்பயன்கள்

பசிமிகுதல், முறை நோய் நீக்கல், கோழையகற்றுதல், இருமல் போதல், காச்சல், மலேரியா, வாதம் வயிற்று வலி, வீக்கம் போக்கல் ஆகியவை.

மிளகரணை பழம்மிளகரணையின் பழம் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

முறைசுரம் குணமாக மிளகரணையின் சமூலம் நிழலில் காய வைத்து சுமாராக இடித்து 10 கிராம் அளவு எடுத்து 500 மி.ல்லி. நீரில் கொதிக்க வைத்து 50 மில்லியாகச் சுண்டிய பின் வடிகட்டி உணவுக்கு முன் காலை, மாலை குடிக்க வேண்டும்.

சுரம் தணிய மிளகரணையின் இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் அப்போது வியர்வை கொட்டினால் குணமாகும்.

பிடிப்பு வீக்கம், வலி குணமாக இதன் காய், வேர்ப் பட்டை வகைக்கு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நல்லெண்ணையில் மிதமாக தீயில் பக்குவமாகக் காய்ச்சி வடிகட்டி தலை உடம்பு முழுக்கத் தேய்க்க வேண்டும்.

மிளகரணையின் பச்சை இலையை மென்றுதின்ன வயிற்றுவலி குணமாகும்.

காச்சல் குணமாக இதன் இலையை ஒரு பிடி எடுத்து 500 மில்லி நீரில் 200 மில்லி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

மிளகரணை வேரை கைப்பிடி எடுத்து 200 மில்லி விளக்கெண்ணையுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி வீக்கத்திற்குத் தடவ விரைவில் குணமாகும்.

வேர் பட்டை 20 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி நாள்தோரும் இரண்டுவேளை குடிக்கத் தேகபலம், பசி, தீவனம் உண்டாகும். கபம், குளிர் சுரம் போகும்.

-மூலிகைவளம்