கம்பு

கம்புகம்பு -pearl millet-பச்சையும் வெண்மையும் கலந்த நிறத்திலுள்ள தினை வகையைச் சேர்ந்த ஒரு தானியம். இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடியது.

சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.

அரிசியைக் காட்டிலும், கனிமம், கல்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம் கொண்ட தானியம் கம்பு. அரிசியை விட கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கொண்டது.

கம்பு--thamil.co.ukமருத்துவ பயன்கள்
மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் எடை குறைக்க விரும்புவர்களுக்கும் மிக ஏற்றது.

இதயத்தை வலுவாக்கும்.

சிறுநீரைப் பெருக்கும்.

நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

தாதுவை விருத்தி செய்யும்.

இளநரையைப் போக்கும்.

கம்பை நன்கு வறுத்து, பொடித்து, சலித்து அத்துடன் நாட்டுச்சர்க்கரை தேவையான அளவு சேர்த்து வளரும் குழந்தைகளுக்கு கொடுக்க தேறாத குழந்தைகள் சத்துப்பிடித்து நன்கு தேறி வளருவார்கள். சதைப்பற்றும் அதிகரிக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

கதிர் அறுக்கப்பட்ட கம்பு செடி, தனியாக வெட்டி எடுக்கப்பட்டு, குடிசைகளுக்கு கூரை வேய பயன்படுகிறது. கம்பு செடிகள் வேயப்பட்ட கூரை, குளிர்ச்சியை தரக்கூடியது.

அறுவடைக்கு பின், கம்பு செடிகள், நிலத்துடன் சேர்த்து உழவு செய்யப்படுகின்றன. இதனால், நிலத்திற்கு தழைச்சத்து கிடைக்கிறது.எளிதில் மக்கும் தன்மை கொண்டது. கம்பு செடி என்பதால், ஆறடி நீள செடிகளும், விரைவில், நிலத்திற்கு உரமாக மாறி விடுகின்றன.

உடனடி கம்பு தோசை

தேவையான பொருள்கள்
கம்பு – 1 ஆழாக்கு
உளுந்து -1/4 ஆழாக்கு
தனியா( மல்லி ), சீரகம் – சிறிதளவு
மிளகாய் – 4 அல்லது 5
பெரிய வெங்காயம்- 2 அல்லது சின்ன வெங்காயம் 1 கைபிடி

செய்முறை
4 பங்கு கம்புக்கு 1 பங்கு உளுந்து சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் கம்பு , உளுந்து, தனியா, சீரகம், வர மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து சற்று கரகரபாக அரைக்கவும். இந்த மாவை புளிக்க வைக்க வேண்டாம், அரைத்தவுடன் தோசை ஊற்றலாம்.  நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி தோசை சுட்டால் சுவையாக இருக்கும். தேங்காய் சம்பலுடன் மிகவும் சுவையாக இருக்கும்.