உலர் திராட்சை

உலர் திராட்சை-thamil.co.ukதிராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம். இதில் விட்டமின் B மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. மேலும் பொட்டாசியமும், மக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவையான உடல் வலிமையை உலர் திராட்சை தருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்கமளிக்க கூடிய உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலர் திராட்சை மருத்துவ குணங்கள்

குழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.

இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள்.

இரத்த விருத்திக்கு: எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக: பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்குக் காலங்களில்: மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

குடல்புண் ஆற: அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக: சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு: தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து உலர் திராட்சையை உட்கொண்டால் இரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

உலர் திராட்சை பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

தொண்டைக்கட்டு பிரச்சனை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக்கட்டு பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

புகைபழக்கத்தை ஒழிக்க தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை வாங்கி வைத்து கொள்ளுங்கள். சிகரட் ஞாபகம் வரும்போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள் .

மிகவும் முக்கியமான மருத்துவகுணம் கொண்ட உலர் திராட்சை புகை பிடிப்பவர்களை தடுக்கும் அருமருந்து ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது,

மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணர்வை கட்டுப்படுத்துகிறது, இது சைனாவில் பிரபலம், நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை,

இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி…!

உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு:

சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது. உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது இரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர்.

எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும் போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.

கருப்பு உலர்ந்த திராட்சை-thamil.co.ukஇரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் கருப்பு உலர்ந்த திராட்சை

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த இரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடிவதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக் கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

இரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 – 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்தசோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. இரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் இரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது இரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் இரத்த ஓட்டத்தின் போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக இரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை இரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

1-வது நாள் 1, 1, 1, -3. பழங்கள்
2-வது நாள் 2, 2, 2, = 6. பழங்கள்
3-வது நாள் 3, 3, 3, = 9. பழங்கள்
4-வது நாள் 4, 4, 4, = 12. பழங்கள்
5-வது நாள் 4, 4, 4, = 12. பழங்கள்
6-வது நாள் 4, 4, 4, = 12. பழங்கள்
7-வது நாள் 3, 3, 3, = 9. பழங்கள்
8-வது நாள் 2, 2, 2, = 6. பழங்கள்
9-வது நாள் 1, 1, 1, = 3. பழங்கள்
ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, இரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள்.

இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும்.  செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

-Sharmila
-Thamil.Siththars