கண்டங்கத்தரி

கண்டங்கத்தரி-thamil.co.ukமூலிகையின் பெயர் – கண்டங்கத்தரி
ஆங்கிலப் பெயர் – Solqnumsuraltense, Burmfi solqnqceae
வேறு பெயர்கள் –
 பாப்பார முள்ளி, கண்டம், கண்டு, கபநாசம், கண்டங்காரி துற்பஞ்சா, நிதித்திகா, பிறசோதி, நிராட்டிகா, சிங்கி, நிசப்பிரிய வாணாதாகி, சுவாக்கனி, கண்டநியா.

வளரியல்பு – கண்டங்கத்திரி செடி வகையைச் சேர்ந்தது. எல்லா இடங்களிலும் விளையக் கூடியது. இதற்கு கபத்தை அகற்றும் தன்மை (Expectorant Action) உண்டு. இந்த தாவரம் முழுவதும் கூர்மையான முட்களை கொண்டது. முட்கள் மஞ்சளாக, பளபளப்பாக 1.5 செ.மீ. நீளத்தில் இருக்கும். பூக்கள் நீல நிறமானவை. சிறு கத்தரிக்காய் வடிவான காய்களையும், மஞ்சள் நிறமான பழங்களையும் கொண்டது. கண்டங்கத்திரி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டவை. இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற அனைத்தும் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது.

மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களில் மிகவும் முக்கியமானது சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள்தான். இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டைகட்டு, சுரம் என்று பற்பல விதங்களில் கப நோய்கள் பாதிக்கின்றன. இவை அனைத்திற்கும் மூலிகை மருந்துகள் உடனடி நிவாரணம் அளிக்கின்றன. பக்க விளைவுகள் இல்லாமலும், அதேநேரம் உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய மூலிகைகளில் முக்கியமான மூலிகை கண்டங்கத்திரி.

காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்
வீசு சுரஞ் சன்னி விளைதோடம்-ஆசுறுங்கால்
இத்தரையு னிற்கா, எரிகாரஞ் சேர்க்கண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்.”
இப்பாடல் அகத்தியர் குணவாகடம் நூலில் உள்ளது. இப்பாடலின் பொதுவான கருத்து கண்டங்கத்திரி மருத்துவ குணம் மிக்க மூலிகை. கண்டங்கத்திரி காசம், சுவாசம், ஷயம், அக்கினி மந்தம், தீச்சுரம், சன்னி வாதம், எழு வகை தோஷங்கள், வாதநோய் ஆகியவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது, என்பதே.

கண்டங்கத்தரி--thamil.co.ukசுகாதார சீர்கேட்டால் இன்றைய சுற்றுச்சூழல் மிகவும் சீர்கெட்டு உள்ளது. நாம் அனைவரும் சுவாசிக்கும் காற்று மாசுபட்ட நிலையில் உள்ளது. இதனால் சிலருக்கு நுரையீரல் பாதிப்படைகிறது. மேலும், சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் பிராண வாயு உறிஞ்சும் தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும், மூச்சுக்குழல் தொண்டைப் பகுதிகள் பாதிப்படைகின்றன. அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல், மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது. இத்தகைய பிரச்சினைகளுக்கு கண்டங்கத்திரி நிரந்தர தீர்வை கொடுக்கிறது.

கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து “தசமூலம்” என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத் திரியும் ஒன்றாகும்.

முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிற மலர்களையும் சிறுகத்திரிக்காய் வடிவிலான காய்களையும் மஞ்சள் நிறப்பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறுசெடியின் வகை கண்டங்கத்திரி. இதன் தண்டுப் பகுதி முதல் இலைகள் வரை பூனை முட்கள் செடி முழுவதும் இருக்கும். இது கத்திரியின் வகைகளில் ஒன்றாகும். இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் ஆகியவை மருத்துவ குணமுடையவை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தரிசு நிலங்களிலும் தானே வளர்கின்றது. கோழை அகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் பயன்படுகின்றது.

கண்டங்கத்திரியின் தன்மை பற்றி அக்தியர் கூறும் கருத்து
‘மாறியதோர் மண்டைச்சூலை கூறியதோர் தொண்டைப்புண் தீராத நாசிபீடம்.”
தலையில் நீர் கோர்த்தல், தொண்டையில் நீர்க்கட்டுதல், தொண்டை அடைப்பு ஏற்படுதல், பேச முடியாமல் தொண்டை அடைத்தல், மூக்கில் நீர் வடிதல், மூச்சுத் திணறல், இருமல் போன்ற அனைத்திற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி என அகத்தியர் கூறுகிறார்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைச் செடிகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தக் கூடிய தன்மை கொண்டவை. அந்த வகையில் கண்டங்கத்திரியை ஒத்த குணமுடைய மூலிகைகளான இண்டு, இசங்கு, தூதுவளை ஆகிய அனைத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.

இந்த பொதுப்பண்பினைக் கொண்டே கண்டங்கத்திரி அவலகம், சுதர்சண சூரணம், கனகாசவம், நெல்லிக்காய் லேகியம் ஆகிய ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆஸ்துமா குணமாக
இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் ஒவ்வொன்றையும் 25 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 10 கிராம் எடுத்து 2 கப் நீரில் கொதிக்க வைத்து ½ கப்பாக வற்ற காய்ச்சி வடிகட்டி ஒரு வேளை அருந்த வேண்டும்.

இவ்வாறு காலை, மாலை இரு வேளை ஒரு வார காலம் அருந்தலாம். இது ஆஸ்துமாவில் மூச்சு விடத் திணறுபவர்களுக்கு நல்ல நிவாரணத்தை உடனடியாக அளிக்கும். நாளடைவில் ஆஸ்துமாவை குணப்படுத்தும்.

தொண்டைச் சளி குணமாக
கண்டங்கத்திரியின் முழுத்தாவரத்தையும் சேகரித்து பின் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர் தூள் செய்து கொள்ள வேண்டும். அரை தேக்கரண்டி தூளுடன் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து உள்ளுக்குச் சாப்பிட தொண்டை சளி குணமாகும்.

கண்டங்கத்திரி வேர் குடிநீர் 
‘கரிய கண்டங் கத்திரிவேர் கார முள்ள
சிறுதேக்கு
முரிய முத்தக் காசுடனே யொத்த சுக்குச்
சிறுமூலம்
தெரிய விருபடி நீர்விட்டுச் சிறுகக்
காய்ச்சிக் குடிப்பீரேல்
தரியா தோடும் வாதசுர மென்றே
தரணிக் குரைசெவ்வாய்.”
– தேரன்-குடிநீர்
கண்டங்கத்திரி வேர், கண்டுபரங்கி, மூத்தக்காசு, சுக்கு, சிறுவலுதலைவேர் இவை அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு எட்டில் ஒன்றாய் வற்றக் காய்ச்சி அருந்தினால் வாதசுரம் குறையும்.

இதர பயன்கள்
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாதநோய்களுக்கு பூசிவர அவை நீங்கும்.

காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும்.

கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும்.

வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும். கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம்.

பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.

கண்டங்கத்திரி எனும் அற்புத மருத்துவ மூலிகையின் மகத்துவம் அறிந்து அதனை பயன்படுத்தி பயன் பெறுவோமாக.

-சித்த மருத்துவம்