பொன்னாங்காணி

பொன்னாங்காணி.--thamil.co.ukகீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்காணி. அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை.  இதன் தாவரவியல் பெயர் Alternanthera sessilis.

சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது. ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கியது.

இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம்.

பொன்னாங்காணி கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும் கீரை.

பொன்னாங்காணியில் சீமை பொன்னாங்காணி என்றும், நாட்டுப் பொன்னாங்காணி எனவும் இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்காணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்காணி தான் பல அருங்குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.


பொண்ணாங்காணி-thamil.co.uk
பொன்னாங்காணியின் பயன்கள்
1.இரத்த சுத்ததிற்கு
இரத்தத்தை சுத்தபடுத்த மிகவும் பயனுள்ளதாக அமைவது பொன்னாங்காணி. பொன்னாங்காணிக் கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

2.ஞாபக மறதி குணமாக
சிலர் ஞாபக மறதி காரணமாக நிறைய இழப்பை சந்தித்திருப்பார்கள். ஞாபக மறதியை மனிதனை அழிக்கும் கொடிய வியாதிக்கு ஒப்பிடலாம். இவை நீங்கி நினைவாற்றல் அதிகரிக்க பொன்னாங்காணி சூப் சிறந்த மருந்தாகும்.

3.கண்பார்வைக் கோளாறுகள் நீங்க
அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்காணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

இக்கீரையை வெண்ணெய் சேர்த்து உண்ண கண் சம்பந்தப்பட்ட 96 வியாதிகள் நீங்கும். இக்கீரையை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வை மங்கல்,  திரைப் போட்டு மறைக்கும் கண் படலம் எல்லாம் விலகும். பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும். இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு பலன் இல்லை என்று பாராதீர்கள். குறைந்தது ஒரு மண்டலம் எந்த மூலிகைக்கும் தேவை.

பொன்னாங்காணியை உப்பு இல்லாமல் வேக வைத்து வெண்ணெயிட்டு 40 நாளுண்ண கண்ணில் உண்டாகும் நோய் நீங்கும்.

பொன்னாங்காணி இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதிகாலையில் மென்று தின்று ஒரு டம்ளர் பால் குடித்து வர உடல்குளிர்ச்சி அடைந்து கண் நோய் குணமாகும். பார்வை தெளிவடையும்.

சீமை பொண்ணாங்காணி-thamil.co.uk4.பித்தத்தைக் குறைக்க
பித்த மாறுபாட்டால் உடலில் பல நோய்கள் தாக்குகின்றன. தலைவலி மஞ்சள் காமாலை, ஈரல் பாதிப்பு, கண் பார்வைக் கோளாறு உருவாகிறது. இதற்கு சிவப்பு பொன்னாங்காணி சிறந்த மருந்தாகும். இந்த கீரையுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சூப் செய்து உணவுக்குப் பின் அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

5.பொன்னாங்காணி தைலம்
கூந்தல் வளர தினமும் பொன்னாங்காணி தைலம் தேய்த்துக் குளித்து வந்தால் நல்லது. இதை வீட்டிலேயே தயாரிக்கலாம். பொன்னாங்காணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது – 20 கிராம், அருகம்புல் காய்ந்தது – 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது – 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.பொன்னாங்காணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும்.

6.தோல் வியாதிகள் குணமாக
சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு பொன்னாங்காணி சிறந்த மருந்தாகிறது.

7. இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

8.பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப்பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்துவர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.

9.உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை, குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை விந்து கட்டி எனப் பேசுகிறது.

10. பொன்னாங்காணி இலையைக் கீரையாக உணவுடன் தொடர்ந்து உண்டு வர உடல் சூடு, மூலம் குணமாகும்.

கற்பக மூலிகை பொன்னாங்காணியை பற்றி இராமதேவர் சித்தர்

பொன்னாங் கன்னித் தைலம் – இராமதேவர்
தோணாம லிராவணன் சிறையெடுத்த
தோகைபொன்னாங் கன்னிதனைப் பிடுங்கிவந்து
நாணாதே கல்லுரலி லிட்டுநைய
நலம்பெறவே திலகமுன் னெடையும்ரெட்டி
வாணாமல் வாங்கியடி பாணிரெட்டி
வகையாக யெரித்துமுடா ஊற்றிக்காய்ச்சிக்
காணாத தைலங்கள் முழுகக்கேளு
கண்களுக்கு அருந்ததியுங் காணுந்தானே. — இராமதேவர் (யாகோபு)
பொன்னாங் கன்னியை பிடுங்கிக் கொண்டு வந்து கல்லுரலில் இட்டு அதன் எடைக்கு இரண்டு பங்கு எள்ளையும் சேர்த்து மண்பாண்டத்தில் வைத்துக் காய்ச்சி தைலம் எடுத்து தலைக்கு முழுக கண்களுக்கு ஒளி உண்டாகும்.

-நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்
-pasumaimuthu.blogspot.co.uk

தொகுப்பு – thamil.co.uk