கர்ப்பகால மூலிகைகள்

கர்ப்ப காலம்-thamil.co.ukகர்ப்ப காலத்தில் இலைக்கஞ்சியில் சேர்க்கவேண்டிய மூலிகைகள்

கர்ப்ப காலம் எனப்படுவது, ஓர் பெண் கருவுற்ற காலம் தொடக்கம் கரு வளர்ச்சியடைந்து குழந்தையாக பிரசவிக்கும் காலப்பகுதி வரையானதாகும். இக்காலப்பகுதியில் பெண் தான் உண்ணும் உணவினை விட மேலதிகமான உணவினை உட்கொள்ளுதல் வேண்டும். அதாவது சாதாரணமாக 2200 கிலோகலோரி சக்தி பெண்ணுக்கு தேவை. கர்ப்ப காலத்தில் மேலதிகமாக 300 கிலோகலோரி சக்தி பெண்ணுக்கு தேவை. எனவே நாம் உணவின் அளவினை கூட்டாது போசனைச்செறிவினை கூடுதலாக கொண்ட உணவுகளை உட்கொள்ளுதல் சிறப்பானதாகும். இதற்காக நாம் விலை கூடிய உணவுப்பொருட்களை தேடவேண்டியதில்லை. எமது சூழலில் காணப்படும் மூலிகைகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட இலைக்கஞ்சியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இலைக்கஞ்சியில் சேரும் பொருட்கள் (ஒருவேளைக்குரியது)
பச்சையரிசி அல்லது அவல் – 50g
தேங்காய்ப்பூ – 10g
இலைவகை – 10 g
ஊறவைத்த பயறு – 10 g
சீனி அல்லதுதேன்- தேவையான அளவு
மாஜரின் அல்லது நெய் – 5 g
உப்பு – தேவையான அளவு
அரிசியை நன்கு வேக வைத்து முதல் நாள் ஊறவைத்த முளைவிட்ட பயற்றை பின் சேர்க்கவும். பின்னர் ஏனைய பொருட்களை சேர்த்துக் கொள்ளவும் இறுதியாக இலைவகையை சேர்க்கவும். அல்லது இறுதியாக இலைவகையை சாறாக சேர்த்துக் கொள்ளவும்.

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் சேர்க்க வேண்டிய மூலிகைகள்.
இக்காலப்பகுதியில் தாய் வயிற்றுப்பிரட்டல், வாந்தி போன்ற உபாதைகளால் அவதியுறுவார் இதனால் நீரிழப்பும் ஏற்பட்ட வண்ணமிருக்கும். இதன்போது போதிய ஆகாரத்தினை பெற்றுக்கொள்ள சிரமப்பட வேண்டியிருக்கும். எனவே திரவஆகாரமான இலைக்கஞ்சியை இக்காலத்தில் பயன்படுத்துதல் சிறந்த பலனைத்தரும். அத்துடன் பிள்ளையின் வளர்ச்சிக்கும், பிரசவத்தின் பின் பாலுற்பத்திக்கும், குருதியை சுத்திகரிக்கவும், குருதியுற்பத்திக்கும், நரம்பு வளர்ச்சிக்கும் பின்வரும் மூலிகைகளின் பகுதிகளை இலைக்கஞ்சியுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கூடுதல் கலோரியுள்ளவை – தேன், தேங்காய்ப்பால்.

கூடுதல் இரும்புச்சத்துள்ளவை– வல்லாரை, பொண்ணாங்காணி, தவசிமுருங்கை.

கூடுதல் Folate உள்ளவை– சாத்தாவாரி, அவரை, கோவா.

கூடுதல் விற்றமின் C உள்ளவை– எலுமிச்சம்பழம், நெல்லி, பழ வகை (கஞ்சியுடன் சமைக்காது உள்ளெடுத்தல் வேண்டும்)

கர்ப்ப காலத்தின் 4ம், 5ம், 6ம் மாதங்களில் சேர்க்க வேண்டிய மூலிகைகள்
4ம் மாதம் தொடக்கம் குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சியடைய தொடங்குகின்றன. இதனால் தாயின் நிறை அதிகரிக்க தொடங்குவதுடன் தாயிடமிருந்து கூடுதலான சக்தி பெறப்படுவதால் தாய் பலவீனமாக காணப்படுவார். அத்துடன் தாயின் வயிறு பெருப்பதால் தாய் அதிகளவான உணவினை உட்கொள்ளும்போது சிரமத்தினை அடையக்கூடும். இதனால் தாய்க்கு இலகுவாக சமிபாடு அடைய கூடிய போசாக்குமிக்க உணவுகளை வழங்குதல் வேண்டும். முக்கியமாக எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கல்சியம் நிறைந்த மூலிகைகள் தேவைப்படும். கல்சியம் தேவையான அளவு கிடைக்காவிடின் கால் தசைப்பிடிப்பு, இடுப்புளைவு, உயர்குருதியமுக்கம், பிரசவத்திற்கு பின்னான வேதனை அதிகமாக ஏற்படும். இக்காலத்தில் பாவிக்க கூடிய மூலிகைகள்.

புரதச்சத்தும் கலோரியும் கொண்ட மூலிகைகள்-உழுந்து, தேன், பயறு, கெளபி, கடலை.

கல்சியம் சத்துக்கொண்டவை-கோவா, முருங்கையிலை, மரவள்ளிக்கிழங்கு, நெல்லி.

இரத்தத்தை சுத்திகரிக்க கூடியவை-மஞ்சள், குங்குமப்பூ, உள்ளி.

கர்ப்ப காலத்தின் 7ம் மாதத்தின் பின் சேர்க்க வேண்டிய மூலிகைகள்
7ம் மாதத்தின் பின்னர் பொதுவாக தாயின் கால்களில் வீக்கம் காணப்படும். எனவே சிறுநீர் பெருக்கி செய்கையுள்ள மூலிகைகளை பயன்படுத்தல் வேண்டும். இக்காலப்பகுதியில் பிள்ளையின் வளர்ச்சி வீதம் கூடுதலாக காணப்படும் எனவே மேலும் போசாக்கான உணவுகளை உட்கொள்ளவேண்டும். கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் குழந்தையுடனான கர்ப்பப்பையின் அழுத்தம் பலருக்கு மலக்கட்டினை ஏற்படத்துகின்றது. எனவே இலகு மலம்போக்கி செய்கையுள்ள மூலிகைகளை பயன்படுத்தல் வேண்டும். எனவே இக்காலப்பகுதியில் கீழ்வரும் மூலிகைகளை பயன்படுத்தல் வேண்டும்.

இலகு மலம்போக்கி செய்கையுள்ளவை-எள்ளு, குப்பைமேனி, நிலவாகை, கடுக்காய்.

சிறுநீர்பெருக்கி செய்கையுள்ள மூலிகைகள்- சிறுநெருஞ்சில், நீர்முள்ளி, பார்லி அரிசி.

நோய்களுக்கேற்ப பயன்படும் மூலிகைகள்.
இருமல், சுவாச ரோகங்களில்- துளசி, தூதுவளை, மொசுமொசுக்கை, கற்பூரவள்ளி, திப்பலி, சிற்றரத்தை.

குன்மம் (வயிற்றுப்புண்), அஜீரணம் போன்றவைகளில் – பிரண்டைதுளிர், வில்வம் இலை, கொத்தமல்லி, நற்சீரகம், சாத்தாவாரி, மிளகு.

நீரழிவு நோய் நிலையில் – சிறுகுறிஞ்சா, ஆவாரை, கடலிராஞ்சிப்பட்டை, வெந்தயம், சுண்டங்கத்தரிக்காய்.

தோல் நோய்களில்- மாதுளந்துளிர், குப்பைமேனி, கறிமுருங்கை, நிலவாகை.

அதிகுருதியமுக்க நிலையில்– உள்ளி, சாரணை, நன்னாரி,கொத்தமல்லி, ஜடாமாஞ்சில்.

siddhamaruththuvam.blogspot.co.uk