அவரைக்காய்

அவரைக்காய்-thamil.co.ukவேறு பெயர் : சிம்பை, சிக்கடி, நிட்பாவம், நிஷ்பவம்.
தாவரவியல் பெயர் : DOLICHOS LABLAB, LINN
இது கொடி வகுப்பைச் சேர்ந்தது. தெனிந்தியாவில் சாதாரணமாய் வீடுகள் தோறும் பயிரிடப்படுகிறது. ஆடி மாதத்தில் விதை நடப்படும், ஆறு மாதப் பயிர்.

இந்த அவரைக் குடும்பத்தில் பல வகை உண்டு அவை:
1. சீனியவரை – DOLICHOS FABOFORMIS
2. செவ்வரை – DOLICHOS LABEAB (WITH RED FLOWERS)
3. நகரவரை – DOLICHOS RUGOSUS NOB
4. வெள்ளை அவரை – DOLICHOS LABLAB (WITH WHITE FLOWERA)
மேற்கண்ட அவரைகள் அன்றி ; காட்டவரை (பேயவரை) அல்லது காட்டு மொச்சை – DOLIHOS TETRAS PERMAS ( a kind of beans growing wild ) தீவாந்தர அவரை (a kind beans brought from the eastern is lands), பேயாவரை (a large kind of beans) கோழியாவரை – DOLICHOS GLADIAS என்பவைகளும் உண்டு. இவை அல்லாமல் – குத்துச் செடி வகையில் கொத்தவரை – என்று ஒரு ஜாதி உண்டு.

மருத்துவ பகுதி  : இலை, பிஞ்சு, காய்
இலை சுவை : துவர்ப்பு
வீரியம் : வெப்பம்
பிரிவு : இனிப்பு
செயல் : அகட்டுவாய் வகற்றி (CARMINETIVE), துவர்ப்பி (ASTRINGENT)
குணம் : அவரை இலைக்குத் தலைநோய், கிரகணி, ஊழி புண் ஆகிய இவை போம், தீபனத்தை தூண்டும்

பாடல் : ‘அவரையிலைக்குத் தலைநோய் ஆழ்ந்தகி ராணி
ஐவரும் விஷுசிமுதல் ஏகுந் – தவராமல்
கொண்டவர்க்குத் தீபனமாங் கொத்தாய்! விரணமறுங்
கண்டவர்க்குத் தொர்ருமிது காண்’ – அகத்தியர் குணவாகடம்

மருத்துவகுணம் : அவரையிலைச் சாற்றுடன் கொஞ்சம் சுண்ணாம்பு சிற்றாமணக்கு எண்ணெய் விட்டுக் குழைத்துப் புண்ணின் மேற் பூசப் புண் ஆறும். இச் சாற்றுடன் கற்கண்டு பொடி சேர்த்து கிளறிக் கொட்டைப்பாக்கு அளவு கொள்ள கிராணி சீத பேதி முதலிய வயிற்றுப்போக்கு நிற்கும். ஒரு துண்டுச் சீலையை இச்சாற்றில் நனைத்து நெற்றிமேல் போட்டு வர தலை நோய் தலை பாரம் நீங்கும்.

பிஞ்சு சுவை : இனிப்பு,
வீரியம் : சீதம்
பிரிவு : இனிப்பு
செயல் : தாது வெப்பகற்றி (SEDATIVE)
குணம் : விதை முதிராத வெள்ளை அவரைப் பிஞ்சு திரி தோஷம், புண், சுரம், கண் விழிக்குள் சிலேத்தும முதிர்ச்சியால் உண்டாகும் பிள்ளம் முதலிய ரோகிகட்கும், மருந்துன் போர்க்கும் இரவு உணவிற்கும் ஆகும்.
பாடல் : ‘கங்குலுணவிற்குங் கறிக்கும் உறைகளுக்கும்
போங்குதிரி தோடத்தோர் புண் சுரத்தோர் – தங்களுக்குங்
கண்முதிரைப் பிள்ள நோய்க் காரருக்குங் கரமுறையா
வென்முதிரைப் பிஞ்சாம் வழி’
– அகத்தியர் குணவாகடம்.
வெள்ளவரைப் பிஞ்சைச் சமைத்துண்ண மேற்கண்ட குணங்களைப் பெறலாம்.

காய் சுவை : இனிப்பு
வீரியம் : சீதம்
பிரிவு : இனிப்பு
செயல் : காமம் பெருக்கி (APHRODISIAC)
குணம் : கொட்டை முதிர்ந்த அவரைக்காயைச் சமைத்து உண்டால், அரோசகம் தீரும். ஆனால், மந்தம் பேதி வாத நோய், கப நோய்,சூலை ஆகியவை உண்டாகும்.
பாடல் : ‘கோட்டைஅவ ரைக்காயால் கோரஅ ரோசக நோய்
கிட்டா தென் பார் மருந்தின் கீர்த்தி கெடுந் – துட்டமந்தம்
பைய உண்டாம் பேதி உண்டாம் பாறிப் பணிலம் உண்டாகும்
ஐயம் உண்டாம் சூலையும் உண்டாம் 
– அகத்தியர் குணவாகடம்

கொடிகாய்களிலே சிறந்தது மலிவான விலையில் நிறைய ஊட்டசத்துகளை தருவது அவரை. நாம் அவரைக்காய் என்று அழைத்தாலும், அது உண்மையிலேயே ஒரு பீன்ஸ்/பட்டாணி வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது

கோடைக்காலப் பயிராகக் கருதப்படும் அவரைக்காயின் சீசன் மாசி முதல் ஆடி வரை ஆகும். ஆனாலும் அதைக் காய வைத்து, குளிர்காலத்திலும் பயன்படுத்துவார்கள். சிறுநீரக வடிவத்தில் இருக்கும் ஒவ்வொரு விதையின் மேற்புறம் பஞ்சு போல மென்மையாக இருக்கும்.

அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் கொண்டது. நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள், கரையக்கூடிய நார் மற்றும் விட்டமின்கள் அவரையில் உள்ளன. மிக எளிதில் செரிமானமாகக் கூடியது. முற்றிய அவரைகாயை விட அவரை பிஞ்சே உடலுக்கு நல்லது. விலங்கு சார்ந்த புரத உணவுகளை விட தாவர அடிப்படையிலான புரத உணவுகள் உன்ணுங்கள் அது உங்கள் எலும்புகளை பலப்படுத்தும்.

அவரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இதயத்திற்கு…
கால் கப் அவரையில் 9 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன. இதனால் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் நம் இதயத்திற்கும் மிகவும் நல்லது.

அவரை கிட்டத்தட்ட நிறைவு கொழுப்பு மற்றும் கொழுப்பு இல்லாத காரணத்தால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க நன்கு உதவும். பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் இருப்பதால் இந்த அவரை ஒரு ஆரோக்கியமான உணவாகும்.

எடை குறைய…
கால் கப் அவரைக்காயில் 10 கிராம் புரதச்சத்து உள்ளது. இதனால், அவரைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது கொலஸ்ட்ரால் அளவுகள் குறைந்து, உடல் எடையும் குறைந்து விடுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அதிக ஊட்டச்சத்து…
அவரைக்காயில் விட்டமின் B1, இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், ஃபோலியேட், மாங்கனீசு என்று பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்தச் சத்துக்களால் சீரான இரத்த ஓட்டம் முதல் எலும்புகள் வலுவாவது வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.

மன அழுத்தம் போக்க…
அவரைக்காயின் சுவையே தனி. அதில் அதிகமாக உள்ள எல்-டோப்பா என்ற அமினோ அமிலம்தான் அந்தத் தனிச் சுவையைக் கொடுக்கிறது. அந்த அட்டகாசமான சுவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்து, மன அழுத்தங்களைப் போக்குகிறது.

பசியைப் போக்கும்…
அவரைக்காயில் கலோரிகளை எரிக்கும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதில் உள்ள புரதச்சத்தும் சேர்வதால், இந்த உணவைச் சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்த உணர்வு நமக்குக் கிடைக்கும்.

இரத்த அணுக்களுக்கு…
அவரைக்காயில் உள்ள இரும்புச் சத்து, நம் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

எலும்பு வளர்ச்சிக்கு….
நம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கல்சியச் சத்தும் அவரைக்காயில் கணிசமான அளவில் உள்ளது.

மலச்சிக்கலுக்கு….
அவரைக்காயில் உள்ள நார்ச்சத்து, நாம் சாப்பிட்ட உணவுகளைச் சீராக நம் குடல்களின் வழியாகப் பயணிக்கச் செய்து, நன்றாகச் செரிமானம் செய்து, மலச்சிக்கலே இல்லாமல் செய்கிறது. மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி பெருக…
அவரையில் விட்டமின் C அதிகம் உள்ளதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நம்மை அண்டாது. வேறு நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

உடலில் நீர்ச்சத்தின் அளவை சீராக்க….
அவரைக்காயில் உள்ள பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகளின் உதவியுடன் நம் உடலில் உள்ள நீர் மற்றும் அமிலங்களின் அளவுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.

உடலுக்கு வலிமை…
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

கண் பாதிப்புகளுக்கு….
பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

நுரையீரலுக்கு….
நம் உடலில் உள்ள நுரையீரலிலிருந்து மற்ற கலங்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கு இரும்புச் சத்து மிகுந்த ஹீமோகுளோபின் உதவுகிறது. அவரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவை குணமாக்கும்…
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

சரும நோய்களுக்கு…..
முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.

அவரை பலவீனமான குடல்புண் உடையவர்களுக்கு இரவு நேரத்தில் பத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது.

வெண்ணிற அவரைகாய் வாயு பித்தம் இவற்றை கண்டிக்கும், உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்கும் எரிச்சலை அடக்கும்.

பேதி தொல்லை, அடிக்கடி தலை நோய் வருதல், ஜிரணக்கோளாறு, சீதபேதி இவற்றிற்கு அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தால் பலனுண்டு. சளி, இருமலைப் போக்கும்.

அஸ்ஸாமில் காது வலிக்கும், தொண்டை வலிக்கும் அவரைகாயின் சாறைப் பயன்படுத்துகின்றனர்.

இரத்த கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு என்பது அறிய கண்டுபிடிப்பு.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

-இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
-K S Kandasamy

தொகுப்பு – thamil.co.uk