துத்தி

ABUTILON INDICUMமூலிகையின் பெயர் – துத்தி
வேறுபெயர்கள் – கக்கடி, கிக்கசி, துத்திக்கீரை
தாவரப்பெயர் – ABUTILON INDICUM
தாவரக்குடும்பம் – MALVACEAE
வகைகள் – பசும்துத்தி, கருந்துத்தி, சிறுத்துத்தி, பெருந்துத்தி, எலிச்செவிதுத்தி, நிலத்துத்தி, ஐயிதழ்துத்தி, ஒட்டுத்துத்தி, கண்டுத்துத்தி, காட்டுத்துத்தி, கொடித்துத்தி, நாடத்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத்துத்தி, பலன் எல்லாம் ஒன்றே.

பயன்தரும் பாகங்கள் – இலை, பூ, வேர்,பட்டை.

தாவர அமைப்பு  -துத்தி கீரை வகையைச் சேர்ந்தது. ஆனால் இதனைப் பெரும்பாலும் எவரும் சமையலுக்குப் பயன்படுத்துவதில்லை. மற்ற கீரைகளைப் போலவே சமையல் செய்து சாப்பிடலாம். இது உடல் நலத்திற்கு பாதுகாப்பானது. இதய வடிவ இலைகளையும் அரச இலை போன்று ஓரங்களில் அரிவாள் போன்று இருக்கும். மஞ்சள் நிற சிறு பூக்களையும் தோடு வடிவக் காய்களையும் உடைய செடி. இலையில் மென்மையான சுவையுண்டு. உடலில் பட்டால் சற்றே அரிக்கும். தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், உஷ்ண பிரதேசங்களில் தானே வளர்கிறது. நான்கையிந்தடி உயரம் வரை வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகின்றது.

மருத்துவப்பயன்கள்
துத்தி உடலிலுள்ள புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி உடலைத் தேற்றுகிறது.

துத்தி இலையைக் கொண்டு வந்து மண்பாண்டத்தில் போட்டு விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி கை பொருக்கும் சூட்டில் வாழை இலை அல்லது பெரிய வெற்றிலையில் வைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். இது போன்று தினசரி இரவு படுக்கைக்கு முன்னர் செய்து வந்தால் மூலவீக்கம், வலி, குத்தல், எரிச்சல் ரத்த மூலம், கீழ்மூலம் ஆகியவை நீங்கி நலம் உண்டாகும்.

துத்தி இலை வேர் முதலியவற்றை முறைப்படி குடிநீரிட்டு பல் ஈறுகளிலிருந்து ரத்தம் வருபவர்கள் வாய் கொப்பளித்து வர ரத்தம் வடிவது நிற்கும்.

உடலில் ஏற்படும் வலிகளுக்கு துத்தி இலையை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து அந்நீரில் துணியை முக்கி ஒற்றடமிட்டு வந்தால் வலி குணமாகும்.

கழிச்சல் இருப்பவர்கள் துத்தி இலையின் சாறு இருபத்தினான்கு கிராம் நெய் பன்னிரண்டு கிராம் கலந்து உட்கொண்டு வந்தால் குணமாகும்.

ஆசன வாய்க் கடுப்பு, சூடு முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைக் குடிநீருடன் பாலும் சர்க்கரையும் கலந்து உட்கொண்டு வர நலம் தரும். மலத்தை இளக்கும்.

துத்தி இலையை பருப்புடன் சேர்த்து உண்டு வந்தால் மூலச்சூடு நீங்கும்.

துத்தி.எளிதில் பழுக்காத கட்டிகளின் மீது துத்தி இலையை இடித்துப் பிழிந்த சாற்றை அரிசி மாவுடன் கலந்து களியாகக்கிண்டி கட்டிகளின் மீது பூசி, கட்டி வந்தால் அவை எளிதில் பழுத்து உடையும்.

இரத்த வாந்தியால் துன்பப்படுபவர்கள் துத்திப் பூவை நன்கு உலர வைத்து சூரணம் செய்து தேவையான அளவு பாலும் கற்கண்டும் சேர்த்து அருந்தி வந்தால் ரத்த வாந்தி நின்று உடல் குளிர்ச்சியாகும். ஆண்மையையும் இது பெருக்கும்.

துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பசும் பாலுடன் அருந்தி வந்தால் நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய் இரத்த வாந்தி, முதலியவை குணமாகும்.

துத்தி விதைகளைப் பொடித்து சர்கரையுடன் கலந்து இருநூற்று ஐம்பது மி.கி. முதல் ஐநூறுமி.கி. அளவு உண்டு வந்தால் சரும நோய்கள் உடல் சூடு, தொழுநோய், கருமேகம், வெண்மேகம், மேகஅனல் முதலியவை கட்டுப்படும்.

வெள்ளைபடுதல் நோய், மூலம் உடையவர்கள் இதன் விதையைக் குடிநீர் செய்து முப்பது முதல் அறுபது மி.லி. அருந்தி வரலாம்.

துத்தி வேர் முப்பத்தயிந்து கிராம் திராட்சைப் பழம் பதினேழு கிராம் நீர் எழுநூறு மி.லி சேர்த்து நன்கு காய்ச்சி நூற்று எழுபது மி.லி ஆக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை இரு வேளையும் முப்பது முதல் அறுபது மி.லி. அருந்தி வந்தால் தாகம், நீரடைப்பு, மேகச்சூடு, முதலியவை குணமாகும்.

துத்தி விதைகளைப் பொடி செய்து சம அளவு கற்கண்டுப் பொடி கலந்து அரை முதல் ஒரு கிராம் இரண்டு வேளை நெய்யுடன் குழைத்து உண்டு வந்தால் வெண்புள்ளி நோய் குணமாகும்.

துத்தி வேரை உலர்த்தி பொடி செய்து மூன்று கிராம் முதல் ஐந்து கிராம் வீதம் தினமும் பாலில் சேர்த்துக் குடித்து வர மூலச் சூடுதணியும்.

வாயு சம்பந்தப் பட்ட வியாதிகளுக்கும் இடுப்புவலி, பழைய மலத்தினால் உண்டாகும் பூச்சிகள் ஒழிய இந்தக் கீரையை அடிக்கடி கடைந்தோ பொரியல் செய்தோ உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் யாவும் குணமடையும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால், முதலில் எலும்பை ஒழுங்குபடுத்திக் கட்டிக் கொண்டு இந்த இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப் பூச அதன் மேல் துணியைச் சுற்றி அசையாமல் வைத்திருந்தால் வெகு விரைவில் முறிந்த எலும்பு கூடி குணமாகும்.

துத்தி இலையை நன்றாக அரைத்துக் கசக்கி சாறு எடுத்துக் கொண்டு அந்தச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டும் அளவு நன்றாக காய்ச்சி வடிகட்டிப் பாட்டிலில் வைத்துக் கரப்பான் கண்ட குழந்தைகளுக்கு தடவி வந்தால் இந்நோய் குணமாகும்.

குடற்புண்ணால் வேதனைபடுகின்றவர்கள் துத்தி கஷாயத்தை தினசரி மூன்று வேளை சர்க்கரை கலந்து குடித்து வந்தால் பூரண குணம் பெறலாம். தவிர நீர்சுளுக்கு, தொண்டை கம்மல் சொரிசிரங்கு உள்ளவர்கள் இந்த கஷாயத்தை குடித்து குணமடையலாம்.

துத்தி(ஒரு அற்புத மஹா மூலிகை)

குரு பார்க்க கோடி பாவம்போகும் என்பார்கள். அதேபோல அவருக்கு உகந்த மூலிகையான துத்தியும் பாவம் பல செய்து உடல் ரீதியான வியாதிகளால் துன்புறுபவர்களுக்கும் நற்கதி நல்கும். இது சிறுதுத்தி, பெருந்துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி என நான்கு வகைப்படும். சிறுதுத்தி மருத்துவத்தன்மையில் மேலானது. சிறுதுத்தி இலை மென்மையானதாக இருக்கும். பெருந்துத்தி இலை தடிமனானதாக இருக்கும்.

துத்தி என்ற அற்புத மூலிகை தேவ குருவான, வியாழன் என்றழைக்கப்படும் பிருகஸ்பதியிற்கான மூலிகை. இது உடலில் உள்ள நோய்களை களைந்து , உடலின் அழுகும் தன்மையையும் மாற்றி படிப்படியாக நோயை நீக்கும் வியதாபேதகாரியாக செயல்படுகிறது .

வியாழ நோக்கம் இல்லாவிட்டால் திருமணம் என்பதே ஒருவர் வாழ்வில் நிகழாது. சிறுநீரக மண்டலத்துக்கும், இனப்பெருக்க மற்றும் பிறப்புறுப்பு மண்டலத்துக்கு அதி தேவதை இந்த வியாழன் . இந்த வியாழ நோக்கம் இல்லாவிட்டால் நமக்கு சந்ததிகளே இராது.வியாழ நோக்கம் இல்லாதவர்கள் இந்த துத்திச்செடிக்கு வியாழ நோக்கம் இல்லாத நபரின் பிறந்த நட்சத்திரத்தன்று மஞ்சள் கயிற்றால் காப்புக் கட்டி தண்ணீர் ஊற்றி வேர் அறாமல் பிடுங்கி எடுத்து அதன் வேரைக் குளிசமாடிக் கட்ட வியாழன் அருள் கிடைக்கப் பெற்று திருமணம் நிகழும்.

துத்திப்பூ
“துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்கு
மெத்த விந்து வும்பெருகும் மெய்குளிரும் -சத்தியமே
வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந்
தேயா மதி முகத்தாய் செப்பு”  ( குணபாடம் )

குணம் – துத்திப் பூவால் ரத்த வாந்தியும் , காசரோகமும் நீங்கும்,சுக்கில ( விந்து ) விருத்தியும் , தேகக் குளிர்ச்சியும் உண்டாம் .

செய்கை – ரக்தஸ்தம்பனகாரி, காமவிர்த்தினி

உபயோகிக்கும் முறை – துத்திப் பூவைஒரு பிடி பிரமாணம் பசுவின் பாலில் போட்டு அடுப்பிலேற்றி வெந்து குழையும் பதத்தில் கடைந்து, சிறிது சர்க்கரை கூட்டிச் சாப்பிடலாம் அல்லது துவரம் பருப்பு வெந்து வருஞ்சமயம் துத்திப் பூவைச் சுத்தமாக அலம்பிப் போட்டு வேகவைத்து உப்பிட்டு கடைந்து, தாளித்து உண்ணலாம். இதனால் தேகத்தின் வெப்பம் அடங்கும். தாது (விந்து) கட்டும். இரத்த காசம் குணப்படும்.

குணபாடம் குறித்து விளக்கியிருக்கும் துத்தி வகைகளைத் தவிர ஒட்டுத் துத்தி, சிறு துத்தி, பசும் துத்தி, கருந்துத்தி, எலிக்காது துத்தி, முடக்கு துத்தி, நாம துத்தி, ராத்துத்தி, பால் துத்தி, ஐயிதழ்துத்தி, காட்டுத் துத்தி, கொடித்துத்தி, நாமத்துத்தி, பொட்டகத்துத்தி, ஆகிய வகைகளும் உள்ளன.

துத்தி என்ற அற்புத மூலிகை தேவ குருவான, வியாழன் என்றழைக்கப்படும் பிருகஸ்பதியிற்கான அஷ்ட கர்ம மூலிகை. ஆண்களுக்கும், பெண்களுக்கும், ஏற்படும் திருமணத்தடை 7 ம் இடமான களத்திர ஸ்தானமான கணவனுக்கு மனைவியையும், மனைவிக்கு கணவனையும் தீர்மானிக்கும் இடம் . அதாவது யோனிப் பொருத்தமான இனபெருக்க (ஆண், பெண் குறிப்பொருத்தத்தை) தீர்மானிப்பது. இந்தப் பொருத்தம் அமையாவிட்டால் இல்லறம் இனிய முறையில் அமையாது. வியாழனின் கருணைப் பார்வை இல்லை என்றால் ஆண்களுக்கு ஏற்படும் விந்துக் குறைபாடு, ஆண்குறி விரைப்பின்மை, விந்து வளர்ச்சியில் குறைபாடு (தலை, வால் இல்லாத விந்தணுக்கள்), விதைப்பை குறைபாடு , விதைப்பையில் இருந்து விந்து வெளியேறும் குழாயில் அடைப்பு, விரை வீக்கம் போன்ற வியாதிகள் ஏற்படும்.

பொன்னன் என்ற வியாழனின் கருணைப் பார்வை இல்லை என்றால் பெண்களுக்கு கருப்பை வளர்ச்சியில் குறைபாடு, கருமுட்டை வளர்ச்சியில் குறைபாடு, மாதாந்திர விலக்கில் ஏற்படும் மாறுபாடுகள், சூதகக் கட்டு, கருமுட்டை வெளியேறும் குழாயில் அடைப்பு, சூலகங்களில் (OVARIES) ஏற்படும் குறைபாடு போன்ற வியாதிகள் ஏற்படும்.

பொன்னன் என்ற தேவகுருவான வியாழனின் கருணைப் பார்வை இல்லை என்றால்ஆண்களுக்கும் , பெண்களுக்கும், சிறு நீரகம், சிறு நீரகக் குழாய், சிறு நீர்ப்பை , சிறு நீர்ப்புற வழி, கீழ்வயிறு, குதம், மலவாய் (நவமூலம், பவுத்திரம்), இவற்றில் ஏற்படும் குறைபாடுகள் போன்ற வியாதிகள் ஏற்படும். குழந்தைப்பேறு இன்மையும் ஏற்படக் காரணம் ஆகும். இந்தக் குறைபாடுகள் அனைத்தும் துத்தியை உபயோகித்து சிகிச்சை அளிக்க சூரியனைக் கண்ட பனி போல ஓடும்.

துத்தியிலை
‘மூலநோய் கட்டி முளை புழுப்புண் ணும்போகுஞ்
சாலவதக் கிக்கட்டத் தையலே – மேலுமதை
எப்படியே னும்புசிக்கி லெப்பிணியுஞ் சாந்தமுறு
மிப்படியிற் றுத்தியிலை யை’ ( பதார்த்த குண விளக்கம் )

குணம் – துத்தி இலையை ஆமணக்கு நெய்யால் (விளக்கெண்ணெயால்) வதக்கிக் கட்ட மூலரோகம், கட்டி, விறண முளைகளும் , கிருமி விரணமும் போகும் . அதை எப்படிப் பாகம் செய்து, எந்த விதமாகச் சமைத்துச் சாப்பிட்டாலும் சகல ரோகங்களும் (நோய்களும்) போகும்.

செய்கை-அந்தர்ஸ்நிந்தகாரி

உபயோகிக்கும் முறை – துத்தி இலையை சிற்றாமணக்கெண்ணெய் சிறிதுவிட்டு வதக்கி மூல உபத்திரவம் இருப்பவர்களுக்கு ஆசனத்தில் வைத்துக் கட்ட 2-3 வேளைகளில் கடுப்பு நீங்கும். உஷ்ணத்தினால் வந்த கட்டிகளுக்கு அரைத்து வைத்துக் கட்ட கட்டிகள் உடையும். இந்தக் கீரையை உடைத்த பச்சைப் பயறு அல்லது துவரம் பருப்பிட்டுப் பாகப்படி வேக வைத்துக் கடைந்து அன்னத்துடன் கூட்டி உண்ண மூலாதாரத்திலுள்ள வாயுவைக் கண்டிக்கும்.மலத்தை இளகலாகப் போக வைக்கும்.

இதன் சமூலத்தை (மொத்தச் செடியையும்) வேளைக்கு 1 பலம் (35 கிராம்) தட்டி , ஒரு மட்கலயத்தில் போட்டு 1/2 படி சலம் விட்டு வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை கூட்டிக் 3 வேளையாகக் கொடுத்து வரத் தினவு, சொறி, சிரங்கு முதலியன போகும். மேலும் இந்தக் கியாழத்துக்கு (கஷாயத்திற்கு) குடலில் உண்டான புண் , நீர்ச்சுரறுக்கு, தொண்டைக் கம்மல், காமாலை, மருந்துகளின் வீ று (அதாவது சரியாக முடிக்கப்படாத விஷம் உள்ள மருந்துகளால் உண்டான கடும் விளைவுகள்) குண்டிக்காயில் (சிறு நீரகம்) உள்ள வலி (பலர் இதற்காக சிறு பிள்ளைகளை விட்டு கீழ் முதுகை மிதிக்கச் சொல்வர்), இவற்றை நீக்கும் .

முறிந்த எலும்பை ஒன்று சேர்த்து இந்த இலையை அரைத்து மேலே கனமாகப் பூசி சீலை சுற்றி அசையாமல் இருக்கும் பொருட்டு மூங்கில் பத்தைகளை வைத்துக் கட்ட எலும்பின் முறிவு கூடும் .

இந்த இலையை காய வைத்துச் சிறுநீர் விட்டு அரைத்துக் குழந்தைகளுக்கு உண்டாகும் கபால கரப்பானுக்குப் போடக் குணமாகும். இந்தத்துத்தி இனத்தில் கருந்துத்தி, சிறு துத்தி, நிலத் துத்தி, போன்ற பல வகைகள் இருந்தாலும் கூட, இவைகள் யாவும் குணத்தில் அதிக மாறுதல்கள் கிடையாது. ரோகத்தின் வன்மை, மென்மைக்கு ஏற்றாற் போல் மருந்துகளில் கூட்டிக் கொள்ளலாம் .

கருந்துத்தி
செப்புங் கருந்துத்தி சீருறவே கொண்டார்க்கு
வெப்பு நீர்க் கட்டு விலகுங்காண்-எப்பொழுதும்
நீங்கா முளைமூலம் நீள்கிருமிப் புண் வகைகள்
பாங்காகத் தானொழியும் பார்” ( பதார்த்த குண விளக்கம் )
கருந்துத்தியை பாகப்படி உபயோக்கப்படுத்த நீர் எரிச்சல் முளைமூலம், புண் கிருமிக் கூட்டம் இவைகள் போகும்.

சிறுதுத்தி
“ஓங்கு மலக்கட்டு மோயாத வன் கரப்பான்
வீங்கும் கடிவிஷமும் விட்டுப் போம் – பூங்குழலே
மீதுஞ் சிறு நீரின் வெப்பந் தணிந்துபோம்
கூறுஞ் சிறு துத்திக்கு”  (பதார்த்த குண விளக்கம்)
சிறுதுத்தியால்மலபந்தம், கரப்பான், அற்ப விஷங்களையுடைய பூச்சிகளின் கடி, நீர்எரிச்சல், முதலியவை போகும். சிறுதுத்தி இலையை அரைத்து 5.2 கிராம் சுத்தி செய்த சிறுகண் நாகத்திற்கு கவசம் செய்து முழப் புடம் போட நீறும். செம்பு, வெள்ளியில் பத்துக்கு ஒன்று கொடுக்க பழுக்கும். பஸ்மாக்கி உண்ண சகல நோய்களும் தீரும்.

நிலத்துத்தி
“தொடங்காசங் கட்டி தொலையவப்பு லோக
மடங்கிநீ றாகவெண்ணி னம்பொற் – குடம்போ
னலத்துத்தி பூத்தமுலை நல்லா ரமிர்தே
நிலத்துத்திப் பூண்டை நினை”   ( பதார்த்த குண விளக்கம் )
நிலத்துத்திப் பூண்டானது ஆரம்ப மூலரோகத்தையும் வித்திரிதிக் கட்டிகளையும் போக்கும். கருவங்கத்தை (காரீயத்தை) பஸ்மம் செய்யும்.

துத்தி விதை
“கையிற் காலிற்படர்ந்த கார்மேகம் போயொழியும்
மெய்யிலுறு குஷ்டம் போம் வெப்பகலுந் – துய்யதிரை
யத்திதனை யொத்தவிழி யாரணங்கே நாட்டிலுறுந்
துத்தி விதையைச் சுவை.” ( பதார்த்த குண விளக்கம் )

குணம் – துத்தி விதையினால் கைகால்களிலுண்டாகும் கரு மேகமும் , குஷ்ட ரோகமும் நீங்கும் என்க .

செய்கை – உற்சாககாரி

உபயோகிக்கும் முறை – துத்தி விதையில் சிறிது கரி நெருப்பனனில் போட்டு, அதனின்று கிளம்பும் புகையைச் சிறு மலக்கிருமிகளுள்ள குழந்தைகளின் ஆசனத்தில் தாக்கும்படி செய்யக் கிருமிகள் வெளிப்படும். ஆசனத்தின் ஊறலும் அடங்கும்.

இதன் விதையை முறைப்படி கியாழமிட்டு வடிகட்டி சிறிது கற்கண்டு கூட்டிக் கொடுக்க வெள்ளை, வெட்டை, மூலம், தந்தி மேகம் முதலியவைகள் நீங்கும். இதன் விதையை சிறிது அனலில் வெதுப்பி (இலேசாக வறுத்து) இடித்துச் சூரணம் (பொடி செய்து) செய்து கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கூட்டி தினந்தோறும், அந்தி சந்தி (காலையும் , மாலையும்) திரிகடிப் பிரமாணம் (மூன்று விரலால் எடுக்கும் அளவு) கொடுத்து வர சர்க்கரை நோயினால் உண்டான உடலில் தோல் நோய்கள், கடும் மேகங்களினால் உண்டான தோல் நோய்கள் (கருமேகம் , செம்மேகம்), பேரு வியாதியான குஷ்டம் போகும், உடலில் மது மேகம், அதீத பெரும் உடலுறவினால் ஏற்பட்ட வெப்பும் அகலும்.

மேலும் கைப்பழக்கத்தினால் உண்டான வெள்ளை மற்றும் வெட்டை, மற்றும் பல பெண்களோடு உறவு கொள்வதால் ஏற்படும் கடும் கிருமித் தொற்று, சர்க்கரை நோயினால் உண்டான உடலின் பல பாகங்கள் அழுகுவதும், குறிகளில் உண்டாகும் கடும் அரிப்பு, புண் உண்டாகுவது, கை கால்களில் புண் (காங்கரின்) உண்டாதல், கை கால்கள் அழுகுதல் போன்றவற்றை அடியோடு அகற்றும்.

இதன் கியாழத்தையாவது, விதைச் சூரணத்தையாவது அளவுக்கு மிஞ்சி அதிகமாக கொடுத்தால் மலத்தை இளகலாக போகச் செய்யும், வேறு எந்த கெடுதியும் செய்யாது.

இவ்வளவு சிறப்பு மிக்க அமுதத் தன்மை நிரம்பிய துத்தி விதையை பிரித்தெடுக்கும் காரியம் மிகக் கடினமானது. ஏனெனில் அமுதம் இருக்கும் இடத்தில்தான் விஷமும் இருக்கும் என்பதற்கேற்ப துத்தி விதையை சுற்றி உள்ள சுணைகள் உடலை கடும் பாதிப்பை உண்டாக்க வல்லது. இதன் சுணைகள் நான்கு நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை அரிப்பை உண்டாக்குவதோடு வீக்கங்களையும் உண்டாக்க வல்லது. நமது வாசகர்களுக்காக நாமும் இந்த துயரத்தை அனுபவித்தோம். முதலில் சாக்கில் போட்டு பருத்த பிரம்பால் அடிக்க வேண்டும். அப்போது சுணைகள் (சுணைகள் என்பவை சிறு கண்ணுக்குப் புலப்படாத முள் போன்றவை) பறக்கும். அது மூக்கு, வாய், தொண்டை வரை தாக்குதலை தொடுக்கும்.

தூற்றும் போது பறக்கும் சுணைகள், விதையின் மேலுள்ள தோல் உடல் முழுவதும் கடும் அரிப்பு மற்றும் ஒவ்வாமையை உண்டாக்க வல்லது.  கண்களில் கடும் வீக்கத்தையும் உண்டாக்க வல்லது. அதற்கு மாற்றாக நஞ்சு நீக்கியை உள்ளுக்கு சாப்பிட்டும், மற்றும் வெளிப் பிரயோகமாக தோல் பிரச்சனைகளை போக்கும் சிவனார் வேம்புத்தைலம் பூசி இதன் தொந்தரவுகளை போக்கிக் கொண்டோம். இதனால் பெரும் பொருட்செலவில் மிகக் குறைந்த அளவே பெறப்பட்டுள்ளது. இந்தக் காலத்தின் பின்னர் இது கிடைக்காது. மீண்டும் அடுத்த வருடம்தான் இதை சேகரிக்க இயலும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

இந்த துத்தி விதையை தற்போது தயாரிக்கும் மது மேகச் சூரணம், சிறு நீரக சீரமைப்புச் சூரணம், குடல் புண் ஆற்றி, ஈரல் நோய் நிவாரணி, தோல் நோய் நிவாரணி, மூலநோய் நிவாரணி போன்ற மருந்துகளில் இருக்கும் வரை சேர்க்கப்படும். உடன் வாங்கிப் பயனுறுங்கள் .

-மூலிகைவளம்
-vijayakumar555.blogspot.co.uk

தொகுப்பு – thamil.co.uk