சாமை – மருத்துவ குணங்கள்

சிறு தானியங்கள்-thamil.co.ukசிறுதானியங்களை இழந்தோம், பெருநோய்களுக்கு ஆளானோம்

பொதுவாக மக்கள் உணவுப் பொருளாக பயன்படுத்தி வரும் தானிய வகைகளை பெருவகை தானியம், சிறுவகைதானியம் என இரண்டாக பிரிக்கலாம்.

கம்பு சோளம், மக்காசோளம், நெல் உள்ளிட்டவை  பெருவகை தானியங்களாகும். சாமை, திணை, பனிவரகு, குதிரைவாலி, வரகு, கேழ்வரகு உள்ளிட்டவைகள் சிறுவகை தானியங்கள்.  தானிய வகைகள் அனைத்தும் சிறிய விதை கொண்ட புல் வகை இனத்தை சார்ந்தது.

கோதுமை மற்றும் தீட்டப்பட்ட அரிசியோடு ஒப்பிடுகையில், சிறுதானியங்களில் இரும்பு, மக்னீசியம், நார்ச்சத்து, பொஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம். சிறு தானியங்களின் சர்க்கரை குறியீட்டு எண் (Glycemic Index) மிகவும் குறைவு. எனவே சர்க்கரை வியாதி வராமல் தடுக்கும் வல்லமை படைத்தவை.

ராகி -பிற தானியங்களை விட 10 மடங்கு கல்சியம் அதிகம்.

கம்பு – இரும்புச்சத்து மற்றும் புரதம்.

சோளம் – புரதம் மற்றும் விட்டமின் B.

வரகு – நார்சத்து மற்றும் தாது உப்புகள்.

தினை – பொஸ்பரஸ் மற்றும் புரதம்.

சாமை – இரும்புச்சத்து விட்டமின் B.

குதிரைவாலி – நார்சத்து மற்றும் இரும்புச்சத்து.

கோதுமை – பொஸ்பரஸ் மற்றும் புரதம்.

அரிசி –  காபோவைதரேற்று மற்றும் விட்டமின் B.

சாமையின் மகத்துவம்

உற்பத்தி செய்யப்பட்ட சாமையினை  கைகுத்தல், அரவை மிஷின் மூலம் அரைத்து அரிசியாக்கலாம். கை குத்தல், அரவை மிஷின் மூலம் தயாரிக்கப்படும் சாமை அரிசியில் சத்துக்கள் அதிகம் இருக்கும். பொதுவாக அரிசிகள் கரும்பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்த சாமை அரிசியை துப்பரவாக்கி அரிசியாக்கி சமைத்து உணவாக பயன்படுத்தலாம். அப்படி துப்பரவாக்கப்பட்ட சாமையில் குறைந்த அளவுள்ள சத்துக்கள் தான் இருக்கும்.

சாமையில் அதிக புரத சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இதனால் இதனை பலர் உணவாக பயன்படுத்தி வருகின்றனர். மலை கிராம மக்களுக்கு எளிதில் கிடைக்க கூடிய உணவாகும், சாமை உணவு விரைவில் பசிக்காது. இதனை சோறு போன்றும் கஞ்சி, களி போன்றும் உணவாக உட்கொள்ளலாம். பொதுவாக கொழுப்பு சத்து குறைந்த உணவாகும். ட்ரைகிளசைரஸ் குறைவான அளவில் உள்ளது. கலங்களின் சிதைவினைக் கட்டுப்படுத்தும். விட்டமின் பி3 அதிகம் கொண்ட உணவாகும். புரோட்டின் அதிகம், நார்சத்து உள்ளிட்டவைகள் கிடைக்கிறது.

 

– ‎பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.