அரசு மரத்தின் மருத்துவ குணங்கள்

அரசமரம்மூலிகையின் பெயர் – அரசு
தாவரப் பெயர் – FICUS RELIGIOSA
தாவரக் குடும்பப் பெயர் – MORACEAE
பயன்தரும் பாகங்கள் – கொழுந்து, பட்டை, வேர், பழம் மற்றும் விதை முதலியன.

வளரியல்பு – அரசு பெரிய மரவகையைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா, பங்களாதேஸ், நேபால், பாக்கீஸ்தான், சைனாவின் தென்மேற்குப்பகுதி, வியட்னாவின் கிழக்குப்பகுதி மற்றும் இந்தோசைனா. இது சுமார் 90 அடிக்குமேல் வளரக்கூடியது. இந்த மரத்தின் அடிபாகம் சுற்றளவு சுமார் 9 அடி வரை பெருக்கும். இதன் ஆரம்ப ஆண்டு 288 B.C க்கு மேல் இருக்கும். இலைகள் நீழ் வட்டமாகவும் கூர்நுனியாக இருக்கும். ஊர் ஏரிகள், குளக்கரைகள், ஆற்றோரங்கள் ஆகிய இடங்களில் காணப்படும். இது ஜைனம், புத்த, இந்து மதங்கள் புனித மரமாகக் கருதுகிறார்கள். புத்தர் ஞானம் அடைந்தது இந்த மரத்தடியில் தான். கணவம், போதிமரம் என்றும் சொல்வர்கள். இந்த மரத்தின் காற்று தூய்மையான ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. அதனால் கல்பக விருட்சமாகக் கருதப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் தெய்வ சிலை வைத்து வழிபடுவதன் நோக்கம் அறியலாம்.

இதன் பூக்கள் சிறிதாகச் சிவப்பாக இருக்கும். பிப்ரவரி மாதங்களில் பூக்கும். மே, ஜூன் மாதங்களில் பழங்கள் விடும். பழங்கள் சிறிதாக இருக்கும் பறவைகளுக்கு நல்ல உணவு. விதைகள் சிறிதாக அதிகமாகத் தென்படும். பறவைகள் இதன் பழத்தைச் சாப்பிட்டு எச்சத்தை இடும் இடங்களில் செடிகள் உற்பத்தியாகும் முக்கியமாக கட்டிடங்களின் இடுக்குகளில் செடிகள் பெருகும். தெய்வ நம்பிகையுள்ளவர்கள் இந்த மரத்துடன் வேப்பமரத்தையும் சேர்த்து வளர்ப்பார்கள். பல கிராமங்களில் இந்த அரச மரத்தைச் சுற்றி மேடையமைத்து ஊரில் உள்ள வயதானவர்கள் அரட்டையடித்துப் பொழுது போக்குவதும் அங்குதான். உதாரணம் கெம்பனூர் போன்று. இந்த மரத்தினடியில் இருந்து காற்றை அனுபவித்தால் இருதயநோய் வராது என்பது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. விதைகள் மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள்
அரசமரத்தின் இலைக் காற்று குளிர்ச்சியை உண்டாக்கி வெப்பத்தைப் போக்கி கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. ஆண்மை பெண்மையைக் காப்பாற்றும். வேர்பட்டை, மரப்பட்டை கிருமிகளை அழித்து புண்ணாற்றும், பழவிதை குடல் புண்ணாற்றும், மலச்சிக்கலைப் போக்கும், தாது பெருக்கி விந்தினைக் கட்டும். பழம் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும், வேர் அல்சரைக் குணப்படுத்தும், தோல்வியாதிகளைக் குணப்படுத்தும், இருதயத்தைக் குணமாக்கும்.

அரச மரத்துக் கொழுந்து இலையைக் கைப்பிடி எடுத்து அரைத்து, நெல்லிக்காயளவு எருமைத் தயிருடன் சேர்த்து அதிகாலையில் சாப்பிட்டு வர, தொண்டை வறட்சி, தாகம் நீங்கும். குரல் வளத்தைத் தரும். சீதபேதியைக் கட்டுப்படுத்தும்.

“அரசம் வேர் மேல் விரணமாற்றும். அவ்வித்து
வெருவரும் சுக்கில நோய் வீரட்டும்-குரல்வளை
தாகம் ஒழிக்கும், கொழுந்து தாது தரும். வெப்பகற்றும்,
வேக முத்தோடம் போக்குமென்”  – கும்பமுனி.

அரச மர வேரின் பொடி தொண்டைப் புண்ணை ஆற்றும். விதை சுக்கில குறைபாட்டை நீக்கி மலட்டை அகற்றி கருத்தரிக்க வைக்கும், கொழுந்து கசாயம் தொண்டைப் புண்ணை ஆற்றும், தாகம் தணிக்கும். கொழுந்து அரைத்துச் சாப்பிட நீர்த்துப் போன விந்து கெட்டியாகும், தாது ஊறும், உடல் வெப்பம் தணியும். வாத, பித்த, சிலேத்தும நோய்களைப் போக்கும்.

அரச தளிரை அரைத்துப் பூசினால் கால்வெடிப்பு குணமாகும். இதன் பாலைத் தடவினாலும் குணமாகும்.

அரசு மரப்பட்டையை உலர்த்தி எரித்த சாம்பலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர சொறி, சிரங்கு குணமாகும், பிற புண் ஆறும். இப்பொடியை சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைத்தால் தீங்கு செய்யும் நுண்ணுயிர்க் கிருமிகள் வீட்டில் தங்கா.

வேர் பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி பால் சர்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச் சூடு, தினவு, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.

அரசு பட்டைத் தூள் 2 சிட்டிகை வெந்தீரில் கொதிக்க வைத்து ஆற விட்டு வடித்துக் கொடுக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும்.

அரச மரத்திலிருந்து விழுந்த பழத்தை எடுத்து சுத்தப்படுத்தி நன்கு காயவைத்துப் பொடியாகச் செய்து சூரணமாக வைத்துக் கொள்ள வேண்டும். 5-10 கிராம் இப்பொடியை நாளும் காலை மாலை பாலில் கலந்து சர்கரையும் சேர்த்து காப்பி போல 48-96 நாள் சாப்பிட வேண்டும். ஆண் விந்து கட்டும், ஊறும். ஆண்மை பெருகும். ஆண் மலடு நீங்கும்.

அரசங் கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க சுரம், தாகம் ஆகியவை தீரும்.

உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாள்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும்.

அரசு இலைக் கொழுந்து ஒரு பிடி எடுத்து மண் சட்டியில் போட்டு அரை லிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காசாயமிட்டுச் சாப்பிடலாம். இலைக் கொழுந்தை அரைத்து நெல்லியளவு பாலில் கலந்து சாப்பிடலாம். 48 நாள் சாப்பிட பெண்மலடு நீங்கி கருத்தரிக்கும். புளி உணவைக் குறைக்க வேண்டும்.

-மூலிகைவளம்

 

அரச மரம்-thamil.co.ukஅன்பர்களுக்கு வணக்கம், ஒரு காலத்தில் நம் தமிழ் நாட்டின் அடையாளமாக இருந்ததே அரச மரங்களும் ஆல மரங்களும் தான், அதிலும் அரச மரத்திற்குண்டான மருத்துவ பண்புகளை தெரிந்து கொண்டால் நீங்கள் வாயடைத்து போவீர்கள்.

அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது.

இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் பாரத பூமிதான். நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல்பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர்.

இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

* அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும். முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

* துளிர் இலையை அரைத்துப் பற்றிடப் புண்கள் ஆறும்.

* அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

* அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.

* அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் வெட்கை குறையும். வியர்வை நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாது. அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.

வேர்ப்பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி யாகக் காய்ச்சிப் பால் சர்க்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச் சூடு, சொறி, தினவு, நீர்எரிச்சல், சிரங்கு ஆகியவை தீரும்.

மரப்பட்டைத் தூள் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து புண் சொறிகளுக்குப் பூசக் குணமாகும்.

* அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.

* பட்டைத் தூள் 2 சிட்டிகை நீரில் ஊற வைத்து வடிகட்டிக் கொடுக்க விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் தீரும்.

* வெள்ளைப்படுதல் நோய் கொண்ட பெண்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறையும்.

* அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

* உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை, மாலை 20 நாள்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும்.

* அரச மரத்தின் பாலை எடுத்து பாத வெடிப்புகள் உள்ள பகுதிகளில் பூசிவந்தால் பித்த வெடிப்புகள் விரைவில் மறையும்.

* அரசு விதைத் தூள் உயிர் அணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டை நீக்கும்.

* அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால், மன அழுத்தம், மன எரிச்சல், அதீத கோபம், தீரா சிந்தனை போன்றவை தீரும்.

அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று. எனவே அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

– கார்த்திகேயன் மதன்