பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்!

பைரவர்-thamil.co.ukஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் – அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்தக் கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன்பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். இவருக்குத் தகுந்த பூசைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவிதமான பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

பைரவர் வழிபாடு ஏன்?

பைரவர் வழிபாடு கைமேற் பலன்

இது தமிழகத்தில் வழங்கி வரும் பைரவர் வழிபாடு குறித்த ஆன்மீக மொழியாகும். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். அதனால் தான் பைரவர் வழிபாட்டின் பலனைக் குறிக்க இந்தப் பழமொழி வழங்கப்பட்டது. நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். அதுவே அவர்களின் நல்ல பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும் அடைகிறார்கள். நன்மைகள் கிடைத்தால் சரி, ஆனால், வரும் துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் பூசை செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பைரவர் பூசை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. நமது ஜாதகத்தை தகுந்த சோதிடர்களிடத்தில் காண்பித்து நிலவும் கிரக நிலைகளை ஆராய்ந்து, எந்தக் கிரகத்தால் தோஷம் உள்ளதோ, அல்லது எந்தக் கிரகம் பலவீனமாக உள்ளதோ, அது பலமடைய எந்தக் கிரக திசாபுத்தி நடப்பில் உள்ளதோ அதற்குரிய பைரவரை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவக்கிரகங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக சோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன.நீங்கள் நல்ல பயனை அடைய, கிரகங்களின் பிராணனாக உள்ள பைரவரின் காயத்ரீயையும், அந்த பைரவரின் உபசக்தியின் காயத்ரீயையும் சேர்த்து துதித்து வந்தால் உங்கள் துன்பங்கள் யாவும் ஓடி ஒளியும். இன்பங்கள் எல்லாம் தேடி வரும்.

நவக்கிரக பைரவர்களும் உபசக்திகளும்

நவக்கிரகங்கள் – பிராண பைரவர் – பைரவரின் உபசக்தி

1. சூரியன் – சுவர்ணாகர்ஷணபைரவர் – பைரவி
2. சந்திரன் – கபால பைரவர் – இந்திராணி
3. செவ்வாய் – சண்ட பைரவர் – கௌமாரி
4. புதன் – உன்மத்த பைரவர் – வராஹி
5. குரு – அசிதாங்க பைரவர் – பிராமஹி
6. சுக்கிரன் – ருரு பைரவர் – மகேஸ்வரி
7. சனி – குரோதன பைரவர் – வைஷ்ணவி
8. ராகு – சம்ஹார பைரவர் – சண்டிகை
9. கேது – பீஷண பைரவர் – சாமுண்டி

பைரவரின் சிறப்பு வடிவங்கள்: பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன. உடற்பற்றை நீக்கியபடியால் பைரவர் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கின்றார். பைரவர் காவல் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாயாவது பைரவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடப்புறம் நேராகவும் நிற்கின்றது. நகரத்தார் கோயில்களில் காணப்படும் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. அஷ்ட பைரவ வடிவங்களில் இந்த நாய் வாகனம் வேறு வாகனங்களாகக் காட்சியளிக்கிறது.

பைரவர் – பைரவரின் சக்தி – வாகனம்

1. அசிதாங்க பைரவர் – பிராமி – அன்னம்
2. ருரு பைரவர் – மகேஸ்வரி – ரிஷபம்
3. சண்ட பைரவர் – கௌமாரி – மயில்
4. குரோதன பைரவர் – வைஷ்ணவி – கருடன்
5. உன்மத்த பைரவர் – வராகி – குதிரை
6. கபால பைரவர் – இந்திராணி – யானை
7. பீஷண பைரவர் – சாமுண்டி – சிம்மம் (மனித பிரேதமும் உண்டு)
8. சம்ஹார பைரவர் – சண்டிகை (இலக்குமியுடன் சேர்த்து சப்த மாதர்கள்) – நாய்

இவ்வாறு விதவிதமான வாகனங்களில் காணப்படும் பைரவர் ஒரு சில ஆலயங்களில் எவ்வித வாகனமும் இன்றி தனியராய் காட்சியளிக்கிறார். குறிப்பாக திருவான்மியூர், பேரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் உள்ள பைரவ வடிவங்களில் நாய் வாகனம் காணப்படவில்லை. எண்ணிலாக் கரங்களும், எண்ணிலாத் தலைகளும், எண்ணிலா கால்களும் கொண்ட காட்சிக்கு மிக மிக அரிதான வஜ்ர பைரவரின் திருவடிவம் ஒன்று புதுச்சேரி பிரஞ்சிந்திய பண்பாட்டுக் கழகத்தில் காணப்படுகிறது. மூன்று கால்களைக் கொண்ட அபூர்வ பைரவர் சிருங்கேரியில் காணப்படுகிறார். சூரக்குடியில் பைரவர் கதாயுதத்துடனும், திருவாரூரில் பைரவர் கையில் கட்டுவாங்கத்தையும் ஏந்தி அபூர்வ பைரவராகக் காட்சியளிக்கிறார். திருப்பத்தூருக்கு அருகில் பெரிச்சி கோயிலில் உள்ள பைரவத் திருவடிவம் எட்டுத் திருக்கரங்கள் கொண்டதாய் ஒரு கரத்தில் அறுபட்ட நிலையில் தலையொன்றை முடிக்கற்றையுடன் பிடித்தவண்ணம் காணப்படுகிறது. இன்னொரு வகையில் பிணத்தைக் குத்தி ஏந்திய நிலையில் கங்களாத்தண்டு உள்ளது. இவரருகே உள்ள நாய் இரண்டாம் இடக்கையில் தொங்கும் தலையின் தசைப்பகுதியை சவைத்துக் கொண்டிருக்கிறது.

பைரவர் வகைகள்: சிற்ப நூல்களும் சிவாகமங்களும் பைரவ மூர்த்தத்தை விவரிக்கும்போது அறுபத்து நான்கு பைரவர்களை அறிமுகப்படுத்துகின்றன. இன்னும் சில சிற்ப நூல்களில் இடை நூற்றியெட்டு வடிவங்களாகவும் குறிக்கப்படுகின்றன. இந்த எல்லா வடிவங்களிலும் சிறப்பான எட்டு வடிவங்கள் அஷ்ட பைரவர் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக பைரவர் நீல மேனி கொண்டவராய் சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை, மழு முதலிய தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஷ்ட பைரவர் வடிவங்களாகக் கூறப்படும் பொழுது அவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவைகள் மாறுபட்டுக் காணப்படும்.

அறுபத்து நான்குவித பைரவ மூர்த்திகள்: ஒரே பைரவர் எட்டு வகை பணிகளை எண் திசைகளிலும் ஏற்கும்போது அவர் அஷ்ட பைரவர்களாகத் தோற்றம் தருகின்றனர் எனவும், அவரே அறுபத்து நான்கு காலங்களிலும் அறுபத்து நான்கு பணிகளை ஏற்றுச் செயல்படும்போது அறுபத்து நான்கு வடிவங்களாகத் தோற்றமளிக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

1. நீலகண்ட பைரவர்
3. மார்த்தாண்ட பைரவர்
5. ஸ்வஸ்சந்த பைரவர்
7. கேர பைரவர்
9. விஸ்வரூப பைரவர்
11. பரம பைரவர்
13. ஸ்தாபாத்ர பைரவர்
15. உன்மத்த பைரவர்
17. மனோவேக பைரவர்
19. விருபாக்ஷ பைரவர்
21. நிர்பய பைரவர்
23. ப்ரேக்ஷத பைரவர்
25. கதாதர பைரவர்
27. மகாகால பைரவர்
29. ப்ரளய பைரவர்
31. பூமிகர்ப்ப பைரவர்
33. ஸம்ஹார பைரவர்
35. ருண்டமாலா பைரவர்
37. பிங்களேஷ்ண பைரவர்
39. தாரபாலன பைரவர்
41. குல பைரவர்
43. ருத்ர பைரவர்
45. விஷ்ணு பைரவர்
47. கபால பைரவர்
49. த்ரிநேத்ர பைரவர்
51. வரத பைரவர்
53. சசிவாகன பைரவர்
55. ஸர்வவேத பைரவர்
57. ஸர்வபூத பைரவர்
59. கோரநாத பைரவர்
61. புத்திமுக்தி பயப்த பைரவர்
63. மகாரௌத்ர பைரவர்
2. விசாலாக்ஷ பைரவர்
4. முண்டனப்பிரபு பைரவர்
6. அதிசந்துஷ்ட பைரவர்
8. ஸம்ஹார பைரவர்
10. நானாரூப பைரவர்
12. தண்டகர்ண பைரவர்
14. சீரீட பைரவர்
16. மேகநாத பைரவர்
18. க்ஷத்ர பாலக பைரவர்
20. கராள பைரவர்
22. ஆகர்ஷண பைரவர்
24. லோகபால பைரவர்
26. வஞ்ரஹஸ்த பைரவர்
28. பிரகண்ட பைரவர்
30. அந்தக பைரவர்
32. பீஷ்ண பைரவர்
34. குலபால பைரவர்
36. ரத்தாங்க பைரவர்
38. அப்ரரூப பைரவர்
40. ப்ரஜா பாலன பைரவர்
42. மந்திர நாயக பைரவர்
44. பிதாமஹ பைரவர்
46. வடுகநாத பைரவர்
48. பூதவேதாள பைரவர்
50. திரிபுராந்தக பைரவர்
52. பர்வத வாகன பைரவர்
54. கபால பூஷண பைரவர்
56. ஈசான பைரவர்
58. ஸர்வபூத பைரவர்
60. பயங்க பைரவர்
62. காலாக்னி பைரவர்
64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர்.

-சுடுகாட்டு சித்தன்