தொப்பையை குறைக்கும் கொள்ளு

கொள்ளுப் பருப்பு-thamil.co.uk

கொள்ளு என்ற சத்தான சிறுதானியத்தை குதிரைக்கான உணவாக‌ மட்டுமே ஆக்கிவிட்டோம். உடலை வளர்க்கும் முக்கிய அமினோ அமிலங்களை இயல்பாக உள்ளடக்கிய கொள்ளு போன்ற தானியங்கள், நமக்கு உணவாவது மட்டுமின்றி, நம்முடைய நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்க்கும்.

குறைந்தளவு கிளைசீமிக் தன்மையும் (low glycemic index), நார்ச் சத்துக்களும், நம்முடைய உடலுக்கு தினமும் தேவையான இரும்புச் சத்தும், புரதச் சத்தும், அழகும் ஆரோக்கியமும் அளிக்கும் அருமருந்தாகிய natural polyphenols கொள்ளு உள்ளது.

மருத்துவ குணம்

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள். கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு – ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப்பருப்பை இறைத்து விடுவார்கள். மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள். இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்துப் பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள். அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.

சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். அதை விட இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து (தண்ணீர்க்குப் பதில்) அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். (நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு கரண்டி கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்) இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம், கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.

கொள்ளு கஞ்சி
கொள்ளு மிகவும் சத்தானதும், மருத்துவக்குணம் கொண்டதாகும். வாரம் ஒருமுறை கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கொள்ளு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கக் கூடியது. எல்லா வயதினரும் இக்கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
கொள்ளு, அரிசி – 200 கிராம், சின்னவெங்காயம் -100 கிராம், துருவிய தேங்காய் – ஒரு கரண்டி, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், பச்சைமிளகாய் – 2, கருவேப்பிலை தேவைக்கேற்ப‌

செய்முறை
கொள்ளை லேசாக வறுக்கவும், அதை மிக்சியில் ஒரு சுற்று உடைத்து எடுக்கவும். பின்னர் அதைச் சுத்தம் செய்து அரிசியுடன் சேர்த்து கழுவிவிடவும். குக்கரில் போட்டு ஐந்து மடங்கு நீர் விட்டு அத்துடன், சின்ன வெங்காயத்தை உரித்து சின்ன துண்டுகளாக நறுக்கிப் போட்டு துருவிய தேங்காயை சேர்த்து, தேவையான அளவு, உப்புச் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் விட்டு, ஒரு கரண்டி சீரகம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கியவுடன் கொள்ளுக் கஞ்சியில் சேர்த்து நன்கு கலக்கி காலை டிபனாக சாப்பிட சுவையாக இருக்கும். வாரம் ஒரு முறை இவ்வாறு சாப்பிடுவது நல்லது.

கொள்ளு தொக்கு
தேவையான பொருட்கள்
கொள்ளு – 100 கிராம், சின்ன வெங்காயம் – 4, பச்சைமிளகாய் – 2, சமையல் எண்ணெய்- ஒரு கரண்டி, கடுகு, உளுத்தம் பருப்பு – அரை கரண்டி, கருவேப்பிலை ஒரு நெட்டு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை
கொள்ளை முதல் நாள் காலையில் நீரில் ஊறவைத்து, அன்று மாலை கழுவி சுத்தம் செய்து நீர் இல்லாமல் வடித்து ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால் மறுநாள் காலையில் முளைவிட்டிருக்கும் அந்தக் கொள்ளை நீர்விட்டு நன்கு வேகவைத்து மசித்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலைப் போட்டு நன்கு வதக்கி மசித்த தொக்குவில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி சாதத்தில் போட்டு, சிறிதளவு நல்ல எண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கொள்ளு துவையல்
கொள்ளு – 100 கிராம், மிளகாய் வத்தல் – 4, புளி – நெல்லிக்காய் அளவு, பூண்டு- 2 பல், தேவையான அளவு உப்பு.
கொள்ளை நன்றாக வறுத்து அத்துடன் மிளகாய் வத்தல், புளி, பூண்டு, உப்புச் சேர்த்து நன்கு அரைத்து துவையலாக சாப்பிடலாம்.

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது

கொள்ளுப் பொடி
உடலில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதையைக் குறைக்க, மூட்டுவலி போன்ற பல பிரச்சினைகளுக்கு கொள்ளு மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் சேர்ப்பது, உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள். இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

தேவையான பொருள்கள்:
கொள்ளு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 3
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 4 பல் (விரும்பினால்)
பெருங்காயம் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
துவரம் பருப்பு, கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும். நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்துவைக்கவும். பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் (மணம் நன்றாக இருக்கும்) முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.

-aadimaruthuvam.blogspot.co.uk
– பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்