எலுமிச்சை – தேசிக்காய்

மூலிகையின் பெயர் – எலுமிச்சை
தாவரப்பெயர் – CITRUS MEDICA
தாவரக்குடும்பம் – RUTACEAE
பயன்தரும் பாகங்கள் – இலை மற்றும் பழம்

CITRUS MEDICAவளரியல்பு – எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. இமையமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை கடந்தது. எலுமிச்சை முள்ளுள்ள சிறு மர வகுப்பைச் சார்ந்தது. சுமார் 15 அடிவரை வளரும். தமிழகம் முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. செம்மண்ணில் நன்கு வளரும்.

இதில் பலவகையுண்டு நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை, மலை எலுமிச்சை எனப் பலவகையுண்டு. எல்லாவற்றிக்கும் குணம் ஒன்று தான். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். பூ விட்டுக் காய்கள் உருண்டை மற்றும் நீள்உருளை வடிவத்திலும் இருக்கும். முற்றினால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எலுமிச்சையை அரச கனி என்பர். இதன் பயன்பாடு கருதியும் மஞ்சள் நிற மங்களம் கருதியும் இப்பெயர் வைத்தனர். கடவுளுக்கு மிக உகந்தது. வழிபாட்டில் வரவேற்பிலும் முதன்மை வகிப்பது. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

எலுமிச்சம் பழம் lemon மஞ்சள் நிறமானது, பெரியது. தேசிக்காய்  lime சிறியது பச்சை நிறமானது. இரண்டினதும் மருத்துவப்பயன்கள் ஒரே மாதிரியானவை.

lime treeமருத்துவப்பயன்கள்

பொதுகுணமாக பித்தம் போக்கும், சித்தம் ஆக்கும், அறிவை வளர்க்கும், மந்திரம் செய்ய பில்லி, சூனியம் எடுக்க பேய் விரட்ட, இறையருள் கூட்ட ஏற்றது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம், ஆகியவற்றைக் குணமாக்கும். பைத்தியம் தெளிவிக்கும். சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும். பிற மருந்துகள் கெடமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக் கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும். விந்தை நீர்த்துப்கோக வைக்கும். இதன் சாறு தேனீருடன் சேர்த்தால் தனி சுவையுண்டு.

பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் (6 மாதம்) தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.

பழச்சாற்றை கண், காதுவலிக்கு 2 துளிகள் விட்டுவரக் குணமாகும்.

பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்த மயக்கம், குமட்டல், பித்தவாந்தி, நாவில் சுவையின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

நகச்சுற்றுக் விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்க்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் ஒரு கிராம் அளவு உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும். வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.

பிற கேடு தரும் மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்கு 30 மி.லி. சாறு 20 நாள் காலையில் கொடுக்க குணமடைவர்.

இதன் சாறு 30 மி.லி. இந்துப்பு-15 கிராம், சீரகம் 5 கிராம் சேர்த்து நீரில் கலந்து 20 நாள் கொடுக்க பித்த நோய், வயிற்றுக்கோளாறு, பக்க சூதக வாதம், கப நோய் குணமாகும்.

இதன் சாற்றை வாயிலிட்டுச் சுவைக்க பித்த மயக்கம், குமட்டல், பித்த வாந்தி, சூடு குணமாகும்.

பற்பம் என்பது சுண்ணாம்பு சத்துடையதாம். எலும்பு, சுண்ணாம்பு இதன் சாற்றில் கரையும், சங்கு, பவளம், முத்து ஆகியன இச்சாற்றில் பற்பமாகும்.

lime lemonஇலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும்.

படை, கருமையாகத் தடிப்பாகப் படர்தல், இச்சாற்றில் நிலாவரை வேரை இழைத்துப் பூசவேண்டும். 5-6 நாள் பூச குணமாகும்.

வெறும் வயிற்றில் காலை 3-4 மண்டலம் இச்சாற்றைத் தேனுடன் அருந்த கற்பகுணம் உண்டு. மூப்பு நீங்கும், நரை, திரை படராது. ஆயுள் பெருகும். உடல் ஊட்டம் பெறும். ஆனால் புளி, காரம், புலால், புகை ஆகாது.

எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். நாளும் தவராது சாப்பிட்டால் உடல் எலும்புச் சத்தை இழந்து விடும். விந்து நீர்த்து விடும். தாது நட்டம் எற்படும்.

இப்பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் சென்று குளிக்க வேண்டும். சீரகத்தை இச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல் மயக்கம் தீரும்.

குடற்புண், காச்சல், டைப்பாய்டு சுரம் எனப்படும். இதற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் பாலைக் கலந்தால் அது திரிந்து நீர்த்து விடும். இதனை வடிகட்டிக் கொடுக்கலாம். பிற மருந்து, ஊசி போட்டாலும் இதனை துணை மருந்தாகக் கொடுக்கலாம்.

-மூலிகைவளம்

 

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை

29-lemon-30நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது. புளிப்பு சுவையுள்ளவை ஜீரணத்தை தூண்டி உணவை நன்கு செரிக்க செய்யும். உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மையும், புளிப்பு சுவைக்கு உண்டு. எலுமிச்சை புளிப்பு சுவையுடையதாக இருந்தாலும், இதில் காரத்தன்மையும் இருக்கிறது. அதனால் இரத்தத்தை தூய்மை செய்யும் சிறப்பு இதில் இருக்கிறது.

எலுமிச்சை பழத்தில் உள்ள “சிட்ரிக் அமிலம்” நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாக இருப்பதால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளுக்கு நல்ல மருந்தாகிறது. எலுமிச்சை சாறுக்கு பித்தநீரை சுரக்கும் தன்மை உண்டு. அதனால் காமாலை நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுகிறது.

இரத்தப் போக்கை தடுத்து நிறுத்தும் சக்தி எலுமிச்சை சாறுக்கு உள்ளதால் மூக்கில் இரத்தம் வடிதல், மூலநோயில் உண்டாகும் இரத்தக் கசிவு போன்ற நிலைகளில் இது பலனளிக்கிறது.

உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம், நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும். மலை ஏற்றம் செல்பவர்கள், எலுமிச்சம் சாற்றை நீரில் கலந்து குடித்தால் ஒட்சிசன் பற்றாக்குறையால் ஏற்படும், களைப்பு நீங்கும்.

இது இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக இரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும். அதனால் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களும், மன பதட்டம் கொண்டவர்களும் எலுமிச்சை சாறில் நீர் கலந்து பருகலாம்.

எலுமிச்சை கழிவுகளை வெளியேற்றும் தன்மை வாய்ந்ததால் முக பருவால் துன்பப்படும் இளம் பருவத்தினர், ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 2 சிட்டிகை மிளகு தூள், 2 தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும். இதனால் ரத்தத்தில் காரத் தன்மை அதிகரிக்கும். அதை தொடர்ந்து கழிவுகள் வெளியேறி, ரத்த ஓட்டம் சீர்படும். முகப்பரு போன்றவைகளும் மறையும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச்சிக்கல் நீங்கும். உடல் புத்துணர்ச்சி பெறும்.

சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுதூள் அல்லது பச்சை மிளகாய் கலந்து சாலட் ஆக சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த சாலட்டை நீரிழிவு நோயாளிகள் தினமும் 1 கப் அளவிற்கு சாப்பிட்டு வருவது உடலுக்கு மிக நல்லது.

நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுப்பவர்கள் பருகும் நீரில், 1 கப்புக்கு 1 தேக்கரண்டி என்ற அளவில் எலுமிச்சைசாறு கலந்து அடிக்கடி குடித்து வந்தால் இரத்தத்தின் காரத்தன்மை அதிகரித்து நோய் பாதிப்பு விரைவில் சீராகும். உடலுக்கு புத்துணர்ச்சியும் மனதிற்கு தெளிவும் கிடைக்கும்.

கோடை காலத்தில் ஏற்படும் வியர்க்குரு, சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்களிலிருந்து விடுபட எலுமிச்சை சாற்றை உடலில் தேய்த்து சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்றிருந்துவிட்டு பின்பு குளிக்கவேண்டும். கோடை காலத்தில் உடல் புத்துணர்ச்சி பெற குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, குளிக்க வேண்டும்.

எலுமிச்சையை மழை, கோடை, பனி போன்ற எல்லா காலங்களிலும் உபயோகிக்கலாம். எலுமிச்சை சாறை காய்கறிகளில் கலந்து சாலட் ஆக செய்யும் பொழுது, அந்த காய்கறிகளின் சத்து அதிகரிக்கிறது

வாதநோய்
வாதநோயினால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு டம்ளர் வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை சரிசமமாக நறுக்கி, ஒரு பகுதியின் சாற்றை பிழிந்து, ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனில் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் தொடர்ந்து அருந்தினால் வாத நோய் படிப்படியாக தணியும்.

இருமலுக்கு இதம்
இருமல் ஏற்பட்டு சளியை வெளியேற்றி வருபவர்களுக்கு எலுமிச்சம் பழம் உடனடி பலன் அளிக்கிறது. கோழி முட்டையின் வெள்ளை ஓட்டை சுத்தம் செய்து இரண்டரை கிராம் உள்ள ஓட்டை அம்மியில் வைத்து எலுமிச்சை சாறு விட்டு மைபோல் அரைக்க வேண்டும். நெல்லிக்காய் பரிமாணம் எடுத்து தேக்கரண்டியளவு இஞ்சி சாற்றில் குழைத்து காலை, மாலை ஒரு வாரம் கொடுக்க சளி, இருமல் பூரணமாக குணமடையும்.

நாக்குப்புண்
உடலில் உஷ்ணம் அதிகரிப்பால் பல் ஈறுகள் வெந்து புண்கள் ஏற்படும். இதனால் பல்வலி ஏற்பட்டு பற்கள் ஆட்டம் காணும். நாவில் புண் ஏற்பட்டு, வாய் துர்நாற்றமும் வீசும். இதற்கு ஒரு டம்ளர் வெந்நீரில் பாதியளவு எலுமிச்சை சாற்றை கலந்து துணியில் வடிகட்டி சூட்டுடன் வாயை கொப்பளிக்க வேண்டும். காலை, மாலை இருவேளையாக 3 வேளை இவ்வாறு கொப்பளித்தால் ஈர்ப்புண், நாக்குப் புண் குணமாகும்.

சுகபேதியை நிறுத்த
சாப்பிட்டவுடன் சிலருக்கு அளவு மீறி பேதியாகும்.இதனால் களைப்பு ஏற்படும். பார்வை கிறுகிறுத்து உடல் உஷ்ணம் தணியும். இதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து உடனே உட்கொள்ள வயிற்றுபோக்கு நிற்கும். பின்னர் கஞ்சிபோன்ற லேசான ஆகாரம் அளிக்க வேண்டும்.

கருப்பு நிறம் மாற
சிலரது உடல் கருநிறமாக இருக்கும். இவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சம் சாற்றை பிழிந்து சிறிதளவு உப்பு சேர்த்து காலையில் மட்டும் ஆகாரத்திற்கு பின்னர் 40 நாள் சாப்பிட்டு வந்தால் உடல் நிறம் சற்று வெளுக்கும்.

வயிற்று கடுப்பிற்கு
அடிக்கடி வயிற்று கடுப்பு ஏற்படுபவர்கள் ஒரு டம்ளர் இளநீரில் எலுமிச்சம் பழத்தின் ஒரு பகுதியை பிழிந்து நன்றாக கலந்து காலையில் மட்டும் 3 நாட்கள் சாப்பிட சுகம் ஏற்படும்.

கர்ப்பவதிகளின் இரத்தபேதி சரியாக
சில கர்ப்பவதிகளுக்கு ரத்தபேதி ஏற்பட்டு சதா ரத்தம் வெளியேறும். இது தொடர்ந்தால் உடலில் ரத்தம் குறைந்து ஆபத்தை உண்டு பண்ணும். இதற்கு அரை டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறும், ஒரு தேக்கரண்டியளவு சிற்றாமணக்கு எண்ணெயும், ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கி காலையில் மட்டும் 5 நாட்கள் தர குணமாகும்.

அஜீரணம் பித்த கிறுகிறுப்பு
அஜீரணம், பித்த கிறுகிறுப்பு, வாயுத்தொல்லை, புளியேப்பம் போன்றவையால் பாதிப்பு ஏற்படும்போது இஞ்சி சொரசம் அருமருந்தாகும். மேற்கட்ட பாதிப்புகள் ஏற்படும் போது இரண்டரை கிராம் முதல் 5 கிராம் வரை காலை, மாலை இருவேளை சாப்பிட குணமாகும்.

வயிற்றுவலி
அதிக உஷ்ணம், அஜீரணம், வாயு தொந்தரவு காரணமாக 3 வகைகளில் வயிற்று வலி ஏற்படும். குடல்புண் உள்ளவர்களுக்கு சாப்பிட்ட உடன் வயிற்றில் எரிச்சலும், வலியும் உண்டாகும். இதுபோன்ற வயிற்று வலிக்கு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு எலுமிச்சை சாற்றை பிழிந்து விதைகளை எடுத்து விட்டு ஒரு சிட்டிகை ஆப்பச்சோடாவை அதில் போட்டுக் கலக்கினால் அது சாதம் பொங்குவது போல் நுரையுடன் பொங்கும். அந்த சமயம் அதை அப்படியே உட்கொண்டால், எந்தவிதமான வயிற்று வலியானாலும் கால்மணி நேரத்தில் சரியாகும்.

பல்வலி
பல்வலி ஏற்படும்போது உப்பைத்தூள் செய்து எலுமிச்சை சாறு கலந்து பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும்.

சொறி சிரங்கு
இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன் இதே அளவு தேங்காய் எண்ணெய் கலந்து குழப்பி, சொறி சிரங்கு உள்ள இடத்தை கிருமி நாசினியால் சுத்தம் செய்து இந்த கலவையை பூசி வர குணமாகும்.

பேன்பொடுகு
ஒரு டம்ளர் பாசிப்பயிறை எலுமிச்சை சாறு விட்டு மைபோல அரைத்து எடுத்து மூக்குப்பொடித் தூள் நாலில் ஒரு பங்கு சேர்த்து குழப்பி தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து தலைமுழுக வேண்டும். இவ்வாறு 3 நாள் செய்ய பேன் பொடுகு ஒழிந்து கூந்தல் சுத்தமாகும்.

ஒருபக்க தலைவலி
ஒரு பக்க தலைவலி, இருபக்க தலைவலி ஏற்படுகிறவர்கள், எலுமிச்சை தோலை மட்டும் மைபோல அரைத்து ஒரு ரூபாய் அகலத்திற்கு பொட்டில் கனமாக பற்றுப்போட்டால் 10 நிமிடத்தில் தலைவலி நிற்கும்.

தேள், தேனீ கொட்டினால்
தேள், தேனீ, குளவி கொட்டினால் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை கடுப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் நன்றாக அழுத்தி 10 நிமிடம் தேய்த்தால் விஷம் இறங்கும். கடுப்பு நிற்கும்.

பித்தமயக்கம் ஏற்பட்டால்
பித்தம் அதிகரித்தால் காலையில் ஒருவித மயக்கம் உண்டாகும். தலை சுற்றும். இதற்கு ஒரு எலுமிச்சம் பழத்தின் பாதிபகுதியை பிழிந்து அந்த சாற்றுடன் தேக்கரண்டி சீரகம், சிறிதளவு உப்பு சேர்த்து மைபோல அரைத்து வாயில் விழுங்கி வெந்நீர் குடிக்க வேண்டும். ஏழு நாட்கள் சாப்பிட்டால் பித்தம் சம்மந்தமான சகல நோய்களும் குணமாகும்.

பித்தவாந்தி நிறுத்த
பித்தம் அதிகரிப்பால் சிலருக்கு காலையில் பச்சை நிறம் கலந்த பித்தநீர் வாந்தியாகும். இதனை நிறுத்த ஒருசட்டியை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தை போட்டு பொன் வறுவலாக வறுத்து சிவந்து வரும் போது ஒரு தேக்கரண்டியளவு சுத்தமான தேனை விட வேண்டும். பொங்கும் போது ஒரு எலுமிச்சம் பழத்தின் பாதி சாற்றை விட்டு உடனே டம்ளர் அளவு தண்ணீரை விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வடிகட்டி காலை வேளையில் மட்டும் சூட்டுடன் அருந்திட வேண்டும். இவ்வாறு 3 நாட்கள் சாப்பிட பித்த வாந்தி நிற்கும்.

சருமம் மிருதுவாக
தேகம் வறட்சி காரணமாக சுரசுரப்பாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் பூசி வைத்திருந்து குளித்து வந்தால் தோல் மிருதுவாகும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்…!

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது…
எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது.

2. உடலின் pH ஐ சீராக்குகிறது..
எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது..

3. உடல் எடையைக் குறைக்கிறது.
எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை…

4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது.

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. stress ஐ குறைக்கிறது.
இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி… ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.

-Karthickeyan Mathan , Akalya, world wide tamil people

 

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க எலுமிச்சை

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறுநீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி இரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது. எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம். சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், “கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் – ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி.
1. லித்தோட்ரிஸ்பி (lithotripsy),
2. பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும்
3. லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

“திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்” என்கிறார் ரோஜர் சர்.

சித்தர்கள் – Tamil Scientists

வியாதிகள் போக்கும் எலுமிச்சை

முகப் பருக்களுக்கு…
அரை தேக்கரண்டி எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு தேக்கரண்டி பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச்சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் பளிச்சென்று பிரகாசிக்கும்.

ஜுரம், தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்க…
2 தேக்கரண்டி வெள்ளரி விதை பவுடருடன், அரை தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலை விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் கழுவுங்கள். கருவளையத்தைப் போக்கி, நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் இந்த சிகிச்சைக்கு உண்டு.

வயதான தோற்றத்தைத் தரும் தோல்..
தோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு – அரை கப், எலுமிச்சைச் சாறு – அரை தேக்கரண்டி, சிவப்பு சந்தனம் – ஒரு தேக்கரண்டி.. இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.

எலுமிச்சை இலை – 4, பயத்தம்பருப்பு, தயிர் – தலா ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் – அரை தேக்கரண்டி (‘ஃபேஸ் பேக்’ போடுவது ஆணுக்கு எனில், கஸ்தூரி மஞ்சளுக்கு பதிலாக சந்தனத் தூள் – அரை தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்), இவற்றை நன்றாக அரைத்தால் கிடைப்பதுதான் ‘நேச்சுரல் ஃபேஸ் பேக்’. இதை முகத்துக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்துக் கழுவினால், அன்று மலர்ந்த தாமரை போல் முகம் ஜொலி ஜொலிக்கும்.

கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர்.
2 எலுமிச்சம் பழங்களின் சாறில் 2 தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வையுங்கள். இதனுடன் கொட்டை நீக்கிய புங்கங்காயைச் சேர்த்து அரையுங்கள். இந்த விழுதை வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பட்டுப் போல மென்மையாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

தலையில் எண்ணெய் தடவினால், தலை முடி பிசுபிசுத்து, முகத்தில் எண்ணெய் வடிகிறதா? இந்தப் பிரச்னைக்கும் தீர்வு உண்டு எலுமிச்சையில்! ஒரு கை அளவு தேங்காய் எண்ணெயில் 2 துளி எலுமிச்சைச் சாறை குழைத்து தடவுங்கள். எண்ணெய் தேய்த்த தலை போலவே இருக்காது. கூந்தலும் பளபளப்படையும்.

பருக்களால் முக அழகே கெட்டு விடுகிறது என்று கவலைப்படுகிறீர்களா..? 4 துளசி, 4 வேப்பந்தளிர், கடலை மாவு – ஒரு தேக்கரண்டியுடன் அரை தேக்கரண்டி எலுமிச்சைச் சாறை கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மேல் போட்டு 5 நிமிடம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் கழுவுங்கள். தோல் மிருதுவாகி, பருக்கள் மறையும். அடுத்து பருக்களே வராது. டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு அருமையான சிகிச்சை இது.

பற்கள் பளிச்சிட…
உப்புத்தூள் – அரை தேக்கரண்டி, சர்க்கரைத்தூள் – ஒரு தேக்கரண்டி, பொடித்த கற்பூரம் – கால் தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு – 4 துளி, வேப்பந்தூள் – அரை தேக்கரண்டி.. இவற்றைக் கலந்து வாரம் 2 முறை பல் தேய்த்து வந்தால் ஈறு வலுவடைவதுடன் பற்களில் உள்ள காரையும் மறையும். இந்த பவுடரை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றமும் இருக்காது.

மலையேறும்போது போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் சிரமப்படுகிறவர்கள் கையோடு கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் கொண்டு போகலாம். எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சுவாசம் சீராகும்.

எலுமிச்சையில் 84.6% நீர்ச் சத்து இருக்கிறது. வெயில் கால தாகத்தைத் தணிக்க இது உதவுகிறது.

எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதால் மலேரியா, காலரா போன்ற நோயின் வீரியம் குறையும்.

முடக்குவாத நோயை சரி செய்யவும், எலும்பு தேய்மான பிரச்சனை இருப்பவர்களின் நோய் தீவிரத்தைக் குறைக்கவும் எலுமிச்சையிலுள்ள ‘விட்டமின் சி’ சத்து உதவுகிறது.

எலுமிச்சைச் சாறை தண்ணீர் கலக்காமல் குடிக்கக் கூடாது. குடித்தால் பல் எனாமல் பாதிப்படையும்.

வாயில் எச்சில் ஊறுதல், நெஞ்செரிச்சல், செரிமானமின்மை, வாய்க் கசப்பு உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறுடன், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட.. பூரண குணம் கிடைக்கும்.

பித்தம், வாய்க் கசப்பால் சாப்பாடு பிடிக்காமல் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை இலை பவுடரை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சட்டென்று நலம் பெறுவார்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். எலுமிச்சையில் தண்ணீர் சேர்த்துக் குடிப்பது தாகத்தைக் கட்டுப்படுத்தும்.மூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இந்துப்பு (மலை உப்பு) தூவி வாயில் அடக்கிக் கொண்டால்.. விரைவில் குணமடைவார்கள்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எலுமிச்சை ஜூஸ் கொடுத்தால் சோர்வில்லாமல் உற்சாகமாக இருப்பார்கள்.

பசும்பாலில் ஒரு துளி எலுமிச்சைச் சாறை கலந்து குடித்து வர ரத்த மூல நோய் சரியாகும்.

-vikatan

தொகுப்பு – thamil.co.uk