‘அடி முதல் முடி வரை’:இயற்கை சார்ந்த குளியல்முறை

அடி முதல் முடி வரைஇந்தமுறை என் பெரியப்பாதான் இந்த கட்டுரைக்கான உந்துசக்தி. எப்பொழுதும் வெள்ளை கதர் வேட்டி,சட்டை அணிந்து சைக்கிளிலேயே உலா வருவார். மிகவும் எளிமையான மனிதர். அவரிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட பழக்கம்,என்னை சிறுவயது முதலே ஈர்த்து வந்துள்ளது. அது என்னவென்றால் அவருடைய குளியல்முறை ஆகும்.

தினமும் காலை எழுந்தவுடன் துண்டை தோளில் போட்டுக் கொண்டு கிளம்புவார். வீட்டிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் ஓடும் தென் வெள்ளாற்றை, சைக்கிளை மிதித்து சென்றடைவார். பிறகு அங்கு குளித்து முடித்து விட்டு வீடுதிரும்பி பின் பணிக்கு செல்வார்.

கோடை காலங்களில் ஆற்றில் நீர் இல்லாத போது, ஊருக்கு வெளியே அமைந்துள்ள குளங்களை தேர்வு செய்து குளிப்பார். அவர் வீட்டில் குளித்து நான் பார்த்ததே இல்லை. ஆனால் அவர், மற்ற எல்லா விஷயங்களிலும் உடல் நலத்தை அப்படியொன்றும் பெரிதாக பேணுபவர் இல்லை, ஏனென்றால் அவரிடம் புகைக்கும் பழக்கம் உண்டு. இருந்தபோதிலும் இந்த குளியல் முறை, அவரிடம் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதை பல தருணங்களில் அறிய முடிந்தது. இதில் என்ன இன்பத்தை கண்டார் இந்த மனிதர்?. ஏன் இவ்வளவு தூரம் சைக்கிளை மிதித்துச் சென்று தினமும் ஆற்றில் குளிக்க வேண்டும்?. இதன் பின்னணி என்னவாக இருக்கும்.வாருங்கள் விடையைத் தேடுவோம்.

மனித உடல் என்பதனை ஒரு உயிருள்ள எந்திரம் (Bio Engine) எனக் கொள்ளலாம். ஏனென்றால் பல்வேறு எந்திரங்கள் சேர்ந்து செய்யக் கூடிய பல பணிகளை, மனித உடலே செய்வதால் அவ்வாறு கொள்ளலாம்.

இத்தகைய உடலினை சிறப்பாக செயல்பட வைப்பதற்கு நம்முன்னோர்கள் பின்வரும் விதியை கடைபிடித்து வந்துள்ளனர். அது வாதம், பித்தம், கபம் என்னும் மூன்றையும் மிகாது குறையாது காப்பதாகும். இந்த மூன்றும் சமநிலையில் இருந்தால் உடல் நன்றாகச் செயல்படும். அதாவது இந்த மூன்றும் குறைந்தாலோ, மிகுந்தாலோ நம் உடல் நோய் வாய்ப்படும். இதையே திருவள்ளுவர் மருந்து என்னும் 95வது அதிகாரத்தில் ‘மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று’ என குறிப்பிடுகின்றார்.

இந்த மூன்றில் பித்தம் என்பதை பற்றி பார்ப்போம். வெப்ப மண்டல பகுதியில் நாம் வசிப்பதால், நம் உடலில் பித்தம் (வெப்பம்) என்பது ஆண்டின் பெரும்பாலான காலங்களில் அதிகரித்தே காணப்படும். இவ்வாறு பித்தம் அதிகரித்தால் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படும்.

சரி, உடலின் வெப்பம் அதிகரித்து விட்டதை எவ்வாறு உணர்வது?
உடலை பற்றிய நல்ல புரிதல் இருந்தால், இதனை நாம் நம் உடலிலேயே நன்கு உணர முடியும். மேலும் இதனை பின்வருமாறும் உறுதிபடுத்திக் கொள்ளலாம். சில சமயங்களில் நீங்கள் நீண்டநேரம் உட்கார்ந்திருந்த அல்லது படுத்திருந்த இடத்தை தொட்டு பார்த்தால், அது சூடாக இருப்பதை உணர முடியும். எனவே இந்த நிலையில் உடலின் அதிகப்படியான வெப்பத்தை தணிக்க வேண்டியது அவசியமாகின்றது.

இதனை ஒட்டி தொல் தமிழர்களின் வாழ்வில் குளியல் என்பது பின்வருமாறு அணுகப்படுகின்றது. குளியல் என்பதன் தலையாய நோக்கம், உடல் என்னும் எந்திரத்தை குளிர்விக்கும் (Cooling Method) ஒரு செயலாகும். உடலை தூய்மைபடுத்துதல் என்பது இரண்டாவதாகும்.

இதில் குளியல் என்பது முதலில் காலின் அடிப்பகுதியை நீரால் குளிர்விக்க வேண்டும். பின் உரிய நேர இடைவெளிகள் கொடுத்து, ஒவ்வொரு பகுதியாக மேல் நோக்கி நகர்ந்து நீரால் குளிர்விக்க வேண்டும். இறுதியாக தலைப்பகுதியை நீரால் குளிர்விக்க வேண்டும். இதுவே இயற்கை சார்ந்த குளியல் முறை ஆகும். இதனை ‘அடி முதல் முடி வரை’ குளியல் என அழைக்கலாம்.

இத்தகைய முறையில் முதலில் கால் பகுதியை குளிர்விக்கும்போது, இந்த தகவல் உடனே மூளையை சென்றடைகின்றது.இதனைத் தொடர்ந்து நம் உடல் குளியலை எதிர்கொள்வதற்கு முற்றிலும் தயார் செய்யப்படுகின்றது. இப்பொழுது அடுத்தடுத்த பகுதிகளையும் முறையே குளிவிக்கும்போது, நம் உடலின் அதிகப்படியான வெப்பம் சீராக வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறாக இந்த முறையில் உடல் சீராக குளிர்விக்கப் படுகின்றது.

இந்த முறையில் குளிப்பதால் சளி பிடிப்பதில்லை. இன்றும் சில முதியவர்கள் இதனை கடைபிடித்து வருவதை நாம் காணலாம். நம் பாட்டிமார்கள் குழந்தைகளை தம் முழங்காலில் கிடத்தி குளிப்பாட்டும் போது இவ்வாறு செய்வதை அறியலாம். குழந்தைகளை, இவ்வாறு காலில் கிடத்தி குளிப்பாட்டும் முறைதான் உலகிலேயே எளிய,பாதுகாப்பான மற்றும் சிறந்த முறையாக இருக்கக் கூடும்.

மேலே நாம் விவாதித்தது அன்றாட குளியல் முறை ஆகும். இதுதவிர எண்ணெய்க் குளியல் என்னும் ஒரு வழக்கத்தையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர். இந்த முறையில் உடலின் உள் உறுப்புகளில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேற்றப்படுகின்றது.

கோடைக் காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது, அன்றாட குளியலை தாண்டி வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

இதில் எண்ணெய் உடல் முழுவதும் கீழிருந்து மேலாக தடவப்படுகின்றது.பின் அரை மணி நேரம் உடம்பு எண்ணெயில் ஊறுகின்றது. பிறகு சீயக்காய் கொண்டு தேய்த்து குளிக்கப் படுகின்றது. இதுவே எண்ணெய்க் குளியல் ஆகும்.

இதில் உடலில் எண்ணெய் தடவப்படும்போது, உடலின் மேற்பரப்பு குளிர்ச்சி அடைகின்றது. இந்த குளிர்ச்சி, உடலின் உள் உறுப்புகளில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளிப்படுவதால் சமன் செய்யப்படுகின்றது. இவ்வாறு உடலின் உள்ளுறுப்புகள் குளிர்ச்சி அடைகின்றன.

மேலும் சீயக்காய் கொண்டு குளிப்பது உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தருகின்றது. சீயக்காய் பயன்பாடு பல்வேறு தோல் நோய்களிலிருந்து நம்மை காக்கின்றது. முடி உதிர்தல்,பொடுகு மற்றும் நரை முடியை தடுக்கின்றது.

ஆனால் இந்த அன்றாட மற்றும் எண்ணெய்க் குளியல்களை வீட்டில் மேற்கொள்வதை விட ஆறு, ஏரி, குளம் மற்றும் கிணறு போன்ற நீர் நிலைகளில் மேற்கொள்ளும் போது இதன் பலன் பலமடங்கு அதிகரிக்கும்.

இதுவரை நாம் விவாதித்ததிலிருந்து நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயல்களும் மிகவும் பொருள் மிக்கவை என அறியலாம். அவர்களின் நுட்பமான அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.

முன்னோர்களால் வரையறுக்கப்பட்ட இந்த குளியல் முறை காலம் காலமாக தொடர்ந்து இன்று வரை அரிதாகவாவது கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாகத்தான், என் பெரியப்பா நீர் நிலைகளில் குளிக்கும் பழக்கத்தை பெரிதும் விரும்பி மேற்கொண்டார் என நினைக்கின்றேன்.

சரி, இன்றைய தேதியில் குளியல் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என பார்ப்போம்.

இன்று குளியலறையில் ஷவரில் குளிக்கும்போது முதலில் தலையில் நீர் விழுகின்றது. தலையில் மூளை உள்ளது. நாளாவட்டத்தில் இது மெல்ல மெல்ல பாதிப்படைகின்றது. மேலும் இம்முறையில் உடல் வெப்பநிலை சீராக குளிர்விக்கப் படுவதில்லை. இதுவே சில நோய்களுக்கு காரணமாக அமையலாம்.

இன்று தவறான உணவு முறையும், அதிகரித்து வரும் புவி வெப்பமும் (Global Warming நம் உடல் வெப்பநிலையை தொடர்ந்து மிகுதியாகவே வைத்திருக்கின்றது. இயற்கையாக குளிர்ச்சி தரும் மரங்களும் வெட்டப்படுகின்றன, நீர்நிலைகள் தொடர்ந்து காணாமல் போகின்றன.

இவ்வாறு உடலில் தொடர்ந்து நீடிக்கும் மிகுதியான வெப்பம், உள்ளுறுப்புகளை கடுமையாக பாதிக்கின்றது. உடலின் முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்கள் ஏற்பட இது காரணமாகின்றது.

மேலும் பெண்களுக்கு கருப்பை என்ற உறுப்பும், அதனை ஒட்டிய செயல்பாடுகளும் இருப்பதால் இந்த கருத்து கூடுதல் கவனம் பெறுகின்றது.

எனவே உடல் வெப்பத்தை கட்டுக்குள் வைக்க, இன்று இயற்கை சார்ந்த குளியல் அவசியமாகின்றது.

ஆனால் இன்றைய நிலையில் அதிகரித்து வரும் பொருளாதார தேவைகளும், அதனை ஒட்டி அதிகரிக்கும் வேலை பளுவும் இயற்கை சார்ந்த குளியல் முறைகளை மேற்கொள்வதற்கு தடையாக உள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

வேறு வழியில்லை. சிறிது சிறிதாகவோ, இயன்றவரையிலோ இம்முறைகளை மெல்ல மெல்ல முயற்சித்து பார்க்கலாம். பார்க்க வேண்டும். அதாவது அடி முதல் முடி வரை குளியல், எண்ணெய் + சீயக்காய் குளியல் போன்றவற்றை அவ்வப்போது மேற்கொள்ளலாம். ஏனென்றால் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். வரும் முன் காப்பதே சிறப்பு.

ஆனால் நாங்கள் எப்பொழுதும் ஏசியிலேயே (Air Conditioner) இருக்கின்றோம். எங்களுக்கு அவசியமில்லை என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். பானைத் தண்ணீர் தரும் குளிர்ச்சியை Fridge தண்ணீர் தருவதில்லை.அதுபோல் ஏசி காற்று ஒருபோதும் அரசமர காற்றுக்கோ,வேப்பமர காற்றுக்கோ ஈடாகாது. எனவே ஏசி காற்று உடலின் உள்ளுறுப்புகளை சீரான வெப்பநிலையில் வைத்திருக்க வாய்ப்பில்லை.

எனவே இனி இயன்றவரை, இயற்கை சார்ந்த குளியல் முறைகளை மேற்கொள்வோம்.

இந்த செய்தியினை நீங்கள் நலம் விரும்பும் நபர்களுக்கு தெரியப்படுத்தவும். இதன் மூலம் அவர்களை கோடையின் வெம்மையிலிருந்தும், அதனால் ஏற்படும் நோய்களிலிருந்தும் ஓரளவாவது காக்கலாமே. இதனை அனைவருக்கும் Share செய்யவும்.

நன்றி- தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் பக்கம்

 

இயற்கைக் குளியல்
நீங்கள் எந்த நீரில் குளிக்கிறீர்களோ, அந்த நீரில் 3 முறை வாய்கொப்பளித்து துப்பிவிட்டு, சிறிது தண்ணீரை குடித்துவிட்டு குளித்தால் ஜலதோசம், தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. அடிக்கடி நீர் மாற்றி குளிப்பவர்கள் இந்த முறையை பின்பற்றினால் மிகுந்த பயனடைவார்கள்.

மழையில் நனைபவர்கள் நனைந்து கொண்டே சுமார் இருபது துளி மழைநீரை குடித்துவிட்டால் போதும். மழையில் நனைவதால் ஏற்படும் எந்த பாதிப்பும் இருக்காது.

வெயில் காலத்தில் தினமும் இரண்டு, மூன்று முறை குளிப்பவர்கள் இந்த முறையை பின்பற்ற எந்த நோயும் அணுகாது தப்பலாம்.

FB Ps Aravindan