சாப்பிடுவதை ருசித்து சாப்பிடுங்கள்..!

உமிழ்நீர் சுரப்பிகள்சிலர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிடுவர். இன்னும் சிலர் ஒவ்வொரு வேளையும் சுமார் முக்கால் மணி நேரம் சாப்பிடுவர். அதுவும் தவறு, இதுவும் தவறு.

சிலர் மிக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாக சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாக கடிக்கப்பட்டு மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி அப்படியே விழுங்கக் கூடாது.

சைவ உணவை சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விடலாம். அசைவ உணவு சாப்பிடும்போது கொஞ்சம் லேட்டாகத்தான் செய்யும். குறைந்தது சுமார் 5 நிமிடங்களும், கூடுதலாக சுமார் பதினைந்து நிமிடங்களும் சாப்பிடுவதற்காக ஒதுக்குவது நல்லது. ஐந்து நிமிடங்களுக்கு குறைவாக சாப்பிடுவதும் நல்லதல்ல. பதினைந்து நிமிடங்களுக்கு அதிகமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதும் நல்லதல்ல.

எந்த உணவை நாம் சாப்பிட்டாலும் கடித்து சுவைத்து அதன்பின்தான் விழுங்க வேண்டும். கோழி விழுங்குவதைப்போல வாயில் போடும் உணவை அப்படியே விழுங்கக்கூடாது. ஒரு முழுநெல்லை கோழி அப்படியே விழுங்குகிறது. கோழிக்கு பற்கள் கிடையாது. அதனால் மெல்லுவது கிடையாது. அதற்கு அலகு அதாவது மூக்கும், நாக்கும்தான் உள்ளது. கோழி உண்ணும் உணவு அதனுடைய அலகாலும், வயிற்றினாலும்தான் சிறுசிறு துண்டுகளாகவும், கூழாகவும் ஆக்கப்படுகிறது. அந்த பச்சை நெல்லை ஜீரணிக்க வைக்கக்கூடிய அளவுக்கு மிக சக்தியான நொதியங்கள் மற்றும் உணவு மண்டல அமைப்பு கோழிக்கு இருக்கிறது. நமக்கு அப்படி இல்லை.

நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ்நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று சோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கின்றன. அவையாவன.
1.பரோட்டிட் சுரப்பி,
2.சப்மேன்டிபுலார் சுரப்பி,
3.சப்லிங்குவல் சுரப்பி. இந்த மூன்று சுரப்பிகளிலிருந்தும் வரும் குழாய்கள் வாயினுள் வந்துதான் திறக்கின்றன.

பரோட்டிட் சுரப்பிதான் இந்த மூன்றில் மிகப்பெரியது. அடுத்ததாக உள்ள சப்மேன்டிபுலார் சுரப்பிதான் 70 சதவீத உமிழ்நீரை சுரக்கிறது. ஐந்து சதவீத உமிழ்நீர், மூன்றாவதாக உள்ள சப்லிங்குவல் சுரப்பியிலிருந்து சுரக்கின்றது.

உணவை பார்த்தவுடன், உணவை நினைத்தவுடன், உணவின் வாசனையை நுகர்ந்தவுடன் உமிழ்நீர் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. உமிழ்நீரில் மியூகஸ், புரோட்டின், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற நொதி (என்சைம்) ஆகியவை இருக்கின்றது. ஒரு நாளைக்கு சுமார் 1 முதல் 2 லிட்டர் உமிழ்நீர் வாயிலிருந்து வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது.

எல்லா நேரமும் நம்மை அறியாமலேயே நாம் வாயில் சுரக்கும் உமிழ்நீரை உள்ளே விழுங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். உமிழ்நீரிலுள்ள நொதியங்கள் நாம் சாப்பிடும் உணவில் இரசாயன மாற்றங்களை வேகமாக ஏற்படுத்த உதவி செய்கிறது. இந்த நொதியங்கள் இல்லாவிட்டால் நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக வாரக்கணக்கில் ஏன் மாசக் கணக்கில்கூட ஆகும். அப்படியானால் நம் உடலிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள் இவையெல்லாம் ஒழுங்காக வேலை செய்யாது. இவையெல்லாம் வேலை செய்யாவிட்டால் நம்மால் உயிர்வாழ முடியாது.

உமிழ்நீரிலுள்ள அமைலேஸ் என்கிற நொதி  நாம் சாப்பிடும் உணவிலுள்ள ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டை மால்டோஸ் என்கிற சர்க்கரைப் பொருளாக மாற்றுவதற்கு உதவி செய்கிறது. உணவு சிறுகுடலில் போய்ச் சேரும்போது இன்னும் அதிகமாக அமைலேஸ்  கணையத்திலிருந்து (சதையி) சுரக்கப்பட்டு உணவில் மிச்சம் மீதியிருக்கும் ஸ்டார்ச்சையும், மால்டோசாக மாற்றிவிடுகிறது. மால்டேஸ் என்கிற இன்னொரு நொதி எல்லா மால்டோசையும் குளுக்கோசாக மாற்றிவிடுகிறது. இந்த குளுகோஸ்தான் கடைசியாக ரத்தத்தில் கலக்கிறது. என்னவென்று புரியவில்லையா? ஒன்றுமில்லை நாம் சாப்பிடும் உணவிலுள்ள சர்க்கரையை வாயிலுள்ள நொதி குளுகோசாக மாற்றி ரத்தத்தில் கலக்கச்செய்கிறது, அவ்வளவுதான்.

நமது உமிழ்நீரிலுள்ள மிïசின் என்கிற பொருள் வாய் எப்பொழுதும் ஈரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. அதேமாதிரி உமிழ் நீரிலுள்ள லைசோசைம் என்கிற பொருள் நாம் சாப்பிடும் உணவிலுள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்துவிடுகிறது.

வயிற்றுக்குள் போய் எல்லா உணவும் ஜீரணம் ஆகிவிடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறு. உணவு வாயில் போடப்பட்டவுடன் உதடு, கன்னம், நாக்கு ஆகியவற்றிலுள்ள தசைகள் ஒன்று சேர்ந்து வாயினுள் போடப்பட்ட உணவை வாயினுள்ளேயே சிறிது நேரம் வைத்துக் கொண்டிருக்கும்படி செய்கிறது. அதே நேரத்தில் வாயிலுள்ள 3 உமிழ்நீர் சுரப்பிகள் சுரக்கும் திரவம் வாயில் போடப்பட்ட உணவுக் கவளத்தைச் சூழ்ந்து செரிமானத்திற்கு தயாராகிறது. பற்களுக்கிடையில் மாட்டிய உணவு துண்டு துண்டாக வெட்டப்பட்டு பின்பக்கத்திலுள்ள பற்களால் மிகச்சிறிய துண்டுகளாக ஆக்கப்பட்டு விழுங்குவதற்கு ஏதுவாக தயாராகிறது.

நாக்கிலுள்ள சுவை நரம்புகள் நாக்கில் வந்து தொடும் உணவானது இனிப்பா, புளிப்பா, உப்பா, துவர்ப்பா என்பதைக் கண்டுபிடித்து அதற்குத் தேவையான சரியானநொதிகளை சுரக்கச் செய்கிறது. நாக்கு இப்படியும் அப்படியும் புரளும்போது நாக்குக்கு இடை யில் உணவுத்துண்டுகள் பாதி நிலையில் ஜீரணமாகி ஒரு உருண்டையாக ஆக்கப்பட்டு நாக்கு மூலமாகவே அந்த உணவு உருண்டை தொண்டைக்குள் தள்ளப்படுகிறது. தொண்டையிலிருந்து வயிற்றுக்குள் இறங்கிய உணவு அங்குள்ள 5 என்சைம்களுடன் சேர்ந்து மேற்கொண்டு ஜீரணமாகும் வேலையை ஆரம்பிக்கிறது.

வெற்றிலை, பாக்கு, புகையிலை போன்றவற்றைத் தொடர்ந்து போடும் பழக்கமுள்ளவர்களுக்கு வாயினுள் வந்து முடியும் உமிழ்நீர் சுரப்பிகளின் குழாய் பாதிக்கப்பட்டு அடைபடும் வாய்ப்பு அதிகம். எனவேதான் இத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு சரிவர உமிழ்நீர் சுரக்காமல் அடிக்கடி தொண்டை காய்ந்து போய்விடுகிறது.

இதேபோல் பற்களை இழந்த ஒருவருக்கு சரியான சத்தான உணவு கிடைக்காது. காரணம் அவரால் நன்றாக மெல்ல முடியாததால் அவர் சாப்பிடும் உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகாமல் உணவிலுள்ள சத்தான பொருட்கள் உடலுக்குப் போய்ச் சேருவதில்லை. எனவே இவர்களுக்கு தேக ஆரோக்கியமும் குறைந்துவிடும்.

ஆகவே சாப்பிடுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள். உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்கு மட்டும்தான் வாய் உபயோகப்படுகிறது என்று தவறாக நினைத்து விடாதீர்கள். சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகும் வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

– Baskar Jayaraman