வேம்பு – NEEM

வேம்பு-thamil.co.ukமூலிகை பெயர் – வேம்பு – NEEM
வேறுபெயர்கள் – அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.

வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.

நாம் பாட்டுக்கு வெய்யில்காலம் வந்தால் வேப்பிலை வைத்து மாரியம்மன் விழா எடுத்து குளிர்ச்சியாக கம்பன்கூழ் குடித்து கொண்டிருப்போம். அந்த வேப்பிலைக்கும் ஒரு வேட்டு வந்தது, ஏதோ தெய்வாதீனமாக அந்த ஆபத்தில் இருந்து தப்பினோம். நாம் பறிக்கும் ஒவ்வொரு வேப்பிலைக்கும் வெளிநாட்டிற்கு வரி செலுத்த வேண்டி வந்திருக்கும் .

ஏப்ரல், மே (பங்குனி,சித்திரை, வைகாசி) மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அம்மன் கோவில் திருவிழாக்களில் வேப்பிலை ஆடை அணிந்து கோவிலைச் சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வேப்பிலை ஒரு கிருமி நாசினி. உடலில் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால் பழங்காலத்தில் வெப்ப நோயின் தாக்குதலிருந்து விடுபட்டனர்.

வேப்பிலையின் மருத்துவப் பயன்களை நாங்கள் தான் கண்டுபிடித்தோம் என்று கூறிக் கொண்டு பல அமெரிக்க நிறுவனங்கள் அதற்கு பேடண்ட் வாங்கி வைத்துள்ளன. ஆனால், இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேப்பிலை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தி இதோ !

அமெரிக்க பேடண்ட்களை எதிர்த்து இந்தியா வழக்குத் தொடர்ந்தது. இந்த “கசப்பான” வழக்கில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

ஐரோப்பாவின் பேடண்ட் அலுவலகத்தில் இதற்கான வழக்கு நடந்தது. வேப்பிலைக்கான காப்புரிமையை அமெரிக்க பேடண்ட் அலுவலகம் டபிள்யூ.ஆர். கிரேசுக்கு வழங்கியது. இதை எதிர்த்து இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த ஐரோப்பிய பேடண்ட் அலுவலகம் அமெரிக்காவின் உத்தரவை ரத்து செய்தது.

கடந்த 4 வருடங்களாக இந்திய விஞ்ஞானிகள் இந்த உரிமைக்காக பேடண்ட் அலுவலகத்தில் வாதாடி வந்தனர்.இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கான ஆராய்ச்சி மையம் (ஆர்.எப்.எஸ்.டி.ஈ.) தான் இந்தவழக்கை கையாண்டு வந்தது. இந்தியாவின் சார்பில் பனாரஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விவசாயத்துறைஆராய்ச்சியாளர் பேராசிரியர் யு.பி. சிங் ஆஜராகி வந்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே வேப்பிலையை இந்தியர்கள் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். திடீரென ஒரு நிறுவனம் வேப்பிலையின் மருத்துவப் பயன்களை தாங்களே கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்வதை ஏற்கமுடியாது என சிங் வாதிடார். அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட ஐரோப்பிய பேடடண்ட் அலுவலகம் அமெரிக்காவின் பேடடண்ட் அலுவலக உத்தரவை ரத்து செய்தது.

இந்தத் தீர்ப்பு குறித்து ஆர்.எப்.எஸ்.டி.ஈயின் இயக்குனர் வந்தனா சிவா கூறுகையில், வேப்பிலை மீதான பேடடண்ட் வழக்கில் இந்தியாவின் நிலையை ஐரோப்பிய பேடடண்ட் அலுவலகம் அங்கீகரித்துள்ளது. இது அமெரிக்காவின் வரலாற்றுத் தவறுகளுக்கு நல்ல பாடமாகும். வேப்பிலை மீது பல அமெரிக்க நிறுவனங்கள் பேடடண்ட் வாங்கி வைத்துள்ளன. அமெரிக்காவின் பேடண்ட் சட்டங்கள் இந்திய மூலிகைகளைத் திருட பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத்தடுக்க இந்திய அரசும் மக்களும் இணைந்து போராட வேண்டும் என்றார் அவர் .

இப்படிப்பட்ட வேம்பு எல்லா பாகமும் பயன்படும் மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள். வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.

எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது. வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

வேப்பிலை--thamil.co.ukமருத்துவப் பண்புகள்

இலை
வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.

வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.

வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும். வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு.

வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும்.

வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.

நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.  புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.

வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.  சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.

சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.

வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு

வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.

வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.

சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.

மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.

புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது.

விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.

அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.

வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.

வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.

வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

பூ
பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும்.

வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும்.

வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.

பூவைத் தலையில் வைக்க ஈரும் பேனும் தீரும்.

பூச்சாறு, நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.

வேப்பம்பூ, வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.

காய்- மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.

விதை
புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.

மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.

விதை , கசகசா, தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.

வேப்ப கொட்டை , மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.

வேப்ப எண்ணெய்
வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும். தீவிர புண்கள் தீரும். ஆராத இரணங்கள் தீரும்.

வேப்பம் பட்டை
அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.

வேப்பம்பட்டை + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை உடையதாகும். விந்து கட்டும்.

100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

பிசின்
மேக நோயைப் போக்கும். பிசினை உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.

நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 metre நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வேப்பிலை தெய்வீக மூலிகையாக கருதப்படுகிறது.

மகாத்மா காந்தி அவரின் ஆரோக்கிய ரகசியமாக வேம்பை கூறுகிறார் .அவரது உணவில் வேம்பு சட்னி தவறாமல் இடம் பெற்றது. இது புலனடக்கத்திற்க்கும் உகந்தது.

புண்ணாக்கு:
வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.

வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது

-இயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்