மஞ்சள் மகிமை

முட்டா மஞ்சள்-thamil.co.ukமஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும். முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் முடி வராமல் தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது.

கஸ்தூரி மஞ்சள்

இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும்.   கஸ்தூரி மஞ்சளையும் உடலிற்குப் பூசிக் குளிக்கலாம். நல்ல நறுமணத்தைத் தரக்கூடியது.

படை (ezema), தடிப்புகள் (rashes) போன்ற தோல்நோய்கள் உடலில் பரவாமல் இருந்தன. அம்மை நோய்களால் தோலில் ஏற்படும் வடுக்களையும் (scars), பருக்களின் தொல்லைகளையும் கூடத் தொடர்ந்து மஞ்சள் பூசிக்குளிப்பதன் வாயிலாக நீக்க முடிந்தது. முதுமையைத் தள்ளிப்போடவும் (delay aging) இளமைப் பொலிவைத் தக்கவைக்கவும் மஞ்சள் உதவுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் சான்று பகர்கின்றன

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்
பூவரசன் வேர் 30 கிராம்
வெள்ளெருக்கன் வேர் 25 கிராம்
சிறுநாகப் பூ 15 கிராம்
வெடியுப்பு 10 கிராம்
புனுகு 10 கிராம்
இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்

விரலி மஞ்சள்-thamil.co.uk

மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான். மஞ்சளில் காணப்படுகின்ற முக்கிய வேதிப்பொருளான குர்குமின் (curcumin) பல்வேறு அற்புதமான மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது.

வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.

மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும்.

வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிப்பட்ட வீக்கம் இவைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக அடிபட்ட இடங்களில் பத்துப் போட்டால் குணம் உண்டாகும்.

மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் கட்டிகள் உடைந்துவிடும்.

மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்தவர்களுக்குத் தேய்த்து தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள்.

அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.

மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது.

மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும்.

நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும்.

சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு.

மஞ்சள் கரிப்பொடியை பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும்.

மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப் பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.

கலப்படமில்லாமல் மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான். சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்துப் பயன்படுத்துங்கள்.

மஞ்சள் மகிமை

பொதுவாக மஞ்சள் அனைத்து சரும நோய்களுக்கும் பயன் தரக்கூடியது.

இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை 10 கிராம் வெண்ணெய்யில் கலந்து ஆசன வாயில் வைத்து அழுத்தி வர எத்தகைய உள்மூலமும் வெளிமூலமும் குணமாகும்.

தீராத பொடுகு, பேன் தொல்லைகளுக்கு மஞ்சள், வேப்பந்துளிர், குப்பைமேனி ஆகியவற்றை அரைத்து தலையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர நீங்கும்.

பெண்களின் மாதவிடாய் கால வயிற்று வலிக்கு ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பருகிட மாயமாய் மறைந்திடும்.

மஞ்சள் புண்ணுக்கு மேல் பூசுவதற்கு சிறந்த மருந்தாகும். கட்டி பழுத்து உடைய, வெட்டுக்காயம், உள் காயம், தீக்காயம், சேற்றுப்புண், நகச்சுற்றி, தலையில் காயம், நரம்பு சிலந்தி போன்ற அனைத்திற்கும் வெளிபூச்சு மருந்தாக பயன்படுத்திடலாம்.

மஞ்சளை சுட்டு மூக்கில் வைத்து உறிஞ்சினால் மூக்கடைப்பு நீங்கும்.

பசும்பாலுடன் மஞ்சள் தூளைக் கலந்து பருகினால் வறட்டு இருமல் நீங்கும்.

கஸ்தூரி மஞ்சள், புதினா, கருந்துளசி, உப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி பல் பொடி போல உபயோகித்தால் பல்வலி நீங்கும்.

குழந்தைகளின் வயிற்றுப் போக்கின் போது மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து கொடுக்க வயிற்றுப்போக்கும் நீங்கும் உடலும் வளம் பெறும்.

– akathiyarherbals.com