மாம்பழம்

மாமரம்-thamil.co.ukபழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம். மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.

100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை விட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை விட்டமின் சி யும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு விட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும்.

விட்டமின் ஏ உயிர்சத்து உள்ள மாம்பழத்தினை உட்கொள்வதால் நமது இரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு விட்டமின் ஏ மிகவும் அவசியமாகும். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால் இதனை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை பெறலாம். தினமும் 100 கிராம் அளவு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்

1976983_673550886023825_902612655_nமாம்பழத்தில் அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் புற்று நோயினை எதிர்த்துப் போராடுவதிலும் உடலில் ஏற்படும் சுருக்கங்களை (விரைவில் முதுமை அடைவது) நீக்குவதிலும் செயல்படுகிறது.

மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

பொட்டாசியம், நார்ச்சத்து, விட்டமின் சி, பி6, மக்னீசியத்துடன் இரும்புச்சத்தையும் அதிகம் கொண்டுள்ளது. இரும்புச் சத்து இரத்த சோகையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளது. இரத்த சோகை, ஈறுகளில் இரத்தம் வருதல், இருமல், காய்ச்சல், குமட்டல் போன்ற நோய்களுக்கு மாம்பழத்தைப் பரிந்துரைத்துள்ளது சீன மருத்துவம்.

தொடர்ந்து ஒருமாதம் மாம்பழமும் பாலும் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான வலிமையும் எடையும் கிடைக்கும். கல்லீரல் குறைகளைப் போக்கும் தன்மை வாய்ந்த மாம்பழம் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

மாம்பழத்தில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தும் கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகளும் அளவுடன் சாப்பிட்டுப் பயன் பெறலாம்.

மேலும் மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத்துடன் இரத்தசோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது. ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும். மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும். அஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.

தேர்வு நேரங்களில் இரவு நேரத்தில் கண்விழித்துப் படிக்கும் குழந்தைகள் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்துவிட்டு மாம்பழத் துண்டுகளைச் சாப்பிடலாம். மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம் அதிக கவனம் செலுத்துவதற்கும் நினைவாற்றலுக்கும் துணை புரியும்.

தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும்.

பலர் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை எறிந்துவிடுவார்கள். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் விட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.

அதிகமாக சாறும், நாரும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

மாம்பூ-thamil.co.uk மாம்பூக்களின் மருத்துவ குணங்கள் 

மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன.

தொண்டை வலி குணமடையும்:தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் வலி உயிரை எடுக்கும். அந்த நேரத்தில் மாமரத்தில் பூத்திருக்கும் மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும்: உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினசரி மூன்று வேளை பருகிவர மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும். புத்தம் புதிய மாம்பூக்களை தினமும் பறித்து வாயில் போட்டு மென்று வர பல்வலி குணமடையும். பற்கள், ஈறுகள் பலமடையும். மாம்பூ, மாந்தளிர், இரண்டையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வர பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும். மாம்பூவைச் சேகரித்து தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் தலைபாரம், ஜலதோஷம் நீங்கும்.

நீரிழிவு நோய்க்கு:மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து பத்திரப்படுத்தவும். தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இடையே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ளவேண்டும்

சீதபேதிக்கு அருமருந்து: மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் சீதபோதி நீங்கிவிடும்.

மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும். மாம்பூ, பச்சை கொத்தமல்லி, தோல்நீக்கிய இஞ்சி, கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட குமட்டல் நீங்கும்.

மூலநோய் குணமடையும்: மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிடவும் மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்

கொசுத்தொல்லை நீங்க: உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத்தொல்லை ஒழியும்.

மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது.

மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.

கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும்.

மாம்பிஞ்சு-thamil.co.ukமாம்பிஞ்சுகளை (இளம் மாவடுக்களை) காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.

மாங்காய்அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும். மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம்.

மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, விட்டமின் சி பற்றாக்குறை நீங்கும்.

மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, விட்டமின் குறைபாட்டால் ஏற்படும் ஸ்கேவி நோய் குணமாகும்.

மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த இரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும்.

மாங்கொட்டையிலும் கல்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது. மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும்.

மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

-nikalvu.com
-உணவே மருந்து
-இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
-மருத்துவக் குறிப்பு Health Care in Tamil