அகத்தி

மூலிகையின் பெயர் அகத்தி
தாவரவியல் பெயர் – SESBANIA GRANDIFLORA
தாவரக் குடும்பம் FABACEAE
வகைகள் – செவ்வகத்தி, வெள்ளை அகத்தி
பொதுப் பெயர் agati / hummingbird tree
பயன்தரும் பாகங்கள் – இலை, பூ, வேர், பட்டை மற்றும் மரம்.

அகத்திவளரியல்பு – அகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக வளர்க்கப்படும் சிறு லேசான மரவகை. இதற்குக் கிளைகள் கிடையாது. நேராக சுமார் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது.

இதன் இலைகள் எதிர் வரிசையில் அமைந்திருக்கும். இலைகள் 15 – 30 செ.மீ. நீளம் உடையது 10 -20 சதையாக இருக்கும். ஒரு இலையில் 40–80 சிறு இணுக்குகள் இருக்கும். ஒரு இணுக்கு 1.5 – 3.5 செ.மீ. நீளத்தில் இருக்கும். இதன் இலை, பூக்கள் சமையலுக்குக் கீரையாகப் பயன்படுத்துவார்கள்.

இதன் பூக்கள் சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள் லேசாக நீளமாக அவரை போன்று இருக்கும். இவை முற்றியதும் விதைகள் வெடித்துச் சிதறும். விதை 8 mm நீளத்தில் இருக்கும். அகத்தியின் தாயகம் மலேசியா. பின் வட ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. அகத்தி வெப்ப மண்டலத்தில் வளரக் கூடியது. பனிப் பிரதேசத்தில் வளராது. அகத்தி விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

பூவின் நிறத்தைப் பொறுத்து செவ்வகத்தி மற்றும் வெள்ளை அகத்தி என்று அகத்தியை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். அகத்தி மரம் தை முதல் மாசி மாதம் வரையிலும் பூக்கும் இயல்பு உடையது.

அடங்கியுள்ள வேதிப் பொருட்கள் – ஈரப்பதம் 73 %, புரதச்சத்து  83 %. தாதுஉப்புக்கள்  3.1 %, நார்ச்சத்து 2.2 %, மாச்சத்து 12%, கொழுப்புச்சத்து 1.4 % என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.  தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பொஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. விட்டமின் A, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், விட்டமின் C போன்றவை அடங்கியுள்ளன.

“மருந்திடுதல் போகுங்காண் வன் சிரந்தி – வாய்வரம்
திருந்த வசனம் செரிக்கும் – வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியா”

அகத்திக் கீரையை உண்ண இடு மருந்து நீங்கும். கிரந்தி வாய்வு உண்டாகும். மருந்தை முறிக்கும் தன்மையுண்டு. புழுவை வெளியேற்றும்ம். எளிதில் சீரணம் தரும். அகத்தி, செவ்வகத்தி, சாழையகத்தியென வேறு இனமும் உண்டு. செவ்வகத்தியின் வேரைத் தண்ணீர் விட்டு அரைத்து வாத வீக்கங்களுக்குப் போம்.

‘அகத்திக்குப் பெரும்பாடு தீரும்’
‘அகத்திக்கு வேக்காடுதனை யகற்றும்.’ (போ.நி.1500)
பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிள்ளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.

கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

அகத்தி மரப்பட்டையும், வேர் பட்டையையும் குடிநீராக்கிக் குடித்து வர சுரம், தாகம், கைகால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்கடுப்பு, நீர்தாரை எரிவு, அம்மைசுரம், ஆகியவை தீரும்.

இலைச்சாறும் நல்லெண்ணையும் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து பதமுறக் காச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக் கிழங்கு, விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

வெள்ளை அகத்திதாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். அகத்திக் கீரை  சுவையானது, பல சத்துக்களையும் விட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது .

துக்கவீடுகளில் உள்ளவர்களுக்கு அகத்திக்கீரையை ரசம் வைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு. காரணம், இறப்பின் வருத்தத்தில் சாப்பிடாமல் இருப்பவர்களின் உடல் பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதால்!

உடலின் உள்காயங்களை ஆற்றுதல், குடற்புழு நீக்கம், மலச்சிக்கலைப் போக்குவது, விஷமுறிவு போன்ற ஏராளமான மருத்துவக் குணங்களை வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களிலும் தன்னகத்தே வைத்திருக்கும் உன்னதமான மரம் அகத்தி!

தஞ்சாவூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் பி.சரஸ்வதி, அகத்தியின் பலவிதமான மருத்துவக் குணங்களை விவரிக்கிறார்.

இலை: அகத்தி இலையைக் கீரை என்பார்கள். இதன் சாற்றை எடுத்து ஒன்று அல்லது இரண்டு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் குணமாகும்.

அகத்தி இலைச் சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்தி வர ஒரு மாதத்தில் இருமல் விலகும். சாற்றில்  ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த வயிற்று வலி தீரும்

அகத்தி இலையிலும் பூவிலும் அதிக அளவில் விட்டமின் ஏ சத்து உள்ளது. நெய்யை நன்றாகக் காய்ச்சி அதில் அகத்தி இலைகளை இட்டு நன்கு வெந்த பிறகு வடிகட்டிப் பருகச் செய்தால், மாலைக்கண் நோய் குணமாகும்.

அகத்திக் கீரைப் பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர,  நாள்பட்ட வயிற்று வலி குணமாகும்.

இலையை அரைத்துப் பசைபோல் செய்து காயங்களுக்குக் கட்டலாம். புண்கள் விரைவாக ஆறும். சீழ் பிடிக்காது.

அகத்திக் கீரைஅகத்திக் கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.  பித்த நோயை நீக்கும்.

வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும் குணம் அகத்திக் கீரைக்கு உண்டு.

செவ்வகத்தி இலை குளிர்ச்சியை உண்டாக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் திறன்கொண்டது. தேகம் குளிர்ச்சி அடையும். மலச்சிக்கல் இருக்காது. சிறுநீர் பிரிவது எளிதாக இருக்கும்.

பூ: அகத்திப் பூச்சாற்றைக் கண்ணில் பிழிய, கண்வலி குணமாகும். சாறெடுத்து நெற்றிப்பொட்டில் பூச தலைவலி நீங்கும்.  பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். பூவை சமைத்து உண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்

மரப்பட்டை: குடிநீரில் இட்டுக் குடித்துவந்தால், அம்மைக் காய்ச்சல் தீரும். மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.

வேர்ப் பட்டை: அகத்தி வேர்ப் பட்டையில் சாப்போனின், டானின், ட்ரைடெர்பின் போன்ற பல வேதிப் பொருட்கள் உள்ளன. வேர்ப் பட்டையை நீரில் இட்டுக் குடித்து வந்தால், மேகம், ஆண் குறியில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ஐம்பொறிகளில் ஏற்படும் அனைத்து வகையான எரிச்சல்களையும் குணமாக்கும்.

வேர்ப்பட்டையை அரைத்து வாத வலி மேல் பூசி வர, வலி மாறும்.

அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் பயன்படுகிறது.

அகத்திக் கீரையை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். இல்லாவிட்டால், வாயுவை உண்டாக்கிவிடும். மேலும் தினசரி அதிக அளவில் உண்டால், வயிற்றுக் கடுப்பையும் ஏற்படுத்திவிடும். இந்தக் கீரைக்கு மருந்துகளின் செயல்பாடுகளைத் தடுக்கும் இயல்பு உண்டு. எனவே, பிற மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் அகத்தியைத் தவிர்ப்பது நல்லது.

பல வீடுகளில் முருங்கை மரம் இருக்கும் அதை போல வீட்டுத் தோட்டத்தில் அகத்தி மரத்தையும் வளர்க்க வேண்டும். கடைகளில் இதன் விதை கிடைக்கும். தவறாதது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.

அகத்திக் கீரையைத் தானமாகக் கொடுப்பது மிகவும் சிறப்புடைய செய்கையாகக் கருதப்படுகிறது. அதிலும் பசுக்களுக்குக் கொடுத்தல் பூர்வ-கர்மவினைகள் யாவும் விலகும் என்பர். ஆனால் இக்கீரையைத் தின்று கொண்டிருக்கும் கறவை மாட்டின் பாலில் உடலுக்கு நன்மை தரும் அனேக நற்குணங்கள் நிரம்பி இருக்கும். இப்பாலைச் சாப்பிடுவதால் அகத்திக் கீரையை உண்பதால் உண்டாகும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.

அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது. வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் பயன்படுகிறது.

அகத்தியின் மிலாரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் ஒருவகை நார் மீன்பிடி வலைகளுக்குப் பயன்படுகிறது.

-மூலிகைவளம்

தொகுப்பு -thamil.co.uk