மணத்தக்காளி கீரை

மூலிகையின் பெயர் – மணத்தக்காளி
தாவரவியல் பெயர் – SOLANUM NIGRUM
தாவரவியல் குடும்பம் – SOLANACEAE
வேறு பெயர்கள் – மணித்தக்காளி, மிளகுத்தக்காளி, உலகமாதா, சிறுன்குன்னி
ஆங்கிலப் பெயர் – APPLE OF SODOM, BLACK NIGHTSHADE, POISON BERRY etc.
பயன்படும் உறுப்பு – இலை, வேர், காய் மற்றும் பழம்

வளரியல்பு – மணத்தக்காளி செடி வகையைச் சேர்த்தது. இது சுமார் 40 செ.மீ. உயரம் வரை வளரும். அதே அளவு பரவலாக அடர்த்தியாகப் படரும். சற்று மணற்பாங்கான நிலம், குப்பை, எரு கலந்த மண், குளிர்ச்சியான பகுதிகளில்தான் இது செழித்து வளரும். இதன் இலைக் காம்பிலிருந்து சிறுநரம்பு வளர்ந்து அதில் கொத்துக் கொத்தாக மொக்கு விட்டு மலர்ந்து காய்க்கும். இதன் பூ கத்திரிப்பூவைப் போல நான்கு இதழ்களுடன் கூடியதாக மிகச்சிறிய அளவில் வெண்ணிறமாக இருக்கும். நடுவில் சிறிய மகரந்தத் தண்டு இருக்கும். இதன் காய் மிளகு அளவில் மிளகுக்காய் போலவே இருக்கும். இக்காய்கள் காய்த்துக் கறுநிறமாகப் பழுக்கும். இந்தப்பழம் இனிப்பாக ருசியாக இருக்கும். இதனுள் கத்திரி விதைபோல மிகச்சிறிய விதைகளிருக்கும். இதை ஒருசிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். இது விதைமூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மணத்தக்காளி-thamil.co.ukகீரைகளை கடவுள் நமக்கு தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் கீரைகளில் சத்துக்களானது அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் உள்ள பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைக்கச் சொல்வார்கள். மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான், அவர்களின் உடல் இன்றுவரை மிகவும் வலிமையுடன் உள்ளது. அதுமட்டுமின்றி, அவர்களின் உடலை எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.

இத்தகைய கீரைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மணத்தக்காளி கீரை. மணத்தக்காளி கீரைக்கு மனத்தக்காளி, மிளகுத்தக்காளி, சுக்குடிக்கீரை என்ற பெயர்களும் உண்டு.

மணத்தக்காளி ஒரு மீட்டர் உயரம் வளரும் செடி. இலைகள் பச்சை நிறமாகவும், பூக்கள் வெள்ளை நிறமாகவும் இருக்கும். காய்கள் முதலில் பச்சை நிறமாகவும், பின்பு சிவப்பாகி கருமையாகும். காய்கள் கருமிளகு போல் இருப்பதால் இது மிளகு தக்காளி என்றும் அழைக்கப்படும்.

மணத்தக்காளி கீரையில் புரதம் (5.9 சதவீதம்), கொழுப்பு(1.0 சதவீதம்), சுண்ணாம்பு(210 மி.கி), பாஸ்பரஸ்(75 மி.கி), இரும்புச்சத்து(20.5 மி.கி) ஆகிவையும், மருத்துவ குணங்களான கிளைக்கோ ஆல்கலாய்டு (2.70 சதவீதம்), டானின் (3.60 சதவீதம்), சப்போனின்(9.10 சதவீதம்) ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆக்டிவிட்டி(59.37 சதவீதம்) என ஏராளமான தாது உப்புகளும், உயிர் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன.

மணத்தக்காளி கீரை-thamil.co.ukஇத்தனை சிறப்பான மணத்தக்காளிக் கீரை சாப்பிடுவதால் குடல்புண், நாக்குப்புண், வாய்ப்புண், தொண்டைப்புண், வாய் வேக்காடு, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், காசம், சுவாசகாசம், இரத்தகாசம், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல் இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம்.

இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது.

மருத்துவ குணங்கள்

வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மட்டுமின்றி வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும். உடலுறுப்புகளில் வேறெங்கும் புண் இருந்தால் அவையும் குணமாகும்.

வெறும் கீரையை உண்டாலே வாய்ப்புண்கள் ஆறும். சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கீரையை வேக வைத்து உண்டால் புண்கள் சீக்கிரம் ஆறும். குடல் புண்களையும்மணத்தக்காளி ஆற்றும். வாய்ப்புண்,நாக்குப்புண், வாய்வேக்காடு, குடல் புண் போன்றவற்றுக்கு மணத்தக்காளி கீரை கண்கண்ட மருந்தாகும். வாய் வெந்திருக்கும் போது மணத்தக்காளி, சிறிது சீரகம், ஒரு மிளகாய் வற்றல் சேர்த்து, எண்ணெய்யில் வதக்கி, தண்ணீர் சேர்த்து வேக வைத்துபிறகு அதில் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து உண்டால் வாய்ப்புண் உடனே குணமாகும்.

மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும்.

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால் தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வாத நோய்கள் குணமாக, மணத்தக்காளி கீரையை உப்பு போட்டு சமைத்து சாப்பிட வேண்டும். கப நோய்களுக்கும் நல்ல மருந்தாகும். கப நோய்கள் தீர, ஒரு கைப்பிடி மணத்தக்காளிக்கீரையை எடுத்து 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து விழுதாக அரைத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் தணியும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன் செரிமான பிரச்சனையும் நீங்கிவிடும்.

காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் காங்கை (சூடு) தணியும். உடல் குளிர்ச்சியடையும்.

காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.

காய்ச்சல் வந்தால் கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும் காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.

சருமத்தில் அலர்ஜி வெயில் கட்டி, தேமல், சொறி சிரங்கு போன்றவை இருந்தால் அப்போது மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால் விரைவில் குணமாகும். இலைச்சாற்றை வெளிப்புண்கள் மேல் தடவினாலும் ஆறிவிடும்.

சிலர் தினமும் சரியாக சிறுநீர் கழிக்கமாட்டார்கள். அத்தகையவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் இசிறுநீர் சீராக வெளியேறி சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கலாம். ஒரு கைப்பிடி அளவு கீரையுடன் ஒரு கரண்டி பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து கஷாயமாக செய்து குடித்து வர சிறுநீர் நன்கு பிரியும். நீர்க்கடுப்பு, எரிச்சல் குணமாகும்.

உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் கரு வலிமை பெறும். குறிப்பாக பெண்கள் சாப்பிட்டு வந்தால் பிரசவம் எளிமையாக நடைபெறும். முக்கியமாக ஆண்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் அவர்களின் விந்தணு வலிமையுடன் இருக்கும்

மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காண மணத்தக்காளி கீரை பெரிதும் உதவியாக இருக்கும். மணத்தக்காளி இலைச்சாற்றுடன் பால் சேர்த்து குடித்து வர, காமாலை குணமாகும்.

அதிகப்படியான களைப்பு உள்ளவர்கள் இரவில் படுக்கும் போது மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் உடல் களைப்பை போக்குவதோடு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

மணத்தக்காளி கீரை மற்றும் பழத்தினை காய வைத்து பொடி செய்து காலை மற்றும் மாலையில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி குணமாவதோடு இதயமும் வலிமையடையும்.

மணத்தக்காளி செடியை இலை, காய், பழம் இவற்றுடன் சேர்த்து இடித்து பிழிந்தெடுத்த சாறு கல்லீரல் வீக்கம், கணைய வீக்கம் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.

உடல் எடை குறைய, மணத்தக்காளி கீரையை 100 கிராம் எடுத்து கொதிக்கும் நீரில் 5 / 10 நிமிடம் போட்டு எடுத்து வெங்காயம் (அரிந்தது), பாதி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கஷாயம் தயாரிக்கவும். இதை காலை உணவுக்கு பின் சாப்பிட்டால் அதிஸ்தூலம் (அதிக உடல் பருமன்) குறையும்.

உடல் இளைத்திருப்பவர்கள் மணத்தக்காளி சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட உடல் பருக்கும்.

உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது.

-மூலிகைவளம்

தொகுப்பு – thamil.co.uk