முடக்கறுத்தான் கீரையின் மகிமை

முடக்கறுத்தான் கீரை

நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறிய வேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடிஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல கழிவறை அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது.

அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அவ்வாறு செல்லும்போது இரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிறிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்தச் சிறுசிறு கற்கள் சுமார் சினோரியல் மெம்கிரேம் (நமது மூட்டுகள் நம் எண்ணத்திற்கு ஏற்ப அசைவதற்கு உதவும் ஒரு தசை) என்னும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.

சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் (rheumatoid arthritis) ஆரம்ப நிலை.

இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து இந்தியாவின் சில மூலிகைகளை காப்பாற்றியும், அதில் உள்ள மருத்துவக் குணங்களையும், எந்த மூலக்கூறு ஒவ்வொரு மூலிகையிலும் எந்தெந்த வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதைப் பற்றியும் கூட்டு முயற்சியில் செயல்பட்டார்கள்.

அப்போது முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள். இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறுநீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.

முடக்கறுத்தான்-thamil.co.ukமுடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்

மூலிகையின் பெயர் – முடக்கறுத்தான்
தாவரவியற்பெயர் – Cardiospermum halicacabum
வேறுபெயர்கள்  –  முடக்கற்றான்,  முடர்குற்றான்,  மொடக்கொத்தான்

சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் – சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி”  – சித்தர் பாடல்

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

வளரியல்பு  – முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது.  இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும். இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும். தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமு டியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும்.

இந்தக் கொடியின் தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும்.  இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும்.

முடக்கறுத்தான்ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும்.

கம்பி போன்ற காம்பின் நுனியில் வெண்ணிறப் பூக்களும் காய்களும் இருக்கும். அந்தக் காய்கள் மிருதுவான தோல்களால் முப்பட்டை வடிவமாக மூடிக்கொண்டும், பலூன் போன்று உப்பிக் கொண்டும் இருக்கும்.

இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித்தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உரித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும். விதைகள்  நன்கு முற்றிக் காய்ந்தவுடன் உருண்டையாக, கறுப்பு நிறமாக இருக்கும்.  இந்த விதைகளே சிதறி முளைக்கிறது.

முடக்கறுத்தான் காய்-thamil.co.ukஇதன் காய் முற்றியபின் பழுப்பு நிறமாக மாறிக் காய்ந்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம், தனியாக மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

இலையில் ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலிய சத்துக்கள் அடங்கியுள்ளது.

முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாதநோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப் பெயர் பெற்றது.

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாக சுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

சுகப்பிரசவம் ஆக
முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கைகண்ட முறையாகும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக
மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை
ஒரு கை பிடியளவு முடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு, சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.

முடக்கற்றான்-thamil.co.ukபாரிச வாய்வு குணமாக
கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை நைத்து ஒரு சட்டியில் போட்டு அதேயளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும்  சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால் பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

சுக பேதிக்கு
ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்து இதில் போட்டு அரைத்து தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமிச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம் மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காய்ச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும்.

இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டுவர காதுவலி, காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடிநீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்ட இருமல் குணமாகும்.

சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர்பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்து குறிப்பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப்படி குடிநீர் அருந்திவர நாள்பட்ட மூலநோய் குணமாகும்.

முடக்கத்தான் கீரை 61 கலோரி வெப்ப ஆற்றலைக் கொடுக்கிறது. இதன் இலைகளை சிறிது எடுத்து துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வர, கை, கால் வலி, மூட்டுவலி தீரும். நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும். தசை நாரும் நரம்பும் வலுப்பெறும்.

கைப்பிடியளவு முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, அரைத்த புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து, அடையாக சுட்டு காலை, மாலை இரண்டு அடை வீதம் சாப்பிட்டு வர உடல் வலி நீங்கும்.

இதன் இலைகளை மூன்று விரல் அளவு எடுத்து, மிளகு ரச மசாலுடன் தட்டிப் போட்டு ரசம் செய்து சாப்பிட்டு வர கீல்வாதம், மூட்டுப் பிடிப்பு, இடுப்புப் பிடிப்பு போன்ற நோய்கள் தீரும். மலச்சிக்கல் தீரும். வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

இதன் இலைகள் நான்கு விரல் அளவு எடுத்து, வெங்காயம் சிறிது கூடுதலாக நறுக்கிப்போட்டு, மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து சில நாட்கள் சாப்பிட்டு வர கழுத்துவலி, இடுப்பு வலி, முடக்குவாதம் போன்ற நோய்கள் தீரும்.

இதன் இலைகளை அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில் சாப்பிட்டு வர, காசம், சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற நோய்கள் தீரும்.

இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து, அதனுடன் கருப்பட்டி சேர்த்து உண்டுவர குடலிறக்க நோய் தீரும்.

இதர கீரைகளை சமைப்பது போலவே முடக்கற்றான் கீரையை சாப்பிட்டு வரலாம். இலை, வேர் இவற்றை சம பாகமாக எடுத்து, இஞ்சி, மிளகு, சீரகம், தண்ணீர் சேர்த்து, கஷாயமாக, காய்ச்சி, அந்த எண்ணையை வலியுள்ள இடங்களில் பூசலாம். இதற்கு நல்லெண்ணையை பயன்படுத்தலாம்.

இந்த மூலிகை செறிந்த எண்ணைப்பூச்சு, கீல்வாத வலிகளை போக்கும். வாத வீக்கங்களுக்கு, முடக்கற்றான் தண்டு, இலைகளை, பாலுடன் அரைத்து தடவ, வீக்கங்கள் குறையும்.

முடக்கற்றானை உபயோகிப்பதால் கால்களின் ஏறி வரும் விறைப்புத் தன்மை (அதுவும் காலை நேரங்களில் ஏற்படும்) போகும். உடல் வலிகளுக்கு, இலைகளை கடலை எண்ணையில் அரைத்து, வெளிப்பூச்சாக வலிக்கும் இடங்களில் தடவலாம்.

கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாமல் போதல், நடக்க முடியாமல் போதல், இவற்றுக்கு முடக்கற்றான் கீரையை சமைத்து சாப்பிட்டுவர நல்ல குணம் தெரியும்.

இதன் இலைகளை அரைத்து, பூண்டு, சீரகம், கருமிளகு, உப்பு, வெங்காயம் இவற்றை சேர்த்து, ரசம் போல் தயாரித்து, ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடிக்க, ருமாடிஸம், சுளுக்கு, மலச்சிக்கல் இவை மறையும்.

இலைகளை நெய்யில் வதக்கி, கூட இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி போல அல்லது துவையல் போல தினமும் சாப்பிட்டு வர மூட்டு நோய்கள் தீரும்.

இதன் இலைகள் மூன்று விரல் அளவு எடுத்து, வெல்லம் சேர்த்து நெய்விட்டு வதக்கி உண்டு வர, கண் வலி தீரும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் பல குணமாகும்.

இதன் இலைகளைப் பாலுடன் சேர்த்து அரைத்து, கொப்புளங்களுக்குத் தடவி வர குணம் கிடைக்கும்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலைகளை இடித்து, ஒரு பழகின மண்பானையில் இட்டு, அரைப்படி நீர் விட்டு அரைக் கால் படியாக சுண்டக்காய்ச்சி, வடிகட்டி ஒரு வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் இரண்டுவேளை மூன்று நாள் அருந்த நரம்புகள் சம்பந்தமான மேக வாய்வு, மூச்சுப் பிடிப்பு, மூலம், கபம் சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.

தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரைதோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.

முடக்கத்தான் தோசை-thamil.co.ukமுடக்கத்தான் தோசை

தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 1 கப்
முடக்கத்தான் இலை – 2 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி

செய்முறை
அரிசியையும், வெந்தயத்தையும் ஊற வைத்து தோசை மாவுக்கு அரைப்பது போலவே அரைத்து, அதனுடன் முடக்கத்தான் இலையையும் நன்கு கழுவிப் போட்டு அரைத்து விடவும். மூன்றையும் ஒன்றாகவே போட்டு அரைக்கலாம். மிகவும் நைசாக முதல் நாள் இரவே அரைத்து வைத்து விடவும். மறுநாள் தோசைக்கல்லில் தோசை போல வார்க்கவும். இதற்கு தேங்காய் சட்னி, பூண்டுச் சட்னி இரண்டுமே நன்றாக இருக்கும்.

மூட்டு வலியை நீக்கும், முடக்கத்தான் கீரை இடலை இட்லி

தேவையானவை:
இட்லி அரிசி – 3 கப், முழு உளுந்து – அரை கப், வெந்தயம் – ஒரு கைப்பிடி, முடக்கத்தான் கீரை (ஆய்ந்தது) – 2 கப், வாழை இலை – 1, நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் முதலில் வெந்தயத்தைப் போட்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அரைத்து, முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பிறகு உளுந்து, அரிசியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து–வைத்த ஆறு மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். இடலைத் தட்டு அல்லது இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து, சிறிது நல்லெண்ணெய் தடவி மாவை அகலமாக கொஞ்சம் தடிப்பாக ஊற்றவும். இடலைத் தட்டை மூடிவைத்து ஆவியில் வேகவிடவும். 10 நிமிடங்களில் வாழை இலை மணத்துடன்… சுடச்சுட சுவையான, சத்தான முடக்கத்தான் இடலை இட்லி தயார்.

Balloon Vine BuddakakaraHealth Benefits Of Balloon Vine-Buddakakara

1. It is used in the treatment of rheumatism, nervous diseases, stiffness of the limbs and snakebite
2. The leaves are rubefacient, they are applied as a poultice in the treatment of rheumatism
3. A tea made from them is used in the treatment of itchy skin
4. Salted leaves are used as a poultice on swellings
5. The leaf juice has been used as a treatment for earache
6. The root is diaphoretic, diuretic, emmenagogue, laxative and rubefacient
7. It is occasionally used in the treatment of rheumatism, lumbago and nervous diseases
8. It is used in treating Anemia, Asthma, Urinary Incontinence
9. It is used in treating Arthritis, Backache, Baldness, Cough, Dandruff, Diarrhea, Dysentery, Earache, Eczema, Eye Diseases, Fracture, Gout, Headache, Menses Scanty, Menstrual Disorders, Piles, Rheumatism, Swelling, Wounds.
10. It is used as Hair growth stimulator

– உணவே மருந்து
– koodal.com
– Wisdoms of Siddhars
-yadtek.com

தொகுப்பு – thamil.co.uk