வரகு – சத்துக்கள், சமையல்

varagu

உணவே மருந்தாக இருக்கவேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த எளிதாக சமிபாடடையும் பொருட்களை உணவாக உட்கொள்ளும்போது சமிபாட்டுத் தொகுதி சீராக இயங்கி பலவித நோய்களை வர விடாமலும், வந்த நோய்களின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவேதான் இந்திய பாரம்பரியமான உணவு வகைகள் அனைவரின் உடலிற்கும் சுற்றுப்புற தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு அமைகிறது.

நம் முன்னோர்கள் வரகு அரிசியில் அதிக சத்துக்கள் இருப்பதை உணர்ந்து அதிக அளவில் விரும்பி உட்கொண்டனர். பிற்காலங்களில் அரிசி உணவு பிரதானமாக புழங்கப்பட்டதற்கு முக்கிய காரணம் சமைப்பதற்கு எளிமையானது என்ற ஒன்றேதான். சிறுதானியங்களின் (small millet’s) பயன்பாடு மிகவும் குறைந்து காணாமல் போகும் சூழ்நிலையை மாற்றி இளைய தலைமுறையினரும் சிறுதானியங்களின் அருமைகளை தெரிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இது.

கோதுமை, அரிசியை விட வரகு சிறந்த உணவு. ஏனெனில் இரும்பு, கல்சியம், விட்டமின் B, புரதச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாகவும், பைட்டிக் அமிலமும், மாச்சத்தும் குறைவாகவும் காணப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாக அமைகிறது. விரைவில் சமிபாடு அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். தாதுப்பொருட்களும் அதிகளவில் உள்ளன. அதிக சத்துக்கள் நிறைந்த வரகை உபயோகப்படுத்தி இட்டலி, தோசை, அப்பம், பனியாரம், பொங்கல், பாயாசம் என்று வகைவகையாக சமைத்து உண்ணலாம்.

வரகு கஞ்சி
தேவையான அளவு வரகு அரிசியை தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம், வெந்தயம், தேவையான உப்பு சேர்த்து வேகவைத்து குடிக்கலாம்.

விருப்பப்பட்டவர்கள் காய்கறிகள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சிறிதளவு கொத்தமல்லி, புதினா இவற்றை சேர்த்து வதக்கி கொதிக்க வைத்த வரகு கஞ்சியில் மிளகுத்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து மரக்கறி வரகு கஞ்சியாகவும் குடிக்கலாம். மிகவும் அருமையாக இருக்கும்

வரகு உப்புமா
வரகுஅரிசி, வெங்காயம், கரட், குடமிளகாய், பீன்ஸ், உருளைக்கிழங்கு பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, எண்ணெய்,உப்பு தேவையான அளவு.

ரவை உப்புமா செய்வது போலவே இதையும் செய்யலாம். (ஒன்றுக்கு இரண்டு என்று கூடுதலாக தண்ணீர் விட வேண்டும்)

வரகு புளியோதரை
வரகு ஒருகப், புளி தேவையான அளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஒவ்வொன்றும் அரை தேக்கரண்டி, செத்தல் மிளகாய் 6, மல்லி ஒரு தேக்கரண்டி, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை கடுகு தாளிக்க, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

மல்லி, செத்தல் மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து புளிக் கரைசல், உப்பு, வறுத்த மிளகாய், மல்லி பொடி, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த வரகையும் சேர்த்து வேக வைத்து இறக்கவும்.

வரகு இட்லிவரகு இட்டலி
வரகு 500 கிராம், வெள்ளை உளுந்து 200 கிராம், கொள்ளு 2 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு.

வரகு, உளுந்து, கொள்ளு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பின் எப்போதும் போல இட்டலி பாத்திரத்தில் ஊற்றி எடுத்து சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.

வரகு கார அப்பம்வரகு கார அப்பம்
வரகு 200 கிராம், உளுந்து 50 கிராம், தேங்காய் 1 கப் இஞ்சி 1துண்டு, புளித்த மோர், பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு, சின்ன வெங்காயம் 10.

வரகுடன் உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய், உப்பு மற்றும் மோர் ஊற்றி தோசைமா பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும். தாச்சியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், வெந்தயம் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் சேர்த்து வதக்கி மாவில் கொட்ட வேண்டும். பின் குழிப்பணியார சட்டியில் ஊற்றி எடுத்தால் சுவையும், சத்தும் நிறைந்த வரகு கார அப்பம் ரெடி.

வரகு இனிப்பு பணியாரம்
வரகு 200 கிராம், உளுந்து 50 கிராம், தேங்காய் 1 கப் வாழைப்பழம் 1, வெல்லம் 100 கிராம், ஏலக்காய் 1, எண்ணெய் தேவையான அளவு

வரகையும் உளுந்தையும் அரைமணி நேரம் ஊறவைத்து வாழைப்பழம், தேங்காய், வெல்லம், ஏலக்காய், உப்பு என அனைத்தையும் தோசைமா பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். தாச்சியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கரண்டியால் மாவை ஊற்றி வெந்ததும் உண்ண சூடான சுவையான வரகு இனிப்பு பணியாரம் ரெடி.

வரகு பொங்கல்வரகு பொங்கல்
வரகு 200 கிரம், பாசி பருப்பு 50 கிரம் மிளகு, சீரகம், இஞ்சி,நெய், எண்ணெய், முந்திரி பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, உப்பு, தண்ணீர் தேவையான அளவு, மண்சட்டி.

மண்சட்டியில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் முந்திரி லேசாக தட்டி வைத்த மிளகு, சீரகம், பெருங்காயம், சிறுதுண்டுகளாக வெட்டிய இஞ்சி, கருவேப்பிலை தாளித்து வரகு அரிசி, பாசி பருப்பு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். இறக்கியதும் நறுக்கிய கொத்துமல்லி இலை தூவி வரகு அரிசி பொங்கல் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

வரகரிசி பாயசம்வரகரிசி பாயசம்
வரகரிசி – 100 கிராம்,  தேங்காய் பால் – 1 கப்,  துருவிய வெல்லம் – அரை கப்,  பாசிப்பருப்பு – 1 மேசைக்கரண்டி,  முந்திரி, திராட்சை – தேவைக்கேற்ப,  ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி, நெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் – அரை தேக்கரண்டி.

அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, ஊற வைத்த அரிசியுடன் சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு, வேகவைத்து, வெந்ததும், அதை நன்கு மசித்து, வெல்லப் பாகு சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு தேங்காய் பால் அல்லது சாதாரண பால் விட்டு, இறக்கி, ஏலக்காய் சேர்த்து, நெய் அல்லது எண்ணெயில் வறுத்த முந்திரி, திராட்சை தூவிப் பரிமாறவும்.

-அக்குபஞ்சர் அறிவோம்