ஆரைக் கீரை

ஆரைக் கீரைதின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்
பொன்றாத நீரிழிவைப் புண்ணீரை -யென்றுமிந்த
ஆராரைச் சாராம லோட்டிவிடு நாலிதழால்
நீராரைக் கீரையது நீ
(அகத்தியர் குணவாகடம்)

பொருள் –
ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார். செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர்த் தாவரம். கீரையாகச் சந்தையில் ஆரைக்கீரை அல்லது ஆலக்கீரை என்ற பெயரில் விற்பனைக்கு வருவதுண்டு.

Botanical name : Marsilea quadrifolia
common name  : Four Leaf Clover

நீர் நிறைந்த வயல்கள், நீரோடையின் கரைகள், ஏரிக்கரைகளில் வளரும் இக்கீரைக்கு பூவோ காயோ எதுவும் இல்லை. நான்கு இலைகளுடன் காணப்படும் இக்கீரையை ஆவாரை, சதுப்பன்னி என்றும் அழைக்கிறார்கள். ஆரைக்கீரை இனிப்புச் சுவை உடையது.

இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும், நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆரைக் கீரை-thamil.co.ukஆரைக்கீரை சூப்

ஆரைக் கீரை – 1 கைப்பிடி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 5
பூண்டுப்பல் – 3
மிளகு – 5
சீரகம் – 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
இஞ்சி – 1 சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும். மலச்சிக்கல் தீரும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது. பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும்.

வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.

இக்கீரையைச் சமைத்து உண்டால் வெள்ளை நோய் குணமாகும். அதிகமான தாகத்தைத் தணிக்கும். சிலருக்கு சிறுநீரில் இரத்தம் கலந்து போகும். அவர்களுக்கு இக்கீரை கண் கண்ட மருந்து.

சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் மதியம் மட்டும் இக்கீரையைத் தொடர்ந்து நாற்பது நாட்கள் சமைத்து உண்டுவர, நல்ல குணம் கிட்டும். இக்கீரை உடலுக்கு நல்ல வலுவூட்டும்.

இக்கீரையை வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி வடி கட்டிக் கொள்ளவும். அதில் சிறிதளவு சக்கரையை கலந்து நாள்தோறும் குடித்து வந்தால் நோய்கள் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆரைக்கீரை, வல்லாரை இலை மற்றும் மணத்தக்காளி இலை ஆகியவற்றை சிறிதாக வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை இடித்து போட்டு நீர் விட்டு ரசம் போல செய்து காலை, மாலை குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து ஞாபக மறதி குறையும்.

இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

தொகுப்பு -thamil.co.uk