ஆல்

ஆலமரம்-thamil.co.ukஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி என திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை இன்றும் கூட  காணலாம். ஆலமரம் (banyan tree)  விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது. மழை, வறட்சி இவைகளால் அதிகம் பாதிக்கப்படாதது. அதுபோல் குடும்ப உறவை விழுதுகள் போல் அனைவரும் தாங்கி வருவதற்காகவே ஆலமரத்தைச் சொல்கின்றனர்.

நீண்ட நெடிய பல விழுதுகளைக் கொண்டு பரந்து விரிந்து பசுமையாகக் காணப்படும் மரம்தான் ஆலமரம்.  மரத்தின் கிளைகளைத் தாங்கி நிற்கவே விழுதுகள் தோன்றி அவை மண்ணில் ஊன்றுகின்றன.  இன்றும் கிராமங்களில் சாலைகளிலும், குளக்கரைகளிலும்,  பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நிழல் தரும் மரமாகத் திகழ்கிறது.  பண்டைய காலத்தில் மன்னர்கள் ஆலமரம், புங்கமரம் இவற்றை நட்டு வளர்த்தனர்.  அதன் பயனை பலநூறு ஆண்டுகளுக்குப் பின் நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம்.  ஆலமர நிழல் ஆரோக்கியத்திற்கு நல்லது.  அரசமர நிழல் எவ்வாறு ஆரோக்கியத்தைத் தருகிறரோ அதேபோல் ஆலமர நிழலும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா முழுவதும்  எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.இதனை இயக்கு ரோதம், காமரம், சோளி, தோல்மரம், பாமரம், பூதம், வடம், பானோக்கி என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.  தன் இலை, பழம், பூ, விழுது, பால்  அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை.

அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட
வச்சமற மேகமுந்தீ யாகுமே-இச்சகத்தில்
நாதனென மூவருக்கு நற்றுணையா மாக்கைக்கும்
பூத மதிபதியைப் போல்
தேரையன் வெண்பா
பொருள் – நாள்பட்ட புண்கள், மேகம், வயிற்றுக் கடுப்பு, நீரிழிவு இவைகளைப் போக்கி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும்.

சொல்லுகின்ற மேகத்தைத் துட்ட அகக்குப்பைக்
கொல்லக்கின்ற நீரிழிவை கொல்லுங்காண்- நல்லாலின்
பாலும் விழுதும் பழமும் விதையும் பூவும்
மேலும் இலையுமென விள்
-அகத்தியர் குணபாடம்

உடலில் உண்டான கட்டிகளுக்கு ஆல இலையை அரைத்து கட்டிகள் மீது தடவினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும்.

ஆலமரத்தின் பழுத்த இலைகளை சுட்டு சாம்பலாக்கி, நல்லெண்ணெயில் கலந்து, கரப்பனுக்கு பூசி வந்தால் கரப்பான் எளிதில் காணாமல் போகும்.

ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவலாம்.

வெள்ளைபடுதல் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். மேலும் அவர்கள் மெலிந்து காணப்படுவார்கள்.  இவர்கள் ஆலமரத்தின் சிறு வேர்ப்பட்டைகளை உரித்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து பிறப்புறுப்பின் மீது கழுவி வந்தால், வெள்ளைபடுதல் குணமாகும்.

ஆலம் பழம் தசைவலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆறாத புண்கள் மீது ஆலம்பாலைத் தடவி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

எலும்பு முறிவு, சுளுக்கு, இரத்தக்கட்டு போன்றவற்றிற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று கட்டு மீதும், சுளுக்கு, இரத்தக்கட்டு மீதும் ஆலம் பாலைத் தடவி வந்தால் எலும்புகள் இணைவதுடன், இரத்தக்கட்டு, சுளுக்கும் நீங்கும்.  எலும்புகள் பலமாகும்.

ஆலம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வாயில் ஊற்றி கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், வாய் நாற்றம், நாவெடிப்பு, ஈற்றுப்புண் இவைகள் நீங்கும். இரண புண்களுக்கு இந்த நீரைக் கொண்டு கழுவலாம்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி என்பது நம் முன்னோர்களின் பழமொழி.

ஆலம் விழுதுகளைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் நன்கு வலுவுடன் பளிச்சிடும். ஆலம் பால் ஆடும் பற்களை உறுதிப்படுத்தும். பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நீக்கி ஈறுகளை பலப்படுத்தும். பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி போகும்.

ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத் தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன. இந்த விதைகள் நுண்ணியவையாக இருந்தாலும் மருத்துவ குணம் நிறைந்தவை.

ஆலம்பழம்-thamil.co.ukஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது. மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்க வேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்துவர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொருத்து தினசரி ஒரு ஸ்பூன் பாலில் கலந்து அருந்தலாம்.

ஆலமரத்தின் மருத்துவ குணங்கள்

மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம். கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது. நிழல் தரும் மரமாகத் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது. சாறு பால் வடிவாக இருக்கும். இலை, பூ, பழம், விதை, பால், பட்டை, விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

விழுது, பட்டை, இலை, ஆகியவை உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும்.

1. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை, மொட்டு, கொழுந்து, பழம், விழுது வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் சிதைத்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலையாக ஒவ்வொரு நாளும் குடித்து வர மேக எரிச்சல், மேகப்புண், மேக ஒழுக்கு தீரும்.
2. ஆலம் பால் 20 துளி சர்க்கரையுடன் காலையில் சாப்பிட்டுப் புளி, காரம் நீக்கி உண்ண ஒரு மண்டலத்தில் கொறுக்கு தீரும்.
3. ஆலம் பாலை காலை மாலை தடவி வர வாய்ரணம், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, கை, கால் வெடிப்பு, பல் ஆட்டம் ஆகியவை தீரும்.
4. ஆலம் பட்டை, ஆத்திப்பட்டை, அவுரிவேர்ப்பட்டை வகைக்கு 40 கிராம், 10 கிராம் மிளகுடன் சிதைத்து 8 லிட்டர் நீரில் போட்டு 2 லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 250 மி.லி. வீதம் தினம் 3 வேளை குடித்து வர பாதரசபாசாணங்களின் வேகம் குறையும்.
5. ஆலமரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு 200 கிராம் சிதைத்து 4 லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சிக் காலையில் மட்டும் ஒரு குவளை குடித்து வரலாம். 4 நாள்களுக்கு ஒரு முறை தயாரித்துக் கொள்ளலாம். 1 முதல் 4 மண்டலம் வரை சாப்பிட மதுமேகம் தீரும்.
6. ஆலம் பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சை அளவு காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 120 நாள்களில் விந்து அணுக்கள் உற்பத்தியாகும்.
7. விழுது துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் அளவுக்குக் காலையில் மட்டும் பாலில் கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.
8. துளிர் இலைகளை அரைத்து 5 கிராம் அளவுக்குத் தயிரில் கலந்து கொடுத்து வர இரத்த பேதி நிற்கும்.
9. விழுதைக் கொண்டு பல் தேய்த்து வரப் பற்கள் உறுதிப்படும்.

-nakkeran.in
-karaichelvan
-இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்