உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள்

சிறுதானியங்கள்.thamil.co.uk

ஆரோக்கிய வாழ்விற்கு ஒரு ஆராய்ச்சி மையம்- ஜெயாசுந்தரம்

சித்தமருத்துவத்தை பொறுத்தவரையிலும் பஞ்சபூதங்களும், அறுசுவைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகக் கருதப்படுகிறது.

இனிப்பு – மண்ணும் நீரும்
துவர்ப்பு – மண்ணும் காற்றும்
கசப்பு – காற்றும் ஆகாயமும்
புளிப்பு – மண்ணும் தீயும்
உப்பு – நீரும் தீயும்
காரம் – காற்றும் தீயும்
என்ற வகையில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே இனிப்பு சாப்பிடும் பொழுது கபம், கசப்புடன் வாதமும், தீயுடன் பித்தமும் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. கலோரி என்ற ஒரு உணவின் சத்து அளவு இன்றைக்கு வெகுவாகப் பேசப்படுகிறது. இந்த அளவுடன் கூட சித்த மருத்துவம் ஒவ்வொரு உணவுப் பொருளில் உள்ள நிறமூட்டி (Colour), மணமூட்டி (Flavour), சுவையூட்டி(Smell or taste) இவைகளைக் கொண்டே உணவின் உபயோகத்தையும் கலோரியையும் நிர்ணயிக்கிறது.

இந்த வகையில் சிறுதானியங்கள்(Minor Millets) என்று சொல்லப்படும் வகைகளை நாம் ஒதுக்கியே வைத்து இருந்தோம். அவை ஏழைகளின் உணவு, சமைக்கும் முறை கடினமானது. இதை சாப்பிடுவது மேல்தட்டு மக்களுக்கு உகந்தது இல்லை என்ற எண்ணம்தான் இருந்தது. ஆனால் இன்றைய மாசு நிறைந்த சூழலில் இந்த வகை சிறுதானிய உணவுகள்தான் நம்மை காப்பாற்றும் என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டுவிட்டோம்.

சிறுதானியங்கள் என்பது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
கம்பு – Pearl millet
வரகு – Kodo Millet
தினை – Fox millet
ராகி – Finger Millet
சோளம் – Jowar Millet
சாமை – Little Milliet
குதிரைவாலி – Banyard Millet

இவற்றின் குணங்களாக சித்தமருத்துவம் கூறுவது.

ராகி – வயிற்று உபாதை (Abdominal Pain), வாதபித்தத்தை சரிசெய்யும்.

கம்பு – உடலின் உள் கொதிப்பை அகற்றி வலுவைக் கொடுக்கும்.

தினை- புரதமும், சுண்ணாம்பும் பெருமளவில் உள்ள தானியம். கபம், குளிர் காய்ச்சலைப் போக்கக் கூடியது, எலும்பு தேய்மானத்தை குறைக்கும், எலும்புமுறிவு (Fracture) குணமாவதை துரிதப்படுத்தும்.

சாமை – ஆயுர்வேதத்தில் சாமை ராசதான்யம் என்று சொல்லப்படுகிறது. வாதம், காய்ச்சல்(Fever) சமனப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.

சோளம் – சோறாகவும், உப்புமா, பொங்கல் போன்றவை செய்ய உகந்தது. உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இனிப்பும், துவர்ப்பும் கலந்த ஒரு சிறந்த தானியம்.

வரகு – சர்க்கரைவியாதி (diabetic) உள்ளவர்களின் நண்பன் இந்த வரகாகும். கபத்தையும் கட்டுப்படுத்தும் அதிக அளவில் நார்ச்சத்து (fibre) நிறைந்த பொருள் இது.

குதிரைவாலி – அடிப்படையில் சாமையைப் போன்ற தானியம் இது. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாமையின் குணங்கள்தான் இந்த தானியத்திற்கும். இவை அனைத்தும் வறண்ட தண்ணீர் குறைவான பிரதேசங்களில் எளிதில் பயிடக்கூடிய தானியவகைகள் ஆகும்.

– siragu.com

உடலுக்கு வலிமை தரும் சிறுதானியங்கள்

உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் மாறி வரும் உணவுப் பழக்கம் தான். இன்றைக்கு பாஸ்ட்புட் -fast food- கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறி விட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர்.

கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால் தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை.. கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும் வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனை குறைக்கும். இது தாய்மார்களுக்கும் பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும். சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்கவல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுபுண்னை ஆற்றும் வாய் துர்நாற்றத்தை போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது. தானியங்களில் அதிக சத்துமிக்க கேழ்வரகு ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது, உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர்ச்சத்துகளும் இருக்கின்றன. இது உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம், கேழ்வரகை கொண்டுதான் ராகிமால்ட் தயாரிக்கிறார்கள்.

நாம் உன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி, என பல வகை உள்ளது. புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும், இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்ப நிலை, வாத நோய்களை போக்கவல்லது. பசியை ஊக்குவிக்கும் ஈக்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா. மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ்சம்பா, போன்றவை மருத்துவ குணம் போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை.

அரிசியை விட கோதுமையில் அதிகமான சத்துக்கள் உள்ளன. கோதுமையில், புரதம், சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் நியாசிக் போன்றவை பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது. எண்ணெய், நெய்விடாத சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும். குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி . நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையை குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.

நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். குடல் புண்னை ஆற்றும். இருமலைத் தணிக்கும் எலும்புகளுக்கு உறுதி தரும்.

– Karthickeyan Mathan