ஆமணக்கின் மருத்துவ குணங்கள்

ஆமணக்கு-thamil.co.ukRicinus communis

கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். தமிழகமெங்கும் விளைவிக்கப்படுகிறது.

ஆமணக்கின் இலை, வேர், விதை, நெய் ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. ஆமணக்கு யூஃபோர்பியேசி என்ற ஒற்றைப் பூவிதழ் வட்டத்தையுடைய இரு விதையிலைக் குடும்பத்தைச் சார்ந்தது. ஏறக்குறைய இந்தியா முழுவதும் பரவிக் காணப்படுகிறது. இதை, ஆமணக்கு என்றும் சிற்றாமணக்கு என்றும் கூறுவர்.

ஆமணக்கு இலை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலை வீக்கம் கட்டி ஆகியவற்றைக் கரைக்கக் கூடியது. ஆமணக்கு நெய் மலமிளக்கும், தாது வெப்பு அகற்றும்.

1. இலையை நெய்தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டிவரப் பால் சுரப்பு மிகும்.

2. இலையைப் பொடியாய் அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்துக் கட்டி வர மூலக்கடுப்பு, கீல்வாதம், வாத வீக்கம் ஆகியவை தீரும்.

3. ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.

4. ஆமணக்கு இலையுடன் சமனளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல் அரைத்து 30 கிராம் காலை மட்டும் மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள் பேதிக்குச் சாப்பிடக் காமாலை தீரும்.

5. 30 மி.லி. விளக்கெண்ணெயுடன் சிறிது பசும்பால் கலந்தோ இஞ்சிச் சாறு கலந்தோ கொடுக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்றுவலி, சிறுநீர்ப்பாதை அழற்சி, வெட்டை, நீர்க்கடுப்பு, மாதவிடாய்க் கோளாறுகள், இரைப்பிருமல், பாண்டு, ஆறாத கட்டிகள், தொண்டை அழற்சி, மூட்டுவலி ஆகியவை தீரும்.

6. கண்வலியின் போதும் கண்ணில் மண், தூசி விழுந்த போதும் ஓரிருதுளி விளக்கெண்ணெய் விட வலி நீங்கும்.

7. தோல் நீக்கிய விதையை மெழுகு போல் அரைத்துப் பற்றுப்போட ஆறாத புண்கள் ஆறும், கட்டிகள் பழுத்து உடையும். மூட்டுவலி, கணுச்சூலை ஆகியவற்றில் தோன்றும் வீக்கம் குறையும்.

8. வேரை அரைத்துப் பற்றுபோட பல்வலி நீங்கும்.

ஆமணக்கு.thamil.co.uk

இலை
சிற்றாமணக்கின் இலையையும், கீழா நெல்லி இலையையும் ஒரே அளவு எடுத்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து நான்காம் நாள் மூன்று அல்லது நான்கு முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைப் பொடி கொடுக்கக் காமாலை குணமாகும். இலைகளைச் சிறுக நறுக்கிச் சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கிச் சூட்டுடன், வலியுடன் கூடிய கீல் வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். ஆமணக்கின் இலையைச் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டினால் பால் பெருகும். ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வதக்கிக் கட்டிகளில் வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். வெளி மூலம், இரத்த மூலம் மற்றும் ரத்தம் கசியும் புண்களில் ஆமணக்கு இலையை அரைத்து பூசி வர இரத்தக் கசிவு மறையும். ரணம் ஆறும். சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.

வேர்
ஆமணக்கின் வேரைக் குடிநீர் செய்து அதில் சிறிது பூநீறு சேர்த்து மூன்று அல்லது, ஐந்து நாள்களுக்குக் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் உட்கொண்டால் பக்கச்சூலை குணமாகும். வளிக் குற்றத்தைத் தன்னிலைப்படுத்தச் செய்யும் குடிநீர்களிலும், தைலங்களிலும் ஆமணக்கின் வேரைச் சேர்ப்பது வழக்கம். பல் வலி, ஈறு வலி, ஈறில் இரத்தம் கசிதல் போன்றவற்றில் ஆமணக்கு இலை மற்றும் குச்சியை மென்று சாப்பிட ரத்தக் கசிவு மறையும். ஈறுகள் பலம் பெறும்.

விதை
ஆமணக்கின் விதையை மேல்தோல் நீக்கிக் காரசாரம் வைத்துத் துவையல் செய்து கழற்றிக் காயளவு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும். விதையை ஓடு நீக்கி அரைத்துக் கட்டிகளின் மேல் பற்றிட அவை பழுத்து உடையும். கன்று ஈனாத எருமைப் பாலில் ஆமணக்கின் பருப்பை இழைத்துக் கண்களில் தீட்டினால் மறுநாள் பீளை போகும். பின்னர்க் கண்கள் மிகவும் தூய்மையாக இருக்கும்.

எண்ணெய்
ஆமணக்கின் விதையிலிருந்து நெய் இருவகையாக எடுக்கப்படும். அவை பச்சை எண்ணெய், ஊற்றினை எண்ணெய் என்பனவாகும். தினசரி காலை, மாலை இரு வேளை மூன்று மி.லி. அளவு உள்ளுக்கு கொடுக்க நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலக்கட்டு, மூட்டுவலி போன்றவை மறையும். ஹெர்னியா, வயிற்றுப் பூச்சிகள், அஜீர்ணம், போன்றவற்றிற்கும் மூன்று மில்லி எண்ணெய்யை தினசரி காலை மாலை உள்ளுக்கு கொடுக்கலாம். சிறுநீர் கோளாறுகள், எரிச்சல், சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்கலாம். தீராத மூட்டு வலி, மூட்டு பிடிப்பு, மூட்டு வாதம், எலும்பு தேய்வு, மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கும் 2 – 3 மி. லி. தினசரி எண்ணெய்யை உள்ளுக்கு கொடுக்கலாம். வீக்கம், உடல் வலி, போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்க நல்ல பலன் தெரியும்.

பச்சை எண்ணெய்
ஆமணக்கு விதைகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, எந்திரத்தின் மூலமாய்ப் பருப்புகளை அழுத்திப் பிழியும் எண்ணெய், பச்சை எண்ணெய் எனப்படும்.

ஊற்றின எண்ணெய்
ஓர் அகன்ற பாத்திரத்தில் நான்கு பங்கு நீர் விட்டு, அதில் ஆமணக்குப் பருப்புகளை இடித்து, ஒரு பங்கு சேர்த்து, தீயில் எரிக்க நெய் கக்கி நீரின் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து, வேறு பாத்திரத்தில் சேர்த்து, அதில் கலந்துள்ள நீரை, அனலில் வைத்து போக்கும் முறையே ஊற்றின எண்ணெய் எனப்படும். இதில் நீருக்குப் பதிலாக, இளநீர் சேர்த்துக் காய்ச்சி எடுக்கும் எண்ணெய் குற்றமற்றதும், உடலுக்கு மிகுந்த நன்மை பயப்பதுமாகும். இதைக் கைக்குழந்தை, இளவயதுடையவர்கள் சூல் கொண்டவர்கள், பிள்ளை பெற்றவர், சீதக் குருதிப் பேதியால் வருந்துபவர் முதலானோர்க்கு அச்சமின்றி வயிறு கழியக் கொடுக்கலாம். தற்போது இம்முறை வழக்கொழிந்து வருகிறது. மலக்கட்டு உள்ளவர்கள் ஆமணக்கெண்ணையை மல வாயின் உட்புறத்தில் தடவ மலம் இளகி வெளிப்படும் வயிற்று வலியினால் அவதியுறும் குழந்தைகளுக்கு அடிவயிற்றிலும், பெரியவர்களுக்கு தொப்புளைச் சுற்றிலும் ஆமணக்கெண்ணையைத் தடவி, ஒற்றடம் இட வயிற்று வலி குறைந்து, மலம் வெளிப்படும். உடம்பில் மேல்தோல் உராய்ந்து, எரிச்சல் ஏற்பட்டால் அவ்விடத்தில் விளக்கெண்ணையைத் தடவ எரிச்சல் நீங்கி முன்பிருந்த நிலையை அடையும். கண்கள் மருந்துகளின் வேகத்தாலும், தூசுகள் விழுவதாலும் அருகிச் சிவந்தால் ஆமணக்கெண்ணையும், தாய்ப்பாலும் சேர்த்துக் குழைத்துக் கண்ணிலிடச் சிவப்பு மாறிக் குணமாகும். முலைக்காம்பு புண், வெடிப்பு இவற்றிற்கு இதைத் தடவி வரலாம். முக்கூட்டு நெய்யில் இதுவும் ஒன்று. பலவகையான உள், வெளிப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் முறைகளில் ஆமணக்கெண்ணெய் சேர்க்கப்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய்யை 5 மி.லி. வீதம் காலையும், மாலையும் உட்கொண்டு வர வாதம், நரம்பு வலி, தசை வலி, முக வாதம் போன்றவற்றிற்கு பயன் தரும். உள்ளுக்கு 5 மி.லி. வீதம் உட்கொள்ள ஜீரணக் கோளாறுகள் சீராகும். ஹெர்னியாவில் பிரச்சனை குறையும்.

# சித்தமருத்துவமும் வாழ்க்கையும்

ஆமணக்குச் செடி

கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் தாவரம் ஆமணக்கு. கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும். குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும்  ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும், எரிபொருளாகவும் பயன்படுகின்றது.

மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர். ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையில் கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்றவை பயிரிடும்போது, வரப்பைச் சுற்றிலும் ஆமணக்கு முத்துகளை ஊன்றி வைப்பர். காற்றைத் தடுக்கும் வேலி போல் இது அமையும்.

தோலில் கட்டி மற்றும் புண்கள் ஏற்பட்டால் அவற்றின் மீது ஆமணக்கு செடியின் இலைகளை வதக்கி கட்டினால் அவை உடையும், வலி குறையும். வேர்ப்பட்டை பேதி மருந்தாகவும், தோல் வியாதி மருந்தாகவும் பயன்படும்.
கொட்டைமுத்து, காய்கள் ஆமணக்குச் செடியின் முக்கியப் பயன்பாடாக அமைவது இதன் காய்கள். பச்சை நிறமாக இருக்கும் காய்கள் முற்றியதும் வெளிறிய வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும். ஆங்காங்கே கூர்மையாக முள் போன்று இருக்கும். வெயிலில் காயப்போட்டால் காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிப்படும்.

இவ்விதைகளையே ´ஆமணக்கு முத்து´ என்பர். விதைகள் நச்சுச்தன்மை கொண்டவை. இரண்டு விதைகளை தின்றால் கூட மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இதிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்பட்ட பின்னர் நச்சு கலப்பதில்லை.

ஆமணக்கு முத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யானது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. விளக்கெரிக்க இவ்வெண்ணெயைப் பயன்படுத்தியதால் விளக்கெண்ணெய் என்று பெயர் வந்ததாக பண்டித அயோத்திதாசர் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் சமண முனிவர்கள் விளக்கெண்ணெயின் பயன்பாட்டைக் கண்டுபிடித்ததாகக் குறிப்பிடுகிறார். இதன் வழவழப்பான தன்மையினால் மசகு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது.

மாட்டு வண்டிகளில் சக்கரங்கள் சுழலும்போது அச்சுப் பகுதியில் ஏற்படும் உராய்வைத் தடுக்க, வைக்கோலை எரித்து அதன் சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து மைபோலாக்கி அச்சுப் பகுதியில் தடவுவர். இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ‘கிரீஸ்’ ஆகும்.

விதைகளில் ஆவியாகாத எண்ணெய் உள்ளது. இதில் கிளைசைரைடுகள், புரதம் மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன. ஆமணக்கு இலைகள், வேர்ப்பட்டை மற்றும் விதைகள் மருத்துவ பயன் உடையவை.

ஆமணக்கெண்ணெய்-thamil.co.ukவிதைகளில் இருந்து எடுக்கப்படும் விளக்கெண்ணெய்/castor oil பேதியைத் தூண்டும். நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இதன் மருத்துவப்பயன் தெரியவந்துள்ளது.

• குழந்தைகளை அடிக்கடி இந்த எண்ணெயை குடிக்கச்செய்து வயிற்றினை சுத்தமாக வைப்பர்.

• குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு மார்பகங்களின் மீது விளக்கெண்ணெயை தேய்த்து விட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

• குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ,நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர். சூட்டினால் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர்.

• சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் தோய்த்து  உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர்.

• ஆமணக்கெண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும்.

• தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக மறைந்து விடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.

• விளக்கெண்ணெய்யை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்து இல்லாமல் காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.

• குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் காணாமல் போய்விடும்.

• கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீவக்காய் போட்டு குளித்தால், கூந்தல் நன்கு வளர்ச்சியடையும்.

• வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.

• இரண்டு  மேசைக்கரண்டி பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 15 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதும் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை படிப்படியாக போக்கலாம்.

• சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அவர்கள் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.

# thamilan.lk