சிறுபசலைக்கீரை

சிறுபசலைக்கீரைபசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்து இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக்கொடி படர்ந்திருக்கும். இதன் இலை எள்ளின் உருவத்தில் உருண்டு, திரண்டு, வெந்தயம் அளவில் பருமனாக இருக்கும்.

சிறுபசலைக் கீரையில் விட்டமின் B உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இந்தக் கீரையைத் துவரம்பருப்புடன் சேர்த்துக் கடைந்து அன்னத்துடன் கூட்டி நெய்விட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும். இது தேகத்துக்கு நல்ல பலத்தை தரக்கூடியது.

சிறுபசலைக்கீரையை சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

பாலுணர்வை தூண்டக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.

அக்கி முதலிய ரோகங்களுக்கு இக்கீரையை அரைத்துப் பசுவின் வெண்ணெய் கூட்டி ரோகங்களுக்கு மத்தித்து மேலே பூச எரிச்சல் தணியும் விரைவில் ஆறும்.

உஷ்ணம் காரணமாக சிறுநீர் சிவந்து அடிக்கடி இறங்குவது உண்டு. இந்த சமயம் சிறுநீர் துவாரத்தில் எரிச்சல் ஏற்படும். இதை நிறுத்த தரைப்பசலைக் கீரையை மூன்றுவேளை சமைத்து சாப்பிட நீர்சுருக்கு குணமடையும். உட்சூடு தணியும்.

உஷ்ணம் காரணமாக வெட்டை, வெள்ளை ஒழுக்கு ஏற்பட்டு சிறுநீர் துவாரத்தில் சதா வெண்ணிறமான நீர் கசிந்து கொண்டிருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் தரைப்பசலைக் கீரையை மூன்று நாட்கள் சமைத்து சாப்பிட குணமாகும்.

இது அதிக குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் சீதளதேகம் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. சளி, கபம் இருக்கும் போது கீரையை சாப்பிட்டால் அதிகமாகும்.

 தொகுப்பு – thamil.co.uk