இதயம் காக்கும் நெல்லிக்காய்

மூலிகையின் பெயர் – நெல்லி
தாவரவியல் பெயர் –  emblica officinalis
தாவரக் குடும்பம்  – Euphorbiaceae

நெல்லி-thamil.co.ukவளரியல்பு வேறு எந்த ஒரு கனியிலும் இல்லாத அளவிற்கு விட்டமின் C உடையது நெல்லிக்கனி. இந்தியா முழுவதும், பாலைப் பகுதியைத் தவிர இதர இடங்களில் இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. இதன் அருமையான கனிகளுக்காகத் தோட்டங்களிலும் வீடுகளிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.

நெல்லி மரம் 8-12 மீட்டர் உயரம் வளரக்கூடியது. அடிமரம் 45 செ.மீ அளவிற்குப் பருத்து சிறிது உயரத்தில் கிளைகளைப் பரப்பிக் கொண்டு, ஓரளவிற்கு அடர்ந்து காணப்படும். பட்டை கருமைச் சாம்பல் நிறத்தில் சொரசொரப்பாக இருக்கும். புதுத்தளிர்கள் உருவாகத் துவங்கியதும் அதன் சந்துகளிலிருந்து பூக்களும் தோன்ற ஆரம்பிக்கும். தமிழகத்தில் நெல்லிமரம் இரு முறை பூக்கின்றன. பிப்ரவரியில் ஒரு முறையும் ஜூலையில் மற்றொரு தடவையும் பூக்கும். ஆனால் பிப்ரவரியில் அதிக அளவு காய்கள் உருவாவதில்லை. ஜூலையில் பூக்கும் சமயமே நிறைய காய்கள் கிடைக்கின்றன.

பயன்கள் 

தழை, கால்நடைகளுக்குத் தீவனமாகும். தழையை எருவாகவும் பயன்படுத்துகின்றனர்.

தழையில் 25% டானின் உள்ளது. தழையிலிருந்து சாயப்பொருட்கள் எடுக்கலாம். முன்னர் டஸ்ஸார் பட்டிற்குச் சாயமேற்ற இதனை உபயோகித்துள்ளனர்.

மரப்பட்டையில் 8-9% அளவில் டானின் உள்ளது. சிறு கிளைக்குப் பட்டையில் 21% அளவில் டானின் உள்ளது. இதைப் பயன்படுத்தி தோலைத் திறம்பட பதனிடலாம். மற்றும் தோலிற்குச் சிவப்பு கருமை நிறமும் ஏற்படும்.

கனியில் விட்டமின் C அதிக அளவில் உள்ளது. நெல்லிக்கனியிலுள்ள விட்டமின் C ’ சத்து 100 கிராம் சதையில் 720 மில்லி கிராம் வரை சில கனிகளில் இருக்கும். கடலில் பயணம் செய்வோரும் நெல்லிக்கனிப் பொடியை உணவுடன் கலந்து உண்டால் கடல் நோய் (sea – sickness) வராது. நெல்லிக்கனியில் நிறைய பெக்டினும் உள்ளது.

நெல்லிக்கனியுடன் கடுக்காயையும் சேர்த்து தோல் பதனிட உபயோகிக்கின்றனர்.

நெல்லிக்காயிலிருந்து எழுதும் மையும் சாயப்பொருளும் தயாரிக்கலாம். காயிலிருந்து எடுக்கப்படும் ஒருவித எண்ணெய் தலை முடியை வளர்க்கும் எனக் கருதப்படுகிறது.

இதற்கு நறுமணமும், பூசன மற்றும் பாக்டீரியா நாசினியாகச் செயல்படும் திறனும் உள்ளன.

நெல்லி விதையில் புரதத்தையும் கொழுப்பையும் சிதைக்கும் என்ஸைம்கள் உள்ளன.

மரத்துண்டுகளையும், கிளைகளையும் கலங்கிய நீரில் போட்டு வைத்திருந்தால் அதாவது கிணறுகளில் நீர் தெளிந்துவிடும். மற்றும் உப்பு நீரில் உப்பின் கடுமையைக் குறைத்துவிடும்.

நெல்லி மருத்துவப் பயன்கள் 

மரத்தைத் தவிர, இதரப் பகுதிகள் அனைத்தும் மருத்துவப் பயன்களுடையவை.

இலைக்கொழுந்து சீதக் கழிச்சலுக்குக் கொடுக்கலாம்.

நெல்லிப்பூ குளிர்ச்சியுண்டாக்கி மலமிளக்கி ஆகிய பண்புகள் கொண்டது. நெல்லிவேர் வாந்தி, சுவையின்மை ஆகியவற்றைக் குணப்படுத்தும். நெல்லிக்கனி குளிர்ச்சியுண்டாக்கி, சிறுநீர் பெருக்கி, மளமிலக்கி, உரமாக்கி ஆகிய பண்புகளும் விட்டமின் Cயும் கொண்டுள்ளது.

நெல்லி விதை ஆஸ்துமா, பித்தம், சளி ஆகியவை குணப்படுத்தும் திறன் விதைக்கு உள்ளது.

-முனைவர் கு.க.கவிதா,உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

நெல்லிக்காய்-thamil.co.ukஇதயம் காக்கும் நெல்லிக்காய்!

இந்தியாவை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் இதயநோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ரொம்பவே அவதிப்பட்டு வர்றாங்க. அப்படிப்பட்டவங்க தினமும் காலையில வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே போதும், நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

அதுசரி, நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க. பொதுவா அரிநெல்லின்னு சொல்லக்கூடிய சின்ன நெல்லிக்காயை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துறது இல்லை. ஆனாலும் ஒரு கேள்வி கேட்டு வைப்பாங்க… நம்ம மக்கள்.

நெல்லிக்காய்… நாட்டு நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் அளவு பெரிதாக இருக்குமே அந்த நெல்லிக்காய்தான் நான் சொல்லக்கூடியது. வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியலைனா நெல்லிக்காயோட இஞ்சி சேர்த்து அரைச்சி அதோட எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை தேவைப்பட்டா உப்பும் சேர்த்து தண்ணி கலந்து சாப்பிடலாம். காலையில் டீக்கு பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.

நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது. கல்லீரல், கணையத்தை பாதுகாக்கும். அந்த வகையில கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரி செய்யும் நெல்லிக்காய். ஆனா நாம சாப்பிடுற முறையிலதான் நோய் குணமாகும்.

Emblica Officinalisஆஸ்மா, நீரிழிவு, மலச்சிக்கலை குணப்படுத்தும் நெல்லிக்காய்

நமக்கு எளிதாக கிடைக்கும் விலைமலிவான நெல்லிக்காயில் விட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இதுதான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.

* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.

* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.

* நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.

* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

* நல்ல புதிய நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.

* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.

* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

-பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்