மலை உயரங்களில் வாழ திபெத்தியர்களுக்கு உதவும் மரபணு

மலை உயர வாழ்க்கைக்கு உதவும் சிறப்பு மரபணுவை ஆதிமனிதர்களிடமிருந்து பெற்ற திபெத்தியர்கள்

இமயமலை போன்ற பெரிய மலைகளின் உச்சியில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மலைச்சிகரம் ஏறுபவர்கள் பிராணவாயுப் பெட்டிகளை சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், இதேபோல கடல் மட்டத்திலிருந்து வெகு அதிக உயரத்தில் இருக்கும் திபெத் போன்ற மலைப் பிரதேசத்தில், திபேத்தியர்கள் எப்படி சாதாரணமாக வாழ முடிகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

‘உலகின் கூரை’ என்று வர்ணிக்கப்படும் திபெத் பீடபூமியில் வசிக்கும் திபெத்தியர்கள் வசிக்கும் இடங்கள் எல்லாமே பொதுவாக சுமார் 4 கிமீ உயரத்தில் அமைந்திருக்கின்றன. இந்த அளவு உயரத்தில் மற்ற பகுதியில் வசிக்கும் மனிதர்கள் சென்று வாழமுடியாது. அங்கு பிராணவாயு குறைவாக இருப்பது, மூச்சுத் திணறல்,உயர்ந்த இடங்களில் ஏற்படும் உடல்நலக்குறைவு, மற்றும் ரத்தக்குழாய் வெடிப்பு போன்றவை ஏற்படலாம். ஆனால் இங்கு வசிக்கும் திபெத்தியர்களுக்கு இதெல்லாம் ஏற்படுவதில்லை.

இதற்குக் காரணம் திபெத்தியர்கள் பெற்றிருக்கின்ற ஒரு சிறப்பு மரபணுதான் என்றும் இதுதான் அவர்களது ரத்தத்தை மெலிதாக்கி, பிராண வாயு குறைந்த மெல்லிய காற்றை வைத்தும் சுவாசித்து வாழ வைக்கிறது என்று முந்தைய ஆய்வுகள் காட்டியிருந்தன.

ஆனால் இந்த சிறப்பு மரபணுவின் ஒரு மிகச்சிறப்பான நீட்சி அவர்களுக்கு உண்மையில், மானுட ஜீவராசிகளின் மிகப் பழைய ஒரு பிரிவிலிருந்து கிடைத்திருக்கிறது என்று இப்போது வந்துள்ள ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

இந்த டெனிசொவன்கள் என்ற மனிதகுலப் பிரிவு சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது.
மனிதர்கள் இந்தப் பிரிவுடன் கலந்து உறவாடியதன் விளைவாக இந்த அசாதாரண உயரங்களில் வாழ உதவும் சிறப்பு மரபணுவைப் பெற்றனர். இந்த டெனிசொவன் மனிதப் பிரிவினர் பின்னாட்களில் அழிந்தொழிந்துவி ட்டனர்.

ஆனால் இந்த டெனிசொவன்களைப் பற்றி பெரிய அளவு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்களது உடல் பாகங்களிலிருந்து ஒரு விரல் எலும்பின் புதைபடிவம் மட்டும் சைபீரியாவில் உள்ள ஒரு குகையில் கிடைத்தது.

இந்த கலிபோர்னிய பல்கலைக்கழக ஆராய்ச்சியில் , இதே போன்ற டெனிசொவன் மரபணுக்கள், முன்பு கருதப்பட்டதற்கு மாறாக, சீனா மற்றும் பாப்யுவா நியூ கினி போன்ற நாடுகளில் உள்ள மக்களின் உடல்களிலும், காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

bbc