மன உளைச்சல் தீர எளிய வழிகள்

மன உளைச்சல் என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும் மிகவும் கொடிய நோய். அதிக தொலைக்காட்சி பார்ப்பதால், படிப்பு சுமை, அதிக வேலை பளு, பிள்ளைகள் தொந்தரவு, தூக்கமின்மை, தொடர் ஃபோன் உரையாடல், நிறைவேறாத ஆசைகள், தன்னம்பிக்கை இழத்தல், கணவன் அல்லது மனைவி நடத்தையில் சந்தேகம்மற்றும் பல காரணங்களால் ஏற்படுகிறது.

நரம்புத் தளர்ச்சி உடையவர்கட்கும், குடும்பக் கவலைகள் அதிகமுள்ளவர்கட்கும், விபத்தால் அதிர்ச்சி அடைந்தவர்கட்கும், மனதைச் சதா குழப்பிக் கொள்பவர்கட்கும், பொருளாதாரச் சிக்கலுள்ளவர்கட்கும், வாழ்க்கையில் பல முறை தோல்வியைச் சந்தித்தவர்கட்கும், பெரும்பாலும் இந்நோய் வருகின்றது.

காலை, மாலை இருவேளை இயற்கை உணவும், பகல் ஒருவேளை மட்டும் சமையலுணவும், நோய் குணமாகும் வரை உண்ண வேண்டும். இந்நோய் குணமாக பல மாதங்கள் பிடிக்கும். சற்றுப் பொறுமையாக இருக்க வேண்டும். பிற நோய்கள் பெரும்பாலும் 15 முதல் 30 நாட்களில் குணமாகும். குறிப்பாக, மாம்பழம், திராட்சைப்பழம், (மூளைக்குப் பிராணவாயு கொடுக்கிறது), எலுமிச்சை, ஆப்பிள், நாட்டு நெல்லி ஆகிய இயற்கை உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

 1. ஒரு கோப்பை மாம்பழச்சாற்றுடன், பாலும் தேனும் கலந்து சாப்பிட்டால், அது ஓர் ஊட்டச் சத்துணவு ஆவதுடன், உடலுக்கு வேண்டிய சக்தி, நினைவாற்றல் ஆகியவற்றை அதிகமாக்குவதுடன், பசியையும் சீராக வைக்க உதவுகிறது.
 2. பப்பாளிப்பழத்துடன் வெங்காயச் சாறு, தேன் கலந்து சாப்பிடுவதால் நரம்புத் தளர்ச்சி, பலவீனம், நினைவாற்றல் குறைவு அனைத்தும் மட்டுப்பட்டு, உடலுக்கு நல்ல தெம்பும் ஏற்படுகிறது.
 3. துளசி இலைச் சாறு, வில்வ இலைச் சாறு, வல்லாரை இலைச்சாறு, தூதுவளை, மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி (பொற்றலைக் கையாந்த கரை) ஆகிய இலைச் சாறுகளும் அருந்தலாம்.
 4. திப்பிலிப் பொடியைத் தேனில் குழைத்துத் தினமும் உட்கொண்டு வந்தால் நினைவாற்றல் அதிகமாகும்.
 5. செம்பருத்திப் பூக்களை எண்ணெயில் போட்டுக் காய்ச்சி நாள்தோறும் தலையில் தேய்க்கலாம்.
 6. திராட்சைப்பழங்களைப் பன்னீரில் ஊற வைத்து 40 நாட்கள் காலையில் உண்ணலாம்.
 7. தினம் ஆப்பிள் பழம் சாப்பிட்டால், ஆரம்ப நிலைப் பித்து குணமடையும். அகத்திக் கீரையை, சீரகம், உப்பு கலந்து அரிசி களைந்த நீரில் காய்ச்சி, கஞ்சியாக வேகவைத்து உண்ணலாம்.
 8. பாதிரிப் பச்சிலையைக் காய்ச்சிக் குடிக்கலாம். பாதிரி பச்சிலைச் சாறை, பழச்சாற்றில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம்.
 9. துளசியும், பச்சைக் கற்பூரமும் சேர்ந்த நீர் அருந்தலாம். கருந்துளசிச் சாற்றுடன் கற்கண்டு சேர்த்து காய்ச்சி 40 நாட்கள் உண்ணலாம்.
 10. தாமரைப் பூக்களை வெந்நீரில் வேகவைத்து சாற்றைத் தினம் குடிக்கலாம். குங்குமப் பூவினைப் பாலில் கலந்து குடிக்கலாம்.
 11. இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து அருந்தினால், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
 12. தினம் தியானம் மற்றும் எளிய யோகா பயிற்சி செய்வது அவசியம். நல்ல மரங்களடர்ந்த இயற்கைச் சூழலில் வாழ்ந்து வருவதும் நலம் பயக்கும்.

– Dr. V. வெங்கட்ராமன் DHMS

http://tamizhankural.com