பழந்தமிழ் இசை – சுருதி வாத்தியங்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம்
பழந்தமிழ் இசை – சுருதி வாத்தியங்கள்

சுருதிப்பெட்டி
சுருதிப்பெட்டி-thamil.co.ukதமிழிசைக்கு இன்றியமையாத மற்றொரு தன்மை சுருதி அல்லது ஒலிநிலையாகும். இராகங்களின் இசை வடிவங்களை எல்லாம் ஒரு ஆதார சுருதியை வைத்துக்கொண்டு பாடினால்தான் தெளிவாகும். இசை என்பது சுருதி என்னும் அத்திபாரத்தின் மீதே கட்டி எழுப்பப்படுகிறது. சுருக்கமாக சொல்வதானால், சுருதி பாடுவோருக்கும் மட்டுமல்ல கேட்போருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.

தந்தி வாத்தியங்களில் முதன்மையானது தம்பூரா. அதேபோல காற்று வாத்தியங்களில் முதன்மையானது சுருதிப்பெட்டி. ஒன்றுக்கு மேற்பட்ட சுரங்களை ஒலிக்கக்கூடிய கருவிகள் தம்பூராவும் சுருதிப்பெட்டியுமாகும்.

சுரங்கள் அடுத்தடுத்துக் கேட்கக்கூடிய வாத்தியம் தம்பூரா. சுரங்ககளை ஒரே சமயத்தில் கேட்கக்கூடிய வாத்தியம் சுருதிப்பெட்டியாகும்.

தம்பூராவில் ஒரேசமயத்தில் ஒரு சுரத்தை மட்டுமே ஒலிக்க வைக்க முடியும். ஆனால் சுருதிப்பெட்டியில் ஒரே சமயத்தில் பல சுரங்களை ஒலிக்க வைக்க முடியும்.

“ஹார்மோனி” என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் ஒருங்கிணைப்பு அல்லது இணைந்து செயல்படுவது என்பதாகும். தற்போதய நவீன விசைப்பலகைகளில்கூட இது முழுவதுமாகச் சாத்தியமில்லை என்பது இங்குக் குறிப்பிடத் தகுந்தது. இதில் சுரங்களை வாசிப்பது மிகவும் சுலபம். இசை ஞானம் இல்லாத ஒரு பாமரனும் எளிதாக எந்தப் பயிற்சியும் இல்லாமல் வாசிக்க முடியும். சுருதி சுத்தமாக இருப்பதினால்தான் இசை அமைப்பாளர்கள் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள்.

தாங்கள் மனதில் உள்ள இசையைக் கொண்டு வருவதற்கு வேறு இசைக்கருவிகளை அவர்கள் பயன்படுத்த விரும்பினால் அக் கருவிகளில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும் அல்லது திறமையுள்ள மற்ற கலைஞர்களின் உதவியை நாட வேண்டும்.

இசைக்கருவிகளைக் கற்க விரும்பும் எவரும் அத்தகைய பயிற்ச்சிகளை சுருதிப்பெட்டியிலிருந்து தொடங்குவது நல்ல பயனைத் தரும்.

இதில் சுரங்களின் நிலைகள் நிரந்தரமாக இருப்பதால் இதை வாசிக்கும்போது அபசுரங்கள் எழுவதற்கு சாத்தியமில்லை. இது ஒரு விசைப்பலகை வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி ஆகும்.

துருத்தி போல் அமைந்த அமைப்பைக் கைகளால் அல்லது கால்களால் இயக்கும்போது, கருவியின் உள்ளே அமைந்த உலோக நாக்குகளின் மேலாகக் காற்றுச் செல்வதனால் ஒலி உருவாகிறது.

துருத்தியின் இயக்கம் காற்றை உலோக நாக்குகளின் மீது செலுத்தி அவற்றை அதிரவைத்து ஒலி எழுப்புகின்றன. இவை அமுக்கத் துருத்திவகை எனப்படுகின்றன.

வேறு சிலவற்றில் துருத்தியை இயக்கும்போது வெளியிலிருந்து உறிஞ்சப்படும் காற்று உலோக நாக்குகளைத் தடவிச் செல்லும்போது ஒலி எழுகின்றது. இவை உறிஞ்சும் துருத்திவகை என்று அழைக்கப்படுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் மேற்சொன்ன இருவகைக் கருவிகளையுமே ஆர்மோனியம் என்கின்றனர். வட அமெரிக்காவில் அமுக்கவகைக் கருவியே ஆர்மோனியம் எனப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பயன்படும் ஆர்மோனியங்கள் பொதுவாகக் கைகளால் இயக்கப்படுபவை. அமுக்க வகையைச் சார்ந்தவை.

பிரெஞ்சு நாட்டவரான அலெக்சாண்டர் தெபைன் என்பவர் 1840 ஆம் ஆண்டில், முதன்முதலாக இதனை உருவாக்கினார், எனினும், இதுபோன்ற வேறு இசைக் கருவிகள் வேறு பலராலும் இதே காலத்தில் உருவாக்கப்பட்டன.

19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேலை நாடுகளில் இதன் பயன்பாடு உச்ச நிலையில் இருந்தது. இது, அளவில் சிறியனவாகவும், மலிவாகவும் இருந்ததனால், அக்காலத்தில், சிறிய தேவாலயங்களிலும் இதனை விரும்பிப் பயன்படுத்தினர்.எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருந்த இக்கருவி அக்கால ஐரோப்பிய வல்லரசுகளின் குடியேற்ற நாடுகளுக்கும் பரவியது. இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் ஆர்மோனியம் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

மேலை நாட்டு அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தெற்காசிய ஆர்மோனியங்கள் அப்பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல மாற்றங்களைப் பெற்றன.

தெற்காசிய இசைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சுரங்களை ஒரே நேரத்தில் வாசிக்க வேண்டிய தேவை இல்லாததனால் விசைப்பலகைகளை இயக்க இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. அத்துடன் தெற்காசிய இசைக் கலைஞர்கள் நிலத்தில் இருந்தே நிகழ்ச்சிகளை நடத்துவதால், மேலை நாட்டு ஆர்மோனியங்களில் இருந்ததுபோல் கால்கள் போன்ற கீழ் அமைப்புக்கள் எதுவும் தேவையாக இருக்கவில்லை. துருத்தியும், மறு கையால் இயக்குவதற்கு வசதியாகக் கருவியின் பின்புறத்தில் அமைக்கப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், பிரான்சில் உருவாக்கப்பட்ட, கையால் இயக்கிக் காற்றுச் செலுத்தக்கூடிய ஆர்மோனியங்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தனர்.

இலகுவாக இடத்துக்கிடம் எடுத்துச் செல்லத் தக்கதாகவும், நம்பத் தகுந்ததாகவும், கற்றுக்கொள்வதற்கு இலகுவாகவும் இருந்ததனால் விரைவிலேயே இது மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு இசைக்கருவி ஆனது.

இந்தியாவின் பல விதமான இசைகள் தொடர்பில், இன்றுவரை ஆர்மோனியம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது மேல்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகமானாலும், இந்திய இசையின் தனித்துவமான தேவைகளுக்கேற்ப பலவிதமான மாற்றங்களை இந்திய ஆர்மோனியம் பெற்றுள்ளது.

தம்புரா
தம்புரா-thamil.co.ukதம்புரா சுருதி வாத்தியங்களில் மிகச்சிறப்பானது. இது தம்பூரா, தம்பூரி, தம்பூரு, தம்பூர் என்றும் அழைக்கப்படுகின்றது. நன்கு சுருதி சேர்ந்துள்ள தம்புராவை மீட்டுவதால் மனதை ஒன்றுபடுத்தி இறை தியானத்தில் ஈடுபடுவோரும் உண்டு. அரங்கிசையில் மேளக்கட்டு ஏற்படவும் இது உதவுகின்றது.

தமிழிசை வரலாற்றில் 500க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைப் பற்றிய செய்திகள் உண்டு. அவைகளில் 300க்கும் மேலான கருவிகளைப் பற்றி நம் இலக்கியங்கள் பேசுகின்றன.

நம்முன்னோர் இசைக்கருவிகளை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
காற்றுக் கருவிகள்: குழல், நாகசுரம், முகவீணை முதலியன

நரம்புக் கருவிகள்: யாழ், தம்புரா, துந்தனா முதலியன

தோல் கருவிகள்: தவில், மத்தளம், துடி முதலியன

கஞ்சக்கருவிகள்: சிங்கி, கைமணி, சேகண்டி முதலியன

தாளத்தின், சுருதியின் அளவைக் காட்டும் யாழின் பக்கச் சாரணியாகப் பின்னாளில் மலர்ந்துள்ளது.

தேனை உறிஞ்ச உட்துளையுள்ள உறுப்பைப் பெற்றுள்ளதால் தேன் வண்டு, தும்பி என்ற பெயர் பெறுகிறது. உட்துளையுள்ள துதிக்கை இருப்பதால் யானையானது தும்பி என்றும் அழைக்கப்படுகிறது.

தும்பு + உரு = தும்புரு. உட்துளை உருக்கொண்டது. தும்புரு, தும்புருயாழ், தும்புருவீணை, தும்புரு – தம்புரா என்றானது.

தூம்பு என்றே பண்டைய சுருதிக் கருவி அழைக்கப்பட்டிருக்கின்றது. “கழைவளர் தூம்பின் கண்ணிடம் இமிர” என்று மலைபடுகடாம் தெளிவுபடுத்துகின்றது.

இசை நிகழ்ச்சிகளின் போது மேடையின் கண்ணியத்தினை கட்டிக்காப்பது இந்தக் கருவியாகும். அரங்கினுள்ளோரை தன்பாலிழுத்து ஒருமைப்படுத்துவதும் இதுவேயாகும். மேடையில் முதன்முதல் ஒலிக்கும் இசைக்கருவி என்ற பெருமையும் இதற்கேயுண்டு.

இந்தக் கருவியிலுள்ள நான்கு தந்திகளும் முறையே பஞ்சமத்தந்தி, சாரணித்தந்தி, அநுசாரணித்தந்தி, மந்திரத்தந்தி ஆகும்.

பஞ்சம, சாரணி, அநுசாரணி ஆகிய மூன்றும் எகினாலும், மந்திரத்தந்தி மட்டும் வெண்கலத்தினாலும் ஆனவையாகும்.
பஞ்சமத்தந்தி – 29
சாரணித்தந்தி – 31
அநுசாரணித்தந்தி – 31
மந்திரத்தந்தி – 26

சுருதிக்கேற்றவாறு தந்திகளின் எண்களை மாற்றம் செய்வதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம். சுருதி வாத்தியங்களில் தம்பூராவிற்கு நிகர் வேறெதுவுமில்லை. சுருதி சுத்தமாக மீட்டப்படும் தம்பூராவே இசைக்கச்சேரிகளின் வெற்றிக்குக் காரணமாக இருக்கின்றன.

நாரதரரின் கையில் தம்பூரா இருப்பதன் நோக்கம் சுருதியின் முக்கியத்தை குறிப்பதற்காகவே எனவும் கொள்ளலாம்.

தஞ்சாவூர் தம்பூராக்களே நாத இனிமைக்கும், தந்த வேலைப்பாடுகளுக்கும் சிறந்தனவாகும்.

இசைத்தமிழ் வரலாறு – இசையமுதம் : தொடர்  25, 26
சிறீ சிறீஸ்கந்தராஜா
21/06/2014

தொகுப்பு : thamil.co.uk