திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்-thamil.co.ukசோழர்களால் எழுப்பப்பட்ட அற்புதமான கோயில்களில் ஒன்று திருவிடைமருதூர் “மகாலிங்கேஸ்வரர்” கோயில், கடந்த வருடம் இந்த கோயிலுக்கு சென்றிருந்தேன், இருந்தும் அது குறித்த பதிவை இப்போது தான் எழுத முடிந்தது. மருத மரத்தை கோயில் மரமாக கொண்டு அவை தலை,இடை,கடை என்று சிறப்பாக வழங்கப்படும் கோயில்கள் மூன்று . ஒன்று ஆந்திர மாநிலம் தலை மருதூர், (ஸ்ரீசைலம்), மற்ற இரண்டு திருவிடைமருதூர் (இடை மருதூர்) கும்பகோணம், திருப்புடைமருதூர் (கடை மருதூர்) அம்பாசமுத்திரம்.

தஞ்சை பெரு உடையார் கோயிலை எழுப்பிய முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்துக்கெல்லாம் முந்தி ஆட்சி செய்த முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட மிகப் பழைய கோயில் இது. அவனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பிற சோழ மன்னர்கள் அனைவராலும் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு, விஜயநகர/நாயக்க மன்னர்கள் காலத்தில் பிரம்மாண்ட மண்டபங்கள் எழுப்பப்பட்டு ஆயிரத்து நூறு வருட வரலாற்றை தாங்கி நின்று அற்புதமாக விளங்கிய இந்த கோயிலின் பழமையை திருப்பணி என்ற பெயரால் இந்த தலைமுறையினர் செய்த கொடுமையால் அதன் பழமை மொத்தமும் இழந்து பார்க்க பரிதாபமாக காட்சியளிக்கின்றது, கருவறை சுவர் முழுவதுமாக புதுப்பிக்கபட்டுவிட்டதால், பராந்தகன் காலத்திலிருந்து தொடங்கி உத்தமன், ராஜ ராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன் போன்ற என்னற்ற மன்னர்களின் சரித்திரப் புகழ் வாய்ந்த கல்வெட்டுகள் அனைத்தும் சிதைக்கபட்டு அழித்தொழிக்கபட்டுவிட்டது, அன்றைய காலத்தில் இருந்த இசை, கூத்து, வரலாறு, கொடை போன்ற அனைத்தையும் தாங்கி நின்ற அந்த கல்வெட்டுகளில் ஒன்றை கூட இன்றைக்கு நம் கண்ணால் நாம் காண முடியாது, அதில் சிலவற்றை பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் நடை பாதை கற்களாகவும் பதித்திருக்கிறார்கள்!, பல உன்னமான தூரத்தை எட்டிய அந்த அற்புதமான மனிதர்களின் பெயர்களை தாங்கிய அந்த கற்களை மிதித்துக்கொண்டே பலர் உள்ளே சென்று கொண்டிருக்கிறார்கள்!.

ஒரு இடத்தில் திரிபுவனச் சக்கரவர்த்தி பெயர் தாங்கிய கல்லில், அந்த ஊரின் பெயர் அந்த நாளிலேயே “திருவிடைமருதூர்” என்று அழைக்கபட்டிருந்ததற்கான அற்புதமான காட்சியை காண நேரிட்டது, அதைத் தொடர்ந்து அங்கு எழுந்தருளி இருக்கும் சிவனை மிக அன்பாக “மருதுடையார்” என்று அழைக்கப்பட்டு அவரின் திருமஞ்சனைக்கு காணிக்கையாக சந்திர சூரியன் உள்ளவரை தான் அளிக்கும் கொடையை காப்பாற்றக் கோரி மன்னனிடம் இருந்து வந்த விண்ணப்பத்தை பதிவு செய்திருந்த கல்வெட்டு இன்றைக்கு பலரின் கால்மிதியாய் கிடக்கின்றது!.

மகாலிங்கேஸ்வரர் கோயில்-thamil.co.ukபழைய கற்களை பிரித்து எடுத்துவிட்டு புதிய கற்களை அடுக்கி இருந்தாலும் பழைய கட்டுமானத்தில் பின்பற்றப்பட்டிருந்த ஆகம விதிகள் எதுவுமே பின்பற்றப்படாமல் அன்றைக்கு அகத்தியர் இருந்த இடத்தில இன்றைக்கு விநாயகரும், தென் மேற்கு மூலையில் இருக்க வேண்டிய விநாயகர் தெற்கு வாசலில் “ஆனந்த விநாயகராகவும்” , வடமேற்கே இருக்க வேண்டிய சுப்பிரமணியர் அங்கே காணாமல் போயும் இருக்கிறார்கள். இதை விட கொடுமையாக பழைய கட்டுமானத்தில் கருவறை சுற்றி இடம் பெற்றிருந்த கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் இடம் பெயர்க்கப்பட்டு வெவ்வேறு சன்னதிகளில் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளது. தெற்கு பக்க முதல் பிரகாரத்தில் 63 நாயன்மார்களின் சிலைகளை வைத்து வணங்கப்படுவது வழக்கம், ஆனால் இங்கு தெற்கு பக்கம் 63 நாயன்மார்களும், அவர்களைத் தொடர்ந்து வடக்கு புறம் இன்னொரு வரிசையாக 63 நாயன்மார்கள் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது! , அதுபோக வடக்கு பக்கம் இரண்டாம் சுற்றில் வரிசையாக சிவ லிங்கங்கள் அமைக்கபெற்றிருக்கும், அவற்றிக்கு “பாணலிங்கங்கள்” என்று பெயர், தங்கள் குடும்பங்களின் ஐஸ்வர்யம், ஆரோக்கியம் வளமாக இருக்க வேண்டும் என்று அன்றைக்கு வாழ்ந்த சில முக்கியமான மனிதர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனாக வைத்திருந்த அந்த பாணலிங்கங்கள் அனைத்தையும் அங்கிருந்து எடுத்து அவற்றை இடம் பெயர்த்தி, ஆடவல்லானுக்காக தெற்கு நோக்கி அமைக்கபட்டிருக்கும் சபையில் அவற்றை கொண்டு வைத்திருக்கிறார்கள், அந்த ஆடவல்லான் சபையில் ஆடவல்லான் இல்லாமல், தென்முகக் கடவுள் தட்சணாமூர்த்தியை கொண்டு வைத்து, அவருக்கு எதிரே இருபுறமும் அங்கிருந்து எடுத்த அந்த பாண லிங்கங்களை வைத்து அந்த லிங்கங்கள் அனைத்திற்கும் நட்சத்திரங்களின் பெயரையும் சூட்டி…..!! அதில் மக்கள் வரிசை கட்டிக் கொண்டு நின்று….., அந்த இடத்திற்கும், அந்த பாணலிங்கங்களுக்கும், அந்த தட்சணா மூர்த்திக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை, அங்கே இருக்க வேண்டியவர் செப்புத் திருமேனி நடராஜர்!.

அழித்தொழிப்பட்ட கல்வெட்டுகளில் அற்புதமான தகவலாக இந்த கோயிலில் உத்தம சோழன் காலத்தில் “வைகறை ஆட்டம்” என்ற ஒன்று நிகழ்ந்திருப்பதை தெரிவிக்கின்றது, அதை நிகழ்த்துவதற்காக உவச்சர்கள் நியமிக்கபட்டிருக்கிறார்கள், அவர்களில் தலை பறையர் என இருவர், அவர்களுக்கு கீழாக பதினொரு பேர். அதுபோக சோழர் காலத்தில் உன்னதமான நிலையை எட்டி இருந்த இசைக் கலைப் பற்றிய கல்வெட்டுகள். கோயிலில் நடனங்கள் நிகழ்த்த ஆடல் மகளிர் பணியமர்த்தப்பட்டிருந்த தகவல்கள், அந்த ஆடல் மகளிருக்கு பாட்டு சொல்லித்தர பாணர்கள் பணியமர்தப்பட்டிருக்கிறார்கள், அந்த பாட்டு சொல்லித்தரும் பாணர்களுக்கு வீடும், நிலமும் கொடுக்கப்பட்டுள்ளது, ஆடல் மகளிர் நாட்டியமாட அந்த கோயிலில் நாடக மேடை அமைக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாமல் அந்த நாடக மேடை எவ்வாறு அலங்கரிக்கப்பட வேண்டும், நாடக மேடை வாயில் முகப்பு முழுவதும் எத்தனை தீபங்கள் ஏற்ற்றப்பட்டது, அத்தனை தீபங்களுக்கும் எவ்வளவு நெய் வழங்கப்பட்டது போன்ற தகவல்கள் அனைத்தும் இன்றைக்கும் ஏட்டில் மட்டுமே காணமுடிகின்றது, அந்த ஆடல் பெண்ணில் ஒரு தலைக்கோலி பெருமாளுக்கென ஒரு விண்ணகரம் அந்த கோயில் வளாகத்தில் எடுத்திருக்கிறார், அந்த விண்ணகரத்தின் பெயர் கூட “தலைகோலி விண்ணகரம்” என்பன போன்ற அற்புதமான தகவல்கள் எல்லாம் அள்ளித் தந்த அந்த கல்வெட்டுகள் அனைத்தும் இன்றைக்கு அழித்தொழிக்கபட்டுவிட்டது. வேரில் வெந்நீரை ஊற்றிவிட்டு, மேடையில் மட்டுமல்லவா தமிழை வளர்க்க போராடிக்கொண்டிருக்கிறோம்!.

அதுமட்டுமல்லாமல் இந்த கோயில் ஸ்தல புராணத்தோடு தொடர்புடைய வரகுண பாண்டியனின் சமகாலத்தில் வாழ்ந்த பட்டினத்தார், இந்த பாண்டியனும் அவனின் சிவபக்தியையும் மிக அழகாக தன்னுடைய பாடல் ஒன்றில் தெரிவிக்கிறார், பிள்ளை பேறு இல்லாத அந்த பாண்டிய மன்னன் இந்த கோயிலின் இறைவனுக்கு பணி செய்வதற்காக தன் மனைவி “புரிகுழல் தேவியையே” அளித்தான் என்ற தகவலை மெய்ப்பிக்கும் பொருட்டு அந்த பாண்டிய மன்னனின் உருவச் சிலை ஒன்றும் இந்த கோயிலில் காணக் கிடைக்கின்றது.

எத்தனை பெரிய கோயில்,எத்தனை வராலாறு தாங்கிய கல்வெட்டுகள், அவற்றில் எத்தனை எத்தனை தகவல்கள், ஆடல், பாடல்,இசை என ஆயிரத்து நூறு வருடங்கள் தொடர்ந்து எண்ணற்ற தகவல்களை வாரி வழங்கிய அந்த கல்வெட்டுகள் அனைத்தும் சிதைத்து சின்னாபின்னமாக்கியது நம் தலைமுறையின் அறியாமை தான், அன்றைக்கு வாழ்ந்த மனிதர்கள் அவற்றை எத்தனை பெரிய உழைப்போடு, எத்தனை ஆசையோடும் ஈடுபாடோடும் இது போன்ற கோயில்களை அந்த நாட்களில் எழுப்பி இருப்பார்கள், அவர்களின் உழைப்பை எல்லாம் இப்படி வீணடித்து கொஞ்சம் கூட இவற்றைப் பற்றி கவலை கொள்ளாமல், அறியாமையில் திளைத்து, இறைவனை மட்டும் வேண்டுவதற்காக கருவறையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோமே! அவர் உண்மையில் நம்மை ஆசிர்வதிப்பாரா?

-சசிதரன்