சாத்துக்குடி

சாத்துக்குடி-sweet lime மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதாவது புரதச்சத்து, விட்டமின் சத்துக்கள், கல்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. மினரல், பொட்டாசியம், மக்னீசியம்,பொஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது. பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி;  நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.

sweetlimesசாத்துக்குடியின் உடல்நல நன்மைகள்

நோயுற்றவர்களுக்கு : நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

மருத்துவமனைக்கு சென்று நோயாளியை பார்க்கும்போது சாத்துக்குடி வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது. காய்ச்சல், அம்மை, பேதி, சளி, இருமல் என எந்த நோயாக இருந்தாலும் நோயாளிக்கு நல்ல பலத்தை தரக்கூடியது சாத்துக்குடி. விட்டமின் சி அதிகம் உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் தருவதுடன் இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடனடி புத்துணர்வை கொடுக்க கூடியது சாத்துக்குடி.

நினைவாற்றலை அதிகரிக்க : ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

இரத்த விருத்திக்கு :  சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோகுளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச்சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவடைய  : சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கல்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும். சாத்துக்குடி சாறு சாப்பிட்டுவர மூட்டுவாதம், எலும்பு பலவீனம் ஏற்படாது.

பற்களின் பாதுகாப்பில் : சாத்துக்குடி சாறு பயன்படுத்தி பல் வலி, ஈறுகளில் இரத்த கசிவுக்கான மருந்து தயாரிக்கலாம். சாத்துக்குடி சாறில் நீர்விட்டு, அதனுடன் உப்பு சேர்த்து கலக்கவும். ஈறுகளில் வைக்கும்போது இரத்தகசிவு சரியாகும். சாற்றில் நீர்விட்டு வாய் கொப்பளிக்கலாம். இவ்வாறு செய்தால் வாயில் துர்நாற்றம் தரும் கிருமிகள் வெளியேறும். ஈறு வீக்கம் தணியும். பற்களுக்கு பலம் ஏற்படும்.

மலச்சிக்கல் தீர  மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

நன்கு பசியைத் தூண்ட :  பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

சாத்துக்குடியை பயன்படுத்தி பசியின்மை, வாந்தி, குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு டம்ளர் நீரில் இஞ்சி துண்டுகளை தட்டி போடவும். அதனுடன் சாத்துக்குடி சுளைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி எடுத்து தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது வயிற்று புண்களை அகற்றும். செரிமானத்தை சீர்படுத்தும். பசியை தூண்டும். வாந்தியை தடுக்கும். ருசியின்மையை போக்கும். வயிற்று வலி குணமாகும்.

குழந்தைகளுக்கு  ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கல்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது கல்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கல்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

பெண்களுக்கு  நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக்குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறைநீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

முதியோர்களுக்கு  வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும். கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.

பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரக கோளாறுக்கு மருந்தாகிறது.

குறைவான எரிசக்தி கொண்டதால், உடல் எடை கூடுவதை தடுக்கிறது. உடலுக்கு பலத்தை கொடுக்க கூடியது.

ஈறுகளில் வீக்கம், பற்கள் ஆடுவது, வாய்ப்புண் வெடிப்புக்கு அருமையான மருந்து சாத்துக்குடி.

சாத்துக்குடி தோலை பயன்படுத்தி சளி, இருமலுக்கான  மருந்து தயாரிக்கலாம்.

தண்ணீர் விடாமல் பொடித்த ஒரு தேக்கரண்டி சாத்துக்குடி தோல் எடுத்துக் கொள்ளவும். அதில், 5 மிளகு தட்டி போடவும். கால் தேக்கரண்டி சீரகம், இரு சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு 2 சிட்டிகை சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இதை வடிகட்டி குடிப்பதால், சளி கரைந்து வெளியேறும். பித்தத்தை சமப்படுத்தும். இருமல் இல்லாமல் போகும். வயிற்றுகோளாறு சரியாகும். பசியை தூண்டும். வைரஸ் காய்ச்சலுக்கு இது நல்ல மருந்து.

கூந்தல் பராமரிப்பில் : சாத்துக்குடி சாறுடன் தண்ணீர் சேர்த்து கூந்தலில் தேய்த்து குளிப்பதனால் தலைமுடிக்கு டானிக்காகிறது. தலையில் ஏற்படும் பொடுகை போக்கும். தலைமுடி உடையாமல் வளரும்.

தோல் பராமரிப்பில் : சாத்துக்குடியை இரண்டாக வெட்டி தோலில் தடவுவதால், முகத்திலுள்ள கரும்புள்ளி சரியாகும். கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் மறையும். கழுத்து, கைகளில் உள்ள கருமை மாறும்.

– kayalpadnam.in
– L Karthikeyan

தொகுப்பு – thamil.co.uk