கறிவேப்பிலை

மூலிகையின் பெயர் – கறிவேப்பிலை curry leaf
தாவரப்பெயர்  -Murraya koenigii
தாவரக்குடும்பம் -Rutaceae
வகைகள் – நாட்டுக் கறிவேப்பிலை, காட்டுக் கறிவேப்பிலை
பயன்தரும் பாகங்கள் – இலை, ஈர்க்கு, பட்டை, வேர்.

curry leaf treeகறிவேப்பிலை இருவகைப்படும். நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன.

நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்.

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என பலர் கருதுகின்றனர். ஆனால் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையில் சுண்ணாம்பு (கல்சியம்), பொஸ்பரஸ், காபோவைதரேற்று, புரதம், இரும்பு, தாது சத்துக்கள், விட்டமின் A, B, C போன்றவைகள் உள்ளன. மேலும் glycosides, asparagines, serine, aspartic acid, alanine, proline போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருவதுடன் பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.

மருத்துவ குணங்கள்

‘வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம் பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் – தூய மருவேறு காந்தளங்கை மாதே உலகிற் கருவேப்பிலை யருந்திக் காண்.’ என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது.

கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக் கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

கறிவேப்பிலைபித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு உருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும்.

கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது. கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெய்யில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி, தினசரி தலைக்குத் தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது.

நரைமுடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி நிறம் மாறும். இது அனுபவ ரீதியாக கண்ட உண்மை. கண்பார்வை குறைவும் ஏற்படாது

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக் கொள்வது நல்லது.

எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.

புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் பாட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும் வரை கொடுத்து வர வேண்டும்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.

கறிவேப்பிலை, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன, உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கறிவேப்பிலை சிறந்த ஆன்டி ஆக்சிடன்டாக antioxidants இயங்குகிறது.

கறிவேப்பிலையை அரைத்துச் சாப்பிட்டால் நுரையீரல், இதயம், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது மேற்கண்ட ஆஸ்திரேலிய நிறுவனம். இது புற்றுநோய், இதய நோய் அபாயங்களைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை நுரையீரல், இதயம், கண் நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள விவசாய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழகத்தில், கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்கப் பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி மருத்துவக் குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது இழையங்களை- tissues அழிவிலிருந்து பாதுகாக்கின்றன என்பது தெரியவந்தது.

மேலும் ‘பிரி ரேடிக்கல்ஸ்’ free radicals நிலை ஏற்படுவதையும் கறிவேப்பிலை தடுக்கிறது. free radicals உருவாவதால்தான் DNA பாதிக்கப்படுகிறது. கலங்களிலுள்ள புரதம் அழிகிறது. விளைவு, புற்றுநோய், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிக்கும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் free radicals உருவாவதைத் தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலைகளையும், மாலையில் 10 இலைகளையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாகக் குறைத்துவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். நீரிழிவு நோயாளிகள் தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் கனமானது குறைக்கப்படும், சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள். மேலும் கைகால் வலி, கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.

கறிவேப்பிலை, இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவைப் பெருக்கவும் உதவுகிறது.

கருவேப்பிலையின் வேர்பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அறுபது மி.லி. அளவு இரண்டு வேளை அருந்தி வந்தால் வாந்தி நிற்கும்.

கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.

கறிவேப்பிலை இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை  நீக்கி பசியைத் தூண்டும்.

ஒரு பிடி கறிவேப்பிலை சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னைக் காயளவு வெறும் வயிற்றில் 45 நாட்கள் கொடுக்கப் பிட்ட மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும்.

கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 1 பிடி சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 மிடறு வீதம் தினம் 4 வேளை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், சுரம், வாதசுரம் தீரும்.

கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்க்கரைப்பொடி கலந்து காலை, மாலை 1 தேக்கரண்டி குழந்தைகளுக்கு கொடுத்து வர நீர்க்கோவை சூதக வாய்வு தீரும்.

கருவேப்பிலை ஈர்க்கின் மேல் தோலை தாய்பால் விட்டு இடித்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிதளவு கிராம்பு, திப்பிலி, பொடிசெய்து சேர்த்து, வாந்தி இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். இது சீரண  சக்தியைத் தூண்டும்.

கருவேப்பிலையை முறைப்படி குடிநீராகக் காய்ச்சி அருந்தி வந்தால் இது வெப்பத்தை அகற்றி சுரத்தைக் குணப்படுத்தும்.

கறிவேப்பிலை தைலம்

பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவர்களே இருக்க முடியாது. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம்.  இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ….

கறிவேப்பிலை – 200 கிராம்
கொத்தமல்லி கீரை – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
நல்லெண்ணை -600 கிராம்
பசுவின் பால் – 200 மில்லி
கறிவேப்பிலையை காம்புகள் நீக்கிநன்றாக அரைத்துக் கொள்ளவும். கொத்துமல்லி கீரையையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலைஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு கொத்துமல்லி கீரையைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

-ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்

கறிவேப்பிலை குழம்பு

தேவையானவை
கறிவேப்பிலை – 2 கப்
புளி – எலுமிச்சை அளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

வறுத்து, அரைக்க
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
தனியா – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
மிளகு -அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 6 முதல் 8,
பூண்டு -6 முதல் 8 பல்.
கடுகு, சீரகம், நெய்.

செய்முறை : புளியைக் கரைக்கவும். வறுக்கக் கொடுத்துள்ள பொரு‌ட்களை தனித்தனியே சிறிது எண்ணெயில் வறுத்து எடுத்து, கறிவேப்பிலையை வதக்காமல் சேர்த்து அரைக்கவும்.

புளிக்கரைசலில், அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து, கரைத்து வைத்துள்ளதைக் கொட்டி, 1 கப் தண்ணீரும் விட்டு, மிதமான தீயில் மூடி வைத்துத் தளதளவெனக் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார்.

தொகுப்பு – thamil.co.uk