தியானம்

மிக எளிய அடிப்படையில் ஆனாலும்கூட தியானம் மன அமைதிக்கும் சமநிலைக்கும் மிக மிக உதவிகரமானதுதான். ஆகவே எங்கே எப்படி தியானம் செய்தாலும் அது நல்லதுதான். ‘சரியான’ தியானமென்று ஒன்று இல்லை. ‘சரியான தியானத்தைச் செய்பவரே’ இருக்கிறார். தியானத்தை தொடர்ச்சியாக, விடாப்பிடியாக, கூர்ந்த அவதானத்துடன் செய்வதே முக்கியமானது.

தியானத்தின் வழிமுறையை மிக எளிமையாக இவ்வாறு விளக்கலாம். மனதைக் குவியச்செய்தல், மனதை அவதானித்தல், மனதை கரையவைத்தல் என்னும் மூன்றுபடிகள்.

முதல்படி, மனதைக் குவியச்செய்ய முயல்வது. இது பிரிந்து பரவும் மனதின் இயல்புக்கு நேர் எதிரானது. இதன்மூலம் நாம் மனதின் கட்டற்ற இயக்கத்தை மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வருகிறோம். இதற்கான வழிகள் பல. ஓர் ஒலியில் மனதை குவியச் செய்யலாம். இதற்கு மந்திரம் என்னும் பொருளில்லாத ஒலி [ஓம், ரீம் போல] உதவுகிறது. அல்லது ஒரு பிம்பத்தில் பார்வையைக் குவிக்கலாம். அல்லது இரண்டையும் செய்யலாம்.

மனதைக் குவித்தல் மிகமிக கடுமையான செயல். மனம் என்னென்ன மாயங்கள் காட்டும் என நாம் அப்போது அறிவோம். நாம் மனதைக் குவியச்செய்ய முயன்றால் மனதைக்கு வியச்செய்யும் செயலைப்பற்றிய எண்ணங்களாக நம் மனம் ஆகிவிடும். எதைப்பற்றி எண்ணக்கூடாதென நினைக்கிறோமோ அந்த எண்ணங்களே அதிகமாக எழும். கூடவே அதை அடக்கும் எண்ணங்களும் அதே எண்ணிக்கையில் எழும்.

இவ்வாறு மனதைக் குவிக்க முனைகையில் தவிர்க்க முடியாமல் நாம் நம் மனதை கவனிக்க ஆரம்பிக்கிறோம். நம் மனம் எப்படி இயங்குகிறது என்பதைக் காணும்போது அதை மெல்ல மெல்ல புரிந்து கொள்கிறோம். நீங்கள் தியானத்தில் இருக்கும்போதுதான் நீங்கள் எத்தனைபெரிய சுயமையவாதி என்று தெரியும். நீங்கள் உங்களையே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியும். உங்கள் அற்ப பாவனைகள் அற்ப ஆசைகள் சிறுமைகள் எல்லாமே தெரியும்.

அந்த அறிதல் மூலம் அவற்றை நீங்கள் தாண்ட முடியுமென்றால்தான் தியானம் கைகூடுகிறது என்று சொல்லமுடியும். தியானம் மெல்லமெல்ல பல காலமாக உங்களில் நிகழ்ந்து ஒரு கட்டத்தில் நீங்கள் சில கணங்கள் மனமிலா நிலையை அடையமுடியும். அப்போது ஒரு கணத்தில் நீங்கள் அறிவதை எத்தனை படித்தாலும் விவாதித்தாலும் அறிய முடியாதென அறிவீர்கள். அதுவே தியானம்.

ஆகவே தியானத்தை தொடங்குங்கள். சரியான பாதை என்பது முழுக்க முழுக்க உங்கள் கையில்தான் இருக்கிறது. இதில் சடங்குகள் ஏதுமில்லை. முறைகள் ஏதுமில்லை. ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு முறை உள்ளது. எல்லாமே சரிதான்- சரியாகச் செய்தால்.

இது ஒரு பெரிய அறிவியல்துறை. இதிலுள்ள ஏராளமான விஷயங்களை எளிதில் சொல்லிவிட முடியாது. செய்து பார்க்காமல் வெறுமே நூல்களைப் படிப்பதிலும் பொருளில்லை. செய்து பாருங்கள். அதில் எழும் கேள்விகளுக்கு நூல்களில் விடைதேடுங்கள்.