பேய்மிரட்டி மூலிகைச் செடி

பேய் மிரட்டி-thamil.co.uk

எதிர் அடுக்குகளில் அமைந்த வெளிரிய வெகுட்டல் வாடை மணமுடைய நீண்ட இலைகளையும், வெளிரிய கருஞ்சிவப்பு மலர்க் கொத்தினையும் உடைய செடி இனம் பேய் மிரட்டி.

வேறு பெயர்கள்: எருமுட்டை பீநாறி, பிரமட்டை, இரட்டைப் பிரமட்டை, இரட்டை பேய் மருட்டி.

வகைகள்: ஒற்றைப் பேய் மிரட்டி, இதை வெதுப்படக்கி என்றும் அழைப்பார்கள். இதன் இலைகள் சற்று வட்டமான வடிவில் இருக்கும். எல்லாமே ஏறக்குறைய ஒரே மருத்துவக் குணம் உடையதாக இருக்கின்றன.

பேய்மிரட்டி என்ற மூலிகைச் செடியின் பச்சை இலை, விளக்குத் திரியாக ஒளிர்கிறது. இந்தச் செடி, தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்ற செடி. அதிகபட்சமாக சுமார் மூன்றடி உயரம் வரை இச்செடி வளர்கின்றது. நீண்ட இலைகளையும், கருஞ்சிவப்பு நிறத்தில் மலர்களையும் கொண்ட செடி இது. கடும் வறட்சியையும் தாங்கி வளரக் கூடியச் செடி. இது LAMIACEAE தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த செடியாகும். இதனை ஆங்கிலத்தில் MALABAR CATMINT எனக் கூறுவர். ANISOMELES MALABARICA என்ற தாவரவியல் பெயரும் இதற்கு உண்டு. செடியின் முழுப் பகுதியும் பல்வேறு மருத்துவப் பயன்பாட்டுக்கு உதவிவருவதால், இது ஒரு சிறந்த மூலிகைச் செடியாக விளங்கி வருகிறது.

அதுமட்டுமல்லாது மாந்தம், வயிற்றுப் போக்கு, காலரா, வாதசுரம், குடல்வாயு போன்ற நோய்களை விரட்டும் சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடியாகும். மேலும் இந்தச் செடி அதிகம் வளரும் இடங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் இருக்காதாம். அதற்குக் காரணம், இச்செடியில் உள்ள வெகுட்டல் மணம் தானாம். இதுபோன்ற பல்வேறு குணாதிசயங்களை பேய்மிரட்டி செடி கொண்டிருந்தாலும், தற்போது அதற்கும் மேலாக அச்செடியின் பச்சை இலையை அகல் விளக்கிற்கு திரியாகப் பயன்படுத்தி வருகின்றனர் மக்கள்.

தமிழகத்திலுள்ள கொல்லிமலைப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், பேய்மிரட்டியின் இலையை நன்றாகச் சுருட்டி, விளக்குகளுக்குத் திரியாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இலையை திரியாகப் பயன்படுத்தி தீபம் ஏற்றும் போது எந்தவொரு வாசமும் வருவதில்லையாம்.

பேய் மிரட்டி இலை-thamil.co.ukநாங்கள் கடந்த ஜூன் மாதம் கொல்லிமலைக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது பச்சை இலை, விளக்குத் திரியாக ஒளிர்கின்ற அதிசயத்தை நேரில் கண்டிருந்தோம். எந்தவொரு சிறிய அசைவும் இல்லாமல் விளக்கு அழகாக ஒளிர்கின்றது. காடாத் துணி திரிகளுக்கும் இதற்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இந்த இலையினுள் அடங்கியுள்ள ஏதோவொரு வேதிப் பொருள்தான் இதற்குக் காரணம் என்கிறார் பட்டதாரியான லக்ஷ்மி நரசிம்மன்.

பேய்மிரட்டி இலைகள் தற்போது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. ஆர்வம் உள்ளவர்கள் இதனைப் பெற்று சோதனை செய்து பார்க்கலாம்.

மருத்துவக் குணங்கள்:
பேய் மிரட்டி இலையைக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க விடாத வாதக் காய்ச்சல் குணமாகும்.

பேய் மிரட்டி இலையை சாறு எடுத்து அரையங்குல அளவு எடுத்து அத்துடன் அரை சங்களவு நீர்விட்டு கொதிக்க வைத்து 2 மணிக்கு ஒருமுறை ஒரு சங்களவு குடித்து வர காலரா, அம்மை குணமாகும்.

பேய் மிரட்டி இலைச்சாறு 5 சொட்டு எடுத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப் பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும்.

பேய் மிரட்டி இலையைக் கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 50 மில்லியளவு குடித்து வர சீதவாதக் காய்ச்சல், முறைக் காய்ச்சல், மலக் கழிச்சல் குணமாகும்.

பேய் மிரட்டி இலையை 2 மட்டும் எடுத்து ஒரு கைப்பிடி நெற்பொறியுடன் சேர்த்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியளவு வீதம் 3 மணிக்கு ஒருமுறை குடிக்கக் கொடுக்க காலரா குணமாகும்.

பேய் மிரட்டி இலையை 40 கிராம் அளவு எடுத்து இடித்து, தனியாக ஒரு சட்டியில் மிளகு 10 கிராம், ஓமம் 3 கிராம் சேர்த்துப் போட்டு வறுத்துக் கருகிய சமயம் 1/2 லிட்டர் நீரை விட்டு, கொதிவரும்போது பேய் மிரட்டி இலையைப் போட்டு, 125 மில்லியளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி 15 மில்லியளவில் 3 வேளையாகக் குடித்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும்.

eekarai