சங்கம் மருவிய காலம் – சிலப்பதிகாரம் 2 : சிறீ சிறீஸ்கந்தராஜா

%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-49தமிழிசைப்பண்கள்

உலகின் முதல் இசை தமிழிசையே!!

இசைத்தமிழின் தொன்மை – 49

பழந்தமிழிசையில் பண்கள்

சங்கம் மருவிய காலம் (300-700)

சிலப்பதிகாரம் – 6

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

அரங்கேற்றுக்காதை
இசை ஆசான்
“யாழுங் குழலுஞ் சீரும் மிடறுந்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொ டிவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத்

தேசிகத் திருவின் ஓசை யெல்லாம்
ஆசின் றுணர்ந்த அறிவின னாகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலுங் கொளுத்துங் காலை
வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்

அசையா மரபின் இசையொன் றானும்”

யாழ் இசையும், குழல் இசையும், தாளக் கூறுபாடுகளும், வாய்ப்பாட்டும், தாழ்ந்த சுரத்தில் இசைத்திடும் மத்தளமும், ஆகிய இவற்றால் வரும் இசையை கூத்திற்கு பொருந்துமாறு இசைக்கத் தெரிந்தவன்;

பாடல் வரிக்கும், ஆடலுக்கும் உரிய பொருள்களான நான்கு இயக்கங்களையும் இயக்கி, “இயற்சொல்”, “திரிச்சொல்”, “திகைச்சொல்”, “வடச்சொல்”, ஆகிய தேசிகச் சொற்களின் ஓசையை சரியாகக் கடைப் பிடிப்பவன்;

சொற்களின் ஓசை குறிக்கும் பொருள்களெல்லாம் குற்றமறத் தெரிந்த அறிஞன்;

ஆடல்களின் தொகுதிக்கேற்ப, நாடங்களின் பகுதிக்கேற்ப இசைப்பொருத்தம் உணர்ந்து இசைக்கும் பாங்கினை தெரிந்தவன்;

குற்றமற்ற இசைநூல் வழக்குகளை நன்கறிந்து, அவற்றை வகுக்கவும், விரிக்கவும் செய்யும் திறன் கொண்ட வல்லவன்;

தளராத மனம் கொண்டவன்; இத்தகைய பெருமை உடைய ஒருவன், மாதவிக்கு இசை ஆசிரியனாக அமைந்திருந்தான்!

தமிழ் புலவர்
“இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி
வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து

இசையோன் வக்கிரித் திட்டதை யுணர்ந்தாங்கு
அசையா மரபி னதுபட வைத்து
மாற்றோர் செய்த வசைமொழி யறிந்து
நாத்தொலை வில்லா நன்னூற் புலவனும்”

ஆரவாரமுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியுமாறு, தமிழ் மொழியின் தன்மை முழுதும் தெரிந்தவனாக புலவன் இருத்தல் வேண்டும்;

“வேத்தியல்”, “பொதுவியல்”, என்றிரு நாட்டிய நூல்களின் மரபுகளை நன்கறிந்து, அவற்றை கடைபிடித்து, இசை ஆசிரியரின் பண்ணின் திட்டத்தை உணர்ந்து, சிறிதும் பிறழாமல், அத்தாள நிலையிலே பொருந்தச் சொற்களை அமைக்க வல்லவனாக இருத்தல் வேண்டும்;

மரபுகளுக்கு மாறுபட்டோர் செய்த வசைமொழிகளை அறிந்து, தாம் இயற்றும் கவிதனில் அவ்வசைமொழிகள் வாராமல் செய்யவல்ல நாவன்மையும், நல்ல நூலறிவு மிக்கவனாகவும் இருத்தல் வேண்டும்; அத்தகைய தன்மை கொண்ட புலவன் ஒருவனும் மாதவிக்கு தமிழ் ஆசிரியனாக இருந்தான்.

தண்ணுமை ஆசிரியர்

“ஆடல் பாடல் இசையே தமிழே

பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றிவை ஆசி னுணர்ந்து
கூடை நிலத்தைக் குறைவின்று மிகுத்தாங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி

வாங்கிய வாரத்து யாழும் குழலும்
ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
கூருகிர்க் கரணங் குறியறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
சித்திரக் கரணஞ் சிதைவின்று செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழின் முதல்வனுஞ்”

ஆடல், பாடல், இசை, பண், பாணி, தூக்கு,
இவற்றில் உண்டாகும் குற்ங்கள்,
தமிழில் வழங்கும் சொற்கள்,
ஆகியவற்றை தெளிவுடன் உணர்ந்தவன் இவன்;

ஓர் உருவை இரட்டிக்கு இரட்டி சேர்த்தல் கூடையாகும்.

நடனத்தில் அவ்வாறு வரும் இடத்திக் குறைவின்றி ஆவர்த்தனங்கள் துரிதமாக அமைய வாசிக்க வல்லவன்;

வாய்ப்பாட்டும், யாழும், குழலும் இசைந்து இசைக்க, கேட்பவர் செவிதனில் இன்பம் சேர்க்குமாறு வாசிப்பவன்;

நிகழ்கின்ற கூத்தின் குறிப்பினை அறிந்து, விரல்நுனிகளை மத்தளத்திலே சேர்த்து இதமாக வாசிக்க தெரிந்தவன்;

பிற கருவிகளின் குறைந்த ஒலியை நிரப்பியும், மிகுந்த ஒலியை அடக்கியும் ஈடுகள் செய்திடும் திறன் உடையவன்;

இத்தகைய தண்ணுமை என்னும் தொழிலுக்கே தலைசிறந்தவனாக விளங்கும் ஓர் ஆசிரியனும் மாதவிக்கு அமைந்து இருந்தான்!

குழல் ஆசிரியர்

“சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயலறப் பெய்தாங்கு
ஏற்றிய குரலிளி என்றிரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வின னாகிப்

பண்ணமை முழவின் கண்ணெறி யறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு
இசையோன் பாடிய இசையி னியற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி

இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தைக் கேடின்று வளர்த்தாங்கு
ஈர நிலத்தின் எழுத்தெழுத் தாக
வழுவின்று இசைக்குங் குழலோன் றானும்”

நூல்களில் சொல்லிய முறைப்படி, “சித்திரப் புணர்ச்சி” , “வஞ்சனைப் புணர்ச்சி” என்னும் இருவகைக் கூற்றினையும் அறிந்து இசைப்பவன்;

இசை ஆசிரியருக்கு நிகரான அறிவு திறன் வாய்த்தவன்;

நான்கு வகையான வர்த்தனைகளையும் மயக்கமின்றி இசைத்து, அவ்விடத்தே ஏறிய “குரல்”, “இளி” என்று சொல்லப்படும் இருவகை நரம்பின் இசைக்கும் ஒத்துக் கேட்குமாறு இசைக்கும் திறமையினை உடையவன்;

சிறப்பாய் பொருந்திய பண்ணை சரியாய் அமைத்து, முழவின் இருகண் நெறிகளுடன் தாள இயல்புகளின் திறம் அறிந்து, தண்ணுமை ஆசிரியனுக்கும் தக்கவாறு
பொருந்தி இசைக்க வல்லவன்.

இளநரம்பை முதலாவதாக, யாழின்கண் நிரல்படவைத்து, பண்ணில் வரும் சுரங்கள் குறைவுபடாது வளர்த்து, பண்ணுக்குரிய சுரங்கள் தவிர வேற்றுச் சுரங்களின் கலப்பேதுமின்றி அவற்றோடு ஒற்றியிருந்து, இன்புற இயக்கி, இசையின் பண் இலக்கணத்துடன் பொருந்திட வைத்துக் குழல் இசைக்க வல்லவன்;

வாரப்பாடலை அளவு நிரம்ப நிறுத்த வல்லவனாகவும் இருப்பவன்.

அவ்விடத்தும் சொல் நீர்மைகளின் எழுத்துக்கள் ஒவ்வொரு எழுத்துமாக வழுவின்றி இசைக்கும் ஆற்றல் உடையவன்; அத்தகைய தன்மை உடைய ஒருவன் மாதவிக்கு குழல் ஆசிரியனாக அமைந்திருந்தான்!

இசைத்தமிழின் தொன்மை

சிலப்பதிகாரம் – 7

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

அரங்கேற்றுக்காதை

“மாதவி நடனம் ஆடப்போகும் அரங்கம்”

 

“எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூனெறி மரபின் அரங்கம் அளக்குங்
கோலள விருபத்து நால்விர லாக

எழுகோ லகலத் தெண்கோல் நீளத்
தொருகோல் உயரத் துறுப்பின் தாகி
உத்தரப் பலகையோ டரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்

தோற்றிய அரங்கில் தொழுதன ரேத்தப்
பூதரை யெழுதி மேனிலை வைத்துத்
தூண்நிழற் புறப்பட மாண்விளக் கெடுத்தாங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியுங்
கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு

ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்”

நாடக நூலோர் சொல்லிய அரங்க அமைப்பு இயல்புகளில் சிறிதும் மாறாது, அரங்கம் அமைப்பதற்குத் தகுதியான ஒரு இடத்தை முதலில் தேர்வு செய்தனர்.

பொதிய மலை போன்ற உயர்ந்த புண்ணிய மலைகளிலே உயரமாக வளர்ந்த மூங்கில்களிலே, கணுவுக்கு கணு ஒரு சாண் தூரம் உள்ளதாக வளர்ந்திருக்கும் மூங்கில் ஒன்றை வெட்டி வந்தனர்.

அதனை, நூல்கள் உரைத்த முறைக்கு ஏற்றவாறு, நன்கு வளர்ந்த சராசரி மனிதனின் கைபெருவிரலில் இருபத்தி நான்கு வரும்படி அளந்து ஒரு கோல் நறுக்கினர்.

ஏழு கோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும், ஒரு கோல் உயரமுமாக நடன அரங்கம் அமைக்கப்பட்டது.

நாற்புறமும் தூண்களை நிறுத்தி, அவற்றின்மேல் உத்திரப் பலகைகளைப் பொருத்தினர்.

உத்திரப் பலகைகளுக்கும் நடனமேடைக்கும் இடையே நான்கு கோல் அகல இடைவெளி இருந்தது.

அரங்கத்தின் உள்ளே போவதற்கும் வருவதற்குமாக இரண்டு வாயில்கள் அமைக்கப்பட்டன.

அரங்கின் மேல்நிலை மாடத்தில், யாவரும் தொழுது போற்றுமாறு, நால்வகை வருணபூதங்களின் உருவங்களை எழுதி வைத்தனர்.

தூண்களின் நிழல் அரங்கத்தில் விழாதவாறு ஒளிவிடும் நிலை விளக்குகளை வைத்தனர்.

ஒருபக்கமிருந்து மறுபக்கம் செல்லுமாறு அமைக்கப்பட்ட திரையையும், இரண்டு பக்கமிருந்தும் நடுவே நோக்கி வருமாறு அமைக்கப்பட்ட திரையையும், மேலிருந்து கீழிறங்கி வரும் திரையையும் பாங்குடன் அமைத்தனர்.

அதன்பின், ஓவிய வேலைப்பாடுகளுடன் மேல்விதானத்தைக் கட்டினர்.

புகழ்பெற்ற முத்துமாலை வகைகளான “மாலை”, “தாமம்”, “வளை” மாலைகளை அரங்கம் முழுதும் தொங்கவிட்டனர். இவ்வாறு, புதுமையான அரிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பெற்றது மாதவியின் ஆடல் அரங்கம்!

“தலைக்கோலின் வரலாறு”
“பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த
சீரியல் வெண்குடைக் காம்புநனி கொண்டு
கண்ணிடை நவமணி யொழுக்கி மண்ணிய
நாவலம் பொலந்தகட் டிடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்த னாகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி
மண்ணிய பின்னர் மாலை யணிந்து
நலந்தரு நாளாற் பொலம்பூண் ஓடை
அரசுவாத் தடக்கையிற் பரசினர் கொண்டு
முரசெழுந் தியம்பப் பல்லிய மார்ப்ப
அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவுந்
தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலஞ் செய்து புகுந்துமுன் வைத்தாங்கு”

பெரும்புகழ் பெற்ற மன்னவர், பகையரசருடன் நடந்த போரில் வென்று, அப்பகையரசர் புறமுதுகிட்ட வேளையிலே, அவருடைய வெண்கொற்றக் குடையின் காம்பினை சிதைவின்றி எடுத்துக்கொண்டு வருவர்.

அதன் கணுக்களை தூய்மை செய்து, நவமணிகளை கட்டி அலங்கரிப்பர். கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியைச் “சாம்பூநதம்” என்னும் பொன் தகட்டால் பொதிவர்.

நாட்டினை தன் வெண்கொற்ற குடையின் கீழ் காக்கும் மன்னனின் அரண்மனையிலே அக்கோலை வைத்து, “இந்திரனின் மகன் சயந்தனாக இக்கோல் விளங்குக” என அதற்கு வந்தனை, வழிபாடுகள் முதலியன செய்து போற்றுவர். அதுவே “தலைக்கோல்” என்பதாகும்.

புண்ணிய நதிகளில் இருந்து பொற்குடங்களால் முகந்து வந்த நல்ல நீரைக் கொண்டு தலைக்கோலை நீராட்டி, மாலை சூட்டி, நன்னாள் ஒன்றில் பொன் பூண் மற்றும் பொன் “முகபடாம்” என்னும் அலங்கார துணி பூண்டிருக்கும், பட்டத்து யானையின் பெரிய துதிக்கையிலே வாழ்த்தொலிகளுடன் அந்த தலைக்கோலை வழங்கினர்.

அந்த யானையை அழைத்துக் கொண்டு வீதி உலா வரும்போது, மூவகை முரசுகள் முழங்கின, பல்வேறு வாத்தியங்கள் ஒலித்தன, அரசனும் அவனுடன் சேர்ந்த ஐம்பெரும் குழுவினரும் அதனுடன் வீதிவலம் வந்தனர்.

யானை தேர்வீதியை சுற்றி வந்த பின் தன் கையிலிருந்த தலைக்கோலை கவிஞனிடம் அளித்தது. அவ்வாறு வந்து சேர்ந்த தலைக்கோலைக் கவிஞன் மாதவியின் நடன அரங்கிலே கொண்டு போய், அவையோர் அறியுமாறு ஒரு இடத்தில் வைத்தான்.

வாரப்பாடல்
“இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொன்னெறி இயற்கைத் தோரிய மகளிரும்
சீரியல் பொலிய நீரல நீங்க
வாரம் இரண்டும் வரிசையிற் பாடப்
பாடிய வாரத்து ஈற்றின்நின் றிசைக்குங்
கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாங்…”

அரசன் முதலிய அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப அமைத்த இருக்கைகளில் முறையாக அமர்ந்தனர். இசைக்கருவிகளை இசைப்பவர் அவர்களுக்குரிய இடத்தில் அரங்கில் முறைப்படி நின்றனர்.

நடனம் ஆட வந்த மாதவியும் தன் வலதுகாலை முன் வைத்து அரங்கில் ஏறினாள். அரங்கத்தின் வலதுப் பக்கத் தூணின் அருகே ஆடுபவள் நிற்கவேண்டும் என்னும் வழக்கப்படி, மாதவி அவ்விடத்தே சென்று நின்றாள்.

பழைய முறைகளின் இயற்கைகள் அனைத்தும் அறிந்த அனுபவமுள்ள நடன மகளிர், முறைப்படி இடத்தூண் அருகே சென்று நின்றனர்.

நன்மைகள் பெருகவும், தீமைகள் அறவே நீங்கவும், ஓரொற்று வாரப்பாடல்களும் ஈரொற்று வாரப்பாடல்களும் முறையாக பாடினர்.

வாரப்பாடல்களின் இறுதியில், இசைக்கும் இசைக்கருவிகள் அனைத்தும் முழங்கின.

இசைத்தமிழின் தொன்மைசிலப்பதிகாரம் – 8

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

அரங்கேற்றுக்காதை

இசை முழக்கம்

இசை கருவிகள் முழங்கிய விதம்

“எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் — மண்ணின்மேற்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கின் வந்து”

“குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை
ஆமந் திரிகையோ டந்தர மின்றிக்
கொட்டிரண் டுடையதோர் மண்டில மாகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி
வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்…”

குழலிசை எழுகின்ற வழியே யாழ் இசைத்தது;
யாழின் வழியே தண்ணுமை இசைத்தது;
தண்ணுமையின் வழியே முழவு இசைத்தது;
முழவோடு கூடிநின்ற ஆமந்திரிகை இசைத்தது,

இவ்வாறு ஆமந்திரிகை என்னும் இடக்கை வாத்தியமும் மற்ற எல்லா இசைக்கருவிகளும் கூடி இடைவெளியின்றி ஒன்றாக ஒலித்தன.

ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக, பஞ்சதாளப் பிரபந்தம் கட்டப்பட்டது. அத்துடன் தீர்வு ஒரு பற்றும் சேர்ந்து பற்று பதினொன்று ஆனது.

இங்ஙனம் பதினொன்று பற்றாலே முடிப்பது “தேசிக் கூத்து” என்பது நாடக நூல்கள் சொல்லும் மரபு. இவ்வாறு விதிமுறைகள் யாவும் வழுவாமல் அந்தரக் கொட்டுடன், இசை முழக்கமும் ஒன்றாக ஒலித்தது.

தேசிக் கூத்து

“மாதவி ஆடிய தேசிக் கூத்தின் வருணனை”

“மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து

மூன்றளந் தொன்று கொட்டி அதனை
ஐந்துமண் டிலத்தாற் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை…”

பலைப்பண் என்னும் பண்ணின் மேல் அளவு குன்றாதபடி ஆலாபனை செய்து,
நான்கு உறுப்பும் சேர்ந்த செய்திகளை நன்றாக அறிந்து,
தேசிக் கூத்தின் முறைப்படி மூன்று ஒத்து (மட்டதாளம்)
உள்ள அளவில் ஆரம்பித்து,
ஓர் ஒத்து (ஏகதாளம்) உள்ள தாளத்தில் முடித்து,
அழகிய மண்டில நிலைமையாலே கை குவித்தல்
அவிநயம் எல்லாம் செய்து காட்டி, வாரப் பாடல்களுக்கு மாதவியும் நடனம் ஆடினாள்.

மார்க்கக் கூத்து

“மாதவி ஆடிய மார்க்கக் கூத்தின் வருணனை”

“ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
கூறிய ஐந்தின் கொள்கை போலப்
பின்னையும் அம்முறை பேரிய பின்றைப்
பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக்
காட்டினள் ஆதலிற் காவல் வேந்தன்”

பஞ்ச பிரபந்தங்களாகக் கட்டப்பட்ட வடுகில் ஒத்து,
தேசியில் ஒத்து காட்டி, இரண்டிரண்டாக,
மட்டதாளம் முதல் நிலையாக,
ஏகதாளம் இறுதி நிலையாக,
“வைசாக” நிலையில் நடனம் ஆடினாள்.

பொன்னின் இயல்புகள் அமைந்த பூங்கொடி அரங்கத்தில் வந்து நடனமாடியது போல, நாட்டியம் பற்றிய சிறந்த நூல்களில் கூறப்படும் தகுதிகளெல்லாம் நன்றாக கடைபிடித்து, அனைவரும் காண மாதவியும் அரங்கிலே ஆடினாள்.

தலைக்கோலி

சோழ மன்னன் மாதவிக்கு “தலைக்கோலி” பட்டம் வழங்கினான்

“காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினின் வழாமைத்

தலைக்கோல் எய்தித் தலையரங் கேறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே…”

மாதவி நடனத்தை கண்டு சோழ மன்னன் மகிழ்ந்தான். அந்நாட்டு நடைமுறை இயல்பு வழுவாமல், அவன் அணிந்திருந்த பச்சை மாலையையும், “தலைக்கோலி” என்ற பட்டத்தையும் மாதவி பெற்றாள்.

முதன்முதலாய் மேடையேறி சிறந்து விளங்கிய நாடக கணிகையர்க்குரிய பரிசின் அளவு இது. நூலோர் விதித்த முறைப்படி, அரங்கின் முன் ஆயிரத்து எட்டுப் கழஞ்சுப் பொன்னையும் பெற்றாள் மாதவி.

கோவலன் மாதவியின் மனை புகுந்தான்

“அதுவே
நூறுபத் தடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுயர் பசும்பொன் பெறுவதிம் மாலை

மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென
மானமர் நோக்கியோர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகிற்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை

கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுத லறியா விருப்பின னாயினன்
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்தென்”.

பத்துப் பத்தாய் அடுக்கிய நூறுடன் எட்டையும் இணைத்த உயர்ந்த சிறப்பு பெற்று பசும்பொன்னால் ஆனது அரசன் மாதவிக்கு பரிசு அளித்த மாலை.

இதை அதிகம் பணம் கொண்டு வாங்குபவன் மாதவிக்கு மணமகனாக ஏற்றவன் என்று எண்ணினாள் மாதவியின் தாய் சித்ராபதி. இந்த எண்ணத்துடன் மான் போன்ற மிருட்சியுடைய பார்வையைக் கொண்ட கூனி ஒருத்தி கையில் அம்மாலையை கொடுத்தாள்.

நகரத்து இளைஞர்கள் பலரும் திரிந்து கொண்டிருக்கும் பெரிய தெருவிலே அம்மாலையை விற்பவள் போல கூனி நின்றாள்.

பெரிய தாமரை போன்ற நெடிய கண்களையுடைய மாதவியின் அந்த மாலையை கோவலன் வாங்கி, கூனியுடன் மாதவியின் மணைக்கு சென்றான். மாதவியுடன் கட்டி தழுவி மகிழ்ந்து மயங்கினான். அவளை ஒருபோதும் நீங்கிட முடியாத பெரும்விருப்பம் உடையவன் ஆனான்.

குற்றங்கள் ஏதுமற்ற சிறப்பினையுடைய தன் மனைவியின் நினைவே தன் உள்ளத்தில் சிறிதும் இல்லாதவனாய், தன் வீட்டை, கண்ணகியை அறவே மறந்தான்.

“எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் — மண்ணின்மேற்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கின் வந்து”.

புகார்நகரிலே பொன்னாலாகிய வளை அணிந்த மாதவியானவள், தலைஅரங்கிலே வந்து, எண்ணும், எழுத்தும், இயல்ஐந்தும், பண்நான்கும், பண்ணுக்கிசைந்த பதினொரு வகையான கூத்தும், உலகம் முழுதும் உள்ளோரெல்லாம் புகழ்ந்து பேசும்படியாக, ஆடியும் பாடியும் காட்டி, அதனால் உலகு போற்றும் சிறப்பும் பெற்றாள்.

அரங்கேற்று காதை முற்றிற்று.

 

இசைத்தமிழின் தொன்மைசிலப்பதிகாரம் – 9

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

கானல் வரி

கானல் வரி என்பது கடற்கரைச் சூழலில் பாடப்படும் இசைப்பாடல்களாகும். கடற்கரை வந்த கோவலனும், மாதவியும் யாழிசையுடன் சேர்த்து கானல்வரிப் பாடல்களைப் பாடுகின்றனர். இறுதியில், கோவலன் மனம் மாறி மாதவியை விட்டு பிரிகிறான்

வசந்தமாலையிடம் இருந்த யாழை, மாதவி தொழுது வாங்கி, சரி செய்து, கோவலனிடம் தருகிறாள்.

“சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப்
பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று
இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுது வாங்கிப்
பண்ணல் பரிவட்டணை யாராய்தல் தைவரல்

கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய
எண்வகையால் இசையெழீ இப்
பண்வகையாற் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தண் மெல்விரல்கள்

பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருட னுருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏருடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்

பட்டவகைதன் செவியினோர்த்து
ஏவலன்பின் பாணியாதெனக்
கோவலன் கையாழ் நீட்ட அவனும்
காவிரியை நோக்கினவுங் கடற்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன்”.

வசந்தமாலை கையிலிருந்த யாழ், சித்திரங்கள் வரைந்த உறையினுள்ளே வைக்கப்பட்டிருந்தது. அதன் அழகிய கோடுகளில் பூக்கள் சூட்டப்பட்டிருந்தன.

மைதீட்டிய பெரிய கண்களையுடைய மணமகள் ஒருத்தியின் ஒப்பனைக் கோலத்தைப் போலப் புனைந்த அழகினை உடையது அந்த யாழ்!

பத்தர், கோடு, ஆணி, நரம்பு முதலான யாழ் உறுப்புகளிலே, எவ்விதக் குற்றமும் குறையும் இல்லாத அந்த நல்ல யாழினை, மாதவி தொழுது, தன் கையிலே வாங்கிக் கொண்டாள்.

“பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், கண்ணிய செலவு, விளையாட்டு, கையூழ், நுண்ணிய குறும்போக்கு” என்னும் எட்டுவகையான கலைத்தொழிலாலும், இசை எழுப்பினாள் மாதவி.

பண்வகையில் குற்றங்கள் ஏதும் இல்லாமல், மரகதமணி மோதிரங்கள் அணிந்த அவளின் மென்காந்தள் விரல்கள், பாடுகின்ற வண்டினம் போல யாழின் பல நரம்புகளின் மேலாகத் தடவித் தடவி வந்தன.

“வார்த்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை”, என இசைநூலோர் வகுத்த எட்டுவகையான இசைக்கரணத்தால் உண்டாகிய இசையின் கூறுகளைத், தன் செவியால் நன்கு ஆராய்ந்து சீர்தூக்கி அறிந்தாள். பின், செம்மைப் படுத்தப்பட்ட யாழினை தன் காதலனான கோவலன் கையிலே நீட்டினாள்.

“நான் வாசிக்க வேண்டிய பாணியை, தாங்கள் வாசித்துக் காட்டி, ஆணையிடுங்கள்”, என்று மிகவும் பணிவுடன் கேட்டாள். அவனும் யாழினை இசைத்து, காவிரி குறித்தும், கடற்கானல் குறித்தும் மாதவி மனம்மகிழப் பாடத் தொடங்கினான்.

வாழி காவேரி

கோவலன் காவேரியை வாழ்த்திப் பாடுகிறான்

“திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்
றறிந்தேன் வாழி காவேரி.

மன்னு மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோ லதுவோச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மன்னு மாதர் பெருங்கற்பென்
றறிந்தேன் வாழி காவேரி.

உழவ ரோதை மதகோதை
உடைநீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் வாய்காவா
மழவ ரோதை வளவன்றன்
வளனே வாழி காவேரி”.

புகழ் மாலை சூடிய திங்களைப் போல, புகழ்பெற்ற வெண்கொற்றக் குடையை உடையவன் சோழ மன்னன். அவன், தன் செங்கோலினைச் செலுத்திக் கங்கை நதியிடம் சென்று கூடினாலும், நீ அவனை வெறுக்கமாட்டாய், ஆகையால், காவேரியே நீ வாழ்க!

கயலாகிய கண்ணை உடையவளே! கங்கை என்னும் பெண்ணுடன் உன் கணவன்(சோழன்) சேர்ந்தாலும் நீ அவனை வெறுக்காமல் இருக்கக் காரணம், உன் போன்ற மாந்தரின் பெருமைமிக்க உயர் கற்புநெறி என்பதை நான் அறிந்து கொண்டேன். காவேரியே நீ வாழ்க!

பெருமை பொருந்திய புகழ்மாலையினை அணிந்த, வெண்கொற்றக் குடையை உடையவன் உன் கணவன் (சோழ மன்னன்). அவன் தனது வளையாத செங்கோலினைச் செலுத்திக் குமரியையும் கூடினான். அதனாலும் நீ அவனை வெறுக்க மாட்டாய். ஆதலினால், காவேரியே நீ வாழ்க!

கயலாகிய கண்ணை உடையவளே! கன்னியாகிய குமரியுடன் சோழன் அவ்வாறு சேர்ந்தாலும், நீ அவனை வேறுக்காதிருத்தல், மாந்தரின் பெருமை வாய்ந்த கற்புநெறியால் தான் என்பதை நான் அறிந்தேன். காவேரியே நீ வாழ்க!

ஆற்றினில் புதுப்புனல் கண்ட உழவர் மகிழ்ந்து  ஆர்க்கும் ஓசையும்,  மதகுதனில் நீர் நிறைந்து வடிகின்ற ஓசையும், வரப்புக்களை உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும், புதுப்புனல் விழாக் கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் மிகுதியாக இருபக்கமும் ஆர்ப்பரிக்க, நடந்து செல்லும் காவிரியே நீ வாழ்க!

நீ அவ்வாறு சிறந்து நடக்க, காவல் புரியும் வீரமறவர்களின் போர்முழக்கத்தை உடைய சோழனது ஆட்சிப் பயனே காரணம். இதை நீ அறிவாயாக…

காவேரியே, நீ வாழ்க!

தமிழிசைப்பண்கள் : தொடர் 49-52
சிறீ சிறீஸ்கந்தராஜா
18/11/2016 – 08/12/2016