பழந்தமிழிசையில் பண்கள் – ஆற்றுப்படை நூல்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை –பழந்தமிழிசையில் பண்கள்

ஆற்றுப்படை நூல்கள்
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
கூத்தராற்றுப்படை

இசைத்தமிழின் தொன்மை - 34சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் இடம்பெற்றுள்ளன. திருமுருகாற்றுப்படை முருகனின் அருளைப் பெறுவதற்காகவும் பிற நான்கும் அரசனின் புகழ்பாடி அவன் கொடுக்கும் கொடைப்பொருளைப் பெறுவதற்காகவும் பாடப்பட்டுள்ளன.

திருமுருகாற்றுப்படை முருகனின் அருள், வீரம், அறுபடைவீடுகள் ஆகியவற்றை அனைத்து மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக இயற்றப்பட்டதைப் போன்றே பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) ஆகியன அரசனின் வீரம், கொடை, ஆட்சி எல்லை, செல்வச்செருக்கு ஆகியவற்றை பிற மன்னர்கள் தெரிந்துகொள்ளவும் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளவும் பாடப்பட்டுள்ளன.

இப்படி இவர்களின் புகழ் பாடுவதற்கு, சங்ககாலத்தில் பாடல்கள் புனைந்து இசைக்கும் வல்லமை வாய்க்கப்பெற்றப் பாணர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடோடிகளாய் வாழ்க்கை நடத்திய பாணர்கள் தம் சுற்றத்துடன் பல காடுகள், மலைகள், நீர்நிலைகளைக் கடந்து சென்று அந்நாட்டு மன்னனின் புகழ்பாடி, அவன் கொடுக்கும் விருந்தினை உண்டு, அவன் கொடுக்கும் புதிய ஆடைகளை உடுத்திக்கொண்டு மனநிறைவோடு செல்வதாகவும், பரிசுபெற்றுச் செல்லும் பாணன் எதிரே தம் சுற்றத்துடன் வறுமைக்கோலம் பூண்டு வரும் வேறொரு பாணனுக்குத் தான் பரிசு பெற்று வந்த மன்னனிடம் செல்ல வழிகாட்டுவதாகவும் ஆற்றுப்படை இலக்கியங்கள் அமைந்துள்ளன.

அரசர்களின் அவைகளில் வீற்றிருந்து கவிதை பாடிய புலவர் பெருமக்களால் தலைமை மாந்தர்களை உருவாக்கவே அவர்களை வள்ளலாகக் காட்டுவதற்காக வறுமைக் காட்சிகளும் இரவலர் கூட்டமும் சித்திரிக்கப்படுகின்றன.

அதனால்தான் மூவேந்தர்கள் என மன்னர்கள் உருவாகிவிட்ட சூழலில் ஆற்றுப்படை இலக்கியங்கள் அதிகமாகப் பெருகியுள்ளன.

வள்ளல்களைத் தேடிப்போகும் இந்த ஆற்றுப்படை இலக்கியம், உலகியல் வழக்குக் கிடையாது. புலநெறி வழக்குத்தான் என்கிறார் உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார்.

தமிழரின் புகழ்மிக்க வஞ்சி, மதுரை, உறந்தை ஆகிய நகரங்களிலிருந்து ஆட்சிசெய்யும் முடியுடை வேந்தரின் நிலையைக் கூறுவதோடு அல்லாமல் கொடையில் சிறந்த பேகன், பாரி, காரி முதலிய ஏழு வள்ளல்களின் வாழ்க்கையையும் இவர்கள் பாடல்கள் மூலம் அறியமுடிகிறது.

“எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்” (113-115)

வள்ளல்கள் எழுவருக்கும் ஈடாகும் கொடைச் சிறப்பை உடையவன் நல்லிய கோடன் எனும்போது இவனது வள்ளல் தன்மை புலனாகிறது.

உதவி பெறுவதற்கும் தகுதி வேண்டும் என்பதைப் புலவர்கள் மறக்கவில்லை.

கலைத்திறன் மட்டும் இருந்தால் போதாது அணுகும் முறையில் அன்பும் பண்பும் இருக்க வேண்டும். இதனை
“இவணயந் திருத்த இரும்பேர் ஒக்கல்
செம்மல் உள்ள மொடு செல்குவிர் ஆயின்”(144-145) உணர்த்தி மிகுபொருள் பெற்று வாழ்வீர் என பாணரை கூறுகின்றார்.

பண்டைய தமிழ் மக்களின் வாழ்வியலை நன்கு கூறுகிறது இவ்வாற்றுப்படை. மக்களுக்கு எந்த குறையும் இல்லை, மக்கள் அருள் பண்புடன் இருக்க மண்னன் மகிழ்வுடன் வாழ்கிறான். வீரமும் கொடையும் மன்னனின் பண்புகளை வெளிப்படுத்துவதாய் அமைகின்றது.

“விறல் வேல் மன்னர் மன்னயில் முருக்கி
நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின் “ (247-248) என்பதில் ஈகையின் சிறப்பை அறியலாம்.

ஆற்றுப்படை நூல்கள் – திருமுருகாற்றுப்படை

“முருகு பொருநாறு பாண்இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து”
பத்துப்பாட்டு நூல்கள் எவை என்பன பற்றி ஒரு பழைய வெண்பா குறிப்பிடுகின்றது. இவற்றுக்குக் கடவுள் வாழ்த்தைப் போல அமைந்ததுதான் திருமுருகாற்றுப்படை ஆகும்.

திருமுறுகாற்றுப்படைதிருமுருகாற்றுப்படை நக்கீரால் பாடப்பட்டதாகும். இவர் முருகப் பெருமானின் மீதுள்ள அன்பின் காரணமாக 317 அடிகளில் ஆசிரியப்பாவால் பாடியதாகும். முருகனிடம் அருள் பெற்ற புலவர் இன்னொரு புலவனைப் பார்த்து முருகனின் வீடுகளுக்குச் சென்று அவனைப் போற்றி வணங்கி யாராலும் பெற முடியாத பரிசுகளைப் பெற்றுக்கொள் எனக்கூறுவது போலாகும். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் செய்தது திருமுருகாற்றுப்படை ஆகும். இவரும் நெடுநல்வாடையைப் பாடியவரும் ஒருவரே என்பார் பலர். இருவரும் வெவ்வேறு ஆசிரியர்கள் என்பாரும் உளர்.

ஆற்றுப்படுத்தப் படுவோன் பெயர் நூலுக்கு அமைவது ஏனைய ஆற்றுப்படைகளின் பண்பாகும். ஆனால் இது மாறாக, பாட்டுடைத் தலைவன் பெயரால் அழைக்கப் படுகிறது.  புலவர் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் புலவர் ஆற்றுப்படை என்றும் கூறுவர்.

இக்கடவுள் இருக்கின்ற இடங்கள், வழிபடும் முறைகள் ஆகியவற்றைக் கூறி முருகக் கடவுளின் அருளைப் பெறுவதற்கான வழிகள் இப்பாட்டில் கூறப்பட்டுள்ளன. திருமுருகாற்றுப்படை ஆற்றுப்படை வீடுகள் பற்றிக் கூறுவதால் ஆறு பகுதிகளாக அமைந்துள்ளது.

முருகன், குறிஞ்சி நிலச் சிறப்புக் கடவுள். ஆதலால் பொதுப்படை மலை நாட்டிற்குரியவன் முருகன் ஆவான்.

குறமகள் செய்யும் வழிபாடும் கூறி அப்பெருமானைப் புதிய பக்தன் எப்படி வழிபட வேண்டும் என்பதைச் சுட்டி முருகன் அருள் புரியும் திறத்தினையும் கூறியுள்ளது.

அத்தகைய செவ்வேலையுடைய முருகப் பெருமானுடைய சேவடியை அடையும் நல்ல உள்ளத்தோடு நீ புறப்படு என்று வீடு பேற்றினை விரும்பும் புலவனிடம் கூறுவதாகும்.

திருமுருகாற்றுப்படை அக்கால சமுதாயத்தில் நிலவிய தெய்வங்கள், கோவில்கள், வழிபாடு முறை, தெய்வ வணக்கம் ஆகியன இடம் பெற்றுள்ளன. தெய்வ வழிபட்டில், எண்ணிய காரியங்களிலே எளிதில் வெற்றி பெறலாம் என்று நம்பினர். துன்புற்றவர்களின் துயரங்களைப் போக்கும் அவர்களை இன்புற்று வாழச் செய்யும் இத்தகைய ஆற்றலும், அருளும் உடையது தெய்வம் என்று நம்பினர்.

முருகப் பெருமானின் திருஉருவச் சிறப்பும், அவர் மார்பில் அசையும் மாலையழகும், சூரரமகளிர் இயல்பும், பெருமான் சூரபன்மனை அழித்த செயலும், மதுரையின் பெருமையும், திருப்பரங்குன்றத்தின் இயற்கை அழகும் முதற்பகுதியில் இடம்பெறுகின்றன.

பெருமான் ஏறும் பிணிமுகம் என்னும் யானையின் இயல்பு, அவருடைய ஆறு திருமுகங்கள், பன்னிரு திருக்கைகளின் செயல்கள், அவர் திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்) எழுந்தருளியிருக்கும் மேன்மை ஆகியன இரண்டாம் பகுதியில் இடம்பெறுகின்றன.

மூன்றாம் பகுதியில் திருவாவினன்குடியில் (பழனியில்) முனிவர்கள் பெருமானை வழிபடும் முறையும், சிவபெருமானும், திருமாலும், பிறதேவர்களும் பெருமானைக் காண வருதலும் விளக்கப்படுகின்றன.

நான்காவது பகுதியில், பெருமான் ஏரகத்தே (சுவாமிமலை) எழுந்தருளியிருத்தலும், அந்தணர் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து வழிபடலும் கூறப்பட்டுள்ளன. அம்மந்திரம் “நமோ குமராய” என்பார் நச்சினார்க்கினியர்.

ஆற்றுப்படைஐந்தாவது பகுதியில் பெருமான் ஒவ்வொரு குன்றிலும் ஆடும் பண்பு விளக்கப்படுகிறது.

ஆறாம் பகுதியில் முருகப் பெருமான் ஊர் தோறும் கொண்டாடப்படும் விழாவிலும், வெறியாடும் களத்திலும், காட்டிலும், சோலையிலும், ஆற்றிடைக் குறைகளிலும் (திட்டு), ஆறுகளிலும், குளங்களிலும் சதுக்கங்களிலும் மன்றங்களிலும் பிறவிடங்களிலும் உறையும் நிலை விளக்கப்பட்டுள்ளது.

குறவர்கள் தமக்கே உரிய முறையில் உயிர்க் கொலையுடன் முருகனை வழிபடும் பண்பு இப்பாட்டில் விளக்கப்படுவது சிறப்பு.

முருகப் பெருமானை வழிபடும் முனிவர்களின் உருவத் தோற்றத்தையும், பழமுதிர்ச்சோலையின் இயற்கை அழகையும் விளக்கும் பகுதிகள் நக்கீரர் புலமைக்குச் சான்று.

இந்நூலின் அருமை கருதி, பிற்காலத்தில் சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையில் ஒரு பகுதியாக இதனைச் சேர்த்துள்ளனர்.

இது, சைவர்களின் வழிபாட்டு நூலாகவும் விளங்குகிறது. திருமுருகாற்றுப்படையில் முருகனின் பெருமைகளே சிறப்பிடம் பெருகின்றதன.

“உலகம் உவப்ப வலனேர்பு திரி தரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கடன் டாங்கு” (1-2)
முருகனின் அருளாற்றலைக் கூறும் புலவர் பணிவோர்க்கு அருளாளனாகவும், மற்றவர்களுக்கு கூற்றுவனாகவும் அமைவான் என்கிறார்.

“உறுநர்த் தாங்கிய மதனுடைய நோன்றாள்
செறுநர்த் தேய்ந்த செல்லுறழ் தடக்கை”(4-5)
மேலும் முருகனின் மறப்பண்பைக் கடுமை தோன்றக் கூறி மக்களை ஆற்றுப்படுத்துவதினை பல இடங்களில் காணலாம்.

“சூர் முதல் தடித்த சுடரிலை நெடுவேல்” (46) என்றும்,

“பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற்றிருந்த தீது தீர் நியமத்து” (69-70) என்றுரைத்து இறைவனாகிய முருகன் அறத்தின் நாயகன். அறம் திறம்பினால் அவன் மறக்கள வீரனாக மாறிவிடுவான் என்பதை வலியுறுத்துகின்றார்.

முருகனின் முகங்களின் வேறுபட்ட தொழிப் பண்புகளை விளக்கும் பொழுது,
“ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகி
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்”(93-94) எனவும்,

“செறுநர்த் தேய்த்து செல்சம முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே ஒருமுகம்”(99-100) எனக் கூறுவதன் மூலம் முருகத் தத்துவத்தை விளக்குவதுடன் புலவர் மக்களை முருக வணக்கத்தில் ஈடுபடச் செய்கிறார்.

முருகனின் சிறப்புகளைக்கூறி மக்கள் அதனைப் பின்பற்றி பயனடைய வேண்டும் என்பது நோக்கம்.

“இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர்ச் சோலை மலைகிழ வோனே”(316-317) என்று அருவியின் செயலோடு ஆற்றுப்படை முடிகின்றது.

உலக வாழ்வில் துன்பப்டும் மக்களுக்கு நல்வழியாய் ஓரளவு மன ஆறுதலாய் அமைகின்றது இவ்வாற்றுப்படை.

ஆற்றுப்படை நூல்கள் – சிறுபாணாற்றுப்படை

நல்லூர் நத்தத்தனாரால் பாடப்பட்ட சிறுபாணாற்றுப்படை 269 அடிகளைக் கொண்டுள்ளது. ஓவியர் குடியில் பிறந்த நல்லியக்கோடன் பாட்டுடைத் தலைவன் ஆவான். சீறியாழை (சிறிய யாழ்) வாசிக்கும் பாணன் ஒருவனை, நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டமையின் இப்பெயர் பெற்றது.

இசைத்தமிழின் தொன்மை - 33பெரும்பாணாற்றுப்படையை விட அளவால் சிறியது என்பதால் இப்பெயர் பெற்றது என்பதும் பொருந்தும். இதில் சீறியாழின் உருவ அமைப்பு அழகான, உவமைகளுடன் விளக்கப்பட்டுள்ளது.

நல்லியக்கோடன் நாட்டு வளமும், மக்கள் வாழ்வுச் சிறப்பும், விருந்தோம்பும் பண்பும் காட்டப்பட்டுள்ளன.

கடையெழு வள்ளல்களின் வரலாறுகள் சுருக்கமாகக் கூறப்பட்டிருத்தலும், மூவேந்தர் நாடுகள் வர்ணிக்கப்பட்டிருத்தலும் இந்நூலின் வரலாற்றுத் தன்மைக்குச் சான்றாகும்.

நல்லியக் கோடன், கடையெழு வள்ளல்கள் எழுவரும் தாங்கிய ஈகையாகிய செவ்விய நுகத்தைத் தான் ஒருவனே தாங்கியதாகப் புலவர் புகழ்வார்.

பாணனுடைய வறுமை நிலை நெஞ்சை உருக்கும் வகையில் விளக்கப்படுகிறது.

நல்லியக்கோடனைக் காண்பதற்கு முன், நாய் தான் அண்மையில் ஈன்ற குட்டிகள் பாலினை உண்ணுதலை தன் பசியின் மிகுதியால் பொறுக்கவியலாமல் குரைக்கின்ற புன்மையினையுடைய அடுக்களை ; அத்துடன் கூரையிலிருந்து இற்று சுவர்மீது வீழ்ந்து கிடக்கும் கழிகள் ; அச்சுவரில் தோன்றிய கறையான் அரித்துச் சேர்த்த புழுதியிடத்துக் காளான் பூத்துக்கிடக்கும் அட்டில் ; இத்தகைய வறுமைச்சூழலில், எங்களின் வயிற்றுப்பசியினைப் போக்க, இளைத்த உடலையுடைய கிணைமகள் குப்பையில் நின்ற வேளைக்கீரையைப் கிள்ளி வந்து உப்பில்லாமல் வேக வைத்துப் பார்ப்போர் பழிப்பர் என்று நாணிக் கதவடைத்து எம் சுற்றத்தோடு பகிர்ந்து உண்டோம்.

இப்படிப்பட்ட எம் கொடிய வறுமையினைப் போக்கி கொலைத்தொழில் மிக்க சிறுகண் யானையினையும் பெரிய தேரினையும் பெற்று யாம் அந்நல்லியக்கோடன் அரண்மனையிலிருந்து வருகின்றோம் என்கின்றான். (சிறுபாண்.129-140)

பாணரின் அடுக்களையில் நாய்க்குட்டி ஈன்றுள்ளதையும், கண்ணும் திறவாத அதன் குட்டிகள் பாலில்லாத வறுமுலையைப் பற்றி இழுத்ததனால் துன்பம் தாளாது தாய் நாய் குரைத்தலையும் புலவர் பதிவு செய்திருக்கின்றார்.

“திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய்குரைக்கும் புல்லென் அட்டில்”

(குருளை = குட்டி ; நோனாது = பொறுக்காமல்;
புனிற்று = அண்மையில் குட்டியீன்ற;
புல்லென் = பொலிவு அற்ற; அட்டில் = அடுக்களை)

பாணர் குடும்பப் பெண் குப்பையில் முளைத்த வேளைக் கீரையைக் கொய்து கொண்டு வந்து, நீரை உலையாக ஏற்றி அதில் அதை வேகவைத்து, அதனைப் பிறர் காணாது கதவை அடைத்துத் தன் சுற்றத்தோடு உண்ணும் அவலத்தை, புலவர் அழகாகப் படம் பிடித்துள்ளார்.

விறலியின் மேனியழகினை அழகிய உவமைகளால் புலவர் பாராட்டுவது கற்போரைக் கவருகின்றது.

“தமிழ்நிலை பெற்ற தாங்கரும் மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை”
என்று மதுரையைப் பாராட்டுவார் புலவர்.

ஒய்மான் நாட்டை ( திண்டிவனம் ) உள்ளிட்ட, தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

அவனுடைய ஆட்சிக்குள் மாவிலங்கை, எயிற்பட்டிணம், வேலூர், ஆமூர் போன்ற நகரங்கள் அடங்கியிருந்தன.

மாவிலங்கை இவனது தலைநகரம். நல்லியக்கோடன், ஒய்மான் நல்லியக் கோடன் என்றும் இவன் பெயர் வழங்கப்படுகிறது.

“மாவிலங்கை என்னும் சிறந்த நகரத்தை தலைநகராகக் கொண்டு செங்கோல் செலுத்திய ஒவியங்குடி என்னும் சிறந்த அரசர் குடியிற் தோன்றி சிறப்பான அறிவும் நன்குடைமையும், பிறவும் உடைனவாய்த் திகழ்ந்தான்’’ என (207,217) என்ற அடிகளில் நல்லூர் நத்தத்தனார் இவ்வள்ளலின் அருமை பெருமைகளை நன்கு பாராட்டியுள்ளார்.

சங்க காலத்தில் ஈகை குணம் சிறக்கப் பெற்ற ஏழு வள்ளல்களின் பெருமை பற்றி இந்நூல் வழி அறிய முடிகின்றது.

மழை வளமுடைய, மலையின் பக்கத்திலே கான மயிலொன்று கலாபத்தை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன் குளிர் தாங்காமல் நடுங்குகின்றது என்று எண்ணி, உடனே தனது போர்வையை அதன் மீது போர்த்தினான்.

இவன் வலிமை வாய்ந்தவன். ஆசிரியர் குடியிலே பிறந்தவன் பேகன் என்னும் பெயருடையவன். (84&87)

அரசியல் அறம் செங்கோல், முறைமை தவறாத ஆட்சியினை உடையவன், கொடை, அளி, செங்கோல், குடியோம்பல் ஆகிய நான்கும் உடையவனாய்த் தான் பெறற்கு அரிய ஆறில் ஒரு பங்கு பொருளையும் வறுமை நீங்கிய வழிக்கொள்ளல் வேண்டின் அவ்வாறு கோடலும், கழித்தல் வேண்டின் இழத்தலும் தளர்ந்த குடிகளைப் பேணலும், யாவர்க்கும் தலையளி செய்தலும், குடிகளைப் பிறர் நலியாது காத்துத் தானும் நலியாது பேணுதலும், பிறவுமாகிய அரசியல் அறத்தை வழுவாது காப்பவன்.

“ஏரோர்க்கு நிழன்ற கோலினை’’ (233) என்ற அடி பயின்று வரும் தொடரால் அறியலாம்.

இவன் தன்னைப் புகழ்ந்து பாடும் பொருநர்க்கும், புலவர்க்கும், அருமறை, பயின்ற அந்தணர்களுக்கும் எப்பொழுதும் காட்சி தருவான்.

அவர்கள் வேண்டுவனவற்றை விருப்புடன் கொடுப்பான். இமயம் போன்ற அவனுடைய உயர்ந்த மாளிகையின் கதவு இவர்களுக்காக எப்பொழுதும் திறந்தேயிருக்கும்.

புறநானூற்றில் நன்னாகனார் இயற்றிய 176 ஆம் பாடலில் நல்லியக்கோடனின் கொடைத்தன்மை சுட்டப்படுகிறது.

சிறுபாணாற்றுப்படையில், கொடிய வறுமைக்குட்பட்டு தம் சுற்றத்துடன் எதிர்நோக்கி வரும் பாணன் ஒருவனைப் பார்க்கின்றான் நல்லியக்கோடனிடம் பரிசு பெற்று வரும் பாணன்.

தான் பெற்ற பரிசினைப்போன்றே அவனும் பெறவேண்டும் என்னும் நல்ல எண்ணத்தில் நல்லியக்கோடனைக் காணச்செல்லுவதற்கான வழியினையும் அவன் பெருமைகளையும் எடுத்துரைக்கின்றான்.

இத்தகைய நல்லியக்கோடனின் கொடைச்சிறப்பினைச் சொல்லப்புகும் பாணன், சேர நாட்டின் சிறப்பினையும், பாண்டிய நாட்டின் பெருமையையும், சோழ நாட்டின் செழிப்பினையும் எடுத்துக்கூறி, இவ்வளவு வளங்கள் கொண்டுள்ள அரசுகளைப்பற்றி நீ பாடினாலும் அவர்கள் கொடுக்கும் பரிசு நல்லியக்கோடனின் பரிசுக்கு இணையாகாது என்கின்றான்.

சேர, பாண்டிய, சோழர்கள் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ள நத்தத்தனார் நல்லியக்கோடனின் பெருமையினைப் பேசுவதற்காகவே இப்படியொரு உத்தியினைக் கையாண்டுள்ளார் என்று எண்ணத்தோன்றுகிறது. இவர் வேறு எந்த மன்னனைப் பற்றியும் பாடவும் இல்லை, பரிசுக்காக யாரையும் நாடிச்செல்லவுமில்லை.

இதனை, சிறுபாணாற்றுப்படையைத் தவிர இவர் பாடிய பாடல்கள் எதுவும் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை எனலாம்.

கடையெழு வள்ளல்களின் கொடைச்சிறப்பினையும் அவர்களின் நாட்டு வளம் மற்றும் வெற்றிச்சிறப்பினையும் பாணன் மூலம் கூறும் நத்தத்தனார், பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி ஆகிய எழுவரும் நடத்திய கொடையாகிய பாரத்தை தான் ஒருவனே ஏற்று நடத்தும் வல்லமை படைத்தவன் நல்லியக்கோடன் என்கிறார்.

மூவேந்தர்களைவிட அஃறிணைகளின்மீதும் அக்கறைக் கொண்டு கொடை வழங்கியுள்ள கடையெழு வள்ளல்களை நத்தத்தனார் பெரிதும் மதித்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.

பாணன் சென்ற வழியில் பாலை, நெய்தல், முல்லை, மருத நிலவாழ் மக்களின் உணவு முறை பற்றியும் பாணன் கூறுவதோடு அவ்வந்நில மக்கள் வழங்கிய உணவுகள் பற்றியும் கூறுகின்றான்.

நத்தத்தனார் பழந்தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஐந்நில மக்களின் நாட்டின் வளம், செல்வச்செழிப்பு, உணவுப்பழக்க வழக்கங்கள், போன்ற வாழ்வியல் செய்திகளை அறிந்து வந்துள்ளார் என உய்த்துணர முடிகிறது.

இவ்வாற்றுப்படை பாணர்களின் பெயரில் இயற்றப்பட்டிருந்தாலும் அவர்களின் வறுமைக்கோலத்தினை மட்டும் பேசி நல்லியக்கோடனின் பெருமையினை எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.

நல்லியக்கோடனின் ஆட்சி சிறப்பினையும், கொடையுள்ளத்தையும் வரலாற்றில் இடம்பெறச் செய்வதற்காகவே இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது என்பதனை உணர முடிகிறது.

சங்க இலக்கியங்களில் எங்குபார்த்தாலும் பாணர்களும் அவர்களின் சுற்றமும் வறுமை, பசி, கந்தலாடை, வாயில்களாக இருந்து செல்வச்சீமாட்டிகளான தலைவியரிடம் வசை வாங்கிக்கொள்ளுதலே பேசப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.

கலை என்றபோது அழகுதானே வடிவம் கொள்ளும்? அதற்கேற்ப இந்த இசைக் குழாம் பெண்களின் அழகினை அடிமுதல் மிடிகாறும் அழகொழுகப் பாடக் காண்கின்றோம்.

இசைத்தமிழின் தொன்மை - 35இசைக் கலைஞர்கள்
தமிழ் இசைக்கலைஞர்கள் பொதுவாக பாணர், பொருணர், கூத்தர் என அழைக்கப்பட்டனர். பாணர், பொருணர் என்பது ஆண்களையும்
விறலியர், பாடினியர் என்பது பெண் கலைஞர்களையும் குறிக்கும்.பொருணர் என்பவர் பரணி பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும் வல்லவராய் இருந்தனர்.

பாணர் என்பவர் வாய்ப்பாட்டிலும் அதேநேரம் இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவராய் இருந்தனர்.

கூத்தர் என்பவர் பாடிக்கொண்டே ஆடும் ஆடல் வல்லவராயும் இருந்தனர். இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் கதைக்கேற்ற உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

பொருணரின் வகை
பொருணர் மூன்றுவகையாகப் பழந்தமிழ் இலக்கியங்களில் அறியப்படுகின்றனர்.
1. ஏர்க்களம் பாடுவோர்
2. போர்க்களம் பாடுவோர்
3. பரணி பாடுவோர் என்பவராவர்.

இவர்களுள் உழைக்கும் மக்களுக்காகப் பாடல்களைப் பாடி மகிழ்விப்பவர்கள் ஏர்க்களம் பாடுவோர் எனவும்,

போர் நடக்கும் போர்க்களங்களில் மன்னர் மற்றும் படை வீரர்களுக்காக அவர்களின் ஓய்வு நேரத்தின் போது போரில் அவர்கள் பட்ட வலிகளையும் வேதனைகளையும் ஆற்றவேண்டி இசைக்கருவிகளை மீட்டிப் பாடி அவர்களை மகிழ்விப்பவர்கள் போர்க்களம் பாடுவோர் எனவும் அழைக்க்கப்படுவர். இவர்கள் தண்டகப் பறை எனும் கருவியை இசைப்பர்.

பரணி பாடுவோர் என்போர் விழாக்காலங்களில் தங்கள் இசைத்திறமைகளை வெளிப்படுத்துபவராவார். இவ்விழாக்களில் மன்னர்களின் போர்க்கள வெற்றிகுறித்து அவர்களின் வீர தீரச் செயல்கள் குறித்தும் பாடப்படும். பரணி என்பது ஒருவகைக் கூத்து அல்லது நடனமாகும். எனவே பரணி பாடுவோர் ஆடலிலும் திறன் பெற்றிருப்பர்.

மேலும் கூத்தர் என்பவர் நாட்டிய நாடக வடிவில் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவர். இவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயரும் வாழ்க்கை முறைகளை உடையவராவர்.

பாணரின் வகை
1. இசைப்பாணர் – வாய்ப்பாட்டு பாடுபவர்கள்
2.யாழ்ப்பாணர் – இவர்கள் யாழ் என்னும் இசைக்கருவியை மீட்டுபவர்கள். சங்க இலக்கிய நூல்களான சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பனவற்றில் இவர்களைப் பற்றிய பெருமளவு செய்திகளை அறியலாம்.
3.மண்டைப்பாணர் – இவர்கள் மண்டை எனப்படும் ஓட்டினை ஏந்திப் பாடி பிறரிடம் இரந்து வாழ்க்கை நடத்துபவர்களாவர். யாழ்ப்பாணம் என்பது பாணர்களின் பெயரால் வந்ததாகும்.

 

ஆற்றுப்படை நூல்கள் – பெரும்பாணாற்றுப்படை

கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன் அறப்பண்போடு வாழ்ந்ததைப் புகழ்ந்து பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.

பேரியாழை வாசிக்கும் பாணன் ஒருவன், தன்போல் இன்னொரு பாணனைத் தனக்குப் பரிசளித்த வள்ளலான இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப்பட்டதாதலால் பெரும்பாணாற்றுப் படையாயிற்று.

தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்று வரும் பாணன், வழியில் பேரியாழினை இடப்பக்கத்தில் தழுவிக் கொண்டு தன்னை ஆதரிப்பவர் யாருமில்லை என்ற எண்ணத்துடன் கால் சென்ற வழியிலே நடந்து வரும் பாணனை காண்கிறான்.

இவனை அவ்வள்ளலிடம் வழிப்படுத்தும் வகையில் தான் பெற்ற பரிசின் தன்மைகளைக் கூறியும் அதன் மூலம் வறுமை நீங்கியது என்றும், தான் சென்ற வழியின் அருமைகளையும் கூறுகின்றான்.

இவ்வகையில் அமையும் பெரும்பாணாற்றுப் படை மூலம் சங்க காலத்தில் நிலவிய நாட்டுவளம், ஆட்சி முறை, வாழ்ந்த மக்கள், அன்றாட வாழ்வில் இடம் பெற்ற உணவு, உடை, உறையுள், அணிகலன்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கலைகள், தொழில், வாணிகம், பண்டமாற்று ஆகிய சமுதாய கோட்பாடாக எடுத்துக் காட்டப்படுகின்றன.

பெரும்பாணாற்றுப்படையின் மூலம் திரையனின் அரசாட்சியின் மேன்மை பற்றி அறியப்படுகின்றது.

“அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேறு திரையன்”
(36&37) என்ற வரிகள் அதர்மத்தை ஒழித்து தர்மத்தைச் செய்வதற்கத் துணை புரிகின்றவன் என்பதை உணர்த்துகின்றன.

புலவர்க்கும் எப்பொழுதும் கொடையாளி செய்பவன், சோர்வற்ற உள்ளமுடையவன், கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள், அறிஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகிய சுற்றத்தார்களை உடையவன், இளந்திரையன் என்று மன்னரின் சிறப்புகளைக் கூறுவதன் மூலம் இவனது ஆட்சிச் சிறப்பை அறியலாம்.

இது சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்தது. இளந்திரையன் நாட்டின் ஐந்திணை வளமும், அவ்வத்திணையில் வாழ்ந்த வேடர், எயினர், மறவர், உழவர், பரதவர், ஆயர், அந்தணர் ஆகிய இனத்தவர் வாழ்க்கையும், அவர்களின் விருந்தோம்பற் பண்பும் பிறவும் பற்றி விரிவாகப் பேசுகிறது. மாந்தரின் குடியிருப்பும் செயல்களும் உண்மைத் தன்மையுடன் இதில் பாடப் பட்டுள்ளன.

திருமாலின் கோலத்தையும், கடலோரத்தில் அமைந்த விண்ணுயர்ந்த கலங்கரை விளக்கத்தையும்,
தொண்டைமானின் கொடைத்திறத்தையும்,
பேரியாழின் வருணனையையும்,
யானைகள் தவம் செய்யும் முனிவர்கட்கு உதவும் திறத்தையும்,
இளந்திரையன் ஆட்சிச் சிறப்பால் இடியும் காட்டுவிலங்குகளும் கூட வழிச் செல்வார்க்குத் தீங்கு செய்யாத தன்மையும்,
உமணர்கள் (உப்பு வணிகர்கள்) உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றி ஊர் ஊராக சேர்தலும்,
வம்பலர் என்ற வணிகர் கவசம் பூண்டும், காலிற் செருப்பணிந்தும், கழுதைச் சாத்துடன் (கூட்டத்துடன்) செல்லும் இயல்பும்,
ஆயர்குடிப் பெண் ஆன்படு பொருள்களை (பால் உணவுப்பொருட்களை) விற்றுக் குடும்பத்தைக் காத்தலும்
பிறவும் இந்நூலில் கற்றுச் சுவைக்கத் தக்கனவாகும்.

“அகலிரு விசும்பிற்பாயிருள் பருகி
பல் கான் றெழுதரு பல் கதிர்ப் பருகி”
(1-2)
பாணர்களின் இருள்மயமாகிய வறுமை வாழ்வைத் தன் கொடைக் கரங்களால் போக்கும் கதிரவனாகிய இளந்திரையன் என்று கருதும் அளவிற்கு கூறுவது நோக்கத்தக்கது.

முல்லை, மருதம், நெய்தல், பாலை நில மக்களின் வாழ்வும், அந்தணர்களின் இல்ல அமைப்பம் கூறியுள்ளமை பண்டைய சமூக அமைப்பை எடுத்துக் காட்டுகின்றது.

முல்லை நில கோவலர் – வரகு வைக்கோலால் வேயப்பட்ட குடில்.

மருதநில வேளாளர் – வைக்கோலால் வேயப்பட்ட அழகிய குடில்.

நெய்தல்நில வலைஞர் – தருப்பைப் புல்லால் வேயப்பட்ட குடில்.

பாலைநில எயினர் – ஈந்தின் இலையாலும் ஊகம் புல்லாலும் வேயப்பட்ட குடில்.

அந்தணர் குடியிருப்பு – வாழ்முள் வேலி பந்தல் சாணத்தால் மெழுகப்பட்ட தரை.

மேலும் வீட்டு அமைப்பைப் போலவே உணவு முறைகளையும் கூறியுள்ளார் புலவர். இதன் மூலம் மக்களிள் வாழ்வியலை அறியலாம்.

பெரும்பாணாற்றுப்படை கூறும் யாழின் தோற்றம்

“பாதிரிப் பூவை இரண்டாகப் பிளந்தது போன்ற செந்நிறம் கொண்ட தோலால் ஆனது யாழ்.

பாக்கு மரப்பாளையிலுள்ள கண்களைப் போன்ற இரண்டு துளைகளை இணைத்த வேறுபாடு தெரியாதபடி உருக்கி ஒன்றாய்ச் சேர்த்தது போன்ற போர்வை.

நீர் வற்றிய சுனை உள்ளே இருண்டிருப்பது போன்ற வாயினைக் கொண்டது.

கையில் ஏந்தும் யாழின் கடைப்பாகம் பிறைநிலவு போன்றது.

வளைசோர்ந்த பெண்களின் கைவளையல்களைப் போன்ற வார்க்கட்டு உடையது.

நீலமலை போலும் நீண்ட பெரிய தண்டு கொண்டது.

பொன்னுருக்கிச் செய்தது போன்ற முறுக்கிய நரம்புகள் கொண்டது யாழ்” என்று கூறுவதை வைத்து யாழின் தோற்றத்தை ஓரளவு மனக்கண்ணில் காண முடிகிறது.

பெரும்பாணாற்றுப்படையில் உருத்திரங்கண்ணனாரும், பொருநராற்றுப் படையில் முடத்தாமக்கண்ணியாரும் முழுமையாக யாழாகிய இசைக்கருவியை அதன் உறுப்புகளுக்குப் பல உவமைகளைக் கூறி நன்கு விளக்கியிருப்பது அக்காலத்து இயற்புலவர்கள் கூட இசைத்திறன் அல்லது இசை அறிவு மிகுதியாகப் பெற்றிருந்தார்கள் என்பதையும் பொதுவாகச் சமூகத்தில் இசை அறிவு மிகுந்திருந்தது என்பதையும் அறிய முடிகிறது.

வேய்ங்குழலில் பாலைப்பண்ணும், வில்யாழில் குறிஞ்சிப்பண்ணும் வாசிக்கப்படுவதை பெரும்பாணாற்றுப்படை பேசுகிறது.

 

ஆற்றுப்படை நூல்கள் – கூத்தராற்றுப்படை (மலைப்படுகடாம்) 

இசைத்தமிழின் தொன்மை - 36

புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார், பல்குன்றக் கோட்டத்து வேளிர்குடியைச் சேர்ந்த நன்னன் சேய் நன்னன் என்பானை தலைவராகக்கொண்டு ஆற்றுப்படை இலக்கணத்தில் 583 அடிகளில் புறத்திணையில் பாடிய பாடல்தான் கூத்தராற்றுப்படை ஆகும்.

இந்நூல் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலுக்கு “மலைபடுகடாம்“ என்ற சிறப்புப்பெயரும் உண்டு.

இப்பாட்டின் தலைவனாகிய நன்னன் சிறந்த வீரன், புலவர்களுக்குப் பொருள் கொடுத்துத் தமிழை வளர்த்தவன்.

தன்னை யிகழ்வோரைப் போரிலே வென்று அடிமையாக்குபவன்.

புகழ்வோருக்குத் தன் அரசு முழுவதையும் கொடுத்து விடுபவன்.

அவனுடைய அவைக் களத்திலே சிறந்த கல்வியும், அறிவுமுடைய பலர் குழுமி இருந்தனர்.

அழியாத நல்ல புகழ் உலகுள்ள வரையிலும் நிலைத்திருக்கும்படி பகைவர்கள் பலரையும்தோல்வியுறச் செய்தவன்.

அப்பகைவர்கள் நிறையாகத் தந்த அருங்கலன்களை எல்லாம் புலவர்களுக்கு மாரியைப் போல் மகிழ்ந்து சொரிவான்.

பருவ காலத்து மழை பெய்து கொண்டே இருப்பதைப் போல்,அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருப்பான். (பாடல் 70,71)

சபையில் நாள்தோறும் தத்தம் திறமையை வெளிக்காட்டாதவர்களை வெளிக்காட்டும்படி செய்வான்.

அவர்களை நல்வழிப்படுத்துவான். இதன் மூலம் (77,79) நன்னனுடைய சிறந்த அரசியல் கோட்பாட்டை அறியமுடிகிறது.

போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகற்களை நட்டு வணங்குவான்.

இந்த கற்களை தெய்வங்களாக வணங்குவான் எனக் கூத்தன் மற்றொரு கூத்தனக்கு கூறுவதாகவும் (386,390) அமைந்துள்ளது.

அரசனை புலவன் ஆற்றுப்படுத்துவதும், புலவன் அரசனை ஆற்றுப்படுத்தும் நிலை சங்க இலக்கிய காலத்திலே தொடர்ந்து தொன்று தொட்டு வருகின்றன.

திருவள்ளுவரும் அறத்துப் பாடலில் அறக்கருத்துக்களை சுவைபட எடுத்தும் இயம்புகின்றார்.

இதுவே சங்க இலக்கியத்தில் அறக்கோட்பாட்டு சிந்தனையாகப் போற்றப்படுகிறது.

இந்நூலுக்கு மலைபடுகடாம் என்னும் பெயரும் உண்டு.

மலையில் அருவிநீர் விழுகின்ற பொழுது இனிய ஓசை ஏற்படும்.

இவ்வோசையைக் கடாம் என்று சிறப்பித்துக் கூறுவதால் மலைபடுகடாம் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

யானையை மலையாகவும், அதன் மத நீரை அருவியாகவும் கற்பனை செய்து புலவர் பாடியமையால் மலைபடுகடாம் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்றும் கூறுவர். மலைக்கு யானையை உவமித்து, அதில் பிறந்த ஓசையைக் கடாம் (மதநீர்) எனச் சிறப்பித்தமையால் மலைபடுகடாம் எனப்பட்டது.

இதில் பேரியாழும் பிற இசைக் கருவிகளும் அருமையான உவமைகளால் விளக்கப்படுகின்றன. ஆகுளி, பாண்டில், கோடு, களிற்றுயிர்த் தூம்பு, குறுந்தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை என்பன பிற கருவிகள்.

மலைச் சாரலில் தோன்றும் பல்வேறு ஓசைகள் பற்றிய வருணனையும், நன்னனைக் காணச் சென்ற குறவர்கள் கொண்டு போன கையுறைப் பொருள்கள் பற்றிய வருணனையும் நூலின் சிறந்த பகுதிகள் ஆகும்.

நன்னன் நாட்டு மக்கள் பலரும் வாழும் வாழ்க்கை முறைகளும், அவர்களின் விருந்தோம்பல் சிறப்பும் அழகாகக் கூறப்பட்டுள்ளன.

நன்னன் ஊரின் பெருமையும், அவன் கலைஞர்கட்குப் பரிசளிக்கும் சிறப்பும் கூறப்பட்டுள்ளன.

பல்வேறு தரப்பினரும் உண்ட உணவுகள் பற்றியும், மலைவழியில் போவார் எதிர்கொள்ளும் இடையூறுகளும் பதிவாகியுள்ளன.

நன்னன் மலையான நவிரத்தில் தோன்றும் சேயாற்றின் தன்மையும், அங்கு குடிகொண்ட காரி உண்டிக் கடவுளும் (சிவபெருமான்) பற்றிய செய்தியும் இதில் காணப்படுகின்றன.

புகழ்வோரை வரவேற்று பரிசில் வழங்கும் இயல்புடையவன்.

ஈகை பண்பற்றோர் இறந்ததும் மறக்கப்படுவர். புகழடைந்து நிலைப்போர் எல்லாம் வறியவர்க்கு ஈந்து அவர்களின் வாழ்வை வளமாக்கியவரே என்ற கருத்தினை
“இலமென மலர்ந்த கைய ராகித்
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்” (552-553) என்ற வரிகள் உணர்த்துகின்றது.

சங்ககாலக் கலைஞர்கள் இசைக்கலையில் சிறந்து விளங்கினர் என்தபற்கு கூத்தாற்றுப்படையில் பேரியாழின் சிறப்பு இசைக்கருவிகள், முறுக்கிய நரம்புகள், வரகின் கதிர் போன்ற துளைகள், பத்தல், யானைக்கொம்பிலான யாப்பு உந்தி கோடு வணர் எனும் பலவிதமான உறுப்புகளைக் கொண்டிருந்ததை அறிவதன் மூலம் உணரலாம்.

ஆற்றுப்படை இலக்கியங்கள் வழியே அன்றைய சமுதாய நிலை, சமய நிலை, இயக்கியச் சிந்தனை, புலவர் திறன், வரலாற்று உண்மைகளை அறிய முடிகின்றது.

ஈகையும், தமிழர் தம் வாழ்வியலும், கொடைச்சிறப்பும், உதவுவதில் ஏற்படுகின்ற மன நிறைவும், வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதை ஆற்றுப்படை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

இன்று புதிதாக தோன்றியுள்ள இலக்கிய வகைமைகளில் ஒன்று பயண இலக்கியம் ஆகும். ஓர் இடத்தின் தன்மை, செல்லும் வழியின் நிலை, வழியில் உள்ள ஊர்கள் மக்களின் வாழ்க்கை நிலை, உணவுமுறை, விருந்தோம்பல், பண்பு முதலிய செய்திகள் பயண இலக்கியத்தில் இடம்பெறல் வேண்டும்.

இத்தகைய குறிப்புகள் அனைத்தும் ஆற்றுப்படை இலக்கியங்கள் முன்பே பதிவு செய்திருப்பதை அறிவதன் மூலம் பயண இலக்கியத்தின் முன்னோடியாக ஆற்றுப்படை நூல்கள் திகழ்கின்றன என்பதை உணரலாம்.

கூத்தர் பலவகை வாத்தியங்களை ‘கலப்பை’ என்ற பையில் எடுத்துச் செல்கின்றனர்.

மத்தளங்கள், கஞ்சத்தாளம், ஊதுகருவி, நெடுவங்கியம் எனும் தூம்பு, குறிய தூம்பு, குழல், எல்லரி என்ற தாளக்கருவி (சல்லிகை), பதலை, பேரியாழ் போன்ற கருவிகள் அதில் உள்ளன.

பேரியாழின் திவவு, நரம்பு, பச்சை, உந்தி, மருப்பு முதலியன மலைபடுகடாமில் விளக்கப்படுகின்றன (21-37).

இந்தப்பத்துப் பாட்டுகளில் காணும் விளக்கத்தையும் சிலப்பதிகாரத்தையும் வைத்துத்தான் விபுலானந்த அடிகள் ‘யாழ்நூல்’ என்ற பெருநூலைச் செய்தார்.

அக்காலத்தில் இயற்புலவர்களும் இசையை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைப் பத்துப் பாட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

கூத்தர்கள் என்போர் நாடகக் கலைஞர்கள். இவர்கள் தம்மோடு இசைக்கருவிகள் பலவற்றை எடுத்துச்செல்வது இயல்பு. முழவு, ஆகுளி, பதலை, கோடு, தூம்பு, குழல், யாழ், பாண்டில் முதலிய இசைக்கருவிகளைத் தம்மோடு எடுத்துச்சென்றதாக இந்நூல் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் தம்முடன் பேரியாழினையும் வைத்திருந்தனர். அந்தப் பேரியாழின் அமைப்பினையும் இந்நூல் விளக்கியுள்ளது.

பேரியாழ் முறுக்கிய நரம்புகள், வரகின் கதிர் போன்ற துளைகள், சுள்ளாணிகள், பத்தல், யானைக் கொம்பினால் ஆன யாப்பு, பொல்லம் பொத்தப்பட்ட போர்வை, உந்தி, கோடு, வணர் என பல உறுப்புகளை உடையது என்று விளக்கியுள்ளது.

கூத்தர்கள் செல்லும் வழி மலைப்பாதை. அங்குள்ள சிக்கல்கள் பற்றியும் இந்நூல் சுட்டியுள்ளது.

ஆங்காங்கு பன்றிகளைப் பிடிப்பதற்காகப் பன்றிப்பொறிகள் வைக்கப்பெற்றிருக்கும்.

பரற்கற்கள் நிரம்பிய குழிகளில் பாம்புகள் மறைந்திருக்கும்.

தினைப்புனத்தைக் காக்கும் குறவர்கள் யானைகளை விரட்ட எறியும் கவண்கற்கள் பறந்துகொண்டிருக்கும்.

காட்டாற்று வழியில் வழுக்கும் இடங்கள் மிகுதி.

மலையின் இயற்கைப் பேரழகினை இரசித்துக்கொண்டு நடந்தால் வழிதவறிவிடு வாய்ப்புண்டு.

அவ்வாறு வழிதவறியவர்களுக்குக் குறவர்கள் வழிகாட்டுவார்கள்.

இரவில் குகைகளில் தங்கிக்கொள்ளலாம்.

செல்லும் வழியில் பல நடுகற்கள் காணப்படும். திரும்பி வரும்போது வந்த வழியினை அறியவேண்டும் என்பதற்காகச் செல்லும்போதே ஆங்காங்கே புல்லை முடிந்துகொண்டே வழிநெடுகச் செல்லவேண்டும் எனப் பல அறிவுரைகள் இந்நூலுள் கூறப்பெற்றுள்ளன.

இந்நூலில் 20 வகையான ஓசைகள் கூறப்பெற்றுள்ளன.
அருவி விழும் ஒலி,
குறவர்களின் சங்கொலி,
காயம்பட்ட கானவரின் அழுகை ஒலி,
புண் ஆற்றும் கொடிச்சியரின் பாட்டொலி,
வேங்கை மலரைப் பார்த்து அஞ்சும் பெண்களின் அச்ச ஒலி,
தன் துணையை இழந்த ஆண் யானையின் ஆற்றாமை ஒலி,
தன் குட்டியை இழந்த பெண்குரங்கின் தவிப்பொலி,
மலைத்தேனைக் கைப்பற்றிய கானவரின் ஆரவார ஒலி,
குறுநில மன்னரின் பாதுகாவல்களை அழித்துவிட்ட கானவரின் வெற்றி ஒலி,
குரவைக் கூத்தாடும் குறவர்களின் ஒலி,
ஆற்றுவெள்ளத்தின் ஒலி,
யானைப் பாகரின் ஒலி,
கிளிகளை ஓட்டும் பெண்களின் குரலாசை,
மலைக்காளையும் வளர்ப்புக்காளையும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் ஒலி,
எருமைக் கடாக்களின் போர் ஒலி,
பலாச்சுளையிலிருந்து கொட்டைகளைப் பிரித்தெடுக்க அதன் மீது கன்றுகளை மிதிக்கச்செய்யும் சிறுவர்களின் ஒலி,
கரும்பிலிருந்து சாறினைப் பிழிந்து எடுக்கும் எந்திரத்தின் ஒலி,
தினையைக் குற்றும் மகளிரின் பாட்டொலி,
பன்றிகளை விரட்டுவதற்காக முழக்கப்படும் பறையொலி,
இந்த ஓசைகள் மலையில்பட்டு எதிரொலிப்பதால் ஏற்படும் எதிரொலி என 20 வகையான ஒலிகளை (ஓசைகளை) இந்நூல் சுட்டியுள்ளது.

கூத்தர்களின் பழக்க வழக்கங்கள் பலவற்றை இந்நூலினுள் காணமுடிகின்றது.
நடுகற்களை வணங்குதல்,
பாடுவதற்கு முன்போ அல்லது ஆடுவதற்கு முன்போ அவர்கள் இறைவனை வணங்குதல்,
ஓரிடம் விட்டுப் பிறிதொரு இடம்செல்வதற்கு முன்பு நிமித்தம் பார்த்தல்,
மது, எருமைத் தயிர் முதலியவற்றைச் சேமித்துவைக்கும் கலமாக (பாத்திரம்) மூங்கிற் குழாய்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
இசைக்கருவிகளை உறையிட்டுப் பாதுகாத்தனர்.
சக்கரத்தில் களிமண்ணை வைத்துச் சுழற்றி மட்கலன்கள் செய்துள்ளனர்.
மனித உயிரைப்பறிக்கும் தெய்வத்திற்குக் “”கூற்றுவன்” (எமன்) என்று பெயரிட்டிருந்தனர்.

தமிழிசைப்பண்கள் : தொடர் 31-36
சிறீ சிறீஸ்கந்தராஜா
18/07/2016-19/08/2016

தொகுப்பு – thamil.co.uk