பழந்தமிழிசையில் பண்கள் – எட்டுத்தொகை நூல்கள் 2 : சிறீ சிறீஸ்கந்தராஜா

இசைத்தமிழின் தொன்மை - 28தமிழிசைப்பண்கள்
உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 28

பழந்தமிழிசையில் பண்கள் – எட்டுத்தொகை நூல்கள்

பதிற்றுப்பத்து-1
எட்டுத்தொகை நூல்களுள் இதுவும் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன.

இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேரமன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவரும் ஆகும்.

இந்நூற்பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன.

சேர மன்னர்களின் காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை, பகையரசர் பால் பரிவு, கவிஞரை காக்கும் பண்பு  பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சி மற்றும் பல்வகை திறன்களையும் சித்தரிக்கின்றன.

இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது. அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாறுபாடும் இருக்க வாய்ப்பில்லை.

பதிற்றுப்பத்தின் பதிகங்கள் காலத்தால் பிற்பட்டன. இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நூலின் காலத்துக்குப் பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. இந்நூலின் 10 பதிகங்களில் எட்டு பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இப்பதிகங்களுக்கு கட்டமைப்புச் சிறப்பு உண்டு. பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் உள்ளன. கவிதைப் பகுதி நூலின் பாக்களைப் போன்று ஆசிரிய நடையில் உள்ளது. இந்த பதிகங்களின் முதற்பகுதி சீர்மை மிக்க கவிதைகளாக உள்ளதால் இவற்றை எழுதி நூலைப் பதிப்பித்தவர் கவிஞராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.

இப்பதிகங்கள் சோழமன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன.

பதிற்றுப்பத்துப் பதிகங்களை கூர்ந்து நோக்கினால் சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மரபினர் இரு இடங்களில் இருந்து ஆட்சி செய்தனர் என்பது தெளிவாகிறது.

இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன் என்பதும், மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும்,

நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துக்களின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் என்பதுவும் தெளிவாகின்றன.

காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத் தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிக்கவும் முடிகிறது.

ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன்,

எட்டாம் பத்தின் தலவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை,

ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பன புலனாகின்றன.

காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மீது பாடப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார்.

10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது.

கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம்.

பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.

நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப் பாடல்களாய் அமைந்துள்ளன. ஒரு பாட்டின் கடைசி வரி அடுத்த பாட்டின் முதல் வரியாக வருவதே அந்தாதியாகும்.

எடுத்துக்காட்டாக நான்காம் பத்தின் முதற்பாடல் கடைசி வரி போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே.

இப்பத்தின் அடுத்த பாடல் அதாவது 32 வது பாடல் முதல்வரி மாண்டனை பலவே போர்மிகு குருசில் நீ.

மேற்கண்டவாறு விளக்கப்பட்டுள்ள அந்தாதித்தொடை இப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது.

ஒவ்வொரு பத்துப் பாடல்களின் ஈற்றிலும் ஒரு பதிகம் அமைந்துள்ளது. இப்பதிகத்தில் பாடப்பட்ட மன்னன் பெயர், அவர் செய்த போர், கொடைத்திறம், பாடிய புலவர் பெயர், அவர் பெற்ற பரிசுப்பொருள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

பதிற்றுப்பத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிற்கும் அப்பாட்டில் வரும் சிறந்த தொடரால் பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாட்டின் ஈற்றிலும் அப்பாடலின் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்ற பாட்டியல் கூறுகளைப் பழைய உரையாசிரியர் குறித்துள்ளார்.

பதிற்றுப்பத்துப் பாடல்களை அனைத்தும் பாடண்திணையைச் சார்ந்தவை. பரிபாடலைப் போலவே பதிற்றுப்பத்தும் இசையோடுப் பாடுதற்குரியது.

இசைத்தமிழின் தொன்மை - 29 தமிழிசைப்பண்கள்
உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 29

பழந்தமிழிசையில் பண்கள் – எட்டுத்தொகை நூல்கள்

பதிற்றுப்பத்து-2
சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடும் ஓர் இலக்கியமாகும். பத்து சேர அரசர்களுக்குப் பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்களைப் கொண்ட நூல் இது.

திணை = பாடாண் திணை (புறத்திணை)
பாவகை = ஆசிரியப்பா
பாடல்கள் = 100 ( கிடைத்தவை80)
புலவர்கள் = 10 (அறிந்த புலவர்8)
அடி எல்லை = 8 – 57

வழக்கில் இல்லாத பழஞ்சொற்களை மிகுதியாகப் பெற்றுள்ளதால் இந்நூல் “இரும்புக்கடலை” என்றும் அழைக்கப்படுகிறது.

பதிற்றுப்பத்து முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஆண்ட சேர வேந்தர் பரம்பரைச் செய்திகளைத் தெரிவிக்கிறது. சங்கநூல்களில் அனைத்துப் பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற ஒரே நூல் பதிற்றுப்பத்து மட்டுமே.

பதிற்றுப்பத்தும் இசையோடு பாடப்பட்ட நூல். (இசையோடு பரிபாடலும் பாடப்பட்டது). நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.

பதிற்றுப்பத்தில் இசைக்குறிப்புகள்
தமிழர்கள் தொல்காப்பியக் காலத்திற்கு முன்னரே கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கினர்.

சங்க இலக்கியத்தில் தமிழர்களின் பண்கள், இசைக் கருவிகள், இசைக் கவிஞர்கள், இசைப்பாடல்கள் பற்றிய ஏராளமான குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன.

பிற நாடுகளில் நாட்டுப்புற இசையின் தன்மைப் பெற்றிருந்த காலத்திலே, தமிழர்களின் இசை மிகவும் உயர்ந்த நிலையிலும், தனித்திறன் பெற்றும் விளங்கியது.

தமிழர்களின் இசைக் கலையின் தனித்திறனை பதிற்றுப்பத்து வழி நின்று நோக்குவோமாக.

பதிற்றுப்பத்து உண்மையான வரலாற்று செய்திகளையும், நிகழ்வுகளையும் குறிப்பதாகும்.

சேர மன்னர்கள் வீரத்திலும் கொடையிலும் சிறந்து விளங்கினார்கள் என்பது மட்டுமல்லாது, நுண்கலையான இசைக்கலையினை உன்னத நிலையில் கௌரவித்தும் ஆதரித்தும் வந்தனர்.

இங்கு காணப்படும் இசைக் குறிப்புகள் மட்டுமன்றி, பாடினி என்ற இசைக் குழுவினரை பரிசுகள் கொடுத்து ஆதரித்தனர் என்றும் அறிய முடிகின்றது.

ஒவ்வொன்றுக்கும் அது என்ன பாட்டு, என்ன வண்ணம், என்ன தூக்கு, பாட்டின் பெயர் என்ன என்பன போன்ற குறிப்புகளும் பதியப்பட்டுள்ளன. மேலும் இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

வண்ணமும் தூக்கும்
பதிற்றுப்பத்தில் சொல்லப்பட்ட வண்ணங்கள் ஒழுகு வண்ணம், சொற்சீர் வண்ணமுமாகும். செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் இடம்பெறுகின்றன. வண்ணம் என்பது பாடலின் சீர்களின் வரும்  சந்த வேறுபாடுகள் எனலாம்.

வண்ணம் என்றதொரு தன்மை செய்யுளுக்கு முக்கியமானதாகத் தொல்காப்பியரால் சொல்லப்படுகிறது. தொல்காப்பியரின் இருபது வண்ணங்களில் மேற்கூறிய இரண்டு வண்ணங்களும் சங்க நூலான பதிற்றுப்பத்தில் மட்டுமே காணமுடிகிறது.

அருணகிரிநாதரின் திருப்புகழ் போன்ற சந்தப்பாக்களில் வரும் வண்ணம் தான் இன்று பழக்கமாயிருக்கிறதேயன்றி, பண்டைய ஆசிரியப்பாவுக்குப் பொருந்துகின்ற வண்ணங்களை இன்று அறியமுடியவில்லை.

ஒழுகு வண்ணம்
ஒழுகு வண்ணம் என்பது ஒழுகிய ஓசையால் செல்லும் சந்தம். ஒழுக வண்ணம் ஓசையில் ஒழுகும் (தொ.செ.224).

பதிற்றுப்பத்தில் 68 பாடல்கள் ஒழுகு வண்ணமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பாடல் எண் : 11-13, 15-18,21, 23-24, 27-49, 52-68,70, 72-81, 83-89.

சொற்சீர் வண்ணம்
சொற்சீர் வண்ணம் என்றால் பாடல் அடியாக வருவது எனலாம்.

சொற்சீர்தாகி நூற்பால் பயிலும் (தொ.செ.12).  சொல் அல்லது சொற்றொடர் மட்டுமே

பதிற்றுப்பத்தில் 12 பாடல்கள் ஒழுகு வண்ணமும், சொற்சீர் வண்ணமும் கலப்பாக வந்துள்ளது.

பாடல் எண் : 14, 19, 20, 22, 25, 26, 50, 51, 69, 71, 82, 90.

தூக்கு
தொல்காப்பியத்தில் தூக்கு என்பது செய்யுள் உறுப்புகளில் ஒன்று என்றும், பாக்களின் ஓசையை குறிப்பதாகவும் விளங்குகின்றது. (தொ.செய். 80-86)

சிலப்பதிகார உரையில் தூக்கு என்பது தாளத்தின் வழிவரும் செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத் தூக்கு, கோயில் தூக்கு, நிவப்பு தூக்கு, கழால் தூக்கு, நெடுந்தூக்கு எனப்பட்ட ஏழு தூக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை முறையே ஒருசீர், இருசீர், முச்சீர், நாற்சீர். ஐஞ்சீர், அறுசீர், எழுசீர் என்று சொல்லப்படும்.

இசைப் பாடல்கள்
பதிற்றுப்பத்தில் இசைப் பாடல்களாகிய உழிஞைப்பாடல், தழிஞ்சிப் பாடல் முதலியன இடம் பெறுகின்றன.

உழிஞை பாடல்
உழிஞை பாடல் என்பது வெற்றி மன்னன் மகிழ பெண்கள் பாடுவதாகும்.

வண்டுபடு கூந்தன் முடிபுனை மகளிர்
தொடை படுபேரியாழ் பாலை பண்ணிப்
பணியா மரபின் உழிஞை பாட (பதிற். 40 : 4-6)

என்ற பதிற்றுப்பத்து வரிகள் உழிஞைப் பாடலைப் பற்றி கூறுகிறது.

மகளிர் பேரியாழின் துணையுடன் பாலைப்பண் இசைத்துப் போற்றுகின்றனர்.

தழிஞ்சிப் பாடல்
தழிஞ்சிப் பாடல் என்பது விறலியரால் பாடப்படுகிறது.

விறலியர் என்பவர் ஆடல், பாடல், இசைக் கருவிகளை இசைத்தல் ஆகியவற்றில் விறல் (திறமை) படைத்தவர்.

தழிஞ்சிப் பாடல்
இளந்துணைப் புதல்வர் நல்வளம் பெற்ற நிலையை வியந்து பாடும் பாடல் ஆகும்.

செல்ல மோதில் சில்வளை விறலி
பாணர் கையது பணி தொடை நரம்பின்
விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக்
குரல் புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி
இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த……… (பதிற் 57: 6-10)

என்று வரும் பதிற்றுப்பத்து பாடற்பகுதி தழிஞ்சிப் பாடலை விளக்கும் பாணர் யாழை இசைக்க விறலியர் குரலிணைந்துப் பாடுகின்றனர்.

பண்ணுப் பெயர்த்தல் (அ) கிரகபேதம்
பண்ணப் பெயர்ப்பு என்பது ஒரு பண்ணிலிருந்து வேறோர் பண்ணைப் பிறப்பிப்பதாகும்.

‘பண்ணுப் பெயர்த்தல்’ , ‘குரல் திரிபு’, ‘மாறுமுதல் பண்ணுதல்’ என அழைத்தனர்.

நாம் இப்போது இந்த முறையை ‘கிரக பேதம்’ என்றும் ‘கிரக சுரபேதம்’ என்றும் அழைக்கிறோம்.

பதிற்றுப் பத்து 65-ம் பாடல் 14,15 வரிகளில் இவ்வாறு காணப்படுகிறது.

”தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்த்தாங்கு”

பண்ணு பெயர்த்தல் மூலம் நமக்கு பல இராகங்கள் கிடைக்கின்றன.

கிரக பேதம் செய்து பாடலைப் பாடுவது என்பது, இசையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாலேயே கூடும்.

பதிற்றுப்பத்தில் ‘பாலை பண்ணி’ என்று குறிப்பிடப்படும் வார்த்தைகள் பண்ணு பெயர்த்தலையே குறிப்பிடுவதாகும்.

இதனை பதிற்றுப்பத்து 66 : (1-3), 46 : (4.5), 57: (5) ஆகிய வரிகளில் காணலாம்.

பதிற்றுப்பத்துள் பல பாடல்கள் விறலியாற்றுப் படையும், இரண்டு பாடல்கள் பாணாற்றுப் படையுமாகும்.

இவை குறிப்பிட்ட சேர மன்ன்னிடம் விறலியரும், பாணரும் பரிசுபெற வழிசொல்லி ஆற்றப் படுத்துகின்ற பாடல்கள் ஆகும்.

பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பாடலுக்கும் அதன்கண் உள்ள நயமான ஒரு சொல்லை எடுத்து, அப்பாடலின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வைக்கப்பட்ட பெயர்களில் சில குறிப்பிடத்தக்கன. கூந்தல் விறலியர், நன்னுதல் விறலியர், சில்வளை விறலி, பறைகுரல் அருவி முதலான இவை இசைத்தொடர்பு உடையவை.

அரசனைப் பாடும்போது ‘பாடினி வேந்தே’ என்று சொல்லக் காண்கிறோம். அதாவது பாடிவந்த பாடினிக்கு நிரம்ப பொருள் கொடுத்தவர்  என்ற சிறப்பு.

பாணர்களுக்கு அரசர் பொன்னாலாகிய தாமரைப் பூக்களைப் பரிசிலாக அளித்தார்கள். ‘பாணர் புரவலன்’ என்றே ஒரு அரசர்க்கு பெயர்.

பதிற்றுப்பத்தில் இசைக் கருவிகள்
1. பதலை – ஒரு முகப்பறை வகையுள் ஒன்று
2. முழவு – தோற் கருவிகள் ஒன்று
3. முரசு – ஒரு முகத்தோற் கருவி
4. யாழ் (பேரியாழ்) – 21 நரம்புகள் கொண்ட யாழ்
5. பெருவங்கியம் – இசைக்குழல்
6. வயிர் – ஊது கொம்பு, புல்லாங்குழல்

பாணர் தங்கள் இசை கலன்களை ஒரு பையில் கட்டி சுமந்து செல்கிறார்கள். அது கலப்பை (பதிற். 41. 15, 23) என்று பெயர் பெறுகிறது.

பதிற்றுப்பத்தில் வண்ணம், தூக்கு, இசைப் பாடல்கள், பண்ணுப் பெயர்த்தல், இசைக் கருவிகள், இசைக் கலைஞர்கள் என இசைக் குறிப்புகள் ஆங்காங்கே பரவலாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இன்றைய தமிழிசை பன்னெடுங் காலத்திற்கு முன்பே தமிழர்களால் வித்திடப்பெற்று, சங்க காலத்தில் தனித்திறன் பெற்று, உயர்நிலையில் இருந்ததை பதிற்றுப்பத்து வழிமூலம் காணமுடிகிறது.

இசைத்தமிழின் தொன்மை - 30தமிழிசைப்பண்கள்
உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 30

பழந்தமிழிசையில் பண்கள்

ஆற்றுப்படை நூல்கள்

ஆற்றுப்படை இலக்கணம்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும் -தொல்காப்பியம் – 1037

கூத்தர் = நாடகக் கலைஞர்; பாணர் = இசைக்கலைஞர்;
பொருநர் = பாடலிலும் நடித்தலிலும் வல்லவர், போர்க்களத்தைச் சிறப்பித்துப் பாடுபவர்;
விறலி = ஆடல், பாடல், நடித்தல் கலைகளில் வல்ல பெண்; உறழ்தல் = மாறுபடுதல்;
காட்சி உறழத் தோன்றல் = செல்வ நிலையில் ஏற்றத் தாழ்வு பார்த்த உடனே புலப்படும் வண்ணம் ஒருவர்க்கு ஒருவர் வேறுபட்ட தோற்றத்துடன் காட்சி அளித்தல்;
அறிவுறீஇ = விளக்கிச் சொல்லி; பயன்எதிர = வளங்களை அடைய.
என்பது தொல்காப்பிய நூற்பா ஆகும். இங்கே ஆற்றப்படையின் இலக்கணம் கூறப்படுகிறது.

ஆற்றுப்படை என்பது ஆற்றுப்படுத்துதல் என்பதைக் குறிப்பதாகும்.

சங்க காலத்திலேயே தனிப்பெரும் இலக்கியமாக ஆற்றுப்படை வளர்ச்சி பெற்றிருந்தது.

கூத்தர் – கூத்தாடக் கூடிய கலைஞர்கள்.

பாணர் – யாழ்கொண்டு பண் இசைக்கக் கூடியவர்கள்.

சிறு யாழை வாசித்தால் சிறுபாணர் என்றும்,பேரியாழை வாசித்தால் பெரும் பாணர் என்றும் பெயர் பெறுவர்.

பொருநர் – ஏர்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர், பரணி பாடுநர் என மூவகைப்பட்ட பொருநர்கள் இருந்தனர்.

விறலி – விறல் பட – மெய்ப்பாடு தோன்ற – உணர்வுகளை வெளிப்படுத்தி திறம்பட ஆடும் ஆடல்மகள்.

கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகியோரை சங்க காலத்தில் வாழ்ந்த கலைஞர்களாக அறிய முடிகிறது.

இவர்கள் பாடல் இசைத்தல், கூத்தாடுதல், ஆடுதல் எனப் பல்வேறு திறன்களையும் பெற்றிருந்தனர்.

வறுமை காரணமாக அரசனைப் பார்த்து தம் திறன்களை வெளிப்படுத்தி பரிசில் பெற்று வருவதற்காக நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்வர்.

அப்போது தம்மைப் போல் வறுமை காரணமாக அரசனை நாடிப் பரிசில் பெற்றுத் திரும்பி வரும் கலைஞர்களைக் காண்பர்.

அவ்வாறு பரிசில் பெற்ற கலைஞர் ஒருவர் பெறவிருக்கும் கலைஞரை ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படையாகும்.

அந்த அரசனிடம் எவ்வாறு செல்வது, அவன் என்னென்ன பரிசில் தருவான் எனப் பல்வேறு செய்திகளை பரிசில் பெற்ற கலைஞர் சொல்வதுண்டு.

சிறுபாணன் – சிறு பாணனை ஆற்றுப்படுத்தினால் அது சிறுபாணாற்றுப்படை எனப்படும்.

பெரும்பாணன் – பெரும்பாணனை ஆற்றுப்படுத்தினால் அது பெரும்பாணாற்றுப்படை எனப்படும்.

கூத்தர் – கூத்தரை ஆற்றுப்படுத்தினால் அது கூத்தராற்றுப்படை எனப்படும்.

விறலி – விறலியை ஆற்றுப்படுத்தினால் அது விறலியாற்றுப்படை எனப்படும்.

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் செம்பாதி ஆற்றுப்படைகள் உள்ளன.

திருமுருகாற்றுப்படை ( முருகனிடம் வீடு பேறு பெற்ற பக்தன் வீடு பேறு பெறவிருக்கும் ஒருவனை ஆற்றுப்படுத்துதல்)
சிறுபாணாற்றுப்படை (சிறுபாணர் – சிறுபாணர்)
பெரும்பாணாற்றுப்படை (பெரும்பாணர் – பெரும்பாணர்)
பொருநராற்றுப் படை( பொருநர் – பொருநர்)
கூத்தராற்றுப்படை (கூத்தன் – கூத்தன்)

இந்த ஆற்றுப்படை நூல்கள் வாயிலாக சங்க காலத்தில் அரசனுக்கும் கலைஞர்களுக்கும் இருந்த உறவு நிலைகளை அறிய முடிகிறது.

சங்க இலக்கியத்தில் புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும்ஆற்றுப்படைத் துறை அமைந்த சிறுசிறு பாடல்கள் இருப்பதைக் காண முடிகிறது.

எட்டுத்தொகை நூல்களில் ஆற்றுப்படைப் பாடல்கள் உள்ளன.

பத்துப்பாட்டில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உள்ளன.

பிற்காலத்தில் ஆற்றுப்படை நூலைத் தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கலாயினர்.

இதனைப் பாட்டியல் வகைகளுள் ஒன்றாக்கினர்.

ஆற்றுப்படுத்துதல் என்பது வழிப்படுத்துதல் என்னும் பொருள் உடையது.

விறலியர், பாணர், கூத்தர், பொருநர் என்போர் தமது வறுமையைப் போக்க வள்ளல்களிடம் சென்று பொருள் பெறுவது அக்கால வழக்கம்.

அவ்வாறு பரிசு பெற்றுச் செல்லும் மேற்கூறிய நால்வகைப் பிரிவினருள் ஒருவன், பரிசு பெறச் செல்லும் இன்னொருவனை வழிப்படுத்தும் முறையில் அமைவதே ஆற்றுப்படை ஆகும்.

அகவற்பாக்களாக அமையும் இப் பாடல்கள் தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவதாக அமையும்.

ஆற்றுப்படைப் பாடல்கள்
பாணாற்றுப்படை
புலவராற்றுப்படை
விறலியாற்றுப்படை

ஆற்றுப்படைப் பாட்டுகள்
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
கூத்தராற்றுப்படை

தமிழிசைப்பண்கள் : தொடர் 28-30
சிறீ சிறீஸ்கந்தராஜா
03/07/2016 – 14/07/2016

தொகுப்பு – thamil.co.uk