பழந்தமிழிசையில் பண்கள் – எட்டுத்தொகை நூல்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 23

பழந்தமிழிசையில் பண்கள் -4

எட்டுத்தொகை நூல்கள்

இசைத்தமிழின் தொன்மை - 23இசை உணர்வின் எழுச்சியால் இசைப்பாடல்கள் தோன்றுகின்றன. சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பண்டைத் தமிழரின் இசைப்புலமையை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு.  இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும் பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப் பட்டது.  இவற்றில் பல பாடல்களில் அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை.

அகத்தையும் புறத்தையும் பற்றிப் பாடல்களாக இந்நூல்களைப் பகுக்கின்றனர். தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப்ப்பட்டமையால் தொகை எனப் பெயர் பெற்றது.

இத்தொகையுள் ஏறத்தாழ  2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர்.

இவர்களில் 25 அரசர்களும்,  30 பெண்பாற்புலவர்களும் உண்டு.  ஆசிரியர் பெயர் தெரியாப் பாடல்கள் 102.

எட்டுத்தொகை நூல்களுள்  பரிபாடலும், கலித்தொகையும் தவிர்த்து மற்றவை ஆசிரியப்பாவால் அமைந்து சில சமயம் வஞ்சிப்பாவால் வரப்பெற்று அமைந்துள்ளன.

3 அடிகள் சிற்றெல்லையாகவும் 140 அடிகள் பேரெல்லையாகவும் பெற்றுள்ளன.

இந்நூல்கள் கடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்டன என்பர். தொகுக்கப்பட்ட காலம் கி.பி.3 அல்லது 4ம் நூற்றாண்டு என்றும் கருதுவர்.

எட்டுத்தொகை
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு

எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய  ஒரு வெண்பா குறிப்பிடுகின்றது.
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை”
இவை கூறும் பொருள் குறித்து இவற்றை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்வர்.

அகப்பொருள் பற்றியவை:
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
கலித்தொகை
அகநானூறு

புறப்பொருள் பற்றியவை :
புறநானூறு
பதிற்றுப்பத்து

அகமும் புறமும் கலந்து வருவது:
பரிபாடல்

அகப்பாடல்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைத்துள்ளன. புறப்பொருட் பாடல்களுள் சில அழிந்தும், சில சிதைந்தும், பாடவேறுபாடுகள் மிகுந்தும் காணப்படுகின்றன.

பரிபாடல்
பரிபாடலில் எட்டு பாடல் அகம் பற்றியன. இவை கடவுள் பற்றிய பாடல்களாகவும், தனிப்பாடல்களாகவும் காணப்படுகின்றன. இவையெல்லாம் ஆசிரியப்பாவால் இயன்றவையாகும். பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

பரிபாடல் இலக்கணம்
தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது.
“நெடுவெண்பாட்டே, குறுவெண்பாட்டே,
கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுளொடு,
ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின”.  (தொல்காப்பியம் பொருளதிகாரம் 423 செய்யுளியல்)

“பரிபாடல்லே தொகை நிலை வகையின்,
‘இது பா’ என்னும் இயல் நெறி இன்றி,
பொதுவாய் நிற்றற்கும் உரித்து” என மொழிப.  (தொல்காப்பியம் பொருளதிகாரம் 425 செய்யுளியல்)

“கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு,
செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக,
காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும்”  (தொல்காப்பியம் பொருளதிகாரம் 426 செய்யுளியல்)

“சொற்சீர் அடியும், முடுகியல் அடியும்,
அப் பா நிலைமைக்கு உரிய ஆகும்”  (தொல்காப்பியம் பொருளதிகாரம் 427 செய்யுளியல்)

“பரிபாடல்லே,
நால்-ஈரைம்பது உயர்பு அடி ஆக,
ஐ-ஐந்து ஆகும், இழிபு அடிக்கு எல்லை”  (தொல்காப்பியம் பொருளதிகாரம் 464 செய்யுளியல்)

“பாய் பரிப் புரவி ‘  (மதுரைக்காஞ்சி 689)

துள்ளி நடப்பது கலிப்பா,
தவ்வி நடப்பது பரிபாடல்.

ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப் பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.

நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல். வெண்டளையும், ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும். வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.

கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும்.  காமப் பொருளில் வரும்.  சொற்சீர் அடியும், முடுகியல் அடியும் கொள்வது உண்டு. 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.

பரி போல் கால்களால் பரிந்து நடைபோடும்  பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் “பரிபாடல்”  என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பரிபாடலின் தொகுப்பைப் பின்வரும் வெண்பாவின்  துணைகொண்டு அறியலாகும்:
“திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று – மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்”

பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்,
செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல்,
காடுகாள் (காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல்,
படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல்,
பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்
என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன.
(ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.  இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்.

“திருந்து மொழிப் புலவர் அருந்தமிழ் ஆய்ந்த சங்கம் என்னும்
துங்கமலி கடலுள் அரிதின் எழுந்த பரிபாட்டமுதம்”  எனச் சான்றோராற் புகழப்பெற்ற இப் பரிபாடல், பாட்டும் தொகையும் கீழ்க்கணக்கும் ஆகிய முத்திறத்த பழந் தமிழ்ப் பனுவல்களுள் நடுநின்ற தொகை நூல் எட்டனுள்ளும் ஐந்தாவதாக நின்று திகழுமொரு தொகைநூல் ஆகும்.

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்துங் கலியோட கம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை”

இவ் வெண்பாவின்கண் “ஓங்கு பரிபாடல்” என உயர்த்தோதப் பட்ட இப் பரிபாடலைப்பற்றி ஆசிரியர் தொல்காப்பியனார் தமது ஒப்பற்ற நூலிலே விதந்து கூறியுள்ளவற்றைச் சிறிது காண்பாம்.

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர்”  (அகத் – சூ. 56)
என்பது தொல்காப்பிய அகத்திணையியலுள் வருமொரு நூற்பாவாகும்.

இதன்கண், தமிழ்மொழிக்கே சிறப்புரிமையுடைய அகம் புறம் என்னும் இருவகைப் பொருண்மரபு பற்றியும் பாடுங்கால் அகப்பொருளினை நாடக வழக்கத்தானும் உலகியல் வழக்கத்தானும் பாடுதற்குத் தமிழ்ப்பாக்களுள் சிறந்தவை கலிப்பாவும் பரிபாட்டுமே ஆகும். இன்று நமக்கு கிடைத்திருக்கும் இசை பற்றிய குறிப்புகளில் பழமையான இலக்கியமாகத் திகழ்வதும் பரிபாடலேயாகும்.

எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான இது கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகும். 70 பாடல்களைக் கொண்ட இந்நூலில் கழிந்தன போக இன்று எஞ்சியுள்ளவை 22 பாடல்களாகும்.

இவற்றுள் ஒவ்வொரு பாடலின் கீழும் அப்பாடலின் ஆசிரியர் பெயரும் அதற்கு இசை அமைத்தவர் பெயரும், அதற்குரிய யாழ், செந்துறை, தூக்கு வண்ணம் முதலியனவும்  குறிப்பிடப்பட்டுள்ளன.

பரிபாடல்களில் மறையோர் பாடல், உழிஞை பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் ஆகிய அனைத்துமே “இசைப்பாடல்கள்” என்றே  கூறுகின்றார் பரிமேலழகர்.

பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும், எந்தப் பண்ணில் பாடவேண்டும் என்ற விபரங்களும், பண்ணமைத்த இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடு கிடைக்கப்பெறுகின்றன.

பரிபாடலுக்கு இசைவகுத்தோர் பதின்மர் ஆவர். பெட்டகனார், கண்ணனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார்,  பித்தாமத்தர் என்போர் பரிபாடலில் காணப்படும் பாடல்களுக்கு பண்ணமைத்துள்ளனர்.

பரிபாடலில் உள்ள பாடல்கள், இசைப் பாடல்களாக அமைவதோடு மட்டுமன்றி, இசைபற்றியும், இசைக் கருவிகள் பற்றியும் தகவல்களைக் கொண்டனவாகவும் விளங்குகின்றன. இவற்றில், பாட்டுக்களை இயற்றிய ஆசிரியர்களே இசையமைத்த பாடல்களும் உண்டு.

பாடிய கவிஞர் ஒருவராகவும் இசையமைத்த கலைஞர் வேறொருவராகவும் அமைந்த பாடல்களும் உண்டு. இவைகள் பண்சுமந்த பாடல்களே.

இப்பரிபாடல்களில் பல நீண்ட நெடும் பாடல்கள்; 100 வரிகளுக்கும் மேல் அமைந்த பாடல்களும் உண்டு.  இப்பாடல்களை அக்காலப் பாணர்கள் காந்தாரம், நோதிரம், செம்பாலையாகிய பண்களில் பாடியுள்ளனர்.

பரிபாடலின் யாப்பினைக் குறித்துத் தொல்காப்பியர்

பரிபாடல் வெண்பா யாப்பினதே எனக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியம் செய்யுளியல் உரையாசிரியர்கள்  “தேவபாணி” என்னும் கடவுளரைப் பாடும் பாட்டு வகைக்கு  எடுத்துக் காட்டாக வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவில்  அமைந்த பாடல்களைக் காட்டியுள்ளனர். இவையும்  நெடும்பாட்டுக்களே. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு இசையமைத்ததாகக் குறிப்பேதும் கிடைக்கவில்லை.

பரிபாடல், வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆகிய இருவகைப் பாடல்களுக்கும் தரவு, கொச்சகம், அராகம் அல்லது இராகம், சுரிதகம் போன்ற ஒத்த உறுப்புக்கள் உண்டு. இவையிரண்டும் கடவுள் வாழ்த்தினும் மலைவிளையாட்டினும் புனல்விளையாட்டினும் பிறவெல்லாவற்றிலும் காமப்பொருளாகியே வரும்.

“ஒத்தகுழலின் ஒலி எழ, முழவு இமிழ்
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி
ஒத்து அளந்து, சீர்தூக்கி, ஒருவர் பிற்படார்” என்ற பாடலில் சில இசைக் கருவிகளின் பெயர்களைக் காணலாம்.

பரங்குன்றம் பற்றிய செவ்வேள் பாடல்களில் இசை தோன்றுவது பற்றியும், குழல், யாழ், முழவு முதலிய இசைக்கருவிகளின் பெயர்களையும், பாணர், விறலியர் ஆகிய இசைக் கலைஞர்களுக்கான பொதுப் பெயர்களையும் குறிப்பிடுகின்றன.

“ஒருதிறம், பாணர் யாழின் தீங்குரல் எழ
ஒருதிறம், யாணர் வண்டின் இமிரிசை எழ
ஒருதிறம், கண்ணார குழலின் கரைபு எழ
ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை ஊத
ஒருதிறம், மண்ணார் குழவின் இசை எழ
ஒருதிறம், அண்ணல நெடுவரை அருவிநீர் ததும்ப
ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க
ஒருதிறம், வாடை உளவயின் பூங்கொடி நுடங்க
ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின்
நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற
ஒருதிறம், ஆடுசீர் மஞ்சை அரிக்குரல் தோன்ற
மாறுமாறு உற்றனபோல் மாறெதிர் கோடல்
மாறு அட்டான் குன்றம் உடைத்து”

“விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத
யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க
பாணிமுழவு இசை அருவி நீர் ததும்ப
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்
இரங்கு முரசினான் குன்று”

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 24

பழந்தமிழிசையில் பண்கள்-5

எட்டுத்தொகை நூல்கள்

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை”
எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய இந்த வெண்பா குறிப்பிடுகின்றது. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இவை கூறும் பொருள் குறித்து இவற்றை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்வர்.

அகப்பொருள் பற்றியவை:
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
கலித்தொகை
அகநானூறு
புறப்பொருள் பற்றியவை :
புறநானூறு
பதிற்றுப்பத்து
அகமும் புறமும் கலந்து வருவது:
பரிபாடல்

இசைத்தமிழின் தொன்மை - 24புறநானூறு
புறநானுற்றில் வஞ்சிப் பாடல்கள் சிலவுள்ளன. இடத்திற்கேற்ப தேவையான துறைகளுள் பாடல்களைப் பாடியுள்ளனர். புறத்திணைகளுள் வாழ்க்கைக்கு என்றும் இன்றியமையாத அறங்களையும், ஒழுக்கங்களையும் வலியுறுத்தும் பாடாண் முதலிய துறைகளைப் பாடியுள்ளனர்.

கிடைத்த பாடல்களில் குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் என நான்கு திணைகட்கும் நான்கு நூறு என ஒரு வகையாகத் தொகை கொண்டனர். அகத்திற்கு நானூறு என்பதற்கேற்ப புறத்திற்கும் நானூறு பாடல்களைத் தொகுத்தனர்.

புறநானூறும், பதிற்றுப்பத்தும் புறத்தை பற்றியன. மற்றவை அகம் பற்றியன.

சிறப்பாக ஒரு பகுதியைப் பேசினாலும் திணை நூல்களின் பாடல்களை அறம், பொருள், இன்பம் என்னும் முப்பகுதிகளைப் பற்றிய உண்மைகளை இடையிடையே தம்முள் விரவப் பெற்றுள்ளன. புறப்பாடல்களில் அரசரின் போர்கள், கொடை ஆகியவை பற்றியும், அகப்பாடல்களில் வாழ்க்கைக்குரிய ஒழுக்கவுண்மைகளைப் பற்றியும் அரிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

கடையெழு வள்ளல்களைப் பற்றிய குறிப்புக்கள் புறநானூற்றிலும் அகப்பாடல்களிலும் மிகுதியாகக் காணப்படுகின்றன. தம்மைப் புரந்த வள்ளல்களை நன்றியுடன் குறிப்பிடும் குறிப்புகளே இவை. கடைச்சங்கத் தொடக்கத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், கரிகாலனும் இலங்கியுள்ளனர்.

அக்காலத்தே ஆண்ட சேர, சோழ, பாண்டியர், சிற்றரசர்கள் குறுநில மன்னர் ஆகியயோரைப் பற்றிய குறிப்புகள் புறநானூற்றில் மிகுதியாகவும் அகநூல்களில் ஓரிரு வரிகளாகக் கலந்தும் காணப்படுகின்றன.

பொதுவாக எட்டுத்தொகை நூல்களில் பண்டைத் தமிழ் அரசர்களின் போர்த்திறங்களையும், வரையாது வழங்கும் வள்ளன்மைப் பண்பையும், மறக்குடி மளிரின் மாண்பினையும், போர்த் தவிர்க்க இடைநின்ற சான்றோர்களின் இயல்புகளையும், ஐந்திணைக்குரிய அன்பொழுக்கங்களையும்,புராணச் செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் அறியலாம்.

புறநானூற்றில் குறிஞ்சிப்பண், மருதப்பண், காஞ்சிப்பண், செல்வழிப்பண், படுமலைப்பண், விளரிப்பண் என்னும் பண்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது.

சீரியாழ், பேரியாழ், வேய்ங்குழல், ஆம்பற்குழல், முழவு, தண்ணுமை, பெருவங்கியம் முதலிய இசைக் கருவிகளைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது.

புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.

பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள்  பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்களனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை  பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான  புலவர்கள் பாடியுள்ளனர்.

புலவர் அரசர்களைப் பாடியதை “அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது. இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது  ஒருவகை இயைபு கருதிப் போலும், முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர், வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும்
அடுத்து போர்ப் பற்றிய பாடல்களும், கையறு நிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்றும் தொகுத்துள்ளனர்.

புறப்பொருள் கருத்துகளைத் தழுவி பாடப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன. அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போல, புற ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது.

“வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் – உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை – அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்”
இப்புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன.

இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது. புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.

புறநானூறு தரும் செய்திகள் அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.

பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் கவித்தல்,நடுகல் நடுதல், நட்ட கல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து, கைம்மை நோன்பு நோற்றல், உடன்கட்டையேறல் போன்ற பழக்க வழக்கங்களையும் 10 வகை ஆடைகளையும், 28 வகை அணிகலன்களையும், 30 படைக்கலக்கருவிகளையும், 67 வகை உணவுகளையும் எடுத்து இயம்புகின்றன.

பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு கையில் வேல் கொடுத்து போருக்கு அனுப்பும் மகளிர், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் எனப் பெண்களின் வீரத்தையும் போற்றுகின்றன. அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி என புறநானூறு விளங்குகிறது.

புறநானூற்றுப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும், கரிகாற்சோழன் போன்ற 18 சோழ அரசர்களையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர்களையும் சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

பண்டைய போர்க் களங்களான வெண்ணிப்பறந்தலை, வாகைப்பறந்தலை, கமுமலம், தகடூர், தலையாலங்கனம், கானப்பேரெயில் போன்றவற்றை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளன.

தொடியுடைய தோண்மணந்தனன்
கடிகாவிற் பூச்சூடினன்
தண்கமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
நட்டோரை யுயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
வேந்துடை யவையத் தேங்குபுகழ் தோற்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
ஓங்குகியல களிறூர்ந்தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்,
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
இடுக வொன்றோ சுடுக வொன்றோ
படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.
– நம்பி நெடுஞ்செழியன் – புறம் – 239

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத்  தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில்,  டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1894ம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 25

பழந்தமிழிசையில் பண்கள் -6

இசைத்தமிழின் தொன்மை - 25அகநானூறு – 1
அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். 
இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது.

அகத் தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, “நெடுந்தொகை” என்றும் கூறுவர்.

இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே.

இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாக 13 அடிகளையும், மிகக் கூடிய அளவாக 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.

கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.

இவை களிற்றியானை நிரை (1-120),
மணி மிடை பவளம் (121-300),
நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன.

ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை.

இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை.

இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை.

இரட்டைப்பட எண்களில் 6 எனப்படுபவை 40ம் மருதத் திணையைச் சேர்ந்தவை.

இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர்.

இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார்.

இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர்.

அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள்.

நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது.

மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

அகநானூற்று கருத்துகளைத் தொகுத்து அகவல் பாவால் (ஆசிரியப் பாவால்) மற்றுமொரு நூல் யாக்கப்பட்டிருந்தது. இதனை “நெடுந்தொகை அகவல்” என்று நாம் குறிப்பிடலாம். இந்தக் குறியீடு அதனைப் பற்றிக் கூறும் பழம்பாடலிலிருந்து கொள்ளப்பட்டது.

சோழநாட்டிலுள்ள இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவர் இந்த நூலைப் பாடினார்.

பழம்பாடல்

நின்ற நீதி வென்ற நேமிப்
பழுதில் கொள்கை வழுதியார் அவைக்கண்
அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து
வான் தோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ
அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை (5)
ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்
நெடிய ஆகி அடிநிமிர்ந்து ஒழுகிய
இன்பப் பகுதி இன்பொருட் பாடல்
நானூறு எடுத்து நூல்நவில் புலவர்
களித்த மும்மதக் ‘களிற்றியானை நிரை’ (10)
மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
அத்தகு மரபின் முத்திற மாக
முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக்
மருத்து என் பண்பினோர் உரைத்தவை நாடின் (15)
அவ்வகைக்கு அவைதாம் செவ்விய அன்றி
அரியவை ஆகிய பொருண்மை நோக்கிக்
கோட்டம் இன்றிப் பாட்டொடு பொருந்தத்
தகவொடு சிறந்த அகவல் நடையால்
கருத்து இனிது இயற்றியோனே பரித்தேர் (20)
வளவர் காக்கும் வளநாட்டுள்ளும்
நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பின்
கெடலருஞ் செல்வத்து இடையள நாட்டுத்
தீதில் கொள்கை மூதூருள்ளும்
ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்
செம்மை சான்ற தேவன்
தொப்மை சான்ற நன்மையோனே.

இது அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளதைக் காட்டுகிறது.

களிற்றியானைநிரை
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

மணிமிடை பவளம்
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

நித்திலக் கோவை
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

அகநானூற்றுத் தொகுப்பு
அகநானூற்றைத் தொகுக்க பின்வரும் பாடல்கள் உதவியுள்ளன.

பாடல் 1 – பஃறொடை வெண்பா
வியமெல்லாம் வெண்டேர் இயக்கம் கயமலர்ந்த
தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர்
நறுமுல்லை நான்காக நாட்டி வெறிமாண்ட
எட்டும் இரண்டும் குறிஞ்சியாக் குட்டத்து
இவர்திரை பத்தா இயற்பட யாத்தான்
தொகையின் நெடியதனைத் தோலாச் செவியான்
வகையின் நெடியதனை வைப்பு.

இரண்டாம் பாடலில் கூறப்பட்டுள்ள செய்திதான் இந்தப் பாடலிலும் கூறப்பட்டுள்ளன. எனினும், இதில் திணையின் விளக்கங்கள் கருப்பொருள்களை மையமாகக் கொண்டுள்ளன.

வெண்தேர் என்னும் கானல்காற்று ஓடுவது பாலை தாமரை என்பது ஆகுபெயராய் அது பூத்திருக்கும் மருத நிலத்தைக் குறிக்கும்.

காமம் உண்டாக்கக் கூடிய முல்லைப்பூ பூத்திருக்கும் நிலம் முல்லை. இதுவும் ஆகுபெயர்.

வெறி என்பது மணத்தையும், வெறியாட்டத்தையும் குறிக்கும். இந்த இரண்டும் உள்ளது குறிஞ்சி.

குட்டத்தில் (உப்பங்கழிகளில்) அலைகள் பாயுமிடம் நெய்தல்

பாடல் 2 – வெண்பா
ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை – அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.

பாட்டு வரிசை எண்களில் 1, 3, 5, 7, 9 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள், (1, 11, 21 இப்படி \ 3, 13, 23, இப்படி \ பிறவும்) பாலைத் திணை.

பாட்டு வரிசை எண்களில் 4 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள், (4, 14, 24 இப்படி) முல்லைத் திணை.

பாட்டு வரிசை எண்களில் 6 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள், (6, 16, 26 இப்படி) மருதத் திணை.

பாட்டு வரிசை எண்களில் 10 என்னும் அடுக்கு எண்ணில் முடியும் பாடல்கள், (10, 20, 30 இப்படி) நெய்தல் திணை

பாட்டு வரிசை எண்களில் 2, 8 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள், (2, 12, 22 இப்படி \ 8, 18, 28 இப்படி) குறிஞ்சித் திணை

பாடல் 3 – வெண்பா
பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல்
நாலு நளிமுல்லை நாடுங்கால் – மேலையோர்
தேறு மிரண்டெட் டிவைகுறிஞ்சி செந்தமிழின்
ஆறு மருதம் அகம்.

பாட்டு 2-ல் கூறப்பட்டுள்ள செய்தியே இந்தப் பாட்டிலும் வேறு வகையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இவற்றையெல்லாம் ‘செந்தமிழின் ஆறு (நெறி)’ என்று குறிப்பிடுவது பிற மொழிகளில் இல்லாத தமிழ்நெறி இந்தத் திணைப் பாகுபாடு என்பதைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது. தமிழ்நெறி என்பது தமிழிலக்கிய நெறியாகும்.

இசைத்தமிழின் தொன்மை - 26

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 26

பழந்தமிழிசையில் பண்கள் – 7

எட்டுத்தொகை நூல்கள்

அகநானூறு -2 
பண்டைத் தமிழன் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தான்.

“உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும்
ஊழினால் ஒன்று கூடி தாம் உணர்ந்த இன்பம்
இதுதான் என பிறருக்குச் சொல்ல முடியாமல்
உள்ளத்தே அனுபவிக்கும் உணர்ச்சியே அகம்” என்று வரையறை செய்தான்.

“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும்
கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம்,
அக் கூட்டத்தின் பின்னர்
அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக
இவ்வாறு இருந்தது எனக் கூறப்பட்டதை,
யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்த இன்பம்
உறுவதோர் பொருள் ஆகலின், அதனை அகம் என்றார்…
இன்பமேயன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாவெனின்,
அதுவும் காமம் கண்ணிற்றேல் (கருதினால்)
இன்பத்துள் அடங்கும்.” (தொல். அகத்திணை. சூ. 1. நச்சி. உரை)

இத்தகைய காதல்உணர்வே அகப்பொருள் என அழைக்கப்பட்டது.

நச்சினார்க்கினியர் உரை
“உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்ற புகழுரையே இவர் உரையின் சிறப்பை விளக்கப் போதிய சான்றாகும். இவர் நடை, அழகும் சற்றுக் கடினமும் பொருந்தியது.

சங்க இலக்கியப் பாக்களின் ஆழ்ந்த பொருள்களை உய்த்தறியும் பேராற்றல் இவரிடம் இருந்தது. இவர் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார்.

அகப்பொருளை ஏழுதிணைகளாகப் பிரிக்கின்றனர்.

கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை ஆகியன.

அகப்பாடல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்ற ஐந்திணைகளுக்கும் உரிய அக ஒழுக்கங்களை “அன்பின் ஐந்திணை” எனக் கூறுகின்றன.

பொருந்தாத காதலை “பெருந்திணை” என்றும் ஒருதலைக் காமத்தை “கைக்கிளை” என்றும் கூறுகின்றன.

அகநானூறு தரும் செய்திகள்
அகப்பொருள் நூலான அகநானூற்றில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன.

தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன் எழினி, ஆட்டனத்தி, அன்னிமிஞிலி, பாணன், பழையன் போன்ற குறுநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது.

அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20, 25ம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க “குடவோலை முறை” பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்தி அகந்நானூறு வழி தெரிகிறது.

யவனர்கள் வாசனைத் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தியை
“யவனர் தந்தவினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்” என்னும் வரிகள் மூலம் அறியலாம். இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.

அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்களில் தமிழர் தம் திருமண நிகழ்ச்சி கூறப்படுகிறது.

“மணவிழாவில் மணப்பந்தலில்
வெண்மணல் பரப்பி விளக்கேற்றி,
மணமகளுக்கு நீராட்டி,
தூய ஆடை அணிகள் அணிவித்து,
இறைவழிபாடு நடத்தி,
திங்கள் உரோகிணியைக் கூடிய
நல்ல வேளையில் வாகை இலையோடு
அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற
வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்” என்று விளக்கப்படுகிறது.

இந் நூல் உரையுடன் முதற் பகுதி ‘மெட்ராஸ் கம்பர் விலாஸ் புக் டிப்போட் மயிலாபூர்’ என்றவர்களால் 1918ல் முதலில் பதிப்பிக்கபட்டது. ஆனால்,இப்பதிப்பின் முகப்பு பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் பார்க்கக் கிடைக்கவில்லை.

அகநானூற்றின் இரண்டாம் பகுதி 1920ல் வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்த தகவலைத் தவிர இப்பதிப்பும் பார்க்க கிடைக்கவில்லை.

இந்நூலின் முழு பதிப்பானது 1923ல் “அகநானூறு மூலமும் பழைய உரையும்” என்னும் பெயரில் ரா.இராகவையங்கார் பதிப்பிக்க, கம்பர் விலாசம் இராஜகோபாலையங்கார் என்பவரால் வெளியிடபட்டது”

அகநானூறு பழைய உரை
அகநானூறு பழைய உரை 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். 1285 (கொல்லம் 460) ஆண்டில் தோன்றிய உரை இது. இதில் அகநானூறு முதல் 90 பாடல்களுக்குக் குறிப்புரை தரப்பட்டுள்ளது.

அருந்தொடர்ப் பொருள், துறை விளக்கம், உள்ளுறை உவமம், இறைச்சிப்பொருள் ஆகியவற்றைச் சுட்டுவதோடு, பழந்தமிழரின் பழக்க வழக்கங்களையும், இயல்புகளையும் இவ்வுரை எடுத்துக் காட்டுகிறது.

அகப்பொருள் தொடர்பான இந்நூல் நானூறு பாடல்கலைக் கொண்டுள்ளது.

கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் உள்ளது. இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

13 அடி சிறுமையும் 31 அடி பெருமையும் கொண்ட பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நெடுந்தொகை எனவும் இந்நூலை அழைப்பர். இந்நூல் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர் என்னும் புலவர் பெருமானால் தொகுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொகுக்கச் செய்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்னும் பேரரசன் ஆவான். இந்நூல் முப்பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது.
1.களிற்றியானை நிரை (1-120 பாடல்கள்)
2.மணிமிடைப்பவளம் (121-300 பாடல்கள்)
3.நித்திலக்கோவை (301-400 பாடல்கள்)

அகநானூற்றைத் தொகுத்த புலவர் சில ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி தொகுத்துள்ளார்.

1,3,5,7,9,11 எனவரும் ஒற்றைப்படையில் அமையும் பாடல்கள், பாலைத்திணையில் அமைந்த பாடல்களாகவும் (மொத்தம் 200பாடல்கள்);

2,8,12,18 எனவரும் 2,8 எனவரும் பாடல்கள், குறிஞ்சித்திணையில் அமைந்த பாடல்களாகவும்(மொத்தம் 80 பாடல்கள்);

6,16,26,36 எனவரும் ஆறாம் எண்ணுடைய பாடல்கள், மருதத் திணைப்பாடல்களாகவும் (மொத்தம் 40 பாடல்கள்);

4,14,24 எனவரும் நான்காம் எண்ணுடைய பாடல்கள், முல்லைத்திணைப் பாடல்களாகவும் (மொத்தம் 40பாடல்கள்);

10,20,30 எனவரும் பத்தாம் எண்ணுடைய பாடல்கள், நெய்தல் திணைப்பாடல்களாகவும் (மொத்தம் 40 பாடல்கள்) உள்ளன.

அகநானூறு நூலை முதன்முதல் 1920 இல் பதிப்பித்தவர் கம்பர் விலாசம் வே.இராசகோபால் ஐயங்கார் ஆவார்.

இந்நூலுக்கு நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும், கரந்தைக்கவியரசு இரா.வேங்கடாசலம் பிள்ளை அவர்களும் உரைவரைந்து வெளியிட்டுள்ளனர். பிற்காலத்தில் பலர் உரை வரைந்துள்ளனர்.

தமிழர்தம் பண்டைய திருமணமுறை இந்நூலில் சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது (86,136). குடவோலை முறையில் நடந்த தேர்தல் பற்றிய குறிப்பையும் (77) இந்நூல் தருகின்றது.

இலக்கியச் சுவையை மிகுதியாகக் கொண்டுள்ள அகநானூற்றுப் பாடல்கள் உள்ளுறை, இறைச்சி போன்ற குறிப்புப் பொருளுடைய பாடல்களை மிகுதியாகக் கொண்டுள்ளது. அகப்பொருள் பற்றிய செய்திகளை இந்நூல் தருவதுடன் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும் தருகின்றது.

வடநாட்டை ஆண்ட
மோரியர்(69,251,281),
நந்தர்(251,265),
வடுகர் (107,213,253, 281,295,375,381) பற்றிய செய்திகளும்,

தமிழ்நாட்டை ஆண்ட
சேரர் (55,127,149,209,347),
சோழர் (60,93,96,123,137,201,213,336,356,369,375,385),
பாண்டியர் (27,201) பற்றிய குறிப்புகளும்,

அத்தி (44,376,396),
கங்கன் (44),
கடலன் (81),
கட்டி (44,226),
காரி (35,209),
கோசர் (15,90,113,196,205,216,251,262),
தித்தன் (152,226),
நன்னன் (15,44,142,152,173,199,208,258,349,356,392,396),
பாரி (78,303)
பண்ணன் (54,177),
பிட்டன் (77,143),
புல்லி (61,83,209,295,311,359,393) போன்ற குறுநில மன்னர்களைப் பற்றிய குறிப்புகளையும் வரலாற்றையும் அகநானூறு தருகின்றது.

பண்டைத் திருமணம் பற்றிய பாடல்கள் :

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர,
புதல்வற் பயந்த திதலை அவ்வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடி,
‘கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!’என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
‘பேர் இற்கிழத்தி ஆக’ எனத் தமர் தர,
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்தகாலை, ‘யாழ நின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை’ என,
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்,
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே. (86,அகம்.)

கூற்று : வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது.
தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம். புலவர் – நல்லாவூர் கிழார்

(பொருள்) இருள் நீங்கிய விடியல் பொழுழுதில் திங்களை உரோகிணி விண்மீன் சேரும் நல்ல நேரத்தில் உளுத்தம் பருப்பிட்டுச் செய்யப்பெற்ற உணவினை(களி) உறவினர்களுக்கு வழங்கினர்.

இதனால் ஆரவாரம் இடைவிடாமல் கேட்டது. திருமண வீட்டில் புதுமணல் பரப்பி இருந்தனர். விளக்கேற்றி வைத்து மாலைகளைத் தொங்க விட்டிருந்தனர்.

தலையில் குடம் ஏந்தியவரும், அகன்ற வாயுடைய மண்பாண்டங்கள் கொண்டவரும், திருமணத்தை நடத்திவைக்கும் முதிய மகளிரும் முன், பின்னாகத் தரவேண்டியவற்றை எடுத்து வழங்கித் திருமணச் சடங்குகளைச் செய்தனர்.

மகனைப்பெற்ற குடும்பம் சார்ந்த மகளிர் ஒன்று கூடி,
“கற்பினின்று வழுவாமல் நல்ல உதவிகளைச் செய்து
நின்னை மனைவியாகப்பெற்ற உன் கணவனை
நீ பெரிதும் விரும்புகின்றவள் ஆவாய்” என வாழ்த்தினர்.

மங்கல நீருடன் கலந்த பூக்கள், நெல் அவளின் கூந்தலில் பொருந்தும்படி வாழ்த்தினர். சுற்றத்தார் தலைவியை நோக்கி, “நீ பெரிய மனை வாழ்க்கைக்கு உரியவளாகுக” என வாழ்த்தினர். அவளை என்னிடம் கூட்டிவைத்தனர்.

தனி அறையில் புணர்ச்சிக்காகக் கூடிய அவள் நாணத்தால் தலை குனிந்து புடவைக்குள் ஒடுங்கிக்கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்புடன் அவள் முகத்தை மூடியிருந்த புடவையைச் சிறிது நீக்கினேன். அவளின் பெண்மை உணர்வு மேலிட பெருமூச்செறிந்தாள்.

அவளிடம் உன் உள்ளத்தில் உள்ளவற்றை மறைக்காமல் சொல்வாயாக என வினவினேன். பல்வேறு அழகுகளும் பொருந்திய அவள் மகிழ்ந்தவளாகி முகத்தைத் தாழ்த்தி வெட்கத்தால் தலைகுனிந்தாள். (பரத்தையர் வீட்டிலிருந்து திரும்பிய தலைவனைத் தோழி வாயில் மறுத்தாள். அதுபொழுது தலைவன், திருமண முதல்நாள் இரவில் இவ்வாறு தலைவி நடந்துகொண்டாள் என்றான்.)

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை - 27இசைத்தமிழின் தொன்மை – 27

பழந்தமிழிசையில் பண்கள் – 8

எட்டுத்தொகை நூல்கள்

அகநானூறு -3

அகநானூறில் யாழ், தண்ணுமை, துடி, தூம்பு, முரசு, முழவம், சில்லரி, தெண்கிணை, குழல் ஆகிய கருவிகள் பேசப்படுகின்றன. 

நகரங்களுள் முழவு எந்நேரமும் வெவ்வேறு இடங்களில் ஒலித்துக் கொண்டிருப்பதால் அது துஞ்சா முழவு எனவும், முழவு முகம் புலராது எனவும் பேசப்படுகிறது.

கபிலர் தனது அகம் 82ம் பாடலில், மூங்கில் துளையில் காற்றுப்புகுந்து ஒலிப்பது “குழல்” இசையை ஒத்துள்ளது எனவும், அருவிவீழ் ஓசை முழவோசையை ஒத்துள்ளது எனவும், தாழ ஒலிக்கும் கலைமானின் கடுங்குரல் பெருவங்கியத்தின் ஒலியையும், வண்டின் ஓசை யாழோசையையும்  ஒத்துள்ளன எனவும் கூறுகிறார் (வரி:1-7).

கிணை என்ற பறையின் பேதம் பலமுறை சொல்லப்படுகிறது.

ஆயரும், கள்வரும் தண்ணுமையை அறைகிறார்கள்.

பாணி, தூக்கு, சீர் என்ற மூன்றில் சீர் என்பது தாளம் என்று சொல்லப்படுகிறது.

சிறு, பெரு வங்கியம் பேசப்படுகிறது.

“சில்லரி” தாளம் அமைத்துக் கறங்குவது தேரை ஒலியைப்போல் உள்ளது (301:16-20).

வெற்றி முரசு சிறப்பாக முழங்குகிறது.

மருங்கூர்ப்பட்டினத்தில் எழும் முரசு ஒலி தென்னகம் முழுவதும் கேட்கும் என்கிறார் நக்கீரர் (227:14).

இந்நூலில் இளி, விளரி, பாலை, செவ்வழி, குறிஞ்சி ஆகியவற்றின் இசைக்கருத்துகள் பேசப்படுகின்றன.

“இளி” என்பது குரல் துத்தம் முதலான ஏழு இசைகளில் (சுரங்களில்) ஒன்று.

சேவலானது தன் பெடையை அழைக்கும் ஒலி, “இளி” எனும் இசையொலி போல் இருக்கும் (33:5-7).

இளியின் இசை மயிலின் குரலை, தவளையின் கத்தலை ஒத்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

“விளரி” என்பது ஒரு சுரமும் (ரிசபம்), ஒரு பண்ணும் ஆகும்.

வண்டினது ஒலியானது விளரி நரம்பில் எழும் ஒலி போல இம்மென ஒலிக்கும் (317:12-13).

“பாலை” என்பது பெரும்பண்களில் முதற்பண் ஆகும்.

யாழ்கொண்டு இசைக்கும் பாலைப்பண்ணின் இசை, வண்டுகள் முரலுவதை ஒத்திருக்கும் (355:4-5).

“செவ்வழிப்பண்” பிரிந்திருக்கும் தலைவிக்கு எப்போதும் துன்பம் தரக்கூடியதாகும்.

ஒக்கூர் மாசாத்தனார் என்ற புலவர், தலைவன் தன்துன்பத்தைத் தன்மெய்யில் தேக்கி செவ்வழிப்பண்ணை இசைத்துக் கடவுளை வாழ்த்தினான் என்கிறார் (14:15-16).

குறிஞ்சிப்பண் குறித்து அகநானூறு கூறும் ஒரு செய்தி மிகப் புகழ்பெற்றதாகும்.

தினைப்புனப் பரணிலே கானவன் மனைவி குறிஞ்சிப்பண் பாடினாள்.

அதைகேட்ட யானை தான் எடுத்தத் தினைக்கதிரினை மென்று விழுங்காது, நிலை பெயராது துயில்வரப்பெற்று அவ்விடத்திலேயே உறங்கியதாம் (102:5-9).

மறம்புகல் மழகளிறு உறங்கும்
“உளைமான் துப்பின் ஓங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதில் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென
உரைத்த சந்தின் ஊரல் இருங்கதுப்பு
ஐதுவரல் அசைவளி ஆற்றக் கைபெயரா
ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி
பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக்
குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற் றெய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும்”  – (அகநானூறு: 102)
திணை – குறிஞ்சி
இயற்றியவர் – மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங்கூத்தன்
இயற்கையிடம் இருந்து தாம் கற்ற இசையைப் பெண்கள் பாடித்திருந்ததையும் சங்க இலக்கியத்தில் பதிவுசெய்து வைத்துள்ளனர்.

கொடிச்சி ஒருத்தி (குறிஞ்சி நிலப்பெண் – மலைநாட்டுப் பெண்) குறிஞ்சிப் பண்ணைப் பாட, யானை உறங்கிற்றாம் என்கிறது அகநானூறு.

குறிஞ்சிப் பண்ணின் கவர்ச்சி அத்தகையது என்கிறார் புலவர்.

பண்டைய காலத்திய பாண்மகன் நல்லிசைகளை நன்கு வரையறுத்துணர்த்திய இசைநூலின்கண் கூறப்பட்ட முறைகளையெல்லாம் நன்கு உணர்ந்து நிலை நிறுத்திப் பண்கள் செய்ததோடு அவற்றிலுள்ள இராகத்திறங்களைப் புதியதாகப் புணைந்தான்.

ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் பாடல்கள் நானூறு தொகுக்கப்பட்டு அகநானூறு என்ற பெயரால் குறிக்கப்பட்டன.

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மன் என்ற புலவர் இந்நூலைத் தொகுத்துள்ளார்.

145 புலவர் பெருமக்கள் இந்நானூறு பாடல்களையும் பாடியுள்ளனர். இந்நூலுக்கு நெடுந்தொகை என்ற வேறு பெயரும் உண்டு. இது அருகிய வழக்காகவே உள்ளது.

களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது இந்நூல்.

களவு, கற்பு என்ற இரு கைகோளிலும் (ஒழுக்கத்திலும்) அமைந்த முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய திணைப்பாடல்களைக் கொண்டது; இலக்கியத் தரம் மிக்கது.

எட்டுத்தொகை என்ற தொகுப்பில் உள்ள நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய நூல்களும் முழுமையாக அகம் பற்றியே அமைந்துள்ளன; அகத்தைக் கூறவே எழுந்தன. இருப்பினும் இந்நூலுக்கே “அகம்” என்ற சொல் கொடுத்து அகநானூறு என்று வழங்கியுள்ளனர். இது இந்நூலில் அகப்பொருள் சிறந்திருத்தலைக் காட்டுகிறது.

நெடுந்தொகை – பெயர்ச் சிறப்பு
இந்நூலுக்குரிய நெடுந்தொகை என்னும் பெயருக்கும் தனிச்சிறப்பு உண்டு.

மிக அதிகமான அடிகளைக் கொண்ட நெடும் பாட்டுகள், தனித் தனியாகப் பெயரிடப்பட்டுப் பத்துப்பாட்டு எனப் பெயரிடப்பட்டன. சிறு சிறு பாடல்களின் தொகுப்பே எட்டுத்தொகை எனப்பட்டது.

எட்டுத்தொகையில் அகநானூற்றைக் காட்டிலும், பரிபாடல், கலித்தொகை ஆகிய இரு நூல்களும் மிகுதியான அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டவையாகும். இருப்பினும் அகநானூற்றிற்கே “நெடுந்தொகை” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் “நெடு” என்ற அடை, அடிகளின் மிகுதியைக் குறிக்கவில்லை எனத் தெரிகிறது.

“நெடு” என்ற அடைமொழி அகநானூற்றுப் பாடல்களின் பொருட் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவே வழங்கப்பட்டுள்ளது.

அகநானூறு மூன்று பெரும் பகுப்புகளை உடையது.  இப்பகுப்பு ஐங்குறுநூறு போலத் திணையையும் பாடல்களின் எண்ணிக்கையையும் கொண்டோ,  கலித்தொகை போலத் திணையை அடிப்படையாகக் கொண்டோ பகுக்கப்பட்டது அல்ல.  பாடல்களின் நடை அமைப்பைக் கொண்டு  பகுக்கப்பட்டதாகும்.  இதுவும் இந்நூலுக்குரிய தனிச் சிறப்பாகும்.

அகநானூற்றின் பாயிரப் பகுதி (முன்னுரைப் பகுதி)  இப்பகுப்பைச் சுட்டியுள்ளது. மூன்று பகுப்பிலும் இடம் பெற்றுள்ள பாடல்கள்  எவை என்பதைப் பாயிரத்தைத் தொடர்ந்து வரும் உரைநடைப்பகுதி விளக்கியுள்ளது.

முதல் 120 பாடல்கள் களிற்றியானை நிரை என்றும், 121 முதல் 300 வரை அமைந்த 180 பாடல்கள் மணிமிடை பவளம் என்றும், இறுதி 100 பாடல்கள் நித்திலக் கோவை என்றும் பகுக்கப்பட்டுள்ளன.

“காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு
மணிமிடைந்தன்ன குன்றம்” (14)

“மணிமிடை பவளம்போல அணிமிகக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயன் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப” (304)
என்ற அகநானூற்றுப் பாடற் பகுதிகள் மணிமிடை பவளம் என்ற சொல்லாட்சியை உவமைக்காகப் பயன்படுத்தியுள்ளன.

இது கொண்டு மூன்று பகுப்புகளும் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப் பட்டுள்ளன என்று உணரமுடிகிறது.

சங்கப் பாடல்களின் முதல்பகுப்பு, பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்பதாகும்.

நெடும்பாடல்கள் பத்து தனித்துக் கூறப்பட்டது.
எட்டுத்தொகை நூல்களின் பகுப்பு, பல கூறுகளை உடையது.

முதற்பகுப்பு பாடுபொருளை அடிப்படையாகக் கொண்டது. பாடுபொருள்கள் அகம், புறம் என்பனவாகும்.

பல்வேறு புலவர்களால் பாடப்பட்டு ஆசிரியப்பாவால் அமைந்த நானூறு புறப்பாடல்களின் தொகுப்பு புறநானூறு எனப்பட்டது.

பத்துப் புலவர்கள் பாடிய பத்துப் புறப்பாடல்களின் தொகுப்பு பதிற்றுப் பத்து எனப்பட்டது.

பாடுபொருளால் பிரிக்கப்பட்ட நூல்கள், யாப்பு வகையால் வேறு பகுக்கப்பட்டன.

ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் என்ற யாப்பு வகைகள் இப்பகுப்பிற்கு உரியவை.

பல்வேறு புலவர்கள் பாடிய அகமும் புறமும் தழுவிய பரிபாடல் யாப்பு, பரிபாடல் என்னும் தனி நூலாயிற்று.

திணைக்கு ஒரு புலவர் என ஐந்து புலவர்கள் கலிப்பாவில் பாடிய அகப்பாடல்களின் தொகுப்பு திணை முறைவைப்பில் கலித்தொகை எனப்பட்டது.

பாடுபொருள்-யாப்பு எனப் பிரிக்கப்பட்டு, யாப்பு வகையில் மிகுந்து காணப்பட்ட ஆசிரியப்பாக்கள், அடிவரையறையால் பாகுபடுத்தப்பட்டன.

திணைக்கு ஒருவர், நூறு பாடல்கள் என ஐந்து புலவர்கள் பாடிய ஐந்நூறு பாடல்களின் தொகுப்பு ஐங்குறு நூறு எனப்பட்டது. இது மூன்று அடிகள் முதல் ஆறுஅடிகள் வரையிலான பாடல்களைக் கொண்டது.

205 புலவர்கள் பாடிய நான்கு அடிகள் முதல் எட்டு அடிகள் வரையிலான பாடல்களின் தொகுப்பு குறுந்தொகை எனப்பட்டது.

175 புலவர்கள் பாடிய 9அடிகள் முதல் 12 அடிகள் வரையிலான பாடல்களின் தொகுப்பு நற்றிணை எனப்பட்டது.

145 புலவர்கள் பாடிய 13 அடிகள் முதல் 31 அடிகள் வரையிலான பாடல்களின் தொகுப்பு அகநானூறு எனப்பட்டது.

பல புலவர்கள் பல திணைகளில் பாடிய பாடல்கள் ஒன்றோ பலவோ கொண்ட அகநூல்கள் மூன்று ஆகும். அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்பனவாகும். இவற்றுள் அகநானூறு பாடல் எண், மற்றும் திணை முறைவைப்பில் ஓர் ஒழுங்கினைப் பின்பற்றியிருப்பது தனிச் சிறப்பிற்குரியதாகும்.

தமிழிசைப்பண்கள் : தொடர் 23-27
சிறீ சிறீஸ்கந்தராஜா
20/05/2016 -17/06/2016

தொகுப்பு – thamil.co.uk