வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வாழைக்காய்வாழைக்காயில் மாப்பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. இந்த மாப்பொருள் கரையாத நார்ச்சத்தாக செயல்பட்டு, நேரடியாக ஜீரண மண்டலத்தை சென்றடைகிறது. அங்கே உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் தொடர்பாக வரும் நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது. வாழைக்காயை உடலுக்கு சேர்த்தால் நூறு வயது வரை நோயின்றி வாழலாம்.

வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதினால், உடல் எடை குறையும். பருமனாய் இருப்பவர்கள் குஷிப்படுங்கள். ஏனெனில் இது குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு கலங்களை அழிக்கிறது. உடல் எறையைக் குறைக்கிறது.

வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் மாப்பொருள் கொண்டுள்ளதால், குடல்களை சுத்தப்படுத்தி, அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் குறையும்.

வயிறு பருமனாக முக்கிய காரணம் அளவின்றி சாப்பிடுவது ஆகும். சிலருக்கு தாங்களே நினைத்தாலும் சாப்பிடும் அளவினைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் பழுக்காத வாழைப்பழத்தினை உட்கொண்டால் சாப்பிட்ட நிறைவைத் தரும். அதனால் அதிகப்படியாக உணவினை உண்ணத் தோன்றாது. உடல் பருமனாவதைக் குறைக்கலாம்.

பச்சை வாழப்பழம்அல்லது பழுக்காத பழம் அல்லது வாழைக்காய் ஆகிய மூன்றுமே இரத்த கலங்களில் குளுகோஸ் உறிவதை தடுக்கிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, இரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

வாழைக்காய் ஜீரண உறுப்புகளுக்கு மற்றும், உணவுக்குழாய்களுக்கு போஷாக்கு அளிக்கிறது. குடலில் இருக்கும் ப்ரோபயாடிக் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. இதனால் அசிடிடி வராமல், குடல்களையும், வயிற்றையும் பாதுகாக்கும்.

வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் கவசமாய் செயல்படுகிறது

வாழைக்காய் விட்டமின், கல்சியம், மக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

வாழைக்காய் ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமிலம் மூளையில் நடக்கும் இரசாயனங்களை ஒழுங்குபடுத்தும். அவ்வகையில் வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உணர்ச்சிகரமான மனநிலை உண்டாவைத் தடுத்து மன அமைதியைப் பெறலாம்.

வாழைக்காய் சமையல்

வாழைக்காய் - பனீர் புட்டுவாழைக்காய் – பனீர் புட்டு

தேவையானவை : பெரிய வாழைக்காய் – ஒன்று, பனீர் (துருவியது) – கால் கப், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, பூண்டு – 3 பல், பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி, கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் – 2 தேக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : வாழைக்காயை தோலுடன் 3 துண்டுகளாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து, தோலை உரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, வேகவைத்த வாழைக்காயை கேரட் துருவியில் துருவி சேர்த்து மேலும் வதக்கி, துருவிய பனீரையும் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சைச் சாறு பிழிந்து, நன்கு கலந்துவிடவும்.

வாழைக்காய் எரிசேரிவாழைக்காய் எரிசேரி

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, சேனைக்கிழங்கு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 3, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – ஒரு தேக்கரண்டி, சீரகம் – அரை தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி, துருவிய தேங்காய் – கால் கப், தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி, நறுக்கிய வாழைக்காய், சேனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பாதியளவு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, வெந்துகொண்டிருக்கும் காய்களுடன் சேர்க்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மீதம் இருக்கும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி, வெந்த காய்களில் சேர்த்துப் புரட்டி இறக்கவும். கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த எரிசேரி.

வாழைக்காய் – வெங்காயம் – தக்காளி பொரியல்வாழைக்காய் – வெங்காயம் – தக்காளி பொரியல்

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, நறுக்கிய வெங்காயம் – 3 மேசைக்கரண்டி, தக்காளி – ஒன்று (நறுக்கவும்), பூண்டு – 3 பல், கடுகு – ஒரு தேக்கரண்டி, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மிளகாய்தூள் – ஒரு மேசைக்கரண்டி, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வாழைக்காய், பூண்டு சேர்த்து வதக்கி… உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிவைக்கவும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). 5 நிமிடத்தில் வெந்துவிடும். பிறகு இறக்கி, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

வாழைக்காய் உசிலிவாழைக்காய் உசிலி      

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் – ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – 3 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
ஊறவைத்து அரைக்க : துவரம்பருப்பு – 6 மேசைக்கரண்டி, கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி, பயத்தம்பருப்பு – 3 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 3.

செய்முறை : வாழைக்காயை மெல்லியதாக நறுக்கவும். பருப்புகளை மிளகாயுடன் சேர்த்து 40 நிமிடம் ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். சற்று ஆறிய பிறகு மிக்ஸியில் ஒரு சுற்று லேசாக சுற்றினால் ஒரே அளவாக இருக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய வாழைக்காயையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, லேசாகத் தண்ணீர் தெளித்து மூடி வைத்தால் 5 நிமிடத்தில் வெந்துவிடும் (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்). பிறகு, தயார் செய்து வைத்துள்ள பருப்புக் கலவையைச் சேர்த்து, இரண்டு புரட்டு புரட்டி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

வாழைக்காய் கொத்சுவாழைக்காய் கொத்சு

தேவையானவை : வாழைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, புளி – நெல்லிக்காய் அளவு, இஞ்சி – சிறிதளவு, வேகவைத்த பயத்தம்பருப்பு – 6 மேசைக்கரண்டி, கடுகு – அரைதேக்கரண்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 3 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க : எண்ணெய் – அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு – 2 மேசைக்கரண்டி, தனியா – 3 மேசைக்கரண்டி, தேங்காய் துருவல் – ஒரு மேசைக்கரண்டி.

செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை வதக்கி, மிகவும் பொடியாக நறுக்கிய வாழைக்காயை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, காய் வெந்த உடன், வேகவைத்த பயத்தம்பருப்பைச் சேர்த்து, எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.  இந்த கொத்சு… இட்லி, தோசை, உப்புமாவுக்கு ஏற்ற சைட் டிஷ்.

வாழைக்காய் அவியல்வாழைக்காய் அவியல்

தேவையானவை : நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காய் – ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட், பீன்ஸ், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், தயிர் – ஒரு கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள : தேங்காய்த் துருவல் – ஒரு கப், பச்சை மிளகாய் – 4.

செய்முறை : காய்கறிகளை நீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக விடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தயிர், தேங்காய் எண் ணெய் சேர்த்து இறக்கி னால்… வாழைக்காய் அவியல் தயார்!

வாழைக்காய் சாம்பார்வாழைக்காய் சாம்பார்

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, சின்ன வெங்காயம் – 6, வேகவைத்த துவரம்பருப்பு – கால் கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 மேசைக்கரண்டி (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, பெருங்காயத்தூள் – தலா அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – 3 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : புளியைக் கரைத்து கடாயில் விட்டு உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, சேர்த்து, ஒரு கொதி வரும்போது… சின்ன வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காயை எண்ணெயில் வதக்கி சேர்க்கவும். காய் வெந்ததும், வெந்த துவரம்பருப்பைச் சேர்த்து மீண்டும் இரண்டு கொதி வந்ததும் இறக்கி… கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

வாழைக்காய் - வற்றல்கள் காரக்குழம்புவாழைக்காய் – வற்றல்கள் காரக்குழம்பு

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, சுண்டைக்காய் வற்றல் – 3 தேக்கரண்டி , மணத்தக்காளி வற்றல் – 4 தேக்கரண்டி, வெல்லம் – சிறிதளவு, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, குழம்பு மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, பூண்டு – 8 பல், தேங்காய்த் துருவல் – கால் கப், சமையல் எண்ணெய் – 3 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க : நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி, கடுகு – அரை தேக்கரண்டி , வெங்காய வடகம் (சிறியது) – ஒன்று.

செய்முறை : தேங்காய் துருவலை சிறிதளவு நீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வாழைக்காயை நறுக்கி எண்ணெயில் வதக்கி, பூண்டு சேர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். காய் பாதி வெந்ததும், வற்றல்களை வறுத்துச் சேர்க்கவும். குழம்பு சேர்ந்து வந்ததும் தேங்காய் விழுதை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து, தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

வாழைக்காய் - பனீர் துவட்டல்வாழைக்காய் – பனீர் துவட்டல்

தேவையானவை : நறுக்கிய வாழைக்காய் (ஸ்வீட் கார்ன் அளவுக்கே நறுக்கவும்) – ஒரு கப், ஸ்வீட் கார்ன், நறுக்கிய பனீர் (இரண்டும் சேர்த்து) – ஒரு கப், கடுகு – ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, கொத்தமல்லி – 2 மேசைக்கரண்டி, எண்ணெய் – 3 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.
வறுத்துப்பொடிக்க : காய்ந்த மிளகாய் – 3, தனியா – 3 மேசைக்கரண்டி, கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி, எள் – ஒருதேக்கரண்டி, வேர்க்கடலை – ஒரு மேசைக்கரண்டி, தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி.

செய்முறை : வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் சற்றுக் கொரகொரப்பாகப் பொடித்து வைக்கவும். வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வாழைக்காயை வதக்கி, பனீரையும் சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, 3 மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு வேகவைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி, எல்லாமாகச் சேர்த்து வெந்ததும், வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, நன்றாக புரட்டி இறக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.

வாழைக்காய் பஜ்ஜிவாழைக்காய் பஜ்ஜி

தேவையானவை : வாழைக்காய் – 2, கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, மஞ்சள் பொடி, பெருங்காயம் – சிட்டிகை, சோள மாவு – ஒரு மேசைக்கரண்டி, தனி மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி (அல்லது காரத்துக்கேற்ப), பேக்கிங் பவுடர் – சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : வாழைக்காயை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். அனைத்துப் பொருட்களையும் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொண்டு, நறுக்கிய வாழைக்காயை தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறுக்கு காளன்குறுக்கு காளன்

தேவையானவை : நறுக்கிய வாழைக்காய் – ஒரு கப், துருவிய தேங்காய் – அரை கப், சீரகம் – ஒரு தேக்கரண்டி, பச்சை மிளகாய் – 3, நீர் விடாமல் கடைந்த மோர் – அரை கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க : கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று.

செய்முறை : தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை சேர்த்து விழுதாக அரைக்கவும். நறுக்கிய வாழைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். பாதியளவு வெந்த தும் தேங்காய் விழுதைச் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து கொதித்து வந்ததும் கடைந்த மோரை அதில் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, நீர் முழுவதும் வற்றும்படி குறுக வைத்து இறக்கவும்.

வாழைக்காய் கதம்ப பக்கோடாவாழைக்காய் கதம்ப பக்கோடா

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, கடலை மாவு – ஒன்றரை கப், அரிசி மாவு – அரை கப், பச்சை மிளகாய் – 4, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா ஒரு சிட்டிகை, நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய், பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெங்காயம், கரட் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : வாழைக்காயை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். எண்ணெயை அடிகனமான வாணலியில் காயவிடவும். நறுக்கிய வாழைக்காய், பச்சை மிளகாய், மற்ற காய்கறிகளுடன் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பிசிறவும். காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் இருந்து 4 மேசைக்கரண்டி எண்ணெயை எடுத்து சேர்த்து நன்கு பிசிறி, கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு மேலும் பிசிறவும். காயும் எண்ணெயில் மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

மொளகூட்டல்மொளகூட்டல்

தேவையானவை : வாழைக்காய் – ஒன்று, வேகவைத்த துவரம்பருப்பு – கால் கப், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் – அரை கப், மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி (அல்லது காரத்துக்கேற்ப), கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய் – 2 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய் இரண்டையும் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். வாழைக்காயை தோல் சீவி, நறுக்கவும். இதனுடன் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வேக விடவும். பின்னர் வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்த தேங்காய் விழுதை கொதிக்கும் கலவையில் சேர்த்து ஒரு கொதி வந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூளை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும். பின்னர், இறக்கி எல்லாவற் றையும் நன்றாக கலந்துவிடவும்.

வாழைக்காய்-கசகசா பொரியல்

தேவையானவை : நறுக்கிய வாழைக்காய்த் துண்டுகள் – 2 கப், கசகசா – 3 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் – 2, சீரகம் – ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு, வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். கசகசாவை பொன்னிறமாக வறுத்து, ஆற வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து… காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், அரைத்த கசகசா கலவை போட்டு நன்கு கிளறவும். மணம் வந்ததும், பொரித்து வைத்துள்ள வாழைக்காய்த் துண்டுகள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் விட்டு, மிதமான தீயில் வைத்து சில நிமிடங்-கள் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை : வாழைக்காய் – 2, நறுக்கிய பச்சை மிளகாய் – 2, முந்திரித் துண்டுகள் – 2 தேக்கரண்டி, மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை : வாழைக்காயை இரண்டாக நறுக்கி வேக விடவும். வெந்ததும், ஆற வைத்து, தோல் உரித்து, உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்-பருப்பு, முந்திரித் துண்டுகள் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, மஞ்சள்-தூள், உதிர்த்து வைத்துள்ள வாழைக்காய், உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து பரிமாறவும்.

வாழைக்காய் மிளகு கூட்டு

தேவையானவை : தோல் சீவி, பொடியாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், புளி – 50 கிராம், தேங்காய் துருவல் – அரை கப், மிளகு – ஒரு மேசைக்கரண்டி, சின்ன வெங்காயம் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4 , மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி, உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை : ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும். புளிக் கரைசலில் வாழைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்தெடுக்கவும். இதை மிக்ஸியில் போட்டு, அரை கப் சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, மீதமுள்ள அரை கப் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கி, மிக்ஸியில்அரைத்த கலவை, புளித் தண்ணீரில் வேக வைத்த வாழைக்காய், உப்பு போட்டு கொதிக்க வைத்து, இறக்கிப் பரிமாறவும்.

வாழைக்காய் போண்டா

தேவையானவை : வேக வைத்து, தோல் உரித்து, மசித்த வாழைக்காய் – 2 கப், தோசை அல்லது இட்டலி மா – 2 கப், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய பச்சை மிளகாய் – தலா 2 தேக்கரண்டி, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பச்சைப் பட்டாணி – கால் கப், நறுக்கிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை : வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

தோசை அல்லது இட்டலி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும். பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் எடுக்க.. வாழைக்காய் போண்டா தயார்! இதற்கு, தக்காளி சட்னி சரியான ஜோடி!

வாழைக்காய் பெப்பர் ரோஸ்ட்

தேவையானவை : கெட்டியான வாழைக்காய் 2, மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை : வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். உப்பு, மிளகுத்தூள் தூவிக் கலந்து பரிமாறவும்.

சீரக வாழைக்காய்

தேவையானவை : துண்டுகளாக நறுக்கி, வேக வைத்த வாழைக்காய் – 2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 மேசைக்கரண்டி, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, கடுகு – கால் தேக்கரண்டி, சீரகம் – 2 தேக்கரண்டி, தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு தேக்கரண்டி, மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறவும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வாழைக்காய் குணுக்கு

தேவையானவை : வேக வைத்து மசித்த வாழைக்காய் – 2 கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, அரிசி மா – தலா 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள்- கால் தேக்கரண்டி, சிறு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 தேக்கரண்டி, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : மூன்று வகை பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு, கெட்டியாக அரைக்கவும். அதனுடன்… மசித்த வாழைக்காய், அரிசி மாவு, தேங்காய்ப்பல், பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

வாழைக்காய் கோஃப்தா

தேவையானவை :  உருண்டைக்கு :  வாழைக்காய் – 6, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம், கரம் மசாலாத்தூள் – தலா கால் தேக்கரண்டி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

கிரேவிக்கு: சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் தேக்கரண்டி, தயிர் – ஒன்றரை கப், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் – தலா அரை தேக்கரண்டி, கிராம்பு – 4, மிளகாய்த்தூள் -அரை தேக்கரண்டி, பிரிஞ்சி இலை – 3, உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை – உருண்டைக்கு: வாழைக்காய்களைத் தோலுடன் குழையாமல் வேக விடவும். ஆறியதும், தோல் உரித்து கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாகப் போட்டு பொரித்து எடுக்கவும்!

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்துக் கொள்ளவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தயிர் சேர்க்கவும். அதில், பொரித்த உருண்டைகளைப் போட்டு ‘சிம்’மில் சில நிமிடங்கள் வைத்து இறக்கிப் பரிமாறவும்.

வாழைக்காய் புளிக் கூட்டு

தேவையானவை : சிறு சிறு சதுரங்களாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், புளி – 50 கிராம், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் தேக்கரண்டி, வேக வைத்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு (கலந்தது) – கால் கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க : கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி, மல்லி – 4 தேக்கரண்டி, வெந்தயம் – அரை தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்- 4, தேங்காய் துருவல் – கால் கப்.

செய்முறை : புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டிய கரைசலை, அடி கனமான பாத்திரத்தில் விடவும். வாழைக்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனை கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசலில் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். வேக வைத்த பருப்புகளைச் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி, கடுகு தாளித்துக் கொட்டிக் கலந்து இறக்கவும். இது சாதம், சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.

வாழைக்காய் க்ரிஸ்பீஸ்

தேவையானவை : வேக வைத்து மசித்த வாழைக்காய் – 1 கப், அரிசி மா – 2 கப், நெய் – 2 மேசைக்கரண்டி, மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி, எள் – 2 தேக்கரண்டி, இஞ்சி- பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : அரிசி மா, மசித்த வாழைக்காய் எள், உப்பு,  இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், நெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். அந்தக் கலவையை விரல் நீள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

வாழைக்காய் புளி கொத்சு

தேவையானவை : வேக வைத்த பாசிப்பருப்பு – 1 கப், வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப், கெட்டியான புளிக் கரைசல் – கால் கப், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் தேக்கரண்டி, பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி, கீறிய பச்சை மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : கடாயில் புளிக் கரைசல், மஞ்சள்தூள், வாழைக்காய்த் துண்டுகள், பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். அதனுடன், மிளகாய்த்தூள் போட்டுக் கலந்து மீண்டும் கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும். இதனை தோசை, உப்புமா வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

வாழைக்காய் பராத்தா

தேவையானவை : வேக வைத்து மசித்த வாழைக்காய் – 1 கப், கோதுமை மா – 2 கப், பச்சை மிளகாய், பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, உப்பு, நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை : அகலமான பாத்திரத்தில் கோதுமை மா, மசித்த வாழைக்காய், பச்சை மிளகாய்-பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும். மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, சப்பாத்திக் கல்லில் இட்டு சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

வாழைக்காய் கட்லெட்

தேவையானவை : வேக வைத்து, மசித்த வாழைக்காய் – 2 கப்,  பாண் துண்டுகள் – 4, வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – கால் கப், நறுக்கிய பச்சை மிளகாய் – 2 தேக்கரண்டி, பொடித்த அவல் – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 தேக்கரண்டி, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : சிறிதளவு தண்ணீரில் பாண் துண்டுகளை ஒவ்வொன்றாக அமிழ்த்தி நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அவற்றுடன் மசித்த வாழைக்காய், பொடித்த வேர்க்கடலை, வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்டம், சதுரம் என பிடித்த வடிவங்களில் செய்து, அவல் பொடியில் இருபுறமும் புரட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, தயார் செய்தவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்க… வாழைக்காய் கட்லெட் ரெடி!

நேந்திரங்காய் சிப்ஸ்நேந்திரங்காய் சிப்ஸ்

தேவையானவை : முற்றிய நேந்திரம் வாழைக்காய் – 3, மஞ்சள் தூள் – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : நேந்திரங்காய்களை அடி, நுனி இரண்டையும் நறுக்கிவிட்டு, தோலை உரிக்கவும். அடிகனமான வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு நீர் விட்டு உப்பு, மஞ்சள்தூளைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் நேரடியாக காய்களை (சிப்ஸ் கட்டையால்) வட்டமாக எண்ணெயில் படும்படி சீவவும். எண்ணெயில் நன்கு கலந்துவிடவும். சலசலவென்று சத்தம் வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் கரைசலை கால் தேக்கரண்டி எடுத்து கொதிக்கும் எண்ணெயில் விட்டு, நன்கு கலந்துவிடவும். மறுபடி சத்தம் வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் கரைசல் கால் தேக்கரண்டி எடுத்து கொதிக்கும் எண்ணெயில் விட்டு, நன்கு கலந்துவிடவும். மறுபடி சலசலவென்று சத்தம் வந்ததும் வறுவலை எடுத்து எண்ணெயை வடிய வைத்து, காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். இந்த சிப்ஸ் பல மாதங்கள் கெடாது. இதை தேங்காய் எண்ணெயில்தான் பொரிக்க வேண்டும்.

-இயற்கை மருத்துவம்
-chittarkottai.com

தொகுப்பு – thamil.co.uk