பழந்தமிழிசையில் பண்கள் : சிறீ சிறீஸ்கந்தராஜா

தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 20

பழந்தமிழிசையில் பண்கள்-1
இசைத்தமிழின் தொன்மை - 20பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். சங்கத்தமிழானது இயல், இசை, நாடகமென மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும்.

பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலமென அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.

சங்க நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் ஆகிய நூல்களிலும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் தமிழிசை பற்றிய பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.

இசையாவது ஓசை. அது பாட்டிற்குரிய இன்னிசையைச் சிறப்பாயுணர்த்திற்று.

தொல்காப்பியம் இயற்றிமிழ் இலக்கண நூலாயினும், இசைத்தமிழ்க் குறிப்புகளை ஆங்காங்கு பதிவு செய்துள்ளார்.

“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்” …………….. (எழுத்து.33)

“…..செய்தி யாழின் பகுதியொடு தொகைஇய
அவ்வகை பிறவும் கருவென மொழிப” …………… (அகத்.20)

“துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” (களவு. 1)

“பாணன் பாடினி…. வாயில்கள் என்ப.” …………….. (கற்பு. 52)

“…. பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே” ………. (செய். 173)

இசை என்பது எல்லா இனத்தவர்க்கும் பொதுவேயாயினும், தமிழர் அதில் தலைசிறந்திருந்தமையால் தான் அதனையும் ஒரு மொழிப்பகுதி யாக்கினர்.

இழவு வீட்டில் அழுவதுகூட அராகத்தோடு அழுவது தமிழர் வழக்கமாயிற்று.அராகத்தோடு அழாவிட்டால், அழத் தெரியாதவராக எண்ணப்படுவர்.

இசைக்கு உறுப்பாவன அராகம், தாளம் என இரண்டுமாகும். அராகம் இசையைக் குறிக்கும் சொல்லாகும் இது இன்றைய வழக்கில் “ராகம்”, “இராகம்” என வழங்கப்படுகின்றது எனலாம்.

தாளம் என்பது பாடும்போது காலத்தைத் கணிக்கும் தகணிப்பாகும். பாடும்போதும் ஆடும் போதும், காலையாவது கையையாவது, அசைத்தும் தட்டியும் தாளத்தைக் கணிப்பது இன்றும் வழக்கிலுள்ளது.

தாளத்திற்குப் பாணி கொட்டு என்றும் பெயர் உண்டு. இது கொட்டு, அசை, தூக்கு, அளவு  என நான்கு உறுப்புகளையுடையது.

கொட்டு அமுக்குதல்; அதற்கு மாத்திரை 1/2.
அசை தாக்கியெழுதல்; அதற்கு மாத்திரை 1.
தூக்கு தாக்கித்தூக்குதல்; அதற்கு மாத்திரை 2.
அளவு தாக்கினவோசை 3 மாத்திரை பெறுமளவும் வருதல்.

“அரை மாத்திரையுடைய ஏகதாள முதல்,
16 மாத்திரையுடைய பார்வதிலோசனமீறாக
41 தாளம் புறக்கூத்திற்குரியன” என்று அடியார்க்குநல்லார் கூறுகிறார்.

இக் கூற்றிலுள்ள தாளப் பெயர்கள், தமிழ்ப் பெயர்களுக்குப் பதிலாகப் புகுத்தப்பட்ட வட மொழிப் பெயர்களாகும்.

அராகம் இசை (சுரம்), பண், பாட்டு என மூன்று பிரிவுகளையுடையது.

சுரம் மொத்தம் ஏழுவகையாகும். அவை ஏழிசை யெனப்படும்.

குரல் (ஷட்ஜமம்) = ச
துத்தம் (ரிஷபம்) = ரி
கைக்கிளை (காந்தாரம்) = க
உலை (மத்திமம்) = ம
இளி (பஞ்சமம்) = ப
விளரி (தைவதம்) = த
தாரம் (நிஷாதம்) = நி
ஏழிசைகளில் குரலும் இளியும் தவிர, ஏனையவைந்தும் இவ்விரண்டாகப் பகுக்கப்படுவன.

இவ்விரு சுரங்களும், முறையே, பகாவிசை (ப்ரக்ருதி ஸ்வரம்), பகுவிசை (விக்ருதி ஸ்வரம்) எனக் கூறப்படும்.

எழுசுரங்களும் நுட்பப் பிரிவால்
12 ஆவதும்
24 ஆவதும்
48 ஆவதும்
96 ஆவதும்
பற்றிய விபரங்களை “கர்ணாமிர்தசாகர”த்தில் (பக்கம் 860 – 862) காணமுடிகிறது.

ஏழிசைகளும் சேர்ந்த கோவை ஒரு நிலை (octare) யெனப்படும். இதனையே “ஸ்தாய்” என்று மொழிபெயர்த்தனர் வடநூலார்.

மாந்தர் தொண்டையிலும், ஓர் இசைக்கருவியிலும் அமையக் கூடிய மூன்று நிலைகளை வலிவு, மெலிவு, சமன் என்று வகுத்தனர். இவை முறையே, தாரம், மந்தரம், மத்திமம் என்று வடசொல்லால் அழைத்தனர்.

பாடும்போதும் ஒரு கருவியை இயக்கும் போதும் அடிமட்டமாக வைத்துக்கொள்ளும் சுரம் கேள்வி யெனப்படும். இதனை “ச்ருதி” (சுதி) என்று மொழிமாற்றிக் கொண்டனர் வடநூலார்.

கேள்விச் சுரங்கள் மொத்தம் 24 என்று தமிழ்நூல்களும், 22 என்று வடநூல்களும் கூறுகின்றன.

தமிழ்நூற் கூற்றே சரியானதென்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமது “கருணாமிர்த சாகரத்துள் மிகத் திறமையாக ஆதாரங்களுடன் விளக்கியிருக்கின்றார்.

ஆரியர் வருமுன்னமே தமிழர்க்கு இசைத் தமிழ் இருந்ததென்பதும், ஆரியர் தமிழரிடமிருந்தே இசையைக் கற்றனர் என்பதும் மிகத் தெளிவானதாகும்.

பண் என்பது இனிமையைத் தருவதும், தனியோசையுடையதும் ஆலாபனை செய்வதற்கு இயலக்கூடியதுமான ஒரு வகைச் சுரக்கூட்டமாகும்.

இது நால்வகைப்படும். அவை பண் (7 சுரம்), பண்ணியம் (6 சுரம்), திறம் (5 சுரம்), திறத்திறம் (4 சுரம்) என்பன.

இவற்றை முறையே சம்பூரணம், ஷாடவம், ஒளடவம், சுவராந்தம் என வடசொல்லால் தற்காலத்தில் வழங்குகின்றனர்.

பண்ணை இக்காலத்தில் ராகம் என்கின்றனர். அது அராகம் என்பதன் வடிவமாகும்.

பண்களைத் திரிக்கும் முறைகளில் மிக விரிவானது பாலையெனப்படும். ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோண (முக்கோண)ப் பாலை, சதுர (நாற்கோண)ப் பாலை என நால்வகை.

இந் நால்வகையும், ஏழிசைகளையும் முறையே 12 ஆகவும் 24 ஆகவும் 48 ஆகவும் 96 ஆகவும் வகுத்தனர்.

ஆயப்பாலையினின்று,
செம் பாலைப்பண் (தீர சங்கராபரணம்),
படுமலைப் பாலைப் பண் (கரகரப்பிரியா),
செவ்வழிப் பாலைப்பண் (தோடி),
அரும்பாலைப்பண் (கல்யாணி),
கோடிப் பாலைப்பண் (அரிகாம்போதி),
விளரிப் பாலைப்பண் (பைரவி),
மேற்செம் பாலைப்பண் (சுத்த தோடி) ஆகிய ஏழுபண்கள் பிறக்கும்.

பெரும் பண்கள் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என நால்வகைப்படும்.

இவை யாழெனவும் பண்ணெனவும் பெயர் பெறும். ஏழ்-யாழ் = ஏழிசையுடையது.

இனி குலப் பண்கள் என நான்குண்டு. அவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்பன.

இவற்றைப் பெரும்பண்களோடுறழப் பதினாறாம். இவற்றை யெல்லாம் கருணாமிர்த சாகரத்துட் கண்டுகொள்ள முடியும்.

பிங்கலத்தில் 103 பண்கள் கூறப்பட்டுள்ளன. தேவாரத்தில் 24 பண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

“நரப்படைவாலு ரைக்கப்பட்ட
பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத்
தொண் ணூற்றொன்றாகிய ஆதியிசைகள்” என்று அடியார்க்கு நல்லார் கூறுவதால் (சிலப். ப. 109) பண்டைத் தமிழிசையின் பரப்பை ஒருவாறுணரலாம்.

குறிஞ்சி, நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை முதலிய பண்களுக்குரிய தனித்தமிழ்ப் பெயர்களையெல்லாம் மறைத்து, இடுகுறியான வடமொழிப் பெயர்களை வழங்கி இசைத்தமிழைக் கெடுத்தனர் ஆரியர்.

இசைத்தமிழின் தொன்மை - 21தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!
இசைத்தமிழின் தொன்மை – 21

பழந்தமிழிசையில் பண்கள்-2

பிங்கல நிகண்டு நூல்களை மூவகை நூல்களாக நன்னூல் வகைப்படுத்துகின்றது. “முதல்வழி சார்பென நூல்மூன்றாகும்”  (நன்னூல்-5). முதல்நூல், வழிநூல், சார்புநூல் என்பனவாகும். பிங்கல நிகண்டு இது ஒரு கருவிநூலாகும்.

நிகண்டு என்ற பிரிவில் இது திவாகரத்துக்குப் பின்னர் தோன்றியது எனலாம். பிங்கல எனும் முனிவரினால் இது 10ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கிறது. திவாகரத்திலும் பார்க்க இது விரிவானது. ஒரு சொல் பல்பொருள் என்பதுதான் இன்றைய அகராதி. ஆனால் இது ஒரு சொல்லுக்குரிய பலவகைப் பொருளையும் ஒரே இடத்தில் தொகுத்துத் தருகின்றது.

பிங்கலர் சோழநாட்டினர். சைவர். சோழ நாட்டு ஊர்கள் பல இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கணபதி பெயரை வைத்துத் தொடங்கும் வானவர் வகைப் பகுதியில் சிவனுக்கு 96 பெயர்கள் சொல்லப்பட்டுள்ளதால் இவர் சைவர் என்பர்.

இதனுள் 14700 சொற்கள் சொல்லப்பட்டுள்ளன. தொல்காப்பியர் காட்டும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற நால்வகைச் சொற்கைளையும் இந்நூல் நன்கு ஆராய்ந்து தொகுத்துச் சொல்கிறது.

முழுவதும் நூற்பாக்களால் ஆனது. பத்துப் பகுதிகளைக் கொண்டது. 4181 சூத்திரங்கள் உள்ளன.

நூற்பகுதி ஒவ்வொன்றும் “வகை” என்று சொல்லப்பட்டுள்ளது. திவாகரத்தில் இதனையே “பெயர்” என்று அழைக்கப்பட்டு உள்ளது.

சிலப்பதிகார உரையில் 11991 பண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தோன்றிய பிங்கலநிகண்டு என்ற நூலில் 103 பண்களின் பெயர்கள் தரப்படுள்ளன. பிங்கல நிகண்டு (பக்கம் 170, 171).

1375. நால்வகைப் பண்ணின் பெயர்கள் (4)
“பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென
நால்வகை யாழா நாற்பெரும் பண்ணே”

நால்வகைப் பண்ணின் பெயர்கள் வருமாறு
பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி.

1376. பாலையாழ்த் திறத்தின் பெயர்கள் (5)
“அராக நேர்திற முறுப்புக் குறுங்கலி
யாசா னைந்தும் பாலையாழ்த் திறனே”

பாலையாழ்த் திறத்தின் பெயர்கள்
அராகம், நேர்திறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான் ஆகிய ஐந்தாகும்.

1377. குறிஞ்சியாழ்த் திறத்தின் பெயர்கள் (8)
“நைவளங் காந்தாரம் படுமலை மருளொடு
வயிர்ப்புப் பஞ்சுர மரற்றுச் செந்திற
மிவ்வகை யெட்டுங் குறிஞ்சியாழ்த் திறனே”

குறிஞ்சியாழ்த் திறத்தின் பெயர்கள் எட்டு.
நைவளம், காந்தாரம், படுமலை, மருள், அயிர்ப்பு, பஞ்சுரம், அரற்று செந்திறம்.

1378. மருதயாழ்த்திறத்தின் பெயர்கள் (4)
“நவிர்வடுகு வஞ்சி செய்திற நான்கு
மருத யாழ்க்கு வருந்திற னாகும்”

மருதயாழ்த்திறத்தின் பெயர்கள்
நவிர், வடுகு, வஞ்சி, செய்திறம் ஆகிய நான்காகும்.

1379. செவ்வழியாழ்த் திறத்தின் பெயர்கள் (4)
“நேர்திறம் பெயர்திறஞ் சாதாரி முல்லையென
நாலுஞ் செவ்வழி நல்யாழ்த் திறனே”

செவ்வழியாழ்த் திறத்தின் பெயர்கள்
நேர்திறம், பெயர்திறம், சாதாரி, முல்லை என நான்காகும்.

பெரும் பண்கள் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என நால்வகைப்படும்.

1380. பெரும்பண்ணின் வகைகள் (16)
“ஈரிரு பண்ணு மெழுமூன்று திறனு
மாகின் றனவிவை யிவற்றுட் பாலையாழ்
செந்துமண் டலியாழ் பவுரி மருதயாழ்
தேவ தாளி நிருபதுங் கராகம்
நாக ராக மிவற்றுட் குறிஞ்சியாழ்
ஆசாரி சாய வேளர் கொல்லி
கின்னராகஞ் செவ்வழி மௌசாளி சீராகஞ்
சந்தி யிவைபதி னாறும் பெரும்பண்”

பெரும்பண்ணின் வகைகள்
பாலையாழ், செந்து, மண்டலியாழ், பௌரி, மருதயாழ், தேவதாளி, நிருபதுங்கராகம், நாகராகம், குறிஞ்சியாழ், ஆசாரி, சாயவேளர்கொல்லி, கின்னராகம், செவ்வழி, மௌசாளி, சீராகம், சந்தி எனப்பதினாறாகும்.

1381. பாலையாழ்த்திறன் வகையின் பெயர்கள் (20)
“தக்க ராக மந்தாளி பாடை
அந்தி மன்றல் நேர்திறம் வராடி
பெரிய வராடி சாயரி பஞ்சமம்
திராடம் அழுங்கு தனாசி சோமராகம்
மேக ராகந் துக்க ராகங்
கொல்லி வராடி காந்தாரம் சிகண்டி
தேசாக் கிரிசுருதி காந்தா ரம்மிவை
யிருபதும் பாலை யாழ்த்திற மென்ப”

பாலையாழ்த் திறத்தின் வகையின் பெயர்கள்
நட்டபாடை, அந்தாளிபாடை, அந்தி, மன்றல், நேர்திறம், வராடி, பெரியவராடி, சாயரி, பஞ்சமம், திராடம், அழுங்கு, தனாசி, சோமராகம், மேகராகம், துக்கராகம், கொல்லிவராடி, காந்தாரம், சிகண்டி, தேசாக்கிரி, சுருதிகாந்தாரம் என இருபதாகும்.

1382. குறிஞ்சி யாழ்த்திறன் வகையின் பெயர்கள் (32)
“நட்ட பாடையந் தாளி மலகரி
விபஞ்சி காந்தாரஞ் செருந்தி கௌடி
உதய கிரிபஞ் சுரம்பழம் பஞ்சுரம்
மேக ராகக் குறிஞ்சி கேதாளி
குறிஞ்சி கௌவாணம் பாடை சூர்துங்கராக
நாக மருள்பழந் தக்க ராகம்
திவ்விய வராடி முதிர்ந்த விந்தள
மநுத்திர பஞ்சமந் தமிழ்க்குச்சரி யருட்
புரிநா ராயணி நட்ட ராக
மிராமக்கிரி வியாழக் குறிஞ்சி பஞ்சமம்
தக்க ணாதி சாவகக் குறிஞ்சி
யாநந்தை யெனவிவை முப்பத் திரண்டுங்
குறிஞ்சி யாழ்த்திற மாகக் கூறுவர்”

குறிஞ்சியாழ்த்திறன் வகையின் பெயர்கள்
நட்டபாடை, அந்தாளி, மலகரி, விபஞ்சி, காந்தாரம், செருந்தி, கௌடி, உதயகிரி, பஞ்சுரம், பழம் பஞ்சுரம், மேகராகக் குறிஞ்சி, கேதாளி, குறிஞ்சி, கௌவாணம், பாடை, சூர்துங்கராகம், நாகம், மருள், பழந்தக்கராகம், திவ்வியவராடி, முதிர்ந்த விந்தளம், அநுத்திர பஞ்சமம், தமிழ்க்குச்சரி, அருட்புரி, நாராயணி, நட்டராகம், ராமக்கிரி வியாழக்குறிஞ்சி, பஞ்சமம், தக்கணாதி, சாவகக்குறிஞ்சி, ஆநந்தை என முப்பத்தியிரண்டாகும்.

1383. மருதயாழ்த்திறன் வகையின் பெயர் (16)
“தக்கேசி கொல்லி யாரிய குச்சரி
நாகதொனி சாதாளி யிந்தளந் தமிழ்வேளர்கொல்லி
காந்தாரங் கூர்ந்த பஞ்சமம் பாக்கழி
தத்தள பஞ்சம மாதுங்க ராகம்
கௌசிகஞ் சீகாமரஞ் சாரல் சாங்கிமம்
எனவிவை பதினாறு மருதயாழ்த் திறனே”

மருதயாழ்த்திறன் வகையின் பெயர்கள்
தக்கேசி, கொல்லி, ஆரியகுச்சரி, நாகதொனி, சாதாளி, இந்தளம், தமிழ்வேளர்கொல்லி, காந்தாரம், கூர்ந்த பஞ்சமம், பாக்கழி, தத்தள பஞ்சமம், மாதுங்க ராகம், கௌசிகம், சீகாமரம், சாரல், சாங்கிமம் என பதினாறாகும்.

1384. செவ்வழியாழ்த் திறன் வகையின் பெயர்கள் (16)
“குறண்டி யாரிய வேளர் கொல்லி
தனுக்காஞ்சி யியந்தை யாழ்பதங் காளி
கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர்
பாணி நாட்டந் தாணு முல்லை
சாதாரி பைரவம் காஞ்சி யெனவிவை
பதினாறுஞ் செவ்வழி யாழ்த்திற மென்ப”

செவ்வழியாழ்த் திறன் வகையின் பெயர்கள்
குறண்டி, ஆரியவேளர் கொல்லி, தனுக்காஞ்சி, இயந்தை, யாழ்பதங்காளி, கொண்டைக்கிரி, சீவனி, யாமை, சாளர், பாணி, நாட்டம், தாணு, முல்லை, சாதாரி, பைரவம், காஞ்சி எனும் வகையில் பதினாறாகும்.

1385. மற்றுந்திறத்தின் பெயர்கள் (3)
“தாரப் பண்டிறம் பையுள் காஞ்சி
படுமலை யிவைநூற்று மூன்று திறத்தன”

மற்றுந் திறத்தின் பெயர்கள்
தாரப்பண்டிறம், பையுள்காஞ்சி, படுமலை இம்மூன்றும் நூற்று மூன்று வகைப்படும்.

1375. நால்வகைப் பண்ணின் பெயர்கள் (4)
1376. பாலையாழ்த் திறத்தின் பெயர்கள் (5)
1377. குறிஞ்சியாழ்த் திறத்தின் பெயர்கள் (8)
1378. மருதயாழ்த்திறத்தின் பெயர்கள் (4).
1379. செவ்வழியாழ்த் திறத்தின் பெயர்கள் (4).
1380. பெரும்பண்ணின் வகைகள் (16)
1381. பாலையாழ்த்திறன் வகையின் பெயர்கள் (20)
1382. குறிஞ்சி யாழ்த்திறன் வகையின் பெயர்கள் (32)
1383. மருதயாழ்த்திறன் வகையின் பெயர் (16)
1384. செவ்வழியாழ்த் திறன் வகையின் பெயர்கள் (16)
1385. மற்றுந்திறத்தின் பெயர்கள் (3)


தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!

இசைத்தமிழின் தொன்மை – 22

பழந்தமிழிசையில் பண்கள்-3

ஏழிசையும் சுரங்களும்
“பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழ் அவையும்
உண்ணின்றதோர் சுவையும் உறுதாளத்து ஒலி பலவும்
மண்ணும் புனல் உயிரும் வருகாற்றும் சுடர் மூன்றும்
விண்ணும் முழுது ஆனான் இடம் வீழிம்மிழ லையே”
முதலாம் திருமுறையின் பதினொராம் பதிகத்தின் நான்காவது தேவாரம் (திருஞானசம்பந்தர் – பண் : நட்டபாடை)

இசைத்தமிழின் தொன்மை - 22

தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றான திருவீழிமிழலைப் பதிகத்தில் பண் பற்றியும், பண்ணிசை பற்றியும், பண்மூலம் எழும் பல்வேறு ஓசைகள் பற்றியும், அப்பண்ணின் மூலம் எழும் சுவை பற்றியும், அவைகளின் ஊடே அமையும் தாள ஒலி பற்றியும் குறிப்பிடுகிறார்.

இசையைப் பண் என்றபெயரால் குறிப்பிடுவர். பண் என்ற சொல்லும் காரணப்பெயர்ச் சொல்லாகும்.

பெருந்தானம் எட்டு (தானம் = இடம்)
பெருந்தானங்களைப் பேச்சுறுப்புகள் என்பர். இதனைப் பேச்சுத்தானங்கள் என்றும் கூறுவர். தொல்காப்பியர் பிறப்பியலில் இவ்வுறுப்புகள் எட்டு என்பர். இவற்றை மேலும் இரண்டு வகையாகப் பிரிப்பர்.

காற்றறை
காற்றறை என்பது காற்றுத்தங்கி வெளிப்படும் மூன்று உறுப்புகளாகும். தலை, மிடறு, நெஞ்சு என்பனவாகும். நெஞ்சு என்பது நுரையீரலையும், மிடறு என்பது கண்டத்தையும், தலை என்பது கண்டத்தின் மேல்பகுதியையும் குறிக்கும்.

செயற்கருவி
செயற்கருவி ஐந்தாகும். பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் என்ற ஐந்து உறுப்புகளுமாகும்.

காற்றறையில் தங்கிய காற்றினால் இச்செயற்கருவிகள் தொழிற்படுதல் காரணமாக வெவ்வேறு வகையான ஒலிகள் பிறக்கும் என்பதனைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். இசை நூலார் இதனைப் பெருந்தானங்கள் எட்டு எனக் கொள்வர்

வினைகள் எட்டு
பெருந்தானத்தால் தோற்றி வைக்கப்படும் ஒலி, இசைஒலிகள் ஆவதற்கு எட்டு விதமான வினைகள் செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. இவற்றைக் கிரியைகள் என்பர். இவை எடுத்தல், படுத்தல், நலிதல் முதலிய எட்டு ஆகும்.

எழுப்பிய குரலை உயர்த்தி ஒலித்தல் எடுத்தலாகும்.
எழுப்பிய குரலைத் தாழ்த்தி ஒலித்தல் படுத்தலாகும்.
எழுப்பிய குரலைப் படிப்படியாகக் தாழ்ந்து ஒலித்தல் நலிதலாகும்.

இவ்வாறு பெருந்தானம் எட்டாலும், எட்டுவகைக் கிரியைகளாலும் நெறிப்படுத்தப்பட்டமையால் “பண்” எனப்பெயர் பெறுகின்றது.

ஏழிசையும் சுரங்களும்
“குரலே துத்தம் கைக்கிளை உழையே
இளியே விளரி தாரம் என்றிவை
எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே”

தமிழிசையில் ஏழிசைச் சுரங்களாக
குரல்
துத்தம்
கைக்கிளை
உழை
இளி
விளரி
தாரம் ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

இசைக்குரிய எழுத்துகள் ஏழு
ச,ரி,க,ம,ப,த,நி இதனை ஏழிசை என்பர். தமிழிசையில் இது பறவை, விலங்கினங்களின் குரல்களோடு ஒப்பிடப்பட்டு விளக்கப்படுகிறது. தமிழர் ஏழிசையை இயற்கை ஒலிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர்.

“வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு
குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்
ஆடும் என்றிவை ஏழிசை ஓசை”

தமிழிசையில் ஐந்திசை கொண்ட (Penta Tonic) பண்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.

“கிளை எனப்படுவ கிளக்கும் காலைக்
குரலே இளியே துத்தம் விளரி
கைக்கிளை என ஐந்தாகும் என்ப”
என சிலப்பதிகாரம் உரையிற் கூறப்படும் சூத்திரத்தின்படி குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை, ச, ப, ரி, க, ம என்ற ஐந்து சுரங்கள் கிடைக்கின்றன. இந்தச் சுரங்கள் மோகனம் என்ற அழகிய பண்ணை உருவாக்குகின்றன.

பழம்பெரும் நாகரிகங் கொண்ட சீன நாடு இந்த ஐந்திசைப் பண்களைப் போற்றுவதோடு அந்த இசையில் எள்ளளவும் மாற்ற இன்னும் உடன்படாது இருக்கின்றது. கூங், இட்சி, சாங், யூ, கியோ என அவர்கள் குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளையை அழைக்கின்றனர். இவற்றுள் சில சொற்கள் தமிழ்ச் சொற்களை ஒத்திருப்பதையும் காணமுடியும்.

குரல் – சட்சம் – மயிலின் ஒலி
துத்தம் – ரிஷபம் – மாட்டின் ஒலி
கைக்கிளை – காந்தாரம் – ஆட்டின் ஒலி
உழை – மத்திமம் – கிரவுஞ்சப் பறவையின் ஒலி
இளி – பஞ்சமம் – பஞ்சமம்
விளரி – தைவதம் – குதிரையின் ஒலி
தாரம் – நிஷாதம் – யானையின் ஒலி

இச்சுரங்கள் பன்னிரண்டாக விரிவடைகின்றன.
1. குரல் – சட்சம் (ஷட்ஜம்)- ச
2. மென்துத்தம் – சுத்தரிஷபம் ரிஷபம் – ரி1
3. வன்துத்தம் – சதுஸ்ருதி ரிஷபம் – ரி2
4. மென்கைக்கிளை – சாதாரண காந்தாரம் – க1
5. வன்கைக்கிளை – அந்தர காந்தாரம் – க2
6. மெல் – உழை சுத்த மத்திமம் – ம1
7. வல் – உழை பிரதி மத்திமம் – ம2
8. இளி – பஞ்சமம் – ப
9. மென் விளரி – சுத்த தைவதம் – த1
10. வன் விளரி – சதுஸ்ருதி தைவதம் – த2
11. மென்தாரம் – கைசகி நிஷாதம் – நி1
12. வன்தாரம் – காகலி நிஷாதம் – நி2

சுரங்கள்
பழந்தமிழ் இசையின் ஏழு சுரங்களுக்கும் கீழ்க்காணுமாறு குறியீட்டு எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளனர்:
“ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்ற
ஏழும் ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்”

குரல் – ஆ; துத்தம்
ஈ; கைக்கிளை
ஊ; உழை
ஏ; இளி
ஐ; விளரி
ஓ; தாரம்
ஔ.
ஆகியன பழந்தமிழர் பயன்படுத்திய சுர ஒலிகளாகும். மேலும்ஒரு சுரத்தில் நான்கில் ஒரு பாகக்கூறுகளை உயிரெழுத்துமூலம் உணர்த்தும் வழக்குத் தமிழ் நாட்டில் இருந்தது.

அராகம் என்ற தமிழ்ச் சொல் – இராகமாயிற்று.
செம்பாலை – அரிகாம்போதி ஆயிற்று.
படுமலைப்பாலையை – நடனபைரவி என்றார்.
கோடிப்பாலையைக் – கரகரப்பிரியா எனக்கூறினர்.

விளரிப்பாலையை – தோடி என்றழைத்தனர்.
செவ்வழிப்பாலை – இருமத்திமத் தோடியானது.
முல்லைத் தீம்பாணி – மோகனம் ஆனது.
செந்துருத்திக்கு – மத்தியமாவதி என்று பெயரிட்டார்.

இந்தளம் என்பதை – மாயாமாளவ கௌளை என்று மாற்றினார்.
கொன்றையந் தீங்குழலை – சுத்தசாவேரி என ஆக்கினர்.
ஆம்பலந் தீங்குழலை – சுத்த தன்யாசி என்றனர்.
அரும்பாலைக்குச் – சங்கராபரணம் எனப்பெயர் சூட்டினர்.

மேற்செம் பாலையைக் – கல்யாணி என்றழைத்தார்.
செவ்வழியை – யதுகுலகாம்போதி என்று மாற்றினர்.
புறநீர்மைக்குப் – பூபாளம் என்றார்கள்.
தக்கேசிக்குக் – காம்போதி எனக்கொண்டனர்.

இவ்வாறு தமிழ் இசையின் பெயர்களையெல்லாம் மாற்றிவிட்டு, ஆராய்ச்சிக் குறிப்பும் எழுதி வைத்தார்கள். தமிழனின் தமிழிசை வடமொழியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

தமிழிசைப்பண்கள் : தொடர் 20-22
சிறீ சிறீஸ்கந்தராஜா
06/05/2016 – 14/05/2016

தொகுப்பு – thamil.co.uk