மிளகாய்

மிளகாய்காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நம் சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது.

மிளகாயின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் : இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – (விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிக காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா? அதிக மிளகாய் சேர்த்த உணவு சூட்டைக் கிளப்புமா? இப்படி மிளகாயைப் பற்றிப் பரவலாக பலருக்கும் பல கேள்விகள்…

எந்த சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில், நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன என்பதே உண்மை.

பச்சை மிளகாய், செத்தல் மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன. எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. செத்தல் மிளகாயில் கலோரியும், விட்டமின் A சத்தும் மற்றதைவிட சற்றே அதிகம்.

கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். தவறில்லை. எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. எந்த உணவையும் சுவைபட மாற்ற, அவர்கள் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும் கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் A சத்தானது அதிகம். அதனால், விழித்திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது.

Capsaicin என்கிற நிறமிதான் மிளகாயின் காரசார ருசிக்குக் காரணம். இந்த நிறமி அதிகமானால் மிளகாயில் காரம் அதிகரிக்கும். குறைந்தால் காரமும் குறையும்.

விட்டமின் C சத்தும் அதிகம். அதனால் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக (antioxidant) செயல்படுகிறது.

நரம்புப் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சொரியாசிஸ் என்கிற சரும நோய் உள்ளவர்களுக்கும் மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

மிளகாயில் உள்ள Capsaicin பொருளானது, நம் உடலில் தோன்றும் வலியானது சருமத்திலிருந்து தண்டுவடத்துக்குப் போகாமல் காக்கிறது. அப்படி தண்டுவடத்துக்கு வலி இடம் பெயர்ந்தால், அது மூளையில் உணரப்படும். அடிபட்டவர்களுக்கும், வெட்டுக்காயம் பட்டவர்களுக்கும் காரமான உணவு கொடுக்கச் சொல்வதன் பின்ணணி இதுதான். மிளகாய் எடுத்துக் கொள்வதால், என்டார்ஃபின் எனப்படுகிற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. அதனால் ஒருவித ஓய்வான மனநிலை கிடைக்கிறது. இரவு காரசாரமான உணவு எடுத்துக் கொண்டால், காலையில் மிகவும் ஓய்வாக எழுந்ததாக உணர்வது இதனால்தான். தவிர மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப் படுத்தி, உடலை லேசாக்கி விடும்.

இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும், மிளகாயை அளவோடுதான் எடுக்க வேண்டும். சிலர் அதிக மசாலா, காரம் சேர்த்த உணவுகளை மட்டுமே எப்போதும் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் குடல் பிரச்சனை, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, மூலநோய் போன்றவை வரலாம். மிகவும் காரமான உணவு உண்ணும் போது, அந்தக் காரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த மிதமான உணவுகளையும் எடுக்க வேண்டும். அதனால்தான் தயிர்சாதம், ஊறுகாய் போன்றவற்றை நம் முன்னோர் சேர்த்துப் பாவித்தார்கள்.

வயிற்றுப்புண் இருப்பவர்களும், அமிலச் சுரப்பு பிரச்னை உள்ளவர்களும் மிளகாயை எடுத்துக் கொண்டால் பிரச்சனை தீவிரமடையும். குடைமிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம். அது புற்றுநோய்க்கு எதிராக போராடக் கூடியது என்பது உண்மை. ஆனாலும், அதையும் பச்சையாகவோ, அதிகமாகவோ எடுக்க வேண்டாம்.

ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் என்பதால், அவர்கள் பச்சை மிளகாயை உண்ண வேண்டும். பச்சை மிளகாய் உண்ணுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது.

நமக்கு இன்னும் எப்படி என்று தெரியவில்லை, ஆனால் பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது. புகை பிடிப்பவர்கள் இதனை கவனிக்க வேண்டும். காரணம் அவர்கள் தானே தினமும் தங்களின் நுரையீரலை புகைத்து கொண்டிருக்கின்றனர்.

மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துக்கள் உள்ளது. தற்போது இருக்கும் பொதுவான எண்ணத்துக்கு மாறாக, மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும். உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும்.

தொண்டை கரகரப்பு கொப்பளிப்பாக பயன்படுகிறது. வலிகளைப் போக்கும் சர்க்கரை மற்றும் குல்கந்த் சேர்த்து முக்கோண வில்லைகளாகச் செய்யப்பட்டு தொண்டை கரகரப்புக்கு மருந்தாகிறது. மேடைப் பேச்சாளர்கள் மற்றும் பாடகர்களுக்கு மிகவும் உதவும்.

வலிகளைப் போக்க தேய்ப்புத் தைலமாக பயன்படுகிறது. இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன் சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

பெருங்காயம் மற்றும் கற்பூரத்துடன் சேர்ந்து காலரா நோய்க்கு மருந்தாகிறது. தீப்புண் மேல் தூவப்படுகிறது.

மிளகாய் வற்றலை பழகிய மண்சட்டியில் 2 சொட்டு நெய்விட்டுக் கருக்கிய புளியங் கொட்டை அளவு கட்டிக் கற்பூரத்தைப் போட்டு அரை லிட்டர் நீரில் ஒரு கை நெற் பொரியும் சேர்த்துக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி 100 மில்லியளவு குடித்துவர, வாந்தி- பேதி நிற்கும்.

மிளகாய் வற்றல் 200 கிராம், மிளகு 100 கிராம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அத்துடன் பால், நல்லெண்ணெய் வகைக்கு அரை லிட்டர் சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் ஒருமுறை தலைமுழுகிவர எந்த வகையான தலைவலியும் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, கழிச்சல், காய்ச்சலினால் காணும் வாந்தி நீங்கும்.

மிளகாயை அரைத்துத் துணியில் தடவி தோலின் மேல் போட்டு வைக்க, கொப்பளித்து வீக்கம் குறையும். தொண்டைக்கு வெளியில் பூச, தொண்டைக்குள் இருக்கும் கட்டிகள் உடையும்.

மிளகாயை பூண்டு மிளகோடு சம அளவாக எடுத்து சேர்த்து அரைத்து எண்ணெயுடன் குழைத்து மேல் பூச்சாக முதுகு, பிடரி முதலிய இடங்களில் உண்டாகும் நாள்பட்ட வலி, வீக்கங்களுக்குப் பூச குணமாகும்.

மிளகாய்ப் பொடியுடன் சர்க்கரை, பிசின் தூள் சேர்த்து உருண்டை செய்து வாயில் போட்டு மென்று சாப்பிட, தொண்டைக் கம்மல் குணமாகும்.

மிளகாயைக் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி சிறிது இஞ்சிச் சாறு கலந்து குடிக்க வயிற்று உப்புசம் வயிற்றுவலி நீங்கும்.

மிளகாய், பெருங்காயம், கற்பூரம் சம அளவாக எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரை செய்து 3 வேளை கொடுக்க ஊழி நோய் குணமாகும்.

மிளகாய் செடி சமூலத்தை 200 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது இலவங்கப் பட்டைப் பொடியும், சர்க்கரை கலந்து குடிக்கக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

செத்தல் மிளகாய் பச்சை மிளகாய் குடை மிளகாய்
ஆற்றல் 246 கிலோ கலோரி 29 கிலோ கலோரி 24 கிலோ கலோரி
புரதம் 15.9 கிராம் 2.9 கிராம் 1.3 கிராம்
கொழுப்பு 6.2 கிராம் 0.6 கிராம் 0.3 கிராம்
நார்ச்சத்து 30.3 கிராம் 6.8 கிராம் 1.0 கிராம்
இரும்பு 2.3 கிராம் 4.4 கிராம் 0.567 கிராம்
கல்சியம் 160 மி.கி. 30 மி.கி. 10 மி.கி.
விட்டமின் C 50 மி.கி. 111 மி.கி. 37 மி.கி.
விட்டமின் A 345 மைக்ரோ கிராம் 75 மைக்ரோ கிராம் 427 மைக்ரோ கிராம்

-dvmhealthtips.blogspot.co.uk
-koovalapuram.blogspot.co.uk

தொகுப்பு – thamil.co.uk